பெங்களூர் பொங்கல் |
பொங்கல் தெரியும். சர்க்கரை பொங்கல் கூட நமக்கு விருப்பமானதே. அது என்ன பெங்களூர் பொங்கல்?
சென்னையில் ஹோட்டல் சரவண பவன் (HSB) கோலோச்சிய காலம் ஒன்று உண்டு. அப்போது அங்கே எனக்கு மிகவும் பிடித்த உணவுகள் இரண்டு. குழாப் புட்டு with கடலை கறி. இன்னொன்று பெங்களூர் பொங்கல். இப்போது இந்த இரண்டுமே சரவண பவனில் கிடைப்பதில்லை.
வெண் பொங்கலையே நீர்த்த கஞ்சி பதத்தில் செய்திருப்பார்கள். ஸ்ட்ரா போட்டே குடித்து விடலாம் என்று கூட தோன்றும். ஆனால் சுவை தேவாமிருதமாக இருக்கும். ஒரு நீள்வடிவ பாத்திரத்தில் சுடச் சுட ஊற்றி ஸ்பூன் போட்டு தருவார்கள். பிஞ்சு இஞ்சியை நீள நீள மாக வெட்டி போட்டிருப்பார்கள். தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி. சட்னி கொஞ்சம் ஸ்பூனில் எடுத்து, அதே ஸ்பூனில் கொஞ்சம் பொங்கல் கஞ்சியும் எடுத்து சாப்பிடுவேன். நாக்கை பொரிக்கும் சூட்டில் பொங்கல் உள்ளே இறங்கும். அந்த அனுபவமே ஆனந்தம்.
இன்று காலை வீட்டிலேயே செய்து பார்த்தோம். அன்று நான் சுவைத்த அதே சுவை இன்று செய்த பொங்கலில் கிடைத்தது. தொட்டுக் கொள்ள கத்தரிக்காய் புளிக் குழம்பு.
இதோ ரெசிப்பி.
யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.
பெங்களூர் பொங்கல்
பச்சரிசி-1/2 டம்ப்ளர்
பாசி பருப்பு-1/2 டம்ப்ளர்
நீள வாக்கில் நறுக்கிய பிஞ்சு இஞ்சி-தேவையான அளவு
பெருங்காய தூள்-சிறிதளவு
மிளகு, சீரக பொடி
கருவேப்பிலை
உப்பு-தேவைக்கு
சின்ன சின்னதாக உடைத்த முந்திரி பருப்பு
நெய் -2 கரண்டி
பாசி பருப்பு, அரிசி இரண்டையும் 5 டம்ப்ளர் தண்ணீரில் போட்டு வேக விடவும். நன்கு வெந்து வெந்தவுடன் உப்பு போடவும். கஞ்சி பதத்தில் இருக்கும். வாணலியில் ஒரு கரண்டி நெய் ஊற்றி, சூடு ஏறியவுடன் மிளகு, சீரக பொடி, பெருங்காயம், கருவேப்பிலை, முந்திரி, இஞ்சி இவற்றை போட்டு நன்கு வறுக்கவும். வறுபட்டவுடன், அதை அப்படியே வேக வைத்த அரிசி, பாசி பருப்பு கலவையுடன் சேர்த்து, மேலும் ஒரு கரண்டி நெய் விட்டு நன்கு கிளறவும். அடுப்பை அணைத்து மூடி வைக்கவும். சிறிது நேரத்தில் பரிமாறலாம்.
குறிப்பு: பழைய அரிசியாக இருந்தால் ஒரு டம்ப்ளர் அரிசி, பாசி பருப்புக் கலவைக்கு 6 டம்ப்ளர் தண்ணீர் விடவும்.
பெங்களூர் பொங்கல் |
No comments:
Post a Comment