சில கதைகளை படிக்கும்போது நல்ல சமையல் ரெசிப்பிகள் கிடைக்கும். இது எப்போதாவது நிகழும் அற்புதம். சிவசங்கரியின் பாலங்கள் கதை படித்தபோது "வண்டிக்காரன் துவையல்" பற்றி தெரிந்தது. தேவனின் "அப்பளக் கச்சேரி" யை ஒரு ரெசிப்பி சுரங்கம் என்றே சொல்லலாம். 1940 களில் சென்னையில் வாழ்ந்த பிராமணர்களின் சாப்பாட்டுக் குறிப்புகளை கதையின் போக்கு கெடாமல் கொடுத்திருப்பார் தேவன். சமூகவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு கூட உதவ கூடிய புத்தகம் என்பேன்.
சமகால இலக்கியத்தில் கூட சில அருமையான உணவு குறிப்புகள் கிடைக்கும் என்பதை சில மாதங்களுக்கு முன் தெரிந்து கொண்டேன். ஆனந்த விகடனில் 'தூத்துக்குடி கேசரி' என்ற சிறுகதை வெளியானது. கதையின் நாயகன் ஒரு சமையல் காண்ட்ராக்டர். நன்றாக சமைக்கக் கூடியவரும் கூட. அதைவிட முக்கியமாகன விஷயம்... சமைத்த உணவைவிட அதிகம் பேர் வந்து விட்டால்கூட நாசூக்காக சமாளிக்க தெரிந்தவர்.
அவர் ஒரு கல்யாண விருந்தில் ஒரு புதிய இனிப்பை செய்து பரிமாறி இருப்பார். சாப்பிட்ட அனைவருக்கும் அந்த இனிப்பு ரொம்பவே பிடித்து விடும். பாராட்டி விட்டு இந்த இனிப்பின் பெயர் என்ன என்று கேட்ட போது 'தூத்துக்குடி கேசரி' என்பார்.
பாவம்! இந்த தூத்துக்குடி கேசரியால் தன் சமையல் தொழிலையே விட்டு விட நேரும் என்பது அப்போது அவருக்குத் தெரியாது.
இப்போது தூத்துக்குடி கேசரி செய்முறையை பார்த்துவிட்டு கதைக்கு வருவோம். 'தூத்துக்குடி கேசரி' சிறுகதையில் கொடுத்திருந்த அந்த ரெசிப்பியை அப்படியே செய்து பார்த்தேன். இதோ....
தூத்துக்குடி கேசரி |
இரண்டு ஸ்பூன் நெய் விட்டு, முந்திரி, உலர் திராட்சையை வறுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கப் பாம்பே ரவையை நன்கு வறுத்து...
கொதிக்க வைத்த இரண்டு கப் வெந்நீரை, சிறிது சிறிதாக ஊற்றி ...கட்டி தட்டாமல் வேக வைக்கவும்.
ரவை நன்கு வெந்தபின், ஒன்றரை கப் சர்க்கரையை சேர்த்து கட்டி தட்டாமல் கிளறவும்.
அரை கப் நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து, வறுத்து வைத்த முந்திரி, திராட்சையும் போட்டு, ஓரளவு கெட்டியானதும்....அடுப்பை அணைத்து டூட்டி ப்ரூட்டி (பலவித வண்ணங்களில் ) சேர்த்து , இறக்கி, ஆற விடவும். முக்கியமான குறிப்பு. மூடி போட்டு மூடக்கூடாது. திறந்த பாத்திரத்தில் வைத்து ஆறவிட வேண்டும்.
சூடான சுவையான தூத்துக்குடி கேசரி தயார்.
சில நாட்களுக்கு முன்னர்தான் முதன்முறையாக இதனை செய்து பார்த்தோம். சுவை மிக நன்றாக இருந்தது. சாப்பிட்டு பார்த்த நண்பர்களும் அப்படித்தான் சொன்னார்கள்.
எல்லாம் சரி. இதில் தூத்துக்குடி எங்கிருந்து வந்தது?
இப்போது கதைக்கு வருவோம்.
"எல்லாம் சரி. இதில் தூத்துக்குடி எங்கிருந்து வந்தது?"
இந்த கேள்வியைத்தான் அந்த கதையில் வந்த சமையல்காரரை கேட்டார் ஒருவர்.
அதுவும் குசும்பாக...
சமையலில்....எத்தகைய பெரிய பந்தியையும் சமாளிக்கும் திறமையில் கைதேர்ந்தவரான அந்த சமையல்காரர் ரோசக்காரரும்கூட.
" நான் தூத்துக்குடியை சேர்ந்தவன். அங்கே இப்படி ஒரு ஸ்வீட்டை கேள்விப் பட்டதே இல்லை. உண்மையை சொல்லும். நீர் செய்தது தூத்துக்குடி கேசரிதானா? "
"ஆமாம்"
"நீர் நன்றாகத்தான் சமைக்கிறீர். ஆனால் சரியான பித்தலாட்டக்காரராய் இருக்கிறீரே? தூத்துக்குடியில் வழக்கில் இல்லாத ஒரு இனிப்பை சொல்லி பெயர் வாங்க பார்க்கிறீரே "
ரோசக்காரரான அந்த சமையல்காரர் "இனி நான் எந்த கல்யாணத்திற்கும் சமைக்க மாட்டேன் " என்று சபதம் போட்டு அதில் உறுதியாகவும் இருந்தார்.
தன் வீட்டுக் கல்யாணத்திற்கு அவர்தான் சமைக்க வேண்டும் என்று ஒருவர் பிடிவாதமாக பேசியபோதுதான் தெரிந்தது...
டூட்டி ப்ரூட்டி என்று உச்சரிக்க தெரியாமல் அவர் தூத்துக்குடி ...தூத்துக்குடி என்று சொன்னதும்...
தான் புதிதாக டூட்டி ப்ரூட்டி போட்டு செய்த கேசரியை தூத்துக்குடி கேசரி என்றதும்.
எது எப்படியோ எனக்கு ஒரு புது இனிப்பு கிடைத்து விட்டது.
4 comments:
வணக்கம்,
ஆம், இந்தக் கதை எழுதியவன் தான். தங்கள் CREDITSக்கு நன்றி
சமீப காலத்தில் எனக்கு மிகவும் பிடித்துப் போன கதைகளில் ஒன்று "தூத்துக்குடி கேசரி". கதை ஆசிரியரே comment போட்டதில் அகமகிழ்கிறேன். நீங்கள் தூத்துக்குடிகாரரோ?
ஆமாம். இது தொகுப்பாக வரும்பொழுது. உங்களுக்கும் ஒன்றை அனுப்பிவைக்கிறேன்
நன்றி
தொகுப்பாக வந்துவிட்டது.. உங்கள் முகவரி கொடுங்கள் ராமன்
Post a Comment