பக்தி உலா by ஸ்ரீவித்யா |
அரசர் கோயில் வரதராஜபெருமாள் திருக்கோயில் |
சில நிகழ்வுகள் பிறர் சொல்லி கேட்டால் நம்ப முடியாதது போல்
இருக்கும். ஆனால் நமக்கே ஏற்படும்போது நம்பித்தான் ஆகவேண்டும். சில கோயில்களுக்கு
செல்ல நினைத்தால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தடை ஏற்படும். ஆனால் அந்த தெய்வமே வா
என்று அழைப்பது போல் கடந்தவாரம் வாட்சப் பதிவு ஒன்று என்னை வந்தடைந்தது. ஆறாயிரம் வருடங்களாக அருள் பாலித்து
கொண்டிருக்கும் கமலவரவரதராஜப் பெருமாள் மற்றும்
சுந்தரமகாலக்ஷ்மி தாயார் என்றழைக்கப்படும் பெருந்தேவி தாயார் கோயிலுக்கு ஒரு
பயணம். செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள
படாளம் என்ற இடத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் அமையப்பெற்றுள்ளது
இத்தலம்.
WhatsApp பதிவில் வந்த தகவலை உறுதி செய்து கொள்ளலாம் என்று
நெட்டை கிளறினால் கொட்டி கிடந்தது கோயில்
பற்றிய தகவல்கள். உடனே புறப்பட்டுவிட்டோம். நம்பினால்
நம்புங்கள் எந்த பிரச்சினையும் ஏற்படாமல் சென்று வந்தோம். காலத்தை வென்று நிற்கும் அற்புத கலை பொக்கிஷம்
ஒன்று கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருப்பது அங்கு சென்ற பிறகுதான் தெரிய
வந்தது.
அரசர் கோயில் வரதராஜபெருமாள் திருக்கோயில் |
கருடன் சந்நிதி, அரசர் கோயில் |
மனித நடமாட்டம் இல்லாத அந்த கிராமத்து சாலையில் அம்போவென நிற்கிறது அந்த அழகானகோயில். உள்ளே நுழைந்தவுடன் கொடி மரம் இல்லை. பலி பீடம். அதன் பின்னால் பெருமாளை பார்த்தவாறு கருடன் சந்நிதி. படி ஏறி சென்றால் பெருமாள் சந்நிதி. பெருமாள் சந்நிதிக்கு இடது புறம் பெருமாளை நோக்கியவாறு தனி சந்நிதியில் தாயார். இந்த தாயார் சந்நிதிதான் அத்தனை விசேஷங்களையும் கொண்டது.
ஆம் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் இந்த தாயாருக்கு வலது காலில் ஆறு விரல்கள். புன்னகை சிந்தும் இதழ்கள். தாமரைக்கும் இந்த கோயிலுக்கும் ஏதோவொரு சம்பந்தம். பெருமாள் பெயர் கமல என்று தொடங்குகிறது. தாயார் சந்நிதி முன் உள்ள மண்டபத்தில் தூண்களில் தாமரை இதழ் போன்ற அமைப்பு தாயாரின் கைகளில் தாமரைப்பூ. என்ன ஒரு சிறப்பு.
ஆறு என்பது சுக்கிரனின் எண். இந்த தாயாரிடம் சுக்கிரன்
ஐக்கியமானதாக ஐதீகம். இப்போதும்
வெள்ளிக்கிழமைகளில் காலை சுக்கிர ஹோரையில் சுக்கிர பகவான் இத்தலத்திற்கு வந்து வழிபடுவதாக சொல்கின்றனர். சுக்கிர பலம் வேண்டுவோர் வழிபட வேண்டிய கோயில் இது.
குபேர கோமுகம் |
வீடுவாங்க முடியவில்லையா?திருமணத் தடையா? பிள்ளைப்பேறு இல்லையா, அபரிமிதமான செல்வம் சேர வேண்டுமா உங்கள் கோரிக்கை எது என்றாலும் உடனே நிறைவேற்றித்தர தயாராக காத்திருக்கிறார் இந்த தாயார்.
அரசர் கோயில் தாயார் சந்நிதி-முகப்பில் இருபுறமும் இசை தூண்கள் |
Well..... இதுவரை ஆன்மீகமான செய்திகளை பார்த்தாகி விட்டது. இனி இங்கு உள்ள பொக்கிஷங்களை பற்றி பார்ப்போம். தாயார் சந்நிதியின் தூண்களில் தட்டினால் இசை எழும்புகிறது. மிகமிக அற்புதமான கலை வடிவங்களை தாங்கி சிற்பியின் கைவண்ணத்தை உலகுக்கு பறை சாற்றுகிறது இந்த தூண்கள்.
ஸ்ரீ அக்ஷ்ய பாத்திர விநாயகர் |
தாயார் சந்நிதிக்கு வெளியே அமர்ந்துள்ள தும்பிக்கை ஆழ்வாருக்கு பெயர் அக்ஷ்ய பாத்திர விநாயகர். அவரது தலைக்கு மேல் மிகச்சிறிய விதானம். அதுகூட மிக அழகாக செதுக்கப்பட்டிருக்கிறது. தாயார் சந்நிதியின் சுற்றுப்புற சுவர்களில் நரசிம்மர் மற்றும் உலகளந்தபெருமாள் மிகச்சிறிய வடிவில் செதுக்கபட்டிருக்கிறது. மண்டபத்தின் சிறுபகுதியை கூட விடாமல் இழைத்து தள்ளி இருக்கிறார் பெயர் தெரியாத அந்த சிற்பி. தூணில் உள்ள ஒரு துளை வழியே உள்செலுத்தும் குச்சி நான்காக பிளந்து வருகிறது. இது வேதத்தை நான்காக பிரித்த இடமாம்.
கோயிலை சுற்றி வரும்பொழுது தண்ணீரில்லாமல் கிணறு ஒன்று பூட்டி கிடக்கிறது. பாலாற்றங்கரையில் இருந்தும் சொட்டு தண்ணீர் இல்லை. பாலாறில் தண்ணீர் இருந்தால்தானே. அங்கே மணலே இல்லை அப்புறம்தானே தண்ணீர் இருப்பதற்கு.
அரசர் கோயில் கல்வெட்டு |
எல்லாமே நல்ல விஷயங்கள்தானா? என்றுதானே கேட்கிறீர்கள். மனதை நெருடிய விஷயங்களையும் பதிவிடுகிறேன். Renovation என்ற பெயரில் கோயிலின் பல இடங்களையும் சிமென்ட் கொண்டு மெழுகி இருக்கிறார்கள். தொன்மையான சிற்பங்கள் தத்தம் originalityஐ இழந்துவிட்டன.
மற்றுமொரு முக்கியமான விஷயம் இந்த கோயிலின் பட்டர். உள்ளே வருபவர்களை வெளியேற்றுவதிலேயே குறியாக இருக்கிறார். கோயிலின் தல புராணத்தையோ சிற்பங்களின் சிறப்புகளையோ எதுவும் எடுத்துச் சொல்லவில்லை. இணையத்தில் படித்த விஷயங்களை வைத்து நாங்களே தேடி பிடித்து ரசித்து மகிழ்ந்ததுதான் மேற்கண்ட விஷயங்கள்.
இங்கு செல்லும்போது நாம் கொண்டு செல்ல வேண்டிய பொருட்கள் செவ்வாழை பழம், தாமரைப்பூ, கல்கண்டு, ஏலக்காய்,கிராம்பு ஜாதிபத்திரி போன்றவை. தொடர்புக்கு ஸ்ரீ. கண்ணன் பட்டாச்சாரியார் 9698510956
No comments:
Post a Comment