ஞானாம்பிகா சாப்பாடு |
டிசம்பர் மாதம் வந்து விட்டாலே, உற்சாகமும் வந்து விடுகிறது.
உடனே......
"சில்லென்ற மார்கழி குளிர் மனதை வருடுகிறது"
என்று கவிதை படிக்க ஆரம்பித்து விடாதீர்கள்.
உற்சாகத்துக்குக் காரணம் சென்னை சங்கீத சபாக்கள்தான். "உன்னி கிருஷ்ணனா? சுதா ரகுநாதனா? யாரை பிடிக்கும்" என்று ரொம்ப விவரமாக கேட்பதாக நினைத்து கேட்பீர்களே ஆனால்......
ஷமிக்கணும்.
எனக்கு பிடித்த கலைஞர்கள் என்றால் ஞானாம்பிகா ராஜன், மவுன்ட் மணி ஐயர், கொண்டித்தோப்பு பத்மநாபன், மீனாம்பிகா பாஸ்கரன் என்று ஒரு பெரிய பட்டியலே தருவேன். போன வருடத்தில் இருந்து சாஸ்தாலயா ரமேஷ் என்று ஒருவர் பிரபலமாகி வருகிறார்.
"யார் இவர்கள்?" என்று கேட்டீர்கள் என்றால், சாப்பாட்டுக் கச்சேரியில் உங்களுக்கு ஞானம் போறாதுன்னு சொல்லிடுவேன்
டிசம்பர் இரண்டாவது வாரத்தில் இருந்து, சென்னை சங்கீத சபாக்கள் களை கட்ட ஆரம்பித்து விடும். கச்சேரி வளாகத்திற்கு இணையாக, சாப்பாட்டுக் கச்சேரிக்கும் இடம் ஒதுக்கி விடுவார்கள்.
வாணி மகாலில் ஞானாம்பிகா ராஜன், மியூசிக் அகாடமியில் கொண்டித்தோப்பு பத்மநாபன், பார்த்தசாரதி சுவாமி சபாவில் மவுன்ட் மணி ஐயர் மகன் ஸ்ரீநிவாசன், மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் மீனாம்பிகா பாஸ்கரன் ஆகியோர் காலம் காலமாக சாப்பாட்டுக் கச்சேரி நடத்துகிறார்கள். போன வருடத்தில் இருந்து நாரத கான சபாவில் சாஸ்தாலயா ரமேஷ் அத களப் படுத்துகிறார்.
இந்த வருடம், முக்கிய சபா கேண்டீன்களில் முதல் கேண்டீன் ஆக, வாணி மகாலில் போணியை துவங்கி இருப்பது ஞானாம்பிகா.
முதல் நாள் கச்சேரிக்கே அடியேன் ஆஜர்.
இன்று ஞானாம்பிகா தலைவாழை இலை சாப்பாடு .
சாட்சாத் தஞ்சாவூர் பிராமிணாள் சமையல்.
பொதுவான மெனு
இனிப்பு
தயிர் பச்சடி
கறியமுது (பொரியல்)
வதக்கல்
கூட்டு
பருப்பு குழம்பு
சாத்தமுது (ரசம்)
வத்த குழம்பு/கார குழம்பு/மோர் குழம்பு
கெட்டி மோர்
அப்பளம்
ஊறுகாய்
இன்றைய மெனு
ஞானாம்பிகா - வாணி மகாலில் |
பால் கோவா வெள்ளரி தயிர் பச்சடி
அவரைக்காய் கறியமுது
கத்தரிக்காய் வதக்கல்
வெண்பூசணி - மொச்சை கொட்டை கூட்டு
முள்ளங்கி குழம்பு
தக்காளி சாத்தமுது
வெண்டைக்காய் கார குழம்பு
எலுமிச்சை ஊறுகாய்
கெட்டி மோர்
அப்பளம்
பால்கோவா
சில இடங்களில் மைதா மாவு சேர்த்து கெட்டியாக செய்து இருப்பார்கள். அப்படி இல்லாமல் ஒரிஜினல் பால்கோவா எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. ரொம்ப கெட்டி இல்லை. உடைந்தும் ஓடவில்லை. அளவான இனிப்பு. பேஷ்...பேஷ்...
வெள்ளரி தயிர் பச்சடி
ஃப்ரெஷ் தயிர். ஃப்ரெஷ் வெள்ளரி. கார குழம்புக்கு தொட்டு சாப்பிட்டேன். ரெண்டு, மூணு சர்விங் கேட்டு வாங்கி சாப்பிடலாம். பச்சை காய் பச்சடி உடம்புக்கு நல்லது.
அவரைக்காய் கறியமுது
பச்சை நிறம் மாறாமல், அவரைக்காயை பொரியல் செய்து இருந்தார்கள். துருவிய தேங்காய் எக்ஸ்ட்ரா சுவை கொடுத்தது.
சுட...சுட
குழம்பு, கூட்டு, சாத்தமுது, கார குழம்பு எல்லாமே அடுப்பில் இருந்து நேரடியாக எடுத்து போட்டது போல் சுட சுட ஃப்ரெஷ் ஆக இருந்தது.
அதிக மசாலா இல்லாத அருமையான சாப்பாடு. வாழை இலை போட்டு பரிமாறுகிறார்கள். நாக்கை சொட்டை விட்டுக் கொண்டு சாப்பிடலாம்.
ஹோட்டல் உணவில் இல்லாத ஏதோ ஒன்று நிச்சயமாக சபா கேண்டீன் உணவில் உண்டு. டோன்ட் மிஸ் இட்.
விலை ரூபாய் 180. ஒரு இலைக்கு.
விருந்தாக காத்திருக்கும் காய்கறிகள் |
1 comment:
இன்றைக்குத்தான் கோபு சார் (VGK, வை.கோபால கிருஷ்ணன், திருச்சி gopu1949.blogspot.in) இந்த லிங்க் கொடுத்தார்.
படித்தேன் ஆனா டிசம்பர் மாதம் முழுவதும் வேறு எங்கும் சாப்பிட்டுப் பார்க்கவில்லையா? அடிக்கடி (குறைந்தபட்சம் டிசம்பரிலாவது) எழுதுங்கள். உணவுப் பிரியர்களுக்குத் தோதான பதிவுகள்.
Post a Comment