அதிர்ச்சியில் ஆயா ?
அரைக்கீரை விற்கிறான் அம்பானி !
அரைக்கீரை விற்கிறான் அம்பானி !
பிரபல தமிழ் பத்திரிகையில் சில வருடங்களுக்கு முன் படித்த ஹைக்கூ. சிறு வணிகத்தில் பெரும் கடைகளின் ஆதிக்கத்தை பொட்டில் அறைந்தாற்போல் சொன்ன வரிகள் அவை. இன்று திரும்பவும் அந்த வரிகள் தந்த அதிர்ச்சியை உணர்ந்தேன், ஆனால் நல்ல விதமாக. இளைஞர்கள் கீரை விற்ற காட்சியை பற்றித்தான் கூறுகிறேன். நல்ல சோறும், நல்ல கீரையும் இனைந்து நடத்திய பாரம்பரிய உணவு திருவிழாவிற்கு சென்றிருந்தேன். திருவான்மியூர் சரஸ்வதி வெங்கட்ராமன் மெட்ரிகுலேஷன் உயர்நிலை பள்ளியில் நடந்தது.
இளைஞர்கள் (இருபாலரும்) தான் அதிகம் காணப்பட்டனர். நூறு ரூபாயில் திருப்தியான இரவு உணவு. சுக்கு வெள்ளம் கலந்த பானகம் ஒரு பேப்பர் கப்பில். அரைக்கீரை பொரியல்,திணை இனிப்பு பொங்கல்,திணை சாம்பார் சாதம்,வரகு கூட்டாஞ்சோறு அப்புறம், சாமை தயிர் சாதம். இவ்வளவுதான் மெனு. பாக்குத்தட்டில் பப்பே ஸ்டைலில் பரிமாறப்பட்டது.
அரிசி இல்லாத உணவு.நம் கற்பனைக்கு அப்பாற்பட்டதாகத்தான் இருக்கிறது. கேழ்வரகு நமக்கு பரிச்சயம் தான். திணை,சாமை,வரகு? சில மாதங்களுக்கு முன் இது பற்றி பலரிடம் பேசினேன். பறவைக்கு போடும் தானியம் தானே என்ற பதிலே கிடைத்தது. கிராம பாரம்பரியத்திலிருந்து வந்த என் நண்பர் ஒருவருக்கு இவ்விஷயங்கள் எல்லாம் தெரிந்திருந்தன. ஆனால் நாங்களே விட்டொழித்து விட்ட உணவு பழக்கங்கள் பற்றி கேட்கிறீர்களே என்றார்.
சிறு தானியங்களை அரிசி போல் சுவையாக சமைக்க முடியும் என்று உணர்த்தினார்கள். வெள்ளை சர்க்கரை இல்லாத இனிப்பு பொங்கல்.பிரியாணியை நினைவூட்டிய கூட்டாஞ்சோறு. நம் கிராம மக்களுக்கு intellectual property rightsக்கான பணத்தை அமைப்பாளர்கள் தர வேண்டும் என நினைத்தேன். சாம்பார் சாதம் கொஞ்சம் dryயாக இருந்ததாக சிலர் கூறியது காதில் விழுந்தது. தயிர் சாதத்தில் நன்கு கலப்படாத கட்டிகள் தட்டுப்பட்டது. ஆனாலும் சுவை அருமை. அளவான உப்பு, காரம். உடல் நலத்திற்கு உகந்தது.
ஆயுர்வேத, சித்த மருத்துவர்களும் இன்று சிறு தானிய சமையலை பரிந்துரைக்கிறார்கள். சிறு தானியங்களில் மிகுந்திருக்கும் கால்சியம், இரும்பு மற்றும் நார்சத்துக்களும், குறைந்திருக்கும் கார்போஹைட்ரேட்டும் தான் இதற்கு காரணம். Gluten இல்லாத உணவாகையால், சிறுதானியங்கள் யாருக்கும் ஒவ்வாதவை அல்ல. கம்பு மட்டும் தோல் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு வேண்டாம் என்கிறார்கள். Thyroid சுரப்பி வேலை செய்யாதவர்களுக்கு மட்டும் சிறுதானியங்கள் வேண்டாம் என்கின்றனர்.
சமைத்து எடுத்து வந்ததால் சூடு இல்லாதது சிறு குறைதான். ஒரே தட்டில் சாதங்கள் கலவையாகி இனிப்பும், காரமும் stereo effectல் சுவைத்தேன். அளவு சாப்பாடா இல்லை திரும்ப கேட்கலாமா என்று தயக்கம். பலரும் குடித்த தம்ளரில் தண்ணீர் கொடுத்தார்கள். சிறு கீரை பொரியல் தவிர தொட்டுக்கொள்ள எதுவும் இல்லை. சாமை வடை (ஆமை வடையை மறந்து விடுங்கள்) இருந்திருந்தால் சாம்பார் சாதத்திற்கு நல்ல துணையாக இருந்திருக்கும். தயிர் சாதம் தனி ஆவர்த்தனத்துக்கு உகந்தது அல்ல. சிறு தானிய சுவை இக்குறைகளை சிறுமை படுத்தி விட்டது.
நல்ல கீரை நிறுவனத்திலிருந்து நல்ல கீரை விற்றார்கள். கட்டு பதினைந்து ரூபாய்.
உணவு எப்படி தயாரித்தார்கள், ரெசிப்பி என்ன என்று அமைப்பாளர்கள் தெரிவித்தால் உங்களுடல் பகிர்ந்து கொள்வேன்.
இளைஞர்கள் எப்போதும் புதுமை விரும்பிகள். உடையிலும் சரி உணவிலும் சரி அவர்கள் தான் நாகரிக தூதுவர்கள். பதினைந்து வருடங்களுக்கு முன் பீட்சா இளைஞர்களை பற்றிக்கொண்டது. அவர்கள் இன்று நடுத்தர வயதை கடந்து விட்டதால் அனைத்து வயதினரும் ஆதரிக்கும் உணவாக பீட்சா இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் பாரம்பரிய உணவிற்கு திரும்பியிருக்கிறார்கள்.
எளிதில் மாறி விடும் பேஷன் போல் அல்லாமல் இது மக்கள் இயக்கமாக வேண்டும். அது எப்படி சாத்தியம்? சிந்திப்போம்.
3 comments:
IT IS A VERY USEFUL INFORMATION. EVERY ONE SHOULD FOLLOW THE TIPS.
நீங்கள் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ள கவிதை என்னுடைய அரைக்கீரை விற்கிறான் அம்பானி என்ற தொகுப்பிலிருந்து வெளியிடப்பட்டது. கன்னிக்கோயில் ராசா நடத்திய sms haiku இதழில் இருந்துஎடுத்து கல்கி இதழ் இந்த கவிதையை வெளியிட்டது.பதிவுக்கு நன்றி
" அதிர்ச்சியில் ஆயா ?
அரைக்கீரை விற்கிறான் அம்பானி !" இந்த கவிதை என் மனதை மிகவும் பாதித்த ஒன்று. அதனால்தான் இத்தனை வருடங்கள் ஆனாலும் கவிதை வரிகள் மனதில் நின்றன. இது தங்களின் கவிதை என அறிந்ததில் மகிழ்ச்சி.
Post a Comment