பொற்கோயில் 'லங்கார்' உணவு கூடம் |
சில மாதங்களுக்கு முன் பஞ்சாப் அமிர்தசரசில் உள்ள பொற்கோயில் (Golden Temple) சென்றிருந்தேன். புனித குளத்தின் நடுவே தங்க தகடுகளால் தக தகக்கும் பொற்கோயில், 'கிரந்தம்' எனப்படும் சீக்கியர்களின் புனித நூல், கோயில் வளாகத்தில் உள்ள புனித Ber மரம், கோயிலில் வழங்கப்படும் 'பின்னி' பிரசாதம் (Pinni Prasad), பொற்கோயில் 'Langar' ல் நாள் முழுவதும் கிடைக்கும் இலவச சாப்பாடு ஆகியவை மறக்க முடியாத புனித அனுபவங்கள் ஆகும்.
பொற்கோயில் வளாகத்தில் உள்ள பெரிய கட்டிடம் ஒன்றில், நாள் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப் படுகிறது.
பொற்கோயில் 'லங்கார்' உணவு தட்டு வழங்குமிடம் |
பொற்கோயில் 'லங்கார்' |
லங்கார் கட்டிடத்தில் நுழைந்ததும், பொற்கோயில் நுழைவாயில் போலவே, சிற்றோடை போல் ஓடும் தண்ணீரில் கால் நனைத்த பின்னரே உள்ளே செல்ல வேண்டும். இடது புறம் கை கழுவும் இடம். கை கழுவி விட்டு இரண்டடி நடந்தால், தட்டு, ஸ்பூன், தண்ணீர் குடிக்க பாத்திரம் தருகிறார்கள்.
அமிர்தசரஸ் பொற்கோயில் 'லங்கார்' |
தரை தளம், முதல் தளம் இரண்டிலும் சாப்பாட்டுக் கூடங்கள் இருக்கின்றன. அடுத்த பந்திக்கு தயாராக உள்ள hallல் சென்று அமர வேண்டும். தரையில் அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். பல்லாயிரம் பக்தர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடக் கூடிய பெரிய சாப்பாட்டுக் கூடங்கள்.
ஒரு பந்தி இருபது நிமிடத்தில் முடிந்து விடுகிறது. பத்தே நிமிடங்களில் சுத்தம் செய்யப் பட்டு, அடுத்த பந்திக்கு ரெடியாகி விடுகிறது சாப்பாட்டுக் கூடம்.
சுத்தமாகவும், அதே நேரத்தில் சுறு சுறுப்பாகவும் பணிகள் நடக்கின்றன.
மிகப் பெரிய சமையல் கூடத்தில், ஆயிரக்கணக்கில் சப்பாத்திகளை சுட்டு தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் பெண்கள். இங்கே பணி செய்பவர்கள் பெரும்பாலும் தன்னார்வ தொண்டு செய்யும் சீக்கிய பக்தர்களே.
பொற்கோயில் 'லங்கார்' உணவு |
ஜிலேபி போன்ற ஏதாவது ஒரு இனிப்பு, சப்பாத்தி, இரண்டு வகை 'சப்ஜி', கேசரி போன்ற இனிப்பு -இதுதான் மெனு. நான் சென்றபோது 'பிர்னி' என்ற பஞ்சாபி பாரம்பரிய இனிப்பு கிடைத்தது.
ஆயிரக் கணக்கான பக்தர்களும், இரண்டே நிமிடங்களில் தட்டுகளுடன் பந்தியில் அமர்ந்து விடுகிறார்கள். முதலில் ஒருவர் குடிக்க தண்ணீர் ஊற்றி செல்கிறார். பின்னால் ஒருவர் இனிப்புடன் வருகிறார். அதற்குள் இன்னொருவர் சப்பாத்தியுடன் வருகிறார். இரண்டு கை ஏந்தி பக்தியுடன் வாங்கி கொள்கிறார்கள். அடுத்தடுத்து இருவர் சப்ஜிக்களுடன் வருகிறார்கள்.
இவ்வளவு பெரிய கூட்டத்தில் பரிமாறுவது ஆமை வேகத்தில் இருக்குமோ என்று நினைத்தேன். ஆனால் ஒவ்வொரு வரிசைக்கும் நான்கு பேர் வீதம், நிறைய பேர் ஊழியம் செய்வதால் எல்லாம் மின்னல் வேகத்தில் நடக்கிறது.
நாம் இரண்டு சப்பாத்தி சாப்பிட்டு முடிப்பதற்குள், மீண்டும் சப்பாத்திக்களுடன் ஒருவர் வருகிறார். மீண்டும் சப்ஜிக்கள் வருகின்றன. நமது சாப்பிடும் வேகத்தை விட பரிமாறும் வேகம் அதிகமாக இருக்கிறது.
வயிறு நிரம்பும் வரை கேட்டு வாங்கி சாப்பிடலாம். ஆனால் தேவைக்கேற்ப வாங்க வேண்டும். உணவுகளை வீணடிக்க கூடாது. இதற்கிடையே இரண்டாவது இனிப்பும் வந்து விடுகிறது.
பந்தி முடித்து பலர் எழுந்து விட்ட போதிலும், சிலர் மட்டும் மீண்டும் சப்பாத்தி கேட்கிறார்கள். அவர்களுக்கும் முகம் சுளிக்காமல் பரிமாறுகிறார்கள்.
சாப்பிட்டு முடித்ததும், தட்டுகளுடன் கீழ் தளம் வந்து விட வேண்டும். வரும் வழியில் திறந்த வெளி சமையல் அறையினை காணலாம்.
பொற்கோயில் 'லங்கார்' பாத்திரம் கழுவும் பணி... |
பொற்கோயில் 'லங்கார்'-பூண்டு உரிக்கும் பெண்கள் |
அடடா....என்ன ஒரு ஒழுங்கு.
ஆயிரக்கணக்கில் செலவு செய்து சாப்பிடும் ஹோட்டல்களில் கூட இப்படி ஒரு service எதிர் பார்க்க முடியாது. பந்தி உபசரிப்பு பற்றி நம் கல்யாண காண்ட்ராக்டர்கள் இவர்களிடம் பாடம் படிக்க வேண்டும்..
எளிய உணவு. ஆனாலும் ருசியான தரமான உணவு. வயிறும் மனமும் நிரம்பி விடுகிறது.
உணவு முழுக்க முழுக்க இலவசம். விரும்பியோர் நன்கொடை தரலாம்..
No comments:
Post a Comment