Sunday, 12 May 2019

மோர் மிளகாய் செய்முறை-ஒரு காணொளி

மோர் மிளகாய்


கோடை வெயிலை வீண் செய்யாமல், அருமையான தஞ்சாவூர் குடை மிளகாய் வாங்கி, மோர் மிளகாய் செய்வது எப்படி? 

இதோ, மோர் மிளகாய் வீடியோ ரெசிப்பி.







Sunday, 5 May 2019

தஞ்சாவூர் குடை மிளகாய்.....மொறு...மொறு.....மோர் மிளகாய்


மோர் மிளகாய் 


தனித்துவமான ..........

தஞ்சாவூர் குடை மிளகாய் 


இப்போது எல்லா  'சீசனிலும்'  எல்லா உணவுகளும் கிடைக்கின்றன. Cold Storage புண்ணியத்தால்  வருடம் முழுவதும் ஆப்பிள் கிடைக்கிறது. அதில் "சுவையும் இல்லை... ஆரோக்கியமானதும் இல்லை " என்பது வேறு  விஷயம். 

ஆனால் இன்றும்  கோடையில்  மட்டுமே கிடைக்கக் கூடியவை  மாங்காய், மாம்பழம், மாவடு மற்றும் தஞ்சாவூர் குடை மிளகாய்.

ஆவக்காய் ஊறுகாய், மாவடு & மோர் மிளகாய்  - இந்த மூன்றையும் கோடையின் அற்புதம் எனலாம். 

இந்த அற்புதங்களில் ஒன்றான மோர் மிளகாய்  பற்றி தான் இந்த பதிவு.

Capsicum a.k.a. Simla Mirchi, Green Chilli - இந்த இரண்டும் ஆண்டு முழுவதும் கிடைக்கும். ஆனால்  மோர் மிளகாய் போட இவை உதவாது.

ஹோட்டல்களில்  பரிமாறப் படும்  மோர் மிளகாய் , இந்த நீளமான பச்சை  மிளகாய் கொண்டுதான் செய்யப் படுகிறது. சட்னி  செய்ய பயன் படும் பச்சை  மிளகாயில்  மோர் மிளகாய் போடுவது  அபத்தமான செயல். அதில் வாசனையோ, கெட்டி தன்மையோ இருக்காது. வாணலியில் போட்ட உடன் கருகி விடும்.

தஞ்சாவூர் குடை மிளகாய் 



   ஆனால்  தஞ்சாவூர் குடை மிளகாயின்  சுவையும், மணமும் வார்த்தைகளால் சொல்ல இயலாதவை. சாப்பிட்டு பார்த்து மட்டுமே உணர  முடியும்.

இன்று  தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளிலும் கிடைத்தாலும், தஞ்சாவூர்தான் குடை மிளகாயின் தாய் வீடு.


எப்போது கிடைக்கும்?

பிப்ரவரியில்  துவங்கி  ஏப்ரல்  முதல் வாரம் வரை  மட்டுமே  தஞ்சாவூர் குடை மிளகாய் கிடைக்கும். சென்னையில்  மாம்பலம் மார்க்கட், மைலாப்பூர்  மார்க்கட், நங்கநல்லூர், திருச்சியில்  நந்தி கோயில்  தெரு ஆகிய இடங்களில்  கிடைக்கும். ஆனால் தஞ்சாவூரில்  ஃபிரெஷ் ஆகவும், விலை  குறைவாகவும் கிடைக்கும்.


இயற்கையோடு ......... 

இணைந்து வாழ்வோம் .........

   அந்த அந்த சீசனில் கிடைக்கும் உணவு பொருள்கள்  தரமானதாகவும், விலை குறைவாகவும் இருக்கும். முடிந்த வரையில்  நாம் வசிக்கும் பகுதிக்கு அருகில் விளையும்  உணவு பொருள்களை  பயன் படுத்துவது  நல்லது. கோடை வெய்யிலை  பயன்  படுத்தி  அரிசி வடாம், ஜவ்வரிசி வடாம், சுண்டைக்காய் வற்றல், மணத்தக்காளி வற்றல், வெண்டைக்காய் வற்றல், கொத்தவரங்காய் வற்றல், மோர் மிளகாய்  -.- ஆகியவை செய்யலாம்.


அது என்ன குடை மிளகாய்? 


பார்த்தால் குடை போன்றே தோற்றம் இருக்கும். அதனால் இப்படி பெயர்  வைத்திருக்கலாம்.


மோர்  மிளகாய்  செய்முறை 

மோர் மிளகாய் 

STEP 1: 


தஞ்சாவூர்  குடை மிளகாய்களை  ஒரு  வாயகன்ற  பாத்திரத்தில்  போட்டு, தண்ணீர் விட்டு  நன்கு சுத்தம் செய்யவும். 

அழுகிய  மிளகாய் இருந்தால்  தூக்கிப் போட்டு விடவும். 

குட்டி மிளகாய்களை  தூக்கிப் போட வேண்டாம். சிறிய மிளகாய்...பெரிய மிளகாய்  - இரண்டுமே ருசியாகவே  இருக்கும்.

கழுவிய  பின், ஒரு வடி தட்டில் போட்டு, நீரை  வெளியேற்றவும்.

STEP 2 :



   பிறகு, ஒரு சிறிய  ஊசி வைத்து, ஒவ்வொரு மிளகாயிலும், இரண்டு அல்லது மூன்று சிறிய ஓட்டைகளை போடவும். தயிரில்  ஊற வைக்கும் போது, இந்த ஓட்டை வழியாக , தயிர் ஊடுருவி  செல்லும். சுவை கூடும்.

STEP 3 :




   நன்கு  புளித்த தயிரை, சிலுப்பி  வைத்துக் கொள்ளவும். சிலுப்பிய தயிரில் உப்பு சேர்க்கவும். உப்பு  சற்று அதிகமாக போட வேண்டும். அப்போதுதான் மோர் மிளகாயின் காரம் அடங்கும். ஒரு கிலோ குடை மிளகாய்க்கு  ஒரு கைப்பிடி உப்பு போடலாம்.

தயிர்  அதிகமாக தேவைப் படும். எனவே  மோர் மிளகாய்  போடுவதற்கு ஒரு வாரம் முன்பே தயிர் சேகரிக்க துவங்கி விட வேண்டும். தினமும் வீட்டில் மீதமாகும் புளித்த தயிரை  Fridgeல்  வைக்கவும். இப்படி மூன்று நாட்களுக்கு  செய்தால்  ஓரளவு  தயிர் சேர்ந்து விடும்.







STEP 4 :


   சுத்தம் செய்து, துளையிட்ட மிளகாய்களை, ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு, தேவையான அளவு  தயிர் சேர்க்கவும். தயிர் கெட்டியாக இருப்பதால், எவ்வளவு  சேர்த்தாலும்  மிளகாய் தயிரை உறிஞ்சி விடும். இந்த தயிர்தான் மிளகாய்க்கு சுவை தரும். தயிர்  மிளகாய் மேல் பிசிறிக் கொண்டு நிற்கும். இப்போது உப்பு  போட்ட மோர்  கொஞ்சம் சேர்த்தால்  மிளகாய் மோரில் மூழ்கும். மிளகாய்  உள்ளேயும்  மோர்  ஈசியாக செல்லும்.

STEP 5 :


மறுநாள்  காலையில், தயிரில் ஊறிய மிளகாய்களை  தயிரை பிழிந்து விட்டு,  தட்டுகளில் பரப்பி, மொட்டை மாடியில் காய வைக்கவும். மிளகாய் ஊற வைத்த தயிரை பத்திரமாக மூடி வைக்கவும்.

பகல் முழுக்க வெய்யிலில்  காய்ந்த மிளகாய்களை, திரும்பவும் அதே தயிரில்  இரவு முழுக்க போட்டு  வைக்கவும். 

   இப்படி, மூன்று நாட்களுக்கு, பகலில் காய வைப்பது, இரவில் தயிரில் ஊற வைப்பது என்று செய்ய வேண்டும்.



மூன்று நாட்களுக்கு பிறகு, மிளகாயின் பச்சை நிறம் மாறி, பழுப்பு நிறம் வரும். இனி, தயிரில்  ஊற வைக்க வேண்டியது இல்லை.








   ஆனால் நேர்  வெய்யிலில், மிளகாய்,  ஒரு வாரமாவது காய வேண்டும். நீளமான  காட்டன் துணியில்  போட்டால்  சீக்கிரம் காய்ந்து விடும்.

மொறு....மொறு....மோர் மிளகாய் 

   மிளகாயில் விரல் தொட்டு, மெதுவாக அழுத்தினால், மிளகாய் உடைய வேண்டும். இதுதான் சரியான பதம். இந்த பதம் வந்த பின் காய வைக்க வேண்டியது இல்லை.

   காற்றுப் புகாத பாத்திரத்தில் போட்டு வைத்து பயன் படுத்தவும்.

   மாதம் ஒருமுறை மட்டும், லேசாக வெய்யிலில் வைத்து எடுத்தால், வருடம் முழுவதும் கெடாமல் இருக்கும்.

வறுத்த மோர் மிளகாய் 

மோர் மிளகாய் 

   வாணலியில் தேவையான அளவு நல்லெண்ணெய் விட்டு, எண்ணெய் சூடானதும், மோர் மிளகாய்களை போட்டு, வறுத்து எடுக்கவும். மிளகாய் ரொம்பவும் கருகி விடக் கூடாது. மிளகாய் உள்ளே உள்ள விதைகளும் வறுபடும் வரை வறுக்க வேண்டும்.

   தஞ்சாவூர் குடை மிளகாயில் செய்த இந்த மோர் மிளகாய், தயிர் சாதத்திற்கு தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.


தயிர் சாதம்+மோர் மிளகாய்=சூப்பர் காம்பினேஷன் 

Thursday, 11 April 2019

சென்னை மெரினா கலங்கரை விளக்கம்

சென்னை மெரினா கலங்கரை விளக்கத்தில் இருந்து 

Guest Post by Srividya Rajagopalan 


சென்னைக்கு சுற்றுலா வருபவர்கள் பார்க்க வேண்டிய இடங்கள் என்ன?

செயற்கை சுற்றுலா இடங்களான கிஷ்கிந்தா, MGM போன்ற theme parksஐ தவிர்த்து பார்த்தால், மிஞ்சும் இடங்கள் அதிகம் இல்லை. 

ஆனால், அதிக செலவு இல்லாமல், எல்லா வயதினரையும் ஈர்க்கும் இடங்கள் என்றால், பீச்  தான். மெரினா  கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, மகாபலிபுரம் என்று  இந்த பட்டியல் கொஞ்சம் நீளமாக இருக்கும்.

மெரினா கடற்கரையின் சிறப்பு அதன் கலங்கரை விளக்கம் (Light House).

கட்டணம் பத்து ரூபாய்தான். பத்தாவது மாடிக்கு liftல் அழைத்துச் செல்கிறார்கள். அரை வட்ட வடிவில் பால்கனி போன்ற இடம். அங்கு நின்றாலே  அருமையான காற்று நம்மை வருடுகிறது.

அங்கிருந்து பருந்து பார்வை பார்த்தால், நம் விழிகள் விரிக்கின்றன. முழு மெரினா கடற்கரை அழகும் நம் முன். காமராஜர் சாலை, அருகில் உள்ள கட்டடங்கள் என்று அசத்தும் காட்சிகள்.

புகைப் பட விரும்பிகளின் சொர்க்க புரி எனலாம்.

கலங்கரை  விளக்கத்தின் உச்சியில் இருந்து நான் எடுத்த புகைப் படங்களை, சிறு  வீடியோ  வடிவில்  காட்சி படுத்தியுள்ளேன். 

கண்டு ரசியுங்கள்.

மெரினா கலங்கரை விளக்கத்தில்  இருந்து

Saturday, 16 February 2019

'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் தலைவாழை விருந்து

'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் தலைவாழை விருந்து 


 பொதுவாக உணவு பற்றியும், குறிப்பாக நமது பாரம்பரிய இனிப்பு வகைகளை இன்றைய தலைமுறையினர் விரும்பும் வகையில் மாற்றம் செய்வது குறித்தும், எனது சிறு பேட்டி, 07-02-2019 'The New Indian Express' நாளிதழின் சென்னை பதிப்பில் "Twisting Treats' என்ற தலைப்பில் வெளி வந்துள்ளது.

 'உணவு விரும்பி' (food lover) என்ற அடிப்படையிலும், 'தலைவாழை விருந்து' வலைத்தள பதிவர் என்ற முறையிலும் என்னிடம் பேட்டி எடுத்துள்ளனர்.

 கட்டுரையாளர் வைஷாலி விஜய்குமார் அவர்களுக்கும், 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கும், இந்த  பேட்டிக்கு என்னை பரிந்துரைத்த முகநூல் நண்பர் திரு ஸ்ரீதர் வெங்கட்ராமன் அவர்களுக்கும் மற்றும் 'தலைவாழை விருந்து' வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

 கட்டுரையை படித்து, தங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் 'தலைவாழை விருந்து' 

Sunday, 20 January 2019

அமிர்தசரஸ் A1 குல்ஃபா

அமிர்தசரஸ் A1 குல்ஃபா  (Amritsar A1 Kulfa)


குல்ஃபா

டெல்லியில் ரப்ரி ஃபலூடா, குல்ஃபி ஃபலூடா என்று விதம் விதமான ஃபலூடா கிடைக்கும். ஏறக்குறைய இதே போன்றதொரு குளிர் இனிப்புதான் குல்ஃபா. 

இது பஞ்சாப் சிறப்பு குளிர் இனிப்பு வகை.

ஜிகர்தண்டாவின் சாயலும் குல்ஃபாவில் உண்டு.

எந்த ஊருக்கு சுற்றுலா சென்றாலும் அதை உணவு சுற்றுலாவாக (Culinary tour, food tour) மாற்றி விடும் வழக்கம் எனக்கு உண்டு. அந்த வகையில், அமிர்தசரஸ் செல்லுமுன் அந்த ஊரின் சிறப்பு உணவுகளை பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினேன். அமிர்தசரஸ் குல்சா (Amritsar Kulcha), லஸ்ஸி & குல்ஃபா இவை மூன்றுமே என்னை கவர்ந்தன. இந்த மூன்றில் என் கவனத்தை அதிகம் கவர்ந்தது குல்ஃபா. 

Famous Kulfa Shop & A1 Kulfa Shop. இரண்டுமே அமிர்தசரசின் அருமையான குல்ஃபா கடைகள். 

இதோ A1 குல்ஃபா.

அமிர்தசரஸ் A1 குல்ஃபா கடை (Amritsar A1 Kulfa Shop)


குல்ஃபி, ஐஸ் கிரீம், ஃபலூடா, பாதாம் பிசின் , இரண்டு வகை எசன்ஸ் சிரப் & ரப்ரி. இவற்றை  ஒரு தட்டில் ஒன்றின் மேல் ஒன்று போட்டால்  அமிர்தசரஸ் A1 குல்ஃபா ரெடி. குளிர்ச்சி, இனிப்பு, ஐஸ்க்ரீம் சுவை, பாலேடு சேர்த்த ரப்ரியின் சுவை எல்லாம் சேர்ந்து ஒரு கலவையான சுவையை உணர முடிகிறது.  ஃபேமஸ் குல்ஃபா கடையில் ரப்ரி  கெட்டியாக இருந்தது. A1 குல்ஃபாவில்  ரப்ரி  கொஞ்சம் தளர்வாய் இருந்தது. மற்றபடி குல்ஃபா பார்முலா  ஒன்றுதான். ஆனாலும் சுவையில் வேறுபாடு தெரிந்தது. இரண்டுமே நன்றாக இருந்தன. 

இரண்டுமே சின்னஞ்சிறிய  கடைகள். 

ஆனால்  குல்ஃபா ரசிகர் பட்டாளமோ மிகப் பெரியது.

அமிர்தசரஸ் A1 குல்ஃபா கடை (Amritsar A1 Kulfa Shop)
அமிர்தசரஸ் A1 குல்ஃபா  (Amritsar A1 Kulfa)

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...