மரத்தில் ஓரளவு முற்றிய பிறகு பறித்து, பழ வாசனை வரும் வரை கனிய விட்டு பின் சாப்பிட வேண்டும். ஒருவாரம் வரை கூட காத்திருக்க வேண்டியிருக்கும்.
இந்த பழத்தை பற்றி தெரிந்தவர்கள் அதிகம் இல்லாததால், அதி அற்புத சுவை கொண்ட இந்த பழத்தை நாம் ஏறக்குறைய இழந்து விட்டோம்.
என் பள்ளிப் பருவத்தில் திருச்சி தில்லை நகரில் இருந்தேன். அப்போது சோமரசம்பேட்டை கிராமத்தில் இருந்து தினமும் ஒரு கூடையில் காய்கறி சுமந்து வரும் பாட்டி, பம்ப்ளிமாஸ் பழமும் கொண்டு வருவார். சரியாக கனிந்த பழமாக!
பல வருடங்களுக்கு பின், திருவையாறில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற போது, வீட்டு கொல்லையில் பம்ப்ளிமாஸ் பழ மரம் வைத்திருந்தார்கள். அப்போது சாப்பிட்டது.
இரண்டு வாரங்களுக்கு முன் மீண்டும் பம்ப்ளிமாஸ் என் பாதையில் குறுக்கிட்டது.
திருச்சி அருகே ஸ்ரீரங்கத்தில் உள்ள தாத்தாச்சாரியார் மாம்பழ தோப்பிற்கு சென்றிருந்தேன். எனது நெருங்கிய நண்பர் மீனாட்சி சுந்தரம் என்னை அங்கே அழைத்துச் சென்றார். நான் போனது என்னவோ இமாம் பசந்து பழம் வாங்க. இமாம் பசந்து மாம்பழம் ஸ்ரீமான் தாத்தாச்சாரியாரின் கண்டு பிடிப்பு. திருச்சி செல்பவர்கள் கட்டாயம் இமாம் பசந்து சாப்பிட்டே தீர வேண்டும்.
அங்கு சென்றவுடன் பம்ப்ளிமாஸ் மரத்தை பார்த்தேன். இமாம் பசந்தெல்லாம் மறந்து விட்டது. தோட்டக் காரரை பற்றிக் கொண்டு துரட்டியோடு சென்றுவிட்டேன்.
பழுக்கும் வரை காத்திருந்து சுவைத்தேன். மீதமிருந்த பழத்தில் ஜூஸ் செய்து பார்த்தேன். நன்றாக இருந்தது.
பம்ப்ளிமாஸ் சாத்துக்குடி போல பல மடங்கு பெரிதாக இருக்கும். கிடாரங்கா அளவில் இருக்கும் என்று சொல்லலாம். குண்டாக இருக்கும் நபர்களை பார்த்து " என்ன பம்ப்ளிமாஸ் மாதிரி இருக்கிறாய்? " என்பார்கள். நன்கு கனிந்த பம்ப்ளிமாஸ் பழச் சுளை, பிங்க் நிறத்தில் இருக்கும். முத்துக்கள் பெரிதாக இருக்கும்.
சாத்துக் குடியை உரிப்பது போல் உரித்து சுளைகளை தனியாக எடுக்க வேண்டும். சாத்துக் குடியில் சுளைகளுக்கு மேல் பகுதியில், பஞ்சு போன்ற சிறுதோல் இருக்கும். பம்ப்ளிமாஸ் பழத்தில் பஞ்சு போன்ற பகுதி அதிகமாக இருக்கும். பழத்தின் கால் வாசி பகுதியை இந்த பஞ்சுபோன்ற தோல் நிரப்பி இருக்கும்.
இனி....பம்ப்ளிமாஸ் ஜூஸ்....
பம்ப்ளிமாஸ் பழம் - 1
தேன் - தேவைக்கேற்ப
பொதுவாக பழச் சாறு தயாரிக்கும் போது அதிக சர்க்கரை, பழ எசன்ஸ் என்று சேர்த்து, பழத்தின் சுவையை அமுக்கி விடுவார்கள். வெள்ளை சர்க்கரை நல்லதல்ல. அதன் சுவையே ஓங்கி நிற்கும். ஆகவேதான் தேன் மட்டும் சேர்த்து பம்ப்ளிமாஸ் ஜூஸ் செய்தேன்.
பழங்களை அப்படியே சாப்பிட்டால்தான் அவற்றில் உள்ள நார்ச் சத்து சிதையாமல் இருக்கும். குழந்தைகளுக்கு பழச் சாறு கொடுத்து பழக்கினால் பழங்களை சாப்பிட ஆர்வம் காட்ட மாட்டார்கள்.
பழச் சாறு என்பது எப்போதாவது ஒரு சுவை மாறுதலுக்காக மட்டுமே செய்ய வேண்டும்.
பம்ப்ளிமாஸ் சுளைகளை மட்டும் தனியாக எடுத்து, சுளையின் மேல் இருக்கும் தோல் நீக்கி, முத்துக்களை மட்டும் தனியாக எடுக்கவும்.
பம்ப்ளிமாஸ் பழச் சுளைகளை, மிக்சியில் போட்டு, நன்கு சுற்றவும். தண்ணீர் விட வேண்டியதில்லை.
No comments:
Post a Comment