மோர் ரசம்
முன் காலத்தில் அடிக்கடி வீடுகளில் செய்யப் பட்டு வந்த, இன்று மறந்து போன உணவு பதார்த்தங்களில் ஒன்று இந்த மோர் ரசம். காய்ச்சலால் அவதி படும்போது நாக்கு கசந்திருக்கும். உணவு பண்டங்கள் ருசிக்காது. அப்போது மோர் ரசம் செய்து கொடுப்பார்கள். நாக்குக்கு சுவை தெரியும்.
சளித் தொல்லையால் அவதிப் படுவோருக்கு மோர் ஒத்துக் கொள்ளாது. அவர்களுக்கு மோர் ரசம் செய்து கொடுப்பார்கள். இந்த வகையில் மோர் சத்து உடலில் சேரும்.
உணவு பொருள்கள் எதையும் வீண் செய்ய மாட்டார்கள். இப்போது போல் குளிர் சாதன பெட்டியெல்லாம் கிடையாது. வீட்டில் மீதமாகிப் போன புளித்த மோர் வீண் ஆகாது.... மோர் ரசம் ஆகி விடும்.
மோர் குழம்பை நீர்க்க சாப்பிடுவது போன்ற சுவையில் இருக்கும். சளி, காய்ச்சல் இல்லாத நேரத்திலும் சாப்பிடலாம். ஒருமுறை சாப்பிட்டால் இதன் சுவைக்கு அடிமையாகி விடுவீர்கள்.
|
புளித்த மோர் - 2 டம்ப்ளர்
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
வர மிளகாய் - 3
சீரகம் - 1 ஸ்பூன்
பெருங்காயம்
மஞ்சள் தூள்
கருவேப்பிலை
உப்பு
பெருங்காயம், அரை ஸ்பூன் சீரகம், வர மிளகாய், வெந்தயம் இவற்றை எண்ணெய் இல்லாமல் சிவக்க வறுத்து...............
பொடிக்கவும்.
புளித்த மோரை நன்கு சிலுப்பி, உப்பு, மஞ்சள் தூள், கருவேப்பிலை இவற்றை சேர்க்கவும்.
வறுத்து பொடித்த பொடியை சேர்க்கவும்.
நன்கு கலந்து, அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கவும். அதிகம் கொதித்தால் ரசம் கசந்து விடும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, மீதியுள்ள அரை ஸ்பூன் சீரகம், சிறிது கடுகு போட்டு தாளித்து கொட்டி, மூடி வைத்து, சிறிது நேரம் கழித்து பரிமாறவும்.
மோர் ரசம் செய்ய அதிக நேரம் ஆகாது. ஓரிரு நிமிடங்களில் கொதித்து விடும்.