Monday, 24 December 2018

அமிர்தசரஸ் சோளே பூரி

அமிர்தசரஸ் Kanha Sweets சோளே பூரி 


சோளே பூரி, சன்னா பட்டூரா, சோளே பட்டூரா, சன்னா பூரி - பெயர்கள் பல இருந்தாலும் சுவை ஒன்றுதான். ஆஹா...அற்புதம். வேறு வார்த்தை இல்லை. 'நன்றாக இருக்கிறது' என்று சொல்லக் கூட வாய் திறக்க முடியவில்லை. வாயை திறந்தாலே அதில் பூரியை திணிக்க சொல்கிறது மனம்.

கொண்டை கடலை மசாலாவுடன் பூரி. சன்னா பட்டூரா. பஞ்சாப் பகுதியின் சிறப்பு உணவு.

சிங்கத்தை அதன் குகைக்குள் சென்று சந்திப்பவர்கள் அல்லவா நாம்?

சோளே பூரியை அமிர்தசரஸ் சென்று சாப்பிட்டு வந்தேன்.
அமிர்தசரஸ் Kanha Sweets

அமிர்தசரஸ் லாரன்ஸ் ரோட்டில் உள்ள கண்ணா ஸ்வீட்ஸ் (Kanha Sweets). இது ஸ்வீட் ஸ்டால் மட்டும் அல்ல. இனிப்பகத்துக்கு பின்னால், சிறிய உணவகம் இருக்கிறது.
அமிர்தசரஸ் Kanha Sweets ஹோட்டல்

அமிர்தசரஸ் Kanha Sweets Hotel
சோளே பூரி 
இங்கே கிடைப்பது ஒரே ஒரு டிஃபன் தான். அதுவும் காலையில் மட்டுமே. அமிர்தசரஸ் நகரின் தலை சிறந்த சோளே பூரிதான் அந்த ஒற்றை டிஃபன்.

காலை ஒன்பது மணிக்கே, காய்ந்த வயிற்றுடன் சென்று விட்டோம். பூரியை ஒரு பிடி பிடிப்பது என்று திட்டம்.

ஹோட்டல் செல்லும் வழியில், திறந்த வெளியில் பூரி சுட்டுக் கொண்டிருந்தார்கள். திறந்த வெளி என்பதால் சுகாதார குறைவு என்று சொல்லி விட முடியாது. அவர்கள் பூரி தயாரிப்பதே கவிதை எழுதுவது போல் ரசனையாக உள்ளது. பூரி மாவை உருட்டி, உள்ளங்கையில் வைத்து பூரி தட்டி விடுகிறார்கள். பலகை, பூரி கட்டை எல்லாம் தேவையில்லை.

தட்டிய பூரியை அவர்கள் கடாயில் வீசும் அழகே அழகு.

பூரி சுடும் காட்சி, வயிற்றை கிள்ளி, பசியை அதிகப் படுத்தியது.


"ஏதோ சாதாரண ஹோட்டலா இருக்கும்" என்று உள்ளே போனால், A.C. Restaurant நம்மை குளு குளு என்று வரவேற்கிறது.

நல்ல கூட்டம்.


அமிர்தசரஸ் Kanha ஸ்வீட்ஸ் சோளே பூரி ஹோட்டல் 

"Variety இல்லாமல் ஒரே டிஃபனுக்கு இத்தனை ரசிகர்களா?"

"கூட்டம் அதிகமாச்சே. நமக்கு பூரி கிடைக்குமா?"

சந்தேகத்துடன் அமர்ந்தோம்.

சிறிது நேரத்தில் கூடை நிறைய பூரியுடன் ஒருவர் நுழைந்தார். ஆளுக்கு ஒரு பூரி போட்டார்.
அமிர்தசரஸ் Kanha Sweets சோளே பூரி 

பூரி ஒன்று. .

சைட் டிஷ் மூன்று.

சன்னா மசாலா. வெங்காயம். மாங்காய் இனிப்பு கூட்டு.

ஆம். மாங்காயில் இனிப்பு போட்டு செய்திருந்தார்கள். பெயர் தெரியவில்லை. சுவை தெரிந்தது. நன்றாக இருந்தது.

Star rated item என்றால்  சன்னா மசாலாவும் பூரியும்தான்.
அமிர்தசரஸ் Kanha Sweets சோளே பூரி


Recipe தெரியவில்லை. பூரியில் ஓம சுவையும் சிறிது கார சுவையும் தெரிந்தது. நம்மூர் பூரி போல காற்றில் பறந்து விடும் மெல்லிய பூரி அல்ல.  நிறைவான பூரி. தொட்டால் உடைந்து விடும் மொறு மொறு பூரி அல்ல. விண்டு வாயில் போடக் கூடிய strong ஆன பூரி.

நம்மூரில் செட் பூரி என்றால் சின்னதாகவும், சோளே பூரி என்றால் பெரிய சைஸிலும்  இருக்கும். ஆனால் அமிர்தசரஸ் Kanha ஹோட்டலில் சோளே பூரி சின்ன சைஸில் தான் இருக்கிறது.

அடுத்த கவலை. ஒவ்வொரு பூரியாக போட்டால் எப்ப சாப்பிட்டு முடிப்பது? கவலைப் படாதீர்கள் என்று பூரி கூடையோடு வந்தார் bearer. ஒரு பூரி சாப்பிட்டு முடிக்குமுன் அடுத்த பூரி வந்து விடுகிறது. ஆளுக்கு ஒரு பூரி என்று போடுவதால், யாருமே காத்திருப்பதில்லை. பூரி கனமாக இருப்பதால் மூன்று பூரிக்குமேல் சாப்பிடுவது கடினம். அது மட்டும் அல்ல. சன்னா மசாலா அருமையாக இருப்பதால், சன்னாவுக்கு பூரியை தொட்டு சாப்பிடும் நிலை.
அமிர்தசரஸ் Kanha Sweets சோளே பூரி

எங்களுடன் பயணித்த  என்னுடைய nieceக்கு  Breakfast சாப்பிடும் பழக்கமில்லை. இந்த  பூரியின்  சுவையில் மயங்கி 3 பூரி தின்றாள் என்பதிலேயே  இதன் சுவையை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

"பூரின்னா அது Kanha Sweets பூரிதான். பேஷ்....பேஷ்.....ரொம்ப நன்னாருக்கு."


அமிர்தசரஸ் Kanha Sweets ஹோட்டல்

Wednesday, 5 December 2018

அமிர்தசரஸ் ஃபேமஸ் குல்ஃபா

அமிர்தசரஸ்  ஃபேமஸ் குல்ஃபா
(Amritsar Famous Kulfa)

குல்ஃபா. .

NO...NO....

"குல்ஃபிக்கு பதில் குல்ஃபா என்று தப்பாக சொன்னேன்" என்று  நினைக்க வேண்டாம்.

குல்ஃபா.

அமிர்தசரஸ் குல்ஃபா.

பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸுக்கு ஒரு முறை Food Tour சென்று வந்தவர்களுக்கு குல்ஃபா என்றதுமே வாயூறும்.

அது என்ன குல்ஃபா? 

சந்தர்-
அமிர்தசரஸ் பேட்டரி ஆட்டோ ஓட்டுநர்


இதே கேள்வியை தான், நான் பயணித்த பேட்டரி ஆட்டோ ஓட்டுனரிடம் கேட்டேன். சந்தர் என்ற அந்த ஆட்டோ ஓட்டுனர் நல்ல tour guide ஆகவும் இருந்தார்.


"அமிர்தசரஸ் நகரிலேயே மிகச் சிறந்த குல்ஃபா கடைக்கு உங்களை அழைத்து செல்கிறேன்" என்று ஹிந்தியில் சொல்லி மென்மையாக சிரித்தார். அந்த சிரிப்பிலே இருந்த உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது.


அமிர்தசரஸ் ஃபேமஸ்  குல்ஃபா கடை 

அவர் நம்மை அழைத்து சென்ற இடம் Famous Kulfa Shop.

திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே இருந்த மைக்கேல் ஐஸ்க்ரீம் கடைபோல் இருந்தது.

ஆர்வத்தோடு குல்ஃபா ஆர்டர் செய்தோம்..

குல்ஃபா?


பஞ்சாப் குல்ஃபிக்கு கொஞ்சம் தூரத்து சொந்தம். நம்ம மதுரை ஜிகர்தண்டா, சென்னை ஃபலூடாவிற்கெல்லாம் ரொம்பவே நெருங்கிய சொந்தம்.

பஞ்சாப் குல்ஃபி, ஃபலூடா சேமியா, ரோஸ் சிரப், மலாய் ரப்ரி, பாதாம் பிசின், ஐஸ் க்ரீம் - இவற்றையெல்லாம் ஒன்றின் மேல் ஒன்றாக போட்டு தருகிறார்கள்.

"அட....அவ்வளவுதானா?" என்று நினைக்க வேண்டாம்.

ஏழூ ஸ்வரங்கள் சேர்ந்து நம் காதுகளுக்கு இனிமையான இசை தருவது போல, ஆறு விதமான சுவைகள் ஒரே நேரத்தில் உங்கள் சுவை மொட்டுக்களை தாக்கும். அட....அட....கொஞ்ச நேரத்திற்கு குல்ஃபா சுவையில் சொக்கிப் போய் விடுவீர்கள்.

குல்ஃபா சேமியா (Noodles for Kulfa)

குல்ஃபி

குல்ஃபா ரப்ரி (Rabri for Kulfa)

ஸ்பூனில் எடுத்து வாயில் வைத்ததும் அதீத குளிர்ச்சியும், அதிக இனிப்பும் புது விதமான உணர்வை தரும். அடுத்து நாம் மெல்லும் பலூடா சேமியா அதிக படியான இனிப்பை சற்றே மட்டுப் படுத்தும். "அப்படி எல்லாம் இனிப்பை குறைக்க நான் விட மாட்டேன்" என்று வந்து நிற்கும் ரோஸ் சிரப்பும், மலாய் ரப்ரியும். 'நான் இருக்கிறேன்' என்று அமைதியாக தலை காட்டும் பாதாம் பிசின்..

அட...இவ்வளவு நன்றாக இருக்கிறதே. இன்னொன்று சாப்பிடலாம் என்றால் முடியாது. ஒரு குல்ஃபாவில் வயிறு நிறைந்து விடும்.

ஐம்பது ரூபாயில் 'அன்லிமிட்டட்  மீல்ஸ்' சாப்பிட்ட திருப்தி.

நீங்கள் அமிர்தசரஸ் சென்றால் கட்டாயம் குல்ஃபா சாப்பிட்டு பாருங்கள்.

 ஃபேமஸ் குல்ஃபா , A1 குல்ஃபா - இந்த இரண்டு கடைகளுக்கும் கட்டாயம் சென்று, சுவைத்து மகிழுங்கள்.

அமிர்தசரஸ்  ஃபேமஸ் குல்ஃபா கடை

Amritsar Famous Kulfa Shop Menu


குல்ஃபா
(Amritsar Famous Kulfa Shop Kulfa)

Sunday, 2 December 2018

அமிர்தசரஸ் லஸ்ஸி

அமிர்தசரஸ் லஸ்ஸி 
"லஸ்ஸி செய்வது ரொம்ப ஈஸி. கெட்டி தயிரில், சிறிது தண்ணீர் சேர்த்து, உப்பு அல்லது சர்க்கரை போட்டு, மிக்ஸி அல்லது hand blenderல் அடித்தால் லஸ்ஸி ரெடி. வேண்டும் என்றால் சிறிது ஏலக்காய் பொடி, குங்கும பூ சேர்க்கலாம். முடிந்தது வேலை."

அப்படிதான் இத்தனை நாளும் நினைத்திருந்தேன். பஞ்சாபின் அமிர்தசரஸ் செல்லும் வரை. 

அங்கு, லஸ்ஸி தயாரிப்பை ஒரு தவம் போல செய்கிறார்கள். திரும்பின இடம் எல்லாம் லஸ்ஸி கிடைக்கிறது. ஒரு கிளாஸ் லஸ்ஸி சாப்பிட்டால் போதும். மூன்று மணி நேரம் பசிக்காது. நம்மூர் டீ கடைகள் போல பார்க்கும் இடம் எல்லாம் சிறிய லஸ்ஸி கடைகள். தாபாக்களிலும் கட்டாயம் லஸ்ஸி உண்டு.

திரும்பின இடம் எல்லாம் லஸ்ஸி கிடைத்தாலும், லஸ்ஸிக்கென்றே சில ஸ்பெஷல் கடைகளும் உள்ளன.  Ahuja Lassi, Gian Di Lassi இப்படி பல லஸ்ஸி கடைகள். எங்களுக்கு டூரிஸ்ட் கைடு போல் செயல்பட்ட பேட்டரி ஆட்டோ ஓட்டுனர் சந்தரை கேட்டோம். Gian Di Lassi நன்றாக இருக்கும் என்று சொல்லி அழைத்துச் சென்றார்.


அமிர்தசரஸ் கியான் டி லஸ்ஸி கடை (Gian Di Lassi Shop, Amritsar)
ஆர்டர் கொடுத்து விட்டு, கடையை சுற்றிப் பார்த்தேன். சிறிய கடைதான். லஸ்ஸி மட்டுமே விற்பனை பொருள். ஆனால் அதற்கே ஐந்து பேர் வேலை செய்கிறார்கள். கடைக்கு பின்னால் சிறிய ஹால். அங்கே பார்த்தால் பெரிய சைஸ் கிரைண்டர்கள் இரண்டு இருந்தன. அவற்றில் தயிரை  கொட்டி நுரை ததும்ப அடிப்பார்களாம். அப்படி அடிக்கப் பட்ட தயிர் நுரைக்க நுரைக்க  உயரமான பிளாஸ்டிக் தொட்டிகளில் இருந்தது.  


லஸ்ஸி கிரைண்டர் 
தொட்டிகளில் தயிர் 

இந்த நுரை ததும்பும் தயிர்தான் லஸ்சிக்கான மூலப் பொருள். இந்த தயிரை ஒரு பானைக்குள் கொட்டி, ஐஸ் போட்டு வைத்திருக்கிறார்கள்..

நாம் லஸ்ஸி கேட்டதும், பைப் வைத்த பானையில் இருந்து தயிரை பெரிய கிளாசில் பிடித்து, மசாலா சேர்த்து, பக்கத்தில் இருக்கும் பெரிய தட்டில் இருந்து ஒரு கரண்டி வெண்ணெய் எடுத்து தாராளமாக போடுகிறார்கள். ஒரு ஸ்பூனை போட்டு நம் முன் கொண்டு வந்து வைக்கிறார்கள்.



லஸ்சியில் போட வெண்ணெய் 
ஸ்பூனில் வெண்ணெய்யை அள்ளி, சுவைத்து சாப்பிட வேண்டும். லஸ்சியையும் ஸ்பூனில் எடுத்து சாப்பிடலாம். அவ்வளவு கெட்டி. ஒரு கிளாஸ் லஸ்ஸி, கால் லிட்டருக்கு குறையாமல் இருக்கும். 

லஸ்ஸி நல்ல சுவை. வெண்ணெய்தான் கொஞ்சம் திகட்டியது.


சாப்பிட்டு முடித்ததும் ஒரு நிறைவு. அடுத்த மூன்று மணி நேரத்திற்கு பசி எடுக்கவில்லை. அமிர்தசரஸ் சென்றால் மறக்காமல் லஸ்ஸி சாப்பிடுங்கள்.



அமிர்தசரஸ் கியான் டி லஸ்ஸி கடை (Gian Di Lassi Shop, Amritsar)
அமிர்தசரஸ் கியான் டி லஸ்ஸி கடை (Gian Di Lassi Shop, Amritsar)

Sunday, 21 October 2018

அமிர்தசரஸ் குல்ச்சா

அமிர்தசரஸ் குல்ச்சா லாண்ட் குல்சா 

சப்பாத்தி, ரொட்டி, ருமாளி ரொட்டி, naan, பராத்தா, புல்கா, பூரி, குல்ச்சா- பெரும்பான்மையாக கோதுமை மாவு மற்றும் சில நேரங்களில் மைதா மாவு கொண்டு தயாரிக்கப் படும் வட இந்திய அடிப்படை உணவு வகைகளின் பட்டியல் இது. 

இது தவிர பிற தானியங்களை கொண்டு தயாரிக்கப் படும் அக்கி ரொட்டி, மிஸ்ஸி ரொட்டி, ஜோவார் ரொட்டி போன்றவையும் சில பகுதிகளில் பிரபலமான உணவுகள்.

தாவாவில் தயாரிக்கப் படும் ரொட்டிகள், தந்தூரி முறையில் தயாரிக்கப் படும் ரொட்டிகள் என்ற இரு வகைகளும் மேலே சொன்னவற்றில் அடங்கும்.

உருளை கிழங்கு, பனீர், மேத்தி (வெந்தய கீரை) போன்றவற்றை உள்ளே வைத்து செய்யப் படும் stuffed ரொட்டிகளும் உண்டு..

பார்ப்பதற்கு ஏறக்குறைய ஒன்றுபோல் தோன்றினாலும், இவற்றின் சுவையில் வேறுபாடு உண்டு.


குல்ச்சா லாண்ட் குல்சா 

சில மாதங்களுக்கு முன் அமிர்தசரஸ் சென்றிருந்தேன். அமிர்தசரஸ் குல்ச்சா ரொம்பவும் பிரபலம் என்றார்கள்.  விசாரித்ததில்  அமிர்தசரசில் உள்ள குல்ச்சா லாண்ட்  (Kulcha Land, Amritsar) பற்றி சொன்னார்கள். 
.
அமிர்தசரஸ் குல்ச்சா லாண்ட்
குல்ச்சா லாண்ட் சென்றோம். குல்ச்சாவும் லஸ்சியும் மட்டுமே விற்கிறார்கள். 

தந்தூரி முறையில் குல்ச்சா தயார் செய்கிறார்கள். 

மைதா மாவில்தான் குல்ச்சா தயாரிக்கிறார்கள். கோதுமை மாவு போல், மைதா மாவு உடல் நலத்திற்கு நல்லது அல்ல. ஆனாலும் மனம் கேட்பதில்லையே. இந்த குல்ச்சாவின் சுவையில் சொக்கிப் போய்விடுகிறோமே. என்ன செய்ய?

குல்ச்சாவில் மூன்று வகை கிடைக்கிறது:     
குல்ச்சா மெனு 


மசாலா குல்ச்சா
அம்ரித்சாரி குல்ச்சா 
பனீர்  குல்ச்சா 







அமிர்தசரஸ் குல்ச்சா லாண்ட் குல்சா 
மூன்று வகையிலும் ஒவ்வொன்று கொண்டு வரச் சொன்னோம்.

மசாலா குல்ச்சா சற்றே காரமாக இருக்கிறது..

பனீர் குல்ச்சா  அருமை.

ஆனாலும் அம்ரித்சாரி  குல்ச்சாதான் டாப் ஸ்டார்.. உருளை கிழங்கை  உள்ளே  வைத்து செய்வதே அம்ரித்சாரி குல்ச்சா. அமிர்தசரஸ் நகரில் கிடைக்கும் உருளை கிழங்கின் சுவையே தனி.

தந்தூரி அடுப்பில் இருந்து நேராக சுடச் சுட தருகிறார்கள். குல்ச்சாவின் மேல் பகுதி நெய்யில் குளித்து இருக்கிறது. சுடச் சுட, நெய் மணக்க சாப்பிடும் அனுபவமே அலாதிதான்..

தந்தூரி அடுப்பில் குல்ச்சா வெந்ததும் எடுத்து, சூடு ஆறுவதற்குள், கை நிறைய வெண்ணெய் அள்ளி  குல்ச்சா மேல்  போடுகிறார்கள். சூட்டில் வெண்ணெய் உருகி  குல்ச்சா முழுவதும்  பரவி விடுகிறது. வெண்ணெய் உருகி விடுவதால் ஏறக்குறைய நெய்யின் சுவை கிடைக்கிறது. உருகிய வெண்ணெய் குல்ச்சாவின் மேல் மினு மினுக்கிறது. அந்த மினு மினுப்பு  நம்மை மயக்குகிறது.


சன்னா மசாலா 

இரண்டு வகை சப்ஜி  தருகிறார்கள். 

ஒன்று  சன்னா மசாலா. அமிர்தசரஸ்  நகரில் உருளை கிழங்கிற்கு அடுத்தபடியாக சன்னா  தான். எந்த உணவகம் சென்றாலும்  சன்னா மசாலா கட்டாயம் உண்டு. சன்னாவை எட்டு மணி நேரமாவது ஊற வைப்பார்கள் என நினைக்கிறேன். அவ்வளவு சாஃப்ட் ஆக இருந்தது. காரமும் சுவையும் மணமும்  சன்னாவில் இரண்டற கலந்து  நம் நாவை  அதன் சுவையில் கட்டிப் போடுகிறது.



இன்னொரு சைட் டிஷ்....வெங்காயம்+மாங்கா துண்டுகள்.  இவற்றை புளி  தண்ணியில் வேக வைத்தது போல் இருந்தது. லேசான இனிப்பு. லேசான புளிப்பு. சுவையில் குறைவில்லை..

இரண்டு  குல்ச்சாவும் ஒரு கிளாஸ் லஸ்சியும்  சாப்பிட்டால் போதும். வயிறும் மனமும்  நிறைந்து விடும்.


குல்ச்சா சாப்பிட்டதும் சாப்பிட....
அமிர்தசரஸ் குல்ச்சா லாண்ட் 


அமிர்தசரஸ் குல்ச்சா லாண்ட் 


அமிர்தசரஸ் குல்ச்சா லாண்ட் 

Saturday, 20 October 2018

அமிர்தசரஸ் குர்தாஸ்ராம் ஜலேபி

அமிர்தசரஸ் குர்தாஸ் ராம் ஜலேபி வாலா 
நாம் ஒரு புதிய நகருக்கு சுற்றுலா செல்லும் போது காண வேண்டியது, புதிய இடங்களை மட்டும் அல்ல. புதிய  மனிதர்களையும் தான். பல விதமான மனிதர்களை சந்திப்பது நம் வாழ்வை செழுமை ஆக்கும். 

செல்லும் ஊரின் உணவு பழக்கங்களை அறிவதும் சுற்றுலாவின் ஒரு பகுதியே..

பிற பகுதிகளின் உணவுகளில் முக்கியமானது சின்னஞ்சிறு கடைகளில் (Street Food) விற்கப் படும் பண்டங்கள். சாலையோர சிறு கடைகளே சிறந்த, ருசியான உணவுகளை தரக் கூடியவை. 

அந்த வகையில், நான் அமிர்தசரஸ் சென்ற நாள் அன்று, இரவு உணவுக்கு பின் "குர்தாஸ் ராம் ஜலேபி வாலா" கடைக்கு சென்றேன். சிறிய கடை. பொற்கோயிலுக்கு மிக அருகில் உள்ளது. Heritage Walk பகுதிக்கு சென்று யாரிடம் கேட்டாலும் வழி சொல்லி விடுவார்கள்.

அமிர்தசரஸ் குர்தாஸ் ராம் ஜலேபி வாலா 
பழைய காலத்து கட்டிடம். பழைய கடை.

ஆனால் சுடச் சுட fresh&hot ஜலேபி. வாயில் வைத்தாலே கரைகிறது. ஜலேபி மட்டும் அல்ல. அதன் சுவையில் கரைவது நம் மனமும்.

அமிர்தசரஸ் குர்தாஸ் ராம் ஜலேபி 

அமிர்தசரஸ் குர்தாஸ் ராம் ஜலேபி 

வெளியே மொறு மொறுப்பு. உள்ளே  மிருதுவான தேன் போன்ற சர்க்கரை பாகு. அதுவும் சூடாக. வாங்கிய உடன் வாயில் போட்டால், நாக்கில் சுட்டு விடும். சுட்டாலும் அதுவும் சுகமே.

தொன்னையில் தருகிறார்கள்.

குலோப் ஜாமூனும் உண்டு. ஆனாலும் ஜலேபிக்கு கூட்டம் மொய்க்கிறது.

குறைந்த விலையில், நிறைந்த சுவை.

அமிர்தசரஸ் குர்தாஸ் ராம் ஜலேபி வாலா 

Friday, 19 October 2018

அமிர்தசரஸ் பொற்கோயில் 'லங்கார்' சாப்பாடு


பொற்கோயில் 'லங்கார்' உணவு கூடம்



    சில மாதங்களுக்கு முன் பஞ்சாப் அமிர்தசரசில் உள்ள பொற்கோயில் (Golden Temple) சென்றிருந்தேன். புனித குளத்தின் நடுவே தங்க தகடுகளால் தக தகக்கும் பொற்கோயில், 'கிரந்தம்' எனப்படும் சீக்கியர்களின் புனித நூல், கோயில் வளாகத்தில் உள்ள புனித Ber மரம், கோயிலில் வழங்கப்படும் 'பின்னி' பிரசாதம் (Pinni Prasad), பொற்கோயில் 'Langar' ல் நாள் முழுவதும் கிடைக்கும் இலவச சாப்பாடு ஆகியவை மறக்க முடியாத புனித அனுபவங்கள் ஆகும்.

 'லங்கார்' என்ற பஞ்சாபி வார்த்தைக்கு சமையலறை என்று பொருள்.


பொற்கோயில் 'லங்கார்' நுழைவாயில் 


  பொற்கோயில் வளாகத்தில் உள்ள பெரிய கட்டிடம் ஒன்றில், நாள் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப் படுகிறது.

பொற்கோயில் 'லங்கார்' உணவு தட்டு வழங்குமிடம் 
பொற்கோயில் 'லங்கார்'


  லங்கார் கட்டிடத்தில் நுழைந்ததும், பொற்கோயில் நுழைவாயில் போலவே, சிற்றோடை போல் ஓடும் தண்ணீரில் கால் நனைத்த பின்னரே உள்ளே செல்ல வேண்டும். இடது புறம் கை கழுவும் இடம். கை கழுவி விட்டு இரண்டடி நடந்தால், தட்டு, ஸ்பூன், தண்ணீர் குடிக்க பாத்திரம் தருகிறார்கள். 
அமிர்தசரஸ் பொற்கோயில் 'லங்கார்'

    தரை தளம், முதல் தளம் இரண்டிலும் சாப்பாட்டுக் கூடங்கள் இருக்கின்றன.  அடுத்த பந்திக்கு தயாராக உள்ள hallல் சென்று அமர வேண்டும். தரையில் அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். பல்லாயிரம் பக்தர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடக் கூடிய பெரிய சாப்பாட்டுக் கூடங்கள்.

    ஒரு பந்தி இருபது நிமிடத்தில் முடிந்து விடுகிறது. பத்தே நிமிடங்களில் சுத்தம் செய்யப் பட்டு, அடுத்த பந்திக்கு ரெடியாகி விடுகிறது சாப்பாட்டுக் கூடம்.

    சுத்தமாகவும், அதே நேரத்தில் சுறு சுறுப்பாகவும் பணிகள் நடக்கின்றன. 

 மிகப் பெரிய சமையல் கூடத்தில், ஆயிரக்கணக்கில் சப்பாத்திகளை சுட்டு தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் பெண்கள். இங்கே பணி செய்பவர்கள் பெரும்பாலும் தன்னார்வ தொண்டு செய்யும் சீக்கிய பக்தர்களே.


பொற்கோயில் 'லங்கார்' உணவு 


பொற்கோயில் 'லங்கார்' உணவு 

    ஜிலேபி போன்ற ஏதாவது ஒரு இனிப்பு, சப்பாத்தி, இரண்டு வகை 'சப்ஜி', கேசரி போன்ற இனிப்பு  -இதுதான் மெனு. நான் சென்றபோது 'பிர்னி' என்ற பஞ்சாபி பாரம்பரிய இனிப்பு கிடைத்தது.

 ஆயிரக் கணக்கான பக்தர்களும், இரண்டே நிமிடங்களில் தட்டுகளுடன் பந்தியில் அமர்ந்து விடுகிறார்கள். முதலில் ஒருவர் குடிக்க தண்ணீர் ஊற்றி செல்கிறார். பின்னால் ஒருவர் இனிப்புடன் வருகிறார். அதற்குள் இன்னொருவர் சப்பாத்தியுடன் வருகிறார். இரண்டு கை ஏந்தி பக்தியுடன் வாங்கி கொள்கிறார்கள். அடுத்தடுத்து இருவர் சப்ஜிக்களுடன் வருகிறார்கள். 

            இவ்வளவு பெரிய கூட்டத்தில் பரிமாறுவது ஆமை வேகத்தில் இருக்குமோ என்று நினைத்தேன். ஆனால் ஒவ்வொரு வரிசைக்கும் நான்கு பேர் வீதம், நிறைய பேர் ஊழியம் செய்வதால் எல்லாம் மின்னல் வேகத்தில்  நடக்கிறது.

    நாம் இரண்டு சப்பாத்தி சாப்பிட்டு முடிப்பதற்குள், மீண்டும் சப்பாத்திக்களுடன் ஒருவர் வருகிறார். மீண்டும் சப்ஜிக்கள் வருகின்றன. நமது சாப்பிடும் வேகத்தை விட பரிமாறும் வேகம் அதிகமாக இருக்கிறது.

       வயிறு நிரம்பும் வரை கேட்டு வாங்கி சாப்பிடலாம். ஆனால் தேவைக்கேற்ப வாங்க வேண்டும். உணவுகளை வீணடிக்க கூடாது. இதற்கிடையே இரண்டாவது இனிப்பும் வந்து விடுகிறது.

                பந்தி முடித்து பலர் எழுந்து விட்ட போதிலும், சிலர் மட்டும் மீண்டும் சப்பாத்தி கேட்கிறார்கள். அவர்களுக்கும் முகம் சுளிக்காமல் பரிமாறுகிறார்கள்.

            சாப்பிட்டு முடித்ததும், தட்டுகளுடன் கீழ் தளம் வந்து விட வேண்டும். வரும் வழியில் திறந்த வெளி சமையல் அறையினை காணலாம்.
பொற்கோயில் 'லங்கார்' பாத்திரம் கழுவும் பணி...
பொற்கோயில் 'லங்கார்'-பூண்டு உரிக்கும் பெண்கள் 
    அங்கே, நாம் சாப்பிட்ட தட்டுகளை வாங்கி கழுவும் இடம் அனுப்ப பலர் காத்து கொண்டிருக்கிறார்கள். பாத்திரம் கழுவும் இடத்தினை பார்த்தேன். நூற்றுக் கணக்கானோர் தொண்டு செய்து கொண்டிருக்கிறார்கள்.  படு சுத்தம். பக்கதிலேயே கை கழுவும் இடம்.

             அடடா....என்ன ஒரு ஒழுங்கு.

      ஆயிரக்கணக்கில் செலவு செய்து சாப்பிடும் ஹோட்டல்களில் கூட இப்படி ஒரு service எதிர் பார்க்க முடியாது. பந்தி உபசரிப்பு பற்றி நம் கல்யாண காண்ட்ராக்டர்கள் இவர்களிடம் பாடம் படிக்க வேண்டும்..

எளிய உணவு. ஆனாலும் ருசியான தரமான உணவு. வயிறும் மனமும் நிரம்பி விடுகிறது.

உணவு முழுக்க முழுக்க இலவசம். விரும்பியோர் நன்கொடை தரலாம்..

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...