கேழ்வரகு இனிப்பு புட்டு |
தேவையான பொருள்கள்
கேழ்வரகு (ராகி) மாவு - 3 டம்ப்ளர்
சர்க்கரை (1 டம்ப்ளர்) அல்லது தூள் வெல்லம் (1 டம்ப்ளர்)
ஏலக்காய் - சிறிதளவு
தேங்காய் துருவல் - 1 டம்ப்ளர்
உப்பு - ஒரு சிட்டிகை
தண்ணீர் - 1 டம்ப்ளர்
மற்றும்
இட்லி வேக வைக்கும் துணி
இட்லி கொப்பரை
ஒரு டம்ப்ளர் தண்ணீரில் கால் ஸ்பூன் உப்பை கரைத்து, ராகி மாவில் சேர்த்து பிசிறவும். 10 நிமிடங்கள் கழித்து பிசிறிய மாவை சல்லடையில் கொட்டி நன்கு தேய்க்கவும். சிறு சிறு கட்டிகள் சல்லடையில் தங்கி விடும். கீழே இருக்கும் சலித்த மாவை தனியே எடுத்து வைத்து கொள்ளவும்.
இட்லி கொப்பரையை அடுப்பில் வைத்து, இட்லி தட்டை போட்டு, துணியை ஈரமாக்கி தட்டில் போடவும்.
கட்டி தட்டாமல் சலித்து , உதிர்த்து எடுத்த மாவை துணியில் கொட்டி, 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
வெந்த பின் இட்லி கொப்பரையை திறந்து, ஒரு அகலமான பாத்திரத்தில் வெந்த மாவை கொட்டி ஆற விடவும். தேங்காய், ஏலக்காய் தூள், வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து கிளறி எடுக்கவும்.
ஆரோக்கியமான கேழ்வரகு இனிப்பு புட்டு தயார்.
சிறுதானிய வகைகளில் முதன் முதலில் நம்மிடையே பிரபலமானது கேழ்வரகு, ராகி அல்லது கேப்பை. கர்நாடகாவில் கேழ்வரகு உணவுகள் மிக பிரபலம்.
நம்மூரில், கேழ்வரகில் செய்யப் படும் உணவு வகைகளில் கேப்பை கூழுக்குதான் முதலிடம். அதற்கு அடுத்த இடத்தை பிடிக்கக் கூடியது, இந்த கேழ்வரகு இனிப்பு புட்டு.
கேழ்வரகு தோசை, கேழ்வரகு அடை, கேழ்வரகு ரொட்டி என்று சாப்பிட்டு அலுத்து போனவர்களுக்கு சிறந்த மாறுதல் இந்த கேழ்வரகு இனிப்பு புட்டு.
சர்க்கரையை விட வெல்லம் சேர்த்து செய்வதே நல்லது. ஆவியில் வேக வைத்த உணவு. எனவே எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்கு கூட கொடுக்கலாம்.
கேழ்வரகில் புரோட்டின், கால்சியம், இரும்பு சத்து, அமினோ அமிலங்கள், நார்சத்து, விட்டமின் 'B' ஆகியவை அதிகம் உள்ளன.
கோதுமையை விட கேழ்வரகில் gluten குறைவு. கொழுப்பு சத்தும் குறைவு.
உடல் எடை குறைக்க விரும்புபவர்கள், இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்கள், உடலில் கொழுப்பு சத்து குறைக்க விரும்புபவர்கள், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் ஆகியோர் அவசியம் சாப்பிட வேண்டிய உணவு கேழ்வரகு.
மற்ற சிறுதானியங்களை விட இதன் விலையும் குறைவு.