Sunday, 7 December 2014

கண்டேன் கருப்பட்டி மிட்டாய்

கருப்பட்டி மிட்டாய்



திருநெல்வேலி செல்வது முடிவானவுடன், "அல்வாவை தவிர வேறு என்ன அங்கே கிடைக்கும்?" என்று பலரிடம் கேட்டேன். " திருநெல்வேலின்னா அல்வாதான்" என்ற பதில்தான் கிடைத்தது.

நம்மூர் சரவண பவனில் நெல்லை மிட்டாய் கிடைக்கும். வெள்ளை ஜாங்கிரியை வட்ட வட்டமாக சுற்றியதுபோல் உயரமாக அடுக்கி வைத்திருப்பார்கள். ஒரு துண்டு உடைத்து வாயில் போட்டால், நாவில் தேனொழுகும். அப்படி ஓர் இனிப்பு. இதுவே வெள்ளை மிட்டாய், ஏணி மிட்டாய், ரயில் மிட்டாய், சீரணி என்று பலபெயர்களில் அழைக்கப் படுகிறது.

கோவில்பட்டி, சாத்தூர், அருப்புக் கோட்டை பகுதிகளில் 'கருப்பட்டி மிட்டாய்' பிரசித்தம். வெள்ளை மிட்டாயில் சர்க்கரைக்கு பதில் கருப்பட்டி கலந்து செய்தால் அது கருப்பட்டி மிட்டாய். 




திருநெல்வேலியில் கிடைக்கவில்லை. சங்கரன்கோவிலில் சங்கர நாராயணர் கோவில் செல்லுமுன் "இங்கு கருப்பட்டி மிட்டாய் கிடைக்குமா என்று தேடி வையுங்கள்" என்று டிரைவரிடம் கூறி விட்டு சென்றேன். சாமி தரிசனம் முடிந்து வந்ததும் ஒரு கடைக்கு அழைத்து சென்றார். ரோட்டோர பலகார கடை. கிராமத்து திருவிழாவில் இருக்கும் மிட்டாய் கடை போலவே இருந்தது. யானை மேல் அம்பாரி வைத்ததுபோல் வெள்ளை மிட்டாய் உயரமாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தது. "திருவிழாவிற்குதான் கருப்பட்டி மிட்டாய் போடுவோம்" என்றார் கடைக்காரர். 






எதிர்த்தாற்போல் அமர்ந்திருந்த ஒரு செருப்பு தைப்பவரிடம் விசாரித்தேன். "A 1 திவ்யா ஸ்வீட்ஸ்" கடைக்கு வழி சொன்னார்.

திவ்யமான திவ்யா.

சங்கர நாராயணர் நுழைவாயில் அருகே  கார்கள் நிற்குமிடத்திற்கு பின்னால்  கம்பீரமாக நிற்கிறது திவ்யா ஸ்வீட்ஸ்.






அங்கே ....கண்டேன்...கருப்பட்டி மிட்டாயை. 

அன்பான வரவேற்பு அருமையான உபசரிப்பு. கனிவான நெல்லை தமிழில் கடைகாரர் தங்கள் கடை இனிப்புகளின் அருமை பெருமைகளை எடுத்துரைக்கிறார்.  சென்னையின்  salespersonகளுக்கும்  இவர்களுக்கும் பெரிய வித்தியாசத்தை உணரமுடியும். 




சுவை பார்க்க ஒவ்வொரு இனிப்பையும் அவர் தந்த விதம், நண்பன் வீட்டிற்கு விருந்து உண்ண சென்றிருப்பது போன்ற உணர்வை தந்தது.

மதியத்திற்கு மேல் விற்பனைக்காக அப்போதுதான் தயாரான கருப்பட்டி மிட்டாய் எங்களுக்காக எடுத்து வரப் பட்டது.

விண்டு வாயில் போட்டால் ....கடித்தவுடன் லேசாக ஒரு மொறு மொறுப்பு. கடிக்க கடிக்க கருப்பட்டி பாகு நம் நாக்கை நனைக்கிறது. வெளியே மொறு மொறுப்பாகவும்  உள்ளே மிருதுவாகவும் இருக்கிறது கருப்பட்டி மிட்டாய்.

கருப்பட்டிக்கு பதில் கரும்பு வெல்லம் சேர்த்து செய்த மிட்டாயும் அங்கே உண்டு.

"கருப்பட்டி மிட்டாய் செய்வது கடினமான வேலை. அதிக நேரம் ஆகும்" என்கிறார் கடைக்காரர்.


அப்புறம்.....கருப்பட்டி ஹல்வா கூட கிடைத்தது.


கருப்பட்டி அல்வா 
கருப்பட்டி அல்வா 
 தேங்காய் எண்ணெய் வாசனையில், மிதமான இனிப்போடு அசத்துகிறது கருப்பட்டி அல்வா. பார்க்க சாக்லேட் கேக்கை விட அழகாக இருக்கிறது பாருங்கள். taste  நினைவுள்ளவரை மறக்க முடியாது.

சீனி சேவு 




எங்கேயாவது அரிதாக கிடைக்கும் சீனி  சேவு, எங்கேயும் கிடைக்காத சுக்கு சேவு இரண்டும் வாங்கினோம். காராசேவில் இனிப்பும், சுக்கும் சேர்த்து செய்திருந்தார்கள். மருந்து பண்டம் போல் இல்லாமல் வாய்க்கு ருசியாக இருந்தது.







சீனி சேவு 

சுக்கு சேவு

நாக்கில் படாமல் தொண்டைக்குள் சென்றுவிடும் நகரத்து இனிப்புகளை சாப்பிட்டவர்கள் ......நாக்கில் நிறுத்தி ரசித்து ருசித்து  சாப்பிடலாம், சங்கரன் கோயில் இனிப்பு கார  வகைகளை.  வெள்ளை சக்கரை தவிர்த்த இனிப்புகள், மிளகு சுக்கு சேர்த்த கார வகைகள்  சுலபமாக ஜீரணம் ஆகிறது.  Antacid தேவையில்லை.

No comments:

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...