Sunday, 30 November 2014

ஒரு இருட்டு கடையும் பல திருட்டு கடைகளும்

'Original' சாந்தி ஸ்வீட்ஸ் 
சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா 

இருட்டு கடை அல்வாவை  தேடிச் சென்றால், நெல்லையில் திருட்டுக் கடை அல்வாக்களும் கிடைக்கின்றன.

நெல்லையப்பரின் அருளுக்கு அடுத்த படியாக, அதிகம் தேடப்படுவது  இந்நகரில் அல்வா மட்டுமே.

போர்டு இல்லாமல்...மரச் சட்டங்கள் இணைத்த கதவுகளோடு...ஏன் கல்லாபெட்டி கூட இல்லாமல் (ஒரு கூடையில்தான் பணத்தை வாங்கி கொட்டுகிறார்கள்) கோலோச்சுகிறது இருட்டு கடை.


"சிறிது நேரம்தான் கடை திறந்திருக்கும்"

" லேட்டா போனா அல்வா கிடைக்காது" 

என்பது போன்ற சிறு சிறு உத்திகள் இருட்டு கடையின் மவுசை நூறாண்டுகளாக கட்டி காப்பாற்றி கொண்டு வருகின்றன.

ஒரு விஷயம் நன்றாக இருந்தால் உடனே 'காப்பி பேஸ்ட்' செய்து விடுபவர்கள் ஆயிற்றே நாம். இருட்டு கடையை மட்டும் விட்டு வைப்போமா என்ன?

இருட்டு கடைக்கு போட்டியாக ஊரெங்கும் திருட்டு கடைகள். பெயர் திருட்டை சொல்கிறேன்.

லெட்சுமி விலாஸ்  ஸ்பெஷல் அல்வா 
லெட்சுமி விலாஸ் புராதன லாலா கடை, சாந்தி ஸ்வீட்ஸ், இருட்டு கடை....மீதி எல்லா கடைகளும் டுபாக்கூர்தான் என்கின்றனர் உள்ளூர்வாசிகள்.

ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவனும் இருக்கத்தானே செய்வான்.

Original சாந்தி ஸ்வீட்ஸ் அருகில் சாந்..........தி ஸ்வீட்ஸ்!

ஒரிஜினல் சாந்தி ஸ்வீட்ஸ் கடையை ஒட்டி இடது புறத்தில் நான்கு 'சாந்தி ஸ்வீட்ஸ்' போர்டுகளுடன் மிக நீ...........ள கடை ஒன்று இருக்கிறது.

வாருங்கள்...வாருங்கள் என்று கூவி அழைக்கிறார்கள்.

Original இருட்டு கடை அல்வா கவரில் பெயரே இருக்காது 

இந்த கடைக்கு எதிர்த்தாற்போல் (திருநெல்வேலி ரயில் நிலையம், பழைய பேருந்து நிலையம் மிக அருகில்) "இருட்டு கடை அல்வா" என்று கவரில் பிரமாண்டமாக போட்டு அதகளம் செய்கிறார்கள். (கவரில் இருட்டு கடை என்று போட்ட இந்த அல்வா சென்னை தியாகராய நகர், ரங்கநாதன் தெருவில் உள்ள "காதி கிராமோத்யோக் பவன்" வரை வந்து விட்டது. சென்னைவாசிகளும் ஏமாறட்டும் என்ற நல்லெண்ணமோ?)





இது தவிர,  சாந்தி ஸ்வீட்ஸ், சாந்தி பேக்கரி, நெல்லை ரேவதி சாந்தி என்று செல்லுமிடமெல்லாம் சாந்திதான்.






இருட்டு கடைக்கு அடுத்த கடை 




இருட்டு கடைக்கு அடுத்த கடையே சாந்தி ஸ்வீட்ஸ்தான். இரண்டு கடை தள்ளி சென்றால் மீண்டும் சாந்தி.







எங்கெங்கும் சாந்தி 


லெட்சுமி விலாஸ் புராதன லாலா கடை
இனிப்போடு கார வகைகளும் நிறைய உண்டு 
திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு எதிரில் இருக்கும் தெருவில் நடந்தால்...மூன்று தெருக்கள் சந்திக்கும். எதிர்த்தால் போல் பழைய பஸ் ஸ்டாண்ட். அந்த சந்திப்பில் வலது மூலையில் இருக்கிறது லெட்சுமி விலாஸ் புராதன லாலா கடை. பெரிய கடை. கூட்டமே இல்லை.

லெட்சுமி விலாஸ் புராதன லாலா கடை

1882 ல் தொடங்கப்பட்ட லெட்சுமி விலாஸ் புராதன லாலா கடையில், முந்திரி, நெய், கலர் நிறைய போட்டு கிண்டிய ஸ்பெஷல் அல்வா கிடைக்கிறது. கிலோ ரூபாய் 220. சுவை என்னவோ சுமார்தான். டால்டா போட்ட சாதா அல்வாவும் கிடைக்கிறது. கிலோ ரூபாய் 160.

Original சாந்தி ஸ்வீட்ஸ்  சிப்ஸ், முறுக்கு கூட கிடைக்கும் 
அப்படியே வலது புறம் திரும்பி, ரோட்டை கிராஸ் செய்து நான்கைந்து கடைகள் தள்ளி நடந்தால் வருகிறது சாந்தி ஸ்வீட்ஸ் ஒரிஜினல் கடை . சிறிய கடைதான். ஆனாலும் எந்த நேரம் சென்றாலும் கூட்டம் அலை  மோதுகிறது. கிலோ ரூபாய் 140.


ஒரே ஒரு மஸ்கோத் அல்வா கடை கூட கண்ணில் பட்டது.

இருட்டு கடை அல்வா ... இப்படித்தான் pack செய்யப் படுகிறது 
இருட்டு கடை அல்வா சிம்பிளாக ஒரு பட்டர் பேப்பரில் சுற்றி, அதிக micron கொண்ட பிளாஸ்டிக் கேரி பாக்கில் தரப் படுகிறது.

Original சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா ...இப்படித்தான் pack செய்யப் படுகிறது 
லெட்சுமி  விலாஸ் ஸ்பெஷல்அல்வா ...இப்படித்தான் pack செய்யப் படுகிறது 
இருட்டு கடை அல்வா 
சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா 
லெட்சுமி விலாஸ் ஸ்பெஷல் அல்வா 



தாமிரபரணி ஆறு ...அத்தாளநல்லூர் ஸ்ரீ கஜேந்திர வரத பெருமாள் கோவில் பின்புறம்                                                             எடுத்த படம்                              PHOTO: Srividya Raman
"தாமிரபரணி ஆற்று நீரின் சுவைதான் அல்வாவின் tasteக்கு காரணம்" என்று கூறுகிறார்கள், நெல்லை மக்கள். நீரின் சுவையும் நன்றாகத் தான் இருக்கிறது. ஆற்று நீரில் பாதியை அல்வா கிண்டியே தீர்க்கிறார்கள் நெல்லைவாசிகள்.

என்றாலும் நெல்லையப்பரின் நேரடி பார்வையில் உள்ள original இருட்டு கடை அல்வா முதலிடத்தை பிடிக்கிறது. அல்வா தவிர வேறு ஸ்வீட், காரம் விற்காத கடையும் இருட்டு கடை ஒன்றுதான். இரண்டாமிடம் பெறுவது original சாந்தி ஸ்வீட்ஸ். அவ்வளவுதான். 

வந்த வேலை முடித்து train ல் ஏறி உட்கார்ந்தால், coupeன் கதவு தட்டப் படுகிறது. திறந்து பார்த்தால்.........

 "திருநெல்வேலி அல்வா வேண்டுமா ?" என்று கவரை நீட்டுகிறார் ஒருவர். 

" உனக்கு வேண்டுமா original இருட்டு கடை அல்வா?" என்று கேட்டேன். 

வந்தவர் 'கப் சிப்'. திருநெல்வேலிக்கே அல்வாவா?  வட சென்னைக்கே வடகறியா? ஹா ஹா ஹா 

ரயில்வே ஸ்டேஷனிலும் திருட்டு கடை அல்வா!!!

Monday, 24 November 2014

அல்வா நகரம் அன்புடன் வரவேற்கிறது

'அல்வா'ன்னா அது இருட்டு கடை அல்வாதான்........





நெல்லையப்பர் கோவில் கோபுரம் 
மாலை மணி 4:

நெல்லையப்பர் கோவில் கோபுரம்....ஒரு கும்பிடு போட்டு விட்டு 180 டிகிரியில  இடது பக்கமா திரும்புங்க...மரப்பலகை கொண்டு மூடப் பட்ட கதவுகள். அதன் நிறமே சொல்கிறது, நூறாண்டுகள் கடந்த கடையின் வயதை. மெல்ல கூட தொடங்கும் கூட்டம்...வரிசை உதயமாகிறது. கண்ணில் ஆர்வம் மின்ன சிறுவர்கள். தலை நரைத்த முதியவர்கள். ஆண்கள்...பெண்கள்...சபரிமலை பக்தர்கள்...பெண்களுக்கு தனி வரிசை. ஆம்...திருநெல்வேலி இருட்டு கடை பற்றிதான் சொல்கிறேன்.
இந்த கூட்டம் போதுமா?

இருட்டு கடை ...காத்திருக்கும் கூட்டம் 

4.30 மணி

ஒரே ஒரு மரப் பலகை நகர்த்தப் பட்டு, சொர்க்க வாசல் திறக்கப் படுகிறது. ஒரு முழம் பூ உள்ளே செல்கிறது. சிப்பந்தி ஒருவர்  டீ தம்ப்ளர்களை எடுத்து செல்கிறார். தேரடியை தாண்டி நீளும் கியூ. ஒரு கம்பியில் கை துடைக்கும் காகிதங்கள் மாட்டப் படுகின்றன. கியூவில் பரபரப்பு. எல்லோரும் ரூபாய் நோட்டுகளை எண்ணி தயாராக வைத்துக் கொள்கிறார்கள். 
பூங்கதவே தாள் திறவாய் 

திறந்து இருக்கும் இடுக்கு வழியாக எட்டிப் பார்க்கிறார் ஒருவர். கடையின் நிறுவனர்களின் படங்களுக்கு பூ போட்டு விட்டார்கள்...இதோ கடை திறந்து விடுவார்கள் என்று லைவ் ரிலே செய்கிறார் ஒருவர். "அரை மணி நேரத்தில் அல்வா தீர்ந்து விடும்" என்று பதறுகிறார் இன்னொருவர்.




4.50 மணி:

எளிமையான தோற்றத்தில், படி கூட இல்லாத கடையின் உள்ளே எம்பி நுழைந்த ஒருவர் கடையை திறக்கிறார். எல்லோரும் ஜோராக கையை தட்டாத குறைதான்.
இருட்டு கடை 


முதலாளி தோற்றத்தில் ஒருவர் வருகிறார். காலை மடக்கி ஸ்டூலில் உட்காருகிறார். 






அல்வா வியாபாரம் களை கட்ட துவங்குகிறது. பணம் கைமாற...1/2 கிலோ, 1 கிலோ என காற்றில் ஊசலாடும் அல்வா கவர் கையில் கிடைக்க...கவரை பெற்றவருக்கோ பரமானந்தம்.


இருட்டு கடை...அல்வா கிடைக்குமா? அலைமோதும் கூட்டம் 
இருட்டு கடை அல்வா...ஆஹா...

6 மணி :

மொய்த்த வெளியூர் கூட்டம் குறைய....உள்ளூரில் உள்ளவர்கள் வாழையிலையில் வைத்து , அல்வாவை வெட்டு வெட்டென வெட்டுகிறார்கள். பத்து ரூபாய்க்கு வாழையிலையில் நீள வாக்கில் சுருட்டி 50 கிராம் அல்வா தருகிறார்கள். சுவைத்தவர்களின் முகத்தில் தெரியும் பரவசம் சொல்கிறது ...அல்வாவின் சுவையை. நெல்லையப்பரின் நேரடி பார்வையில் அல்வா விற்பனை அமோகம்.

மின்னும் விளக்குகள் இல்லை. Interior Decoration இல்லை. படாடோபமான table, chair கிடையாது. 
இருட்டு கடை...உரிமையாளர் ஹரி சிங்

ஒரே ஒரு குண்டு பல்பு மட்டும், போனால் போகிறது என்று மங்கலான ஒளியை உமிழ்கிறது. இன்னமும் அது இருட்டு கடைதான்.

இருட்டு கடை அல்வாவின் தரமும், சுவையும் தெற்கத்தி மக்களை மட்டுமே கவர்ந்தது என்று சொல்லிவிட முடியாது. உலகம் முழுதும் உள்ள இனிப்பு பிரியர்களை  சுண்டி இழுக்கும் சக்தி வாய்ந்தது இந்த இருட்டு கடை அல்வா. 
தாமிரபரணி ஆறு 

கோதுமை மாவு, சர்க்கரை, நெய், தாமிரபரணி தண்ணீர். இந்த இருட்டு கடை அல்வா உள்ளே இருப்பது அவ்வளவுதான். முந்திரி கூட வாயில் தட்டுப் படவில்லை. வழக்கமாக இனிப்பு வகைகளில் சேர்க்கப் படும் ஏலக்காய் போன்ற வாசனை பொருள்களும் சேர்க்கப் படவில்லை. ஆனாலும் ஆளை மயக்கும் சுவை. 

கர கரப்பான அதிரசம், கடலை மிட்டாய் என்று சாப்பிட்டு வந்த மக்களுக்கு மென்மையான கோதுமை அல்வா சுவை பிடித்து விட்டது போலும். கோதுமைக்கு பேர் போன ராஜஸ்தானிலிருந்து வந்த கிருஷ்ண சிங், நூறு ஆண்டுகளுக்கு முன் கொடுத்த அல்வா இன்றுவரை மக்களை கவர்ந்து  வருகிறது.


இருட்டு கடையின் முதல் இரு உரிமையாளர்கள் 


வெளிறிய பிரவுன் நிறத்தில் (நிற சாயம் சேர்ப்பதில்லை) வழு வழு என்று மென்மையாக தொண்டைக்குள் வழுக்கி செல்லும் அல்வா, யாரைத் தான் கவராது?

அன்று புதிய இனிப்பு வகை என்ற தனித்துவத்தில் மக்களை கவர்ந்த அல்வா, இன்று நூறாண்டு கடந்த கடையின் சாதனை என்ற வகையில், பழமையின் அடையாளமாக மக்களை ஈர்த்து வருகிறது.
உரிமையாளர் K. பிஜிலி சிங் காலத்தில் எழுதப் பட்ட அறிவிப்பு
கடையின் பழமையை பறைசாற்றுகிறது 

சிறிய இருட்டு அறையில் அல்வா விற்றதால், மக்கள் இருட்டு கடை என்று அழைத்தார்கள். இன்று வரை பெயர் பலகை கூட கிடையாது. பட்டர் பேப்பரில் அல்வாவை சுற்றி, பிளாஸ்டிக் கேரி பாக்கில் போட்டு தருகிறார்கள். கவரில் கூட பெயர் கிடையாது.

பெயர் இருந்தால் அது டூப்ளிகேட் அல்வா.
அல்வா கிடைச்சாதான் வீட்டுக்கு போவேன் 

வேறு எந்த வகை இனிப்போ, காரமோ கிடையாது. அல்வா .....அல்வா... அல்வா  மட்டுமே. உங்கள் ஊரில் அல்வா தவிர வேறு எந்த இனிப்பு நன்றாக இருக்கும் என்று பலரிடம் கேட்டேன். அல்வா அளவு திருநேல்வேலியின் பெயர் சொல்லும் இனிப்பு வேறு எதுவும் இல்லை என்றே சொன்னார்கள். பலவித இனிப்பு, காரம் வைத்திருக்கும் பெரிய கடைக்காரர்களும் அதையே தான் 
சொல்கிறார்கள்.

இருட்டு கடை அல்வா...இன்னும் வேணும் 

இரவு ஏழு மணி நெருங்கும் போது சற்றே கூட்டம் கட்டுக்குள் வருகிறது.

நெல்லையப்பர் கோவிலுக்கு வரும் பக்தர்கள், குறிப்பாக சபரிமலை செல்பவர்கள் கூட்டம்தான் இருட்டு கடை முன்பு. வெளியூரில் இருந்து சுற்றுலா வருபவர்கள் கட்டாயம் இருட்டு கடைக்கு வந்து விடுகிறார்கள்.

உள்ளூர்வாசிகள் கூட்டம் குறைவு என்றே நினைக்கிறேன்.

ஆனாலும் அல்வா சாப்பிட ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருப்பார்கள் என்பதை  நம்ப கொஞ்சம் சிரமமாகத்தான்  இருக்கிறது. கண்ணால் கண்டதை நம்பித்தானே ஆக வேண்டும்.


தலை நரைத்தாலும் அல்வா ஆசை குறையாது 



இருட்டு கடை அல்வா 
ஞாயிறு மட்டும் விடுமுறை. மாலை 5 மணிக்கு அல்வா விற்பனை துவங்கும். விலை: கிலோ 180 ரூபாய். 40 நாட்கள் வைத்து சாப்பிடலாம் இருட்டு கடையில் சொல்கிறார்கள். Fridge ல் வைக்க வேண்டாம் என்றும் சொல்கிறார்கள். "பகல் நேரத்தில் இருட்டு கடை அல்வா வாங்க விரும்புவோர், நாலைந்து கடை தள்ளி இருக்கும் Visagam Sweets கடையில் வாங்கலாம். அதுவும் எங்கள் கடைதான் " என்கிறார் இருட்டு கடையின் உரிமையாளர். அங்கே நாள் முழுதும் தாராளமாக கிடைக்கிறது இருட்டு கடை அல்வா. அப்புறம் ஏன் மாலையில் இந்த கூட்டம்? "இருட்டு கடையில் அல்வா மட்டும்தான் விற்போம். Visagam Sweets கடையில் மற்ற இனிப்புகளும், கார வகைகளும் கிடைக்கும். அதற்காகத் தான் இன்னொரு கடை " என்கிறார் இருட்டு கடை உரிமையாளர்.

விசாகத்தில் விலை அதிகமோ? என்றால் "இல்லை" என்ற பதில் அழுத்தமாக வருகிறது.

இருந்தாலும் மாலையில் இருட்டு கடையில் கால் கடுக்க நின்று வாங்கினால்தான் திருப்தி என்று சொல்லும் முரட்டு ரசிகர்கள்தான் இருட்டு கடையின் அஸ்திவாரம்.

தொடர்புக்கு: 0462 2339614


...

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...