|
அமிர்தசரஸ் லஸ்ஸி |
"லஸ்ஸி செய்வது ரொம்ப ஈஸி. கெட்டி தயிரில், சிறிது தண்ணீர் சேர்த்து, உப்பு அல்லது சர்க்கரை போட்டு, மிக்ஸி அல்லது hand blenderல் அடித்தால் லஸ்ஸி ரெடி. வேண்டும் என்றால் சிறிது ஏலக்காய் பொடி, குங்கும பூ சேர்க்கலாம். முடிந்தது வேலை."
அப்படிதான் இத்தனை நாளும் நினைத்திருந்தேன். பஞ்சாபின் அமிர்தசரஸ் செல்லும் வரை.
அங்கு, லஸ்ஸி தயாரிப்பை ஒரு தவம் போல செய்கிறார்கள். திரும்பின இடம் எல்லாம் லஸ்ஸி கிடைக்கிறது. ஒரு கிளாஸ் லஸ்ஸி சாப்பிட்டால் போதும். மூன்று மணி நேரம் பசிக்காது. நம்மூர் டீ கடைகள் போல பார்க்கும் இடம் எல்லாம் சிறிய லஸ்ஸி கடைகள். தாபாக்களிலும் கட்டாயம் லஸ்ஸி உண்டு.
திரும்பின இடம் எல்லாம் லஸ்ஸி கிடைத்தாலும், லஸ்ஸிக்கென்றே சில ஸ்பெஷல் கடைகளும் உள்ளன. Ahuja Lassi, Gian Di Lassi இப்படி பல லஸ்ஸி கடைகள். எங்களுக்கு டூரிஸ்ட் கைடு போல் செயல்பட்ட பேட்டரி ஆட்டோ ஓட்டுனர் சந்தரை கேட்டோம். Gian Di Lassi நன்றாக இருக்கும் என்று சொல்லி அழைத்துச் சென்றார்.
|
அமிர்தசரஸ் கியான் டி லஸ்ஸி கடை (Gian Di Lassi Shop, Amritsar) |
ஆர்டர் கொடுத்து விட்டு, கடையை சுற்றிப் பார்த்தேன். சிறிய கடைதான். லஸ்ஸி மட்டுமே விற்பனை பொருள். ஆனால் அதற்கே ஐந்து பேர் வேலை செய்கிறார்கள். கடைக்கு பின்னால் சிறிய ஹால். அங்கே பார்த்தால் பெரிய சைஸ் கிரைண்டர்கள் இரண்டு இருந்தன. அவற்றில் தயிரை கொட்டி நுரை ததும்ப அடிப்பார்களாம். அப்படி அடிக்கப் பட்ட தயிர் நுரைக்க நுரைக்க உயரமான பிளாஸ்டிக் தொட்டிகளில் இருந்தது.
|
லஸ்ஸி கிரைண்டர் |
|
தொட்டிகளில் தயிர் |
இந்த நுரை ததும்பும் தயிர்தான் லஸ்சிக்கான மூலப் பொருள். இந்த தயிரை ஒரு பானைக்குள் கொட்டி, ஐஸ் போட்டு வைத்திருக்கிறார்கள்..
நாம் லஸ்ஸி கேட்டதும், பைப் வைத்த பானையில் இருந்து தயிரை பெரிய கிளாசில் பிடித்து, மசாலா சேர்த்து, பக்கத்தில் இருக்கும் பெரிய தட்டில் இருந்து ஒரு கரண்டி வெண்ணெய் எடுத்து தாராளமாக போடுகிறார்கள். ஒரு ஸ்பூனை போட்டு நம் முன் கொண்டு வந்து வைக்கிறார்கள்.
|
லஸ்சியில் போட வெண்ணெய் |
ஸ்பூனில் வெண்ணெய்யை அள்ளி, சுவைத்து சாப்பிட வேண்டும். லஸ்சியையும் ஸ்பூனில் எடுத்து சாப்பிடலாம். அவ்வளவு கெட்டி. ஒரு கிளாஸ் லஸ்ஸி, கால் லிட்டருக்கு குறையாமல் இருக்கும்.
லஸ்ஸி நல்ல சுவை. வெண்ணெய்தான் கொஞ்சம் திகட்டியது.
சாப்பிட்டு முடித்ததும் ஒரு நிறைவு. அடுத்த மூன்று மணி நேரத்திற்கு பசி எடுக்கவில்லை. அமிர்தசரஸ் சென்றால் மறக்காமல் லஸ்ஸி சாப்பிடுங்கள்.
|
அமிர்தசரஸ் கியான் டி லஸ்ஸி கடை (Gian Di Lassi Shop, Amritsar) |
|
அமிர்தசரஸ் கியான் டி லஸ்ஸி கடை (Gian Di Lassi Shop, Amritsar) |
No comments:
Post a Comment