Sunday, 22 April 2018

மைசூரு மசால் தோசை


மைசூரு மசால் தோசை 
    
        மசால் தோசை. அல்லது மசாலா தோசை. கர்நாடக மாநிலத்தின் உடுப்பி பகுதியின் சிறப்பு உணவு. பொன்னிற தோசைக்குள்ளே உருளை கிழங்கு மசாலா வைத்து மடித்து தரும் அழகே அழகு. கஞ்சத்தனம் இல்லாமல் தாராளமாக இருக்கும் மசாலாவின் அளவு. ஒரே ஒரு தோசை போதும். பசி அடங்கி விடும். கூடவே சட்னியும், சாம்பாரும் தருவார்கள். ஆனால் உருளை கிழங்கு மசால் இருக்கும் போது, சட்னிக்கும், சாம்பாருக்கும் மதிப்பேது?

   அதே தோசைக்குள்ளே, வறுத்து எடுத்த வர மிளகாய், கடலை பருப்பு, கரைத்த புளி, உப்பு, வதக்கிய வெங்காயம், பூண்டு (தேவை பட்டால்) இவற்றை சிறிது தண்ணீர் விட்டு, நைசாக அரைத்தால்,  மைசூரு மசால் தோசைக்கான வர மிளகாய் பேஸ்ட் ரெடி. தோசை ஒரு பக்கம் பொன்னிறமாக வெந்ததும், மறு புறம் இந்த வர மிளகாய் பேஸ்ட் தடவி, உருளை மசாலா  வைத்தால் அது மைசூரு மசாலா தோசை ஆகி விடும்.

        தோசையை விண்டு வாயில் வைத்தால், 'சுள்' ளென்று காரம் தெரியும். மசாலா சேர்த்து சாப்பிட்டால் ...ஆஹா..அது ஒரு தனிச்சுவை. நல்ல தரமான உருளை கிழங்கு சுவையை கூட்டும். மசாலா ரொம்ப கெட்டியாக இருக்க கூடாது. அதே சமயம் தளர இருந்தாலும் ஆகாது. இரண்டுக்கும் இடைப்பட்ட பக்குவம் தான் சரி. உருளை கிழங்கு பெரிய துண்டாக இருக்க கூடாது. அதே நேரம் மாவு போல் குழைந்து விடவும் கூடாது.

         தோசை மாவில் சிறிது சர்க்கரை  சேர்த்து  அரைத்தால் , சுட்டெடுக்கும் போது தோசை  நல்ல பொன்னிறமாக வரும்.

         மெல்லிய தோசையாக சுட வேண்டும். அதான் மசால் தோசைக்கு சரி.

      தோசை ரொம்ப முறுகக் கூடாது. மசால் சேர்த்து சாப்பிடும் முன்னே உடைந்து விடும்.

    இப்படி நாம் பார்த்து பார்த்து பக்குவமாக செய்தாலும், தோசை சுடுவதில், உடுப்பிகாரர்களின் கைபக்குவமே தனி. அது நமக்கு சுட்டுப் போட்டாலும் வராது.

              சென்னையில் சரவண பவன், சந்கீதாக்களில் தோசை ரொம்பவே சுமார். மசால் தோசை கேட்கவே வேண்டாம். 

                 ஒரு நாள் பேச்சு வாக்கில் நண்பர் ஒருவர் சொன்னார்: 

"சென்னையிலேயே  ஆகச் சிறந்த மசால் தோசை கிடைக்கும் இடம் சொல்லவா?"

"ஆஹா....அற்புதம். இதை....இதைத் தானே எதிர்பார்த்தேன்? உடனே சொல்லும் ஐயா " என்றேன்.

      ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள  உட்லண்ட்ஸ்  (New Woodlands) ஹோட்டல்தான் நண்பர் சொன்ன இடம்.

                 சென்றேன். உண்மைதான். அருமையான சுவை. மசால் தோசை, மைசூர் மசால் தோசை இரண்டுமே கிடைக்கிறது. மைசூர் மசால் தோசை சுவைத்து பார்த்தேன். 

                  தோசையின் சுவை, வர மிளகாயின் காரம், மசாலாவின்  மணம்-மூன்றும் இணைந்து  கைதேர்ந்த இசை அமைப்பாளரின் tune போல, ஒருங்கிணைந்த சுவை நாக்கில் தெறிக்கிறது.

                தேங்காய் சட்னி, சின்ன வெங்காய சாம்பார் (ஒரு கப் சாம்பாருக்கு சரியாக ஒரு வெங்காயம் இருந்தது), கார சட்னி - இவ்வளவும் தோசை கூடவே வந்தன. ஆனாலும் தோசை காரமும், மசாலா சுவையும், சட்னி, சாம்பார் பக்கம் போக விடாமல் கையை கட்டி போட்டு விட்டன. 
                    
           எனக்கு தகவல் சொன்ன நண்பர்  நல்ல சாப்பாட்டு  ரசனை உள்ளவர்தான். 

No comments:

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...