Sunday, 25 December 2016

கச்சேரி கலாட்டா 5

      இது  வேறு  ஓர்  ஊரில்  நடந்த  கூத்து.  நெருங்கிய  உறவினரின்  மகள்  நாட்டிய  அரங்கேற்றம். அவரை நம்ம X என்று  வைத்துக்  கொள்வோம்.  ஒரு  மாதம்  முன்பாகவே தொடங்கியது  X குடும்பத்துக்கு  சோதனை  காலம்.   சில  பத்து  வருடங்களுக்கு  முன்னர்  கல்யாண  வீடுகளில் போட்ட  சம்பந்தி  சண்டைகளை  நினைவு  படுத்தினார்  நாட்டிய குரு.

    குருதட்சிணையாக  பெரிய  ஆயிரங்களில்  ஒரு  தொகை, சில  பவுன்களில்   நகை,  பட்டு  புடவை என்று  ஒரு  லிஸ்ட், பக்க  வாத்தியம்  வாசித்த  அனைவருக்கும்  உடைகள் தனி list   

     சென்னையில் உள்ள ஒரு  tailor பெயரை  சொல்லி  அவரிடம்தான்  உடை  தைக்க  வேண்டும்  என்று  சொல்லி  விட்டார் குரு. அதற்காக  சிங்கார சென்னைக்கு  பலமுறை  பயணப்பட்டார்   நம்ம  X

       அடுத்து வந்த  நாட்களில் AC உள்ள  அரங்கம்  book செய்ய  வேண்டும் என்றார் குரு. நகரின்  ஒரு பெரும்  புள்ளியை  கைகாட்டி  முதன்மை  விருந்தினராக  அழைக்க  வேண்டும்

      தான் சொல்லும்  இடத்தில்தான்  பத்திரிகை  அடிக்க  வேண்டும் என்றார். ( ஆயிரம்  பத்திரிக்கை அடித்தார் நம்ம X. அதில்  இன்னமும் கொஞ்சம்  அவர் வீட்டு  பரணில்  கிடக்கிறது ).  தன்னிடம் நடனம்  கற்கும்  பெண்கள் (நூற்று  சொச்சம்) அனைவரையும் அழைக்க  வேண்டும்  என்றார் குரு. (மற்ற  மாணவிகளுக்கு  மறைமுகமான  அறிவிப்பு.  "நாளை உன் அரங்கேற்றத்துக்கும்   இது போன்ற  செலவுகள்  செய்தாக  வேண்டும். )

      நிகழ்ச்சிக்கு  ஒரு  வாரம்  இருக்கும்போது,  "ஒத்திகை  பார்க்க  வேண்டும்.  ஒரு  வாரம்  மொத்த ட்ரூப்புக்கும் உணவு  சமைத்து  அனுப்புங்கள்"  என்றார் குரு. வேற  வழி? புலி  வாலை  பிடித்தாகி விட்டதே. (ஊர் முழுவதும்  பத்திரிகை  விநியோகம்  நடத்தியாகி விட்டது)  செய்து  தொலைப்போம் என்று  ஒரு  சமையல்காரரை  நியமித்து,  தினம் மூன்று வேளை  உணவு  அனுப்பினார் நம்ம X.

    மறுநாள்  மாலையில்  நிகழ்ச்சி. முதல்  நாள்  காலை முதலே  கார்  வேண்டும்  என்றார்  குரு. எதற்கு  என்று  பார்த்தால்  Beauty parlour போக  வேண்டும்  என்றார்.  தன  பெண்ணைத்தான் அழைத்து  போகப்போகிறார்  என்று  X நினைத்தால்,  குரு   parlour   சென்று  காலோடு  தலை தன்னை   சிங்காரித்து கொண்டு   அந்த பில்லையும்  நம்ம Xன் தலையில்  கட்டினார்.

     உள்ளூரின்  காலை  நாள்ளித்ழ்கள்  எல்லாவற்றிலும்  கால்  பக்கம்  விளம்பரம். (நல்லவேளை அப்போது  flex கலாச்சாரம்  இல்லை) அத்தனை  பேப்பரிலும்  இன்றைய  நிகழ்ச்சிகள்  பகுதியில் செய்தி  வரவழைக்க  வேண்டும்  என்றும்  கூறி  விட்டார்  குரு.  செய்தியும்  வந்தது.

    மறுநாள்  மாலை  நிகழ்ச்சி இனிதே(?)   தொடங்கியது.  மண்டபம்   கொள்ளாத  கூட்டம். பாதிநிகழ்ச்சி  நடக்கும்  போதே  பந்தி  ஹால் திறந்து  விடப்பட, கொஞ்சம் கூட்டம்  அங்கே  சென்று விட்டது. இதை  ஓரக்கண்ணில் பார்த்ததும்    வந்ததே பார்க்கணும் குருவுக்கு   கோபம். இடைவேளையின் போது  மேடைக்கு  பின்புறம் சென்றார்.  மல்லாந்து  படுத்து  விட்டார்  மாசாணி அம்மன்  கணக்காய்  காலை   நீட்டி  போட்டு.

     மேடையில்  நாற்காலிகளை  போட்டு  குருவை அழைக்கிறார்கள். கண்  திறக்காமல்   படுத்து கிடக்கிறார்  குரு.   "அக்கா  ரொம்ப excite  ஆகிவிட்டார்"  என்றது  கூட இருக்கும் ஒரு   அல்லக்கை. இப்போதுதான்  நம்ம Xக்கு வந்தது  ஒரு  வேகம்.  குருவின்  காது  படச்  சொன்னார் ஒற்றை வாக்கியம்.  "இடைவேளையுடன்  நிகழ்ச்சி நிறைவடைந்தது" என்று  மைக்கில்  அறிவிக்க போகிறேன் " என்றார்.  நிமிடத்தில்  தெளிந்தது குருவின்  மயக்கம்.

     நிகழ்ச்சி  ஒருவாறு  முடிய,  சாப்பிட்டு  எல்லோரும்  கிளம்பினார்கள்,  குரு  நம்ம Xன்  சின்ன   மகளை  பார்த்து  சொன்னார் நீ  கூட  நடனம்  கற்று  கொள்ளலாமே  என்று.   நம்ம X "மறுபடியும் மொதல்லேருந்தா?"  என்று  நினைத்து  மயங்காத  குறை . 

இதோடு  விட்டதா?

  மறுநாள்  லோக்கல் சானல்கள் அனைத்திலும்  இந்த  நிகழ்ச்சியை  பற்றிய  செய்தி  வரவழைக்கும் எக்ஸ்ட்ரா வேலை  நம்ம  Xக்கு.  ஒரு  சானலில்  அரை  மணி  நேரம்  தொகுத்து  போட சொல்லிவிட்டார்  குரு.   அந்த  சானலில்  பணிபுரியும்  நிர்வாகி  ஒருத்தருக்கு  பேங்க்  லோன் ஒன்று  arrange செய்து தருவதாக வாக்களித்து அரைமணி  நேரம் slot பணம் கட்டி மேற்படி நிகழ்ச்சியை   ஒளிபரப்ப வைத்தார்  நம்ம X  (ஹாங்  சொல்ல  மறந்துட்டேனே.  ஒரு  வங்கியில் மிக  உயர்ந்த  பதவியில்  இருப்பவர்  நம்ம X).

      பத்து பன்னிரண்டு  ஆண்டுகளுக்கு  முன்னர்  நம்ம  X இந்த  அரங்கேற்றத்துக்கு  செஞ்ச  செலவு  ஜஸ்ட் 5 லட்சம்தான்.  (இன்றைய  மதிப்புக்கு  எத்தனை லட்சம்  என்று  கணக்கு  போட்டு  கொள்ளுங்கள் )

பின்குறிப்பு: 

      X ன் மகள்  தற்போது  ஒரு Software கம்பெனியில்  இஞ்சினியராக  பணி  புரிகிறார்.  நடனம் எல்லாம்  ஈரோட்டுக்கு  அடுத்த   தூத்துக்குடி  பக்கத்தில்  இருக்கிறது  என்கிறாள்.

Readers, Pl. share your comments 



கச்சேரி கலாட்டா 4

மீண்டும்  ஒரு  மார்கழி  மாத  மாலை வேளை    3 வயது  குழந்தையின்  தாய்  அவள்.  குழந்தை பிடிவாதம்  பிடித்து  அழுததால்,   அருகில்  உள்ள  பார்க்குக்கு   அழைத்துச்  செல்கிறாள். முன்னதாக  கணவனிடமும்  சொல்லி  விட்டாள் "ஆபீசிலிருந்து  திரும்பும்போது  பார்க்குக்கு  வந்து  அழைத்து  போகும்படி."

சறுக்கு  மரம்  ஏறி,  ராட்டினத்தில்  சுற்றி  முடித்து  ஓடி  ஆடி  விளையாடியதும்  இருட்ட தொடங்கியது.  சற்றே  வெளிச்சம்  இருக்கும்  இடம்  நோக்கி  சென்றபோதுதான்  கவனிக்கிறாள் அங்கே  கொஞ்சம்  நாற்காலிகள்  போட்டிருப்பதை.  உட்கார  தயங்கி  நின்றபோது  full மேக்கப்பில் ஒரு  பெண்  "வாங்க...  வாங்க"  என்று   வரவேற்று  உட்கார  சொன்னாள்.  உட்கார்ந்த  பொழுது,   குழந்தையின்  அப்பாவும்   வந்து  சேர்ந்தார்.  இருவரிடமும்  சூடான  காபியை  கொடுத்த்தார் அந்த பெண்.  இளம்  குளிருக்கு  மிக  இனிமையான   சுவையான  காபி.  

அருந்தி  முடிந்து  நிமிர்ந்தால்,  எதிரே  இருந்த  மேடையில்  ஒரு  பொடியன்  மைக்குக்கு முன்னால் உட்கார்ந்து   பாடத்  தொடங்கினான்.  அருகில்  இருந்த மிருதங்கத்தை  விட  கொஞ்சமே  கொஞ்சம் உயரமான  சிறுவன்  ஒருத்தன்  வாசிக்கத்  துவங்கினான்,.  எண்ணி  இரண்டே  இரண்டு  பாட்டு. "யாரோ  போட்டு  வைத்திருக்கும்  சேரில்  உட்கார்ந்திருக்கிறோமே"  "காப்பி  வேறு  குடித்தோமே" என்று  வஞ்சனை  இல்லாமல்  கைதட்டினர்  கணவனும்  மனைவியும்.  

உட்கார்ந்து  கைதட்டியவர்களை,   வளைத்து  வளைத்து video எடுத்தார்  பாடகரின்(?)  தந்தை. குழந்தையும்  ஒன்றும்  புரியாமல்  அப்பா  அம்மாவை  பின்பற்றி  தானும்  கைதட்டி  மகிழ்ந்தது. 

நிகழ்ச்சி  முடிந்து   கிளம்பிய பொழுது  பாடகரின்  தாயும்  தந்தையும்  "ரொம்ப  thanks"  என்று  கூறி  ஒரு  பையை  நீட்டினர். அதில்   புகழ்  பெற்ற  கடை  ஒன்றின்   மைசூர்பாகு மற்றும்  மிக்சர் packets. 

வெளியே  வந்து  கணவன்  கேட்டார்,  "அவங்க  யாரு  உன்  friendஆ?"  மனைவி  சொன்னார்   "யாரோ  உங்க  friendன்னுல்ல  நினைத்தேன்."  


கணவர் தன்  நண்பனிடம்    இந்த  சம்பவத்தை   பகிர்ந்து   கொண்டார்.   அப்பொழுது   நண்பவர்   சொன்னார்,  நீ   சாப்பாடு  டிபன் கேட்டிருந்தால்   கூட  அவர்கள் arrange  செய்திருப்பார்கள்.  தங்கள் மகனை instant  ஏசுதாசாகவும்  உன்னிகிருஷ்ணனாகவும்  ஆக்கிவிட  துடிக்கும்   பெற்றோர்கள்  இங்கு நிறைய  உண்டு.  அவர்களது  அவசர  அதிரடி  அரங்கேற்றங்கள்தான்   இது  போன்ற  பார்க் கச்சேரிகள். 

சென்னை டிசம்பர் சங்கீத சீசன்-ஞானாம்பிகாவில் சாப்பாடு

ஞானாம்பிகா இலை சாப்பாடு 
சென்னை டிசம்பர் சங்கீத சீசன்
சாப்பாட்டை ருசித்து, ரசித்து எழுதியவர்:

ஸ்ரீவித்யா ராஜகோபாலன் 


மார்கழி   என்றதும் சிலருக்கு இறைவன்  நினைவு. சிலருக்கு குளிரின்  நினைவு. சிலருக்குசங்கீதம் நினைவு.  எங்களை  போன்றவர்களுக்கு  சங்கீத  சபாவில்  கிடைக்கும்  சாப்பாட்டு நினைவு. அதிலும்  பீட்சா, பர்கர்  போன்ற  வந்தேறிகளை  விரட்டி  விட்டு,  தலை  வாழை  இலை போட்டு  சுடச் சுட  பரிமாறப்படும்  நமது  பாரம்பரிய  சாப்பாடு  என்றால்  double  ok.  

முதலில்  உங்களை  அழைத்து  போகப்போவது  ஞானாம்பிகா  லஞ்ச்சுக்கு. 

உள்ளே  நுழைந்ததுமே  வாங்க  வாங்க  என்று  வரவேற்ப்பு.  டோக்கனை  வாங்கி  கொண்டு  உட்கார்ந்தால்,  பெரிய  இலையை  போட்டு  காய்கறிகளை தாராளமாக  பரிமாறுகிறார்கள். 


ஞானாம்பிகா கதம்ப குழம்பு-
சென்னை டிசம்பர் சங்கீத சீசன்
முதலில்  அன்னாசிப்பழ  கேசரி.  ஆரம்பத்திலேயே இனிப்பை  சாப்பிட்டால்  வயிறு நிறைந்துவிடும். அதனால்  ஒரு   துளி  வாயில்  போட்டுக்  கொண்டு  ஓரமாக  (இலையில்தான்) வைத்துவிட்டு,  சாதத்தை   நெய்  விட்டு  பிசைந்தால்,  கதம்ப  குழம்பு  வருகிறது.  தாராளமாக வார்க்கப்படும்  காய்களை  சேர்த்து  பிசைந்து,  கத்திரிக்காய்  காரக்கறி மற்றும் மிக்ஸ்ட் வெஜிடபிள் கறியோடு  சாப்பிடத்  துவங்கினோம்.  சூடான  அப்பளம்  வருகிறது.  (அவ்வப்போது  freshஆக பொறித்துப்  போடுகிறார்கள்).  இலையின்  மேற்பகுதியில்  வைக்கப்பட்டுள்ள  வெண்டைக்காய் புளி  மண்டி  16 வருடங்களுக்கு  முன் இறந்து  போன  பாட்டியை  நினைவுபடுத்துகிறது. (இது அவரது  favourite dish.  அவ்வளவு  அருமையாக  செய்வார்)

ஞானாம்பிகா பச்ச சுண்டக்கா வத்த குழம்பு - 
சென்னை டிசம்பர் சங்கீத சீசன்
அடுத்து  வருகிறது  பச்சை சுண்டைகாய்   வத்தக்குழம்பு .  மிக  அருமையான preparation.  காரணம் சுண்டைக்காயின்  துவர்ப்பு  தாளாமல்  பலரும்  சாப்பிடுவதை  தவிர்த்து  விடுவார்கள்.  அதுவும்  அருமை.

Next  எலுமிச்சை பழம் ரசம். பல  நேரத்தில்  காலை  வாரிவிடும்  item இது.  பொதுவாக  எலுமிச்சை ஜூஸ்   பிழியும்போது  கை பட்டால் கசந்து  போய்  ரசம்   விரசமாகிவிடும் அப்படி  இல்லாமல்  இங்கு   வெகு கவனமாக  தயாரிக்கப்பட்டுள்ளதை பாராட்ட  வேண்டும். 

இறுதியாக  மோர்.  நல்ல  கெட்டியான  மோர்.   சில  இடங்களில் கங்கையும்  காவிரியும்  பெருக்கெடுத்து  ஓடும்  மோர்   பாத்திரத்தில்.  தாராளமாக  பரிமாறுகிறார்கள்.  தொட்டுக்க    லெமன் ஊறுகாய்.  

மொத்தத்தில்  பலே பலே  சாப்பாடுன்னா  அது  ஞானம்பிகாதான்.

ஞானாம்பிகா சாப்பாடு மெனு -சென்னை டிசம்பர் சங்கீத சீசன் 

முகவரி: 

ஞானாம்பிகா கேட்டரர்ஸ், ஸ்ரீ தியாக பிரம்ம ஞான சபா, வாணி மஹால், G.N, செட்டி சாலை, தியாகராய நகர், சென்னை. 

டிசம்பர் இரண்டாவது வாரத்தில் இருந்து ஜனவரி முதல் வாரம் வரை "சென்னை டிசம்பர் மாத சங்கீத கச்சேரிகள்" நடக்கும். அதுவரை மட்டுமே இந்த உணவகம் இயங்கும். 

முந்துவோருக்கே முதல்  சாப்பாடு.

சாப்பாட்டு கச்சேரி தொடரும்......

Tuesday, 20 December 2016

கச்சேரி கலாட்டா 3

சென்னை டிசம்பர் மாத சங்கீத சீசன் முடிந்ததும் நடன நிகழ்ச்சிகள் தொடரும். 'நடனம்' என்றதும் தன் நினைவில் நிற்கும் பல சுவாரசிய நிகழ்வுகளை  அசை போடுகிறார் ........

ஸ்ரீவித்யா ராஜகோபாலன் 


அடுத்தாக நடன  கச்சேரி.

நண்பரது  மகள்  நடன  கச்சேரி.  வழக்கம்  போல்  "சேர்த்த"  கூட்டத்தில்  நாங்களும்  உண்டு.   உள்ளே போய்  உட்கார்ந்தோம்.  Three fold invitation கையில்.  பெரிய   ஹால்...  அதீத  உள் அலங்காரங்கள்.  முதலில் எல்லோருக்கும்  ஜூஸ் சப்ளை ஆனது.  கூடவே  ஸ்வீட்-காரம். சாப்பிட்டு  ஏப்பம் விட்டதும்  திரை விலகியது.

நண்பரின்  மகள்  ஆட  ஆரம்பித்தாள்.  3  பாட்டுக்கு  டான்ஸ்  முடிந்தது.

இடைவேளை விட்டார்கள்.

 மேடையை  ஆக்கிரமித்தது ஒரு  கூட்டம்.  நடனம் ஆடிய  பெண்ணின் குருவின் குருதான் chief guest.  
அணிந்திருந்த  கண்ணாடியை  பக்கத்தில் இருந்தவரிடம்  ஞாபகமாக கொடுத்து விட்டு  மேடை ஏறினார் குருவின் குரு.  தன்னிடம்  நடனம்  பயின்று,  இன்று  குருவாக  தன  மாணவி  உயர்ந்திருப்பதில் (சம்பாதிப்பதில்)  சற்றே  கடுப்பாகி  இருந்தார்   குருவின் குரு.

"இது  பெரிய  கலை.   எல்லோராலும்  செலவு  செய்ய  முடியாது. இது  பணக்காரர்களின் கலையாக  மாறி  விட்டது" என்று  ஏதேதோ  புலம்பினார்.    இப்படி  செலவு  செய்ய தயாராக உள்ள அப்பன்  எவனும்  என்னிடம் சிக்கவில்லையே  என்ற  பொறாமை  அப்பட்டமாக வெளிப்பட்டது.

பட்டுப்  புடவை  பார்சல் ஒன்றை  பரிசாக  பெற்றுக்  கொண்டு  கீழே  இறங்கினார் குருவின் குரு.   நிகழ்ச்சி  முடிந்தது.  அனைவரும்  பரிசு  பொருள்களுடன்  சென்றிருந்தோம். உறவினர் மகளிடம் கொடுத்துவிட்டு  வந்தவுடன்  வாசலிலேயே  எல்லோருக்கும்  takeaway  பார்சலாக  இரவு   உணவு கொடுக்கப்பட்டது.

பிறகொரு நாள்  நண்பரிடம்  விசாரித்தோம்.... 

"எவ்வளவு  செலவு?" என்று.  

மூச்சை  பிடித்துக் கொள்ளுங்கள்.  ஜஸ்ட் ஐந்து லட்சம் சொச்சம்தான். 

என்ன பெருமைக்குடா இப்படி  செலவு செய்யறீங்க?


கலாட்டா தொடரும்.....

Monday, 19 December 2016

கேண்டீன் கச்சேரி 2


சென்னை டிசம்பர் மாத சங்கீத சீசன், சங்கீத ரசிகர்களுக்கு மட்டும் அல்ல. உணவு பிரியர்களுக்கும் தான். அவர்கள் வசதிக்காக, கேண்டீன் உள்ள சபாக்களை மட்டும் வரிசை படுத்தி உள்ளேன். சில சபாக்களில், காலை காபி, டிபன், மதிய உணவு, மாலை டிபன் என்று அதகளம் செய்வார்கள். இன்னும் சில சபாக்களில் மதிய உணவும், மாலை நேரத்தில் இனிப்பு, டிபன், காபி என்று அசத்துவார்கள். மற்ற சபாக்களில், மாலை நேர உணவு கச்சேரி மட்டும் நடத்துவார்கள். குறிப்பாக, உணவு கச்சேரி என்று முடிவடைகிறது என்ற தகவல் பலருக்கும் உபயோகமாக இருக்கும். நாட்டிய திருவிழாவின் போது உணவு கச்சேரி இருக்காது. இந்த தகவல்கள், உணவு கச்சேரி முடிந்த பிறகு போய் ஏமாற்றம் அடைவதை தவிர்க்க உதவும். 

உங்களுக்காக இதோ "உணவு கச்சேரி" schedule.


மயிலாப்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் 


சபா                                                                      கேண்டீன் கச்சேரி                                   நாள் 


ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா                மவுண்ட் மணி ஐயர்                  14 டிசம்பர் 2016  -     5 ஜனவரி 2017 
வித்யாபாரதி கல்யாண மண்டபம்            
பீம சேன கார்டன் தெரு                                                                      


 மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ்               பாஸ்கரன் மீனாம்பிகா          10 டிசம்பர் 2016 -    1 ஜனவரி 2017
கிளப்                                                                                                                                                               (காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை) 
முசிறி சுப்பிரமணியம் சாலை                    


மியூசிக் அகாடமி                                         மின்ட் பத்மநாபன்                      15 டிசம்பர் 2016 - 1 ஜனவரி 2017
டி.டி.கே. சாலை    


நாரத ஞான சபா                                         மாம்பலம் சாஸ்தாலயா           14 டிசம்பர் 2016 1 ஜனவரி 2017
 டி.டி.கே. சாலை                                                                                                            (காலை 6.30 முதல் இரவு   9 மணி வரை )


தியாகராய நகர்      

சபா                                                                      கேண்டீன் கச்சேரி                                   நாள் 


தியாக பிரம்ம ஞான சபா                          மாம்பலம் ஞானாம்பிகா              10 டிசம்பர் 2016-3 ஜனவரி 2017
வாணி மஹால்                                                                                                 (காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை)


ஸ்ரீ கிருஷ்ண ஞான சபா                              ஸ்ரீ கிருஷ்ணா பவன்                      11 டிசம்பர் 2016-2 ஜனவரி 2017
20, மஹாராஜபுரம் சந்தானம் சாலை   


சென்னை கல்சுரல் அகாடமி                    ஸ்ரீ ராகவேந்திரா கேடரர்ஸ்       9 டிசம்பர் 2016-4 ஜனவரி 2017
ராமராவ் கலாமண்டபம் 
ஹபிபுல்லா சாலை 


முத்ரா                                                                   சேஷா கேடரர்ஸ்                         12 டிசம்பர்  2016- 1 ஜனவரி 2017
ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி 
கிருஷ்ணா தெரு
தியாகராய நகர் 


பாரத் கலாச்சார்                                                கதிர்வேல் கேடரர்ஸ்                 10 டிசம்பர் 2016-16 ஜனவரி 2017
ஸ்ரீ Y.G.P. ஆடிட்டோரியம் 
17, திருமலை சாலை 
தியாகராய நகர் 

காமராஜர் அரங்கம், தேனாம்பேட்டை 

சபா                                                                      கேண்டீன் கச்சேரி                                   நாள் 



சென்னையில் திருவையாறு          பல நிறுவனங்களின்                                    18-25 டிசம்பர் 2016    
                                                                     உணவு ஸ்டால்கள்      



தமிழ் இசை சங்கம் 


சபா                                                                      கேண்டீன் கச்சேரி                                   நாள் 



ராஜா அண்ணாமலை மன்றம்      உணவு வசதி செய்யப் பட்டுள்ளது     21 டிசம்பர் 2016 - 1 ஜனவரி 2017

Saturday, 17 December 2016

கேண்டீன் கச்சேரி

சென்னையில் வருடந்தோறும் நடைபெறும் டிசம்பர் மாத சங்கீத கச்சேரிக்கு உலகப் புகழ் உண்டு. பாரம்பரியமான சங்கீத சபாக்கள் களை கட்டும் மாதம் இது. இந்த சீசனை முழுமையாக ரசிக்க, இதோ சில டிப்ஸ்....

மார்கழி குளிரை பற்றி கவலை படாமல், காலை ஐந்து மணிக்கு குளிர்ந்த தண்ணீரில் குளியல் போடுங்கள். நேராக மயிலாப்பூர் செல்லுங்கள். ஏதாவதொரு பஜனை கோஷ்டியோடு சேர்ந்து நடக்க ஆரம்பியுங்கள். (பார்க்க "நானறியா மார்கழி").

பஜனை முடிந்ததும் சுடச் சுட வெண்பொங்கல் கிடைக்கும். தொன்னையில் தரப் படும் இந்த பொங்கலின் சிறப்பு, மிளகு காரமும், கைவிரலில் சொட்டும் சுத்தமான நெய்யும்தான்.

அப்புறம்......

சூடாக ஒரு கப் பில்ட்டர் காபி. இங்கே ஒரு தகவல் சொல்லியாக வேண்டும். வீட்டுக்குப் போய், காபி போட்டுத் தான் குடிக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. 

முசிறி சுப்ரமணியம் சாலையில், மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப் போனால், அருமையான பில்ட்டர் காபி கிடைக்கும். இல்லையென்றால், நாரத ஞான சபா (டி.டி.கே சாலை)....அதுவும் இல்லை என்றால் பார்த்தசாரதி சுவாமி சபா. இந்த மூன்று இடங்களிலும் காலை 6 மணிக்கே காபி கச்சேரி துவங்கி விடும்.

வீட்டுக்குப் போய் 'தினமலர்' படித்து விட்டு வந்தீர்கள் என்றால், மேலே சொன்ன மூன்று சபாக்களுமே, சுடச் சுட சிற்றுண்டி வகைகளோடு உங்களுக்காகக் காத்திருக்கும். 

சாப்பிட்டு விட்டு, நேராக அலுவலகத்திற்கோ, அல்லது வீட்டுக்கோ போய் விடலாம். 

ஆனால், சரியாக ஒரு மணிக்கு மதிய சாப்பாட்டுக் கச்சேரிக்கு வந்து விட வேண்டும். 

பார்த்தசாரதி சுவாமி சபா போனால், மவுண்ட் மணி ஐயர், கல்யாண சாப்பாட்டோடு காத்திருப்பார். ரொம்ப அருமையான சாப்பாடு. நீங்கள் கட்டாயம் அங்கே சாப்பிட வேண்டும் என்று சிபாரிசு செய்கிறேன்.

என்ன ஒன்று....கூட்டம் அதிகமாக இருக்கும்.  மதியம் 12.30 மணிக்கே போனால் காத்திருக்காமல் சாப்பிடலாம். 

அடுத்த நாள் சாப்பாட்டிற்கு, ஒரு மாறுதலுக்கு, மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப் போகலாம். சாப்பாடு நன்றாக இருக்கும். இங்கேயும், கூட்டத்தை தவிர்க்க விரும்பினால் பந்திக்கு முந்த வேண்டும்.

மியூசிக் அகாடமியிலும் மதிய சாப்பாடு உண்டு. மின்ட் பத்மநாபன் தான் இங்கே கேண்டீன் கச்சேரி செய்கிறார். சாப்பாடு wonderful. சர்வீஸ் ரொம்ப...ரொம்ப சுமார்.

தியாகராய நகர் பக்கம் போனால், மதிய சாப்பாட்டுக்கு சிறந்த இடம் வாணி மஹால். இசை கச்சேரி தியாக பிரம்ம ஞான சபா. சாப்பாட்டுக் கச்சேரி மாம்பலம் ஞானாம்பிகா. தலைவாழை இலை போட்டு சாப்பாடு. எளிமையான ....ஆனால் அருமையான சாப்பாடு. இந்த சீசனில் அவசியம் போக வேண்டிய இடங்களில் ஒன்று. பருப்பு உசிலி, மோர்க் குழம்பு, பொரிச்ச கூட்டு, கறியமுது -இப்படி பல வகைகளை ருசிக்கலாம்.

ரொம்ப பசி இல்லை என்றால் நாரத ஞான சபா போகலாம். மினி லஞ்ச். இந்த வருடம் கேண்டீன் கச்சேரி மாம்பலம்  சாஸ்தாலயா  கேட்டரர்ஸ். இவர்களுக்கு இது முதல் கச்சேரி. சாப்பிட்டு பார்த்து விட்டு எப்படி இருக்கிறது என்று பிறகு சொல்கிறேன்.

லஞ்ச் முடித்து விட்டீர்களா? திருமபவும் அலுவலகத்திற்கு சென்று விடலாம்.

மாலை நேர டீ குடிக்க மறந்தும் ஆபீஸ் கேண்டீன் பக்கம் போய் விடாதீர்கள். நமது கேண்டீன் கச்சேரிக்காரர்கள் உங்களுக்காக, சுடச் சுட காசி ஹல்வா, கீரை வடை, பொங்கல், பூரியோடு காத்திருப்பார்களே! அவர்களை ஏமாற்றலாமா?

எல்லா சபாக்களிலும், மாலை  ஐந்து மணி வாக்கில் டிபன் கச்சேரி ஆரம்பித்து விடும். தினம் ஒருவகை ஸ்வீட்...கீரை வடை, வாழைப்பூ வடை , தவல வடை ...இவற்றில் ஏதாவது ஒன்று....சூப்பரான பில்ட்டர் காபி. அவ்வளவுதான். வயிறு நிரம்பி விடும்.

காலாற ஒரு நடை நடந்து விட்டு, மீண்டும் எட்டு மணிக்குள் சபா கேண்டீன் கச்சேரிக்கு சென்று விடுங்கள்.  மக்கன் பேடா, அடை அவியல், ரவா பொங்கல், பன்சி ரவா உப்புமா, தோசை, சப்பாத்தி, டபுள் டெக்கர் இட்லி, பொடி தோசை, நீர் தோசை, பருப்பு போளி, இளநீர் இட்லி, திரட்டுப் பால், பக்கோடா, இடியாப்பம், புளி உப்புமா, உப்பு புளி தோசை, வாழைக்காய் பஜ்ஜி, கத்தரிக்காய் புளி மண்டி....அப்பாடா....மூச்சு வாங்குகிறது. மிச்சம் மீதி டிபன் ஐட்டங்கள் பற்றி அப்புறம் சொல்கிறேன்.

ஒவ்வொரு சபாவிலும் ஒவ்வொரு சிறப்பு டிபன் என்று வேறு அமர்க்களப் படுத்துவார்கள். இது மட்டுமா? தினம் தினம் புதுப் புது டிபன் கிடைக்கும்.

ஆகவே மக்களே....இன்றிலிருந்து ஜனவரி முதல் வாரம் வரை வீட்டு சாப்பாட்டை மறந்து விடுங்கள். ஹோட்டல் சாப்பாடு? மூச்...நினைத்து கூட பார்க்க கூடாது. தினம் ஒரு சபாவுக்கு செல்லுங்கள். வயிறும், மனமும் நிரம்ப சாப்பிடுங்கள்.

கச்சேரி தொடரும்.......

கச்சேரி கலாட்டா 2

சென்னை டிசம்பர் மாத சங்கீத சீசன். தொடரும் சுவாரசியங்கள்.

வழங்குகிறார்......

ஸ்ரீவித்யா ராஜகோபாலன் 


மீண்டும்  ஒரு  மார்கழி.  அதிகாலை  5 மணிக்கு  அவன்  எழுந்திருக்கிறான்.  

குளித்து  விட்டு கோயிலுக்கு  செல்லப்போகிறானா? 
அல்லது  மார்கழி பஜனை  எங்காவது  நடக்கிறதா?  
ஏதாவது உபன்யாசமா?  

இல்லை  இல்லை  

அவனது  ஆபிசரின்  மகன்  கச்சேரி.  
"எங்கே?"  என்று கேட்குறீங்களா?  
ஆபிசரின்  வீட்டுக்கு  அருகில்  உள்ள  பார்க்கில்.   
வழக்கம்  போல்  audienceசேர்த்தாக  வேண்டுமே.  நம்ம  ஆளு  மாட்டினான்.   கச்சேரி  தி.நகர் பார்க் ஒன்றில்.  இவன் வீடு இருப்பதோ  பெருங்குடி  தாண்டி.  ஸ்வெட்டர்,  குல்லா  இன்ன பிற  சமாச்சாரங்களால் உடலை போர்த்திக் கொண்டு,  பனிக்கரடி  போல்  வந்து  இறங்குகிறான்,  பார்க்  வாசலில்.  பாடுவது ஆபிசரின்  மகன். வராமல்  விட்டு, அடுத்த  அப்ரைசலில் ஆபீசர்   கை  வைத்து விட்டால்? (தி. நகர் என்ன?  திருவண்ணாமலையில்  பையன்  பாடினாலும்  போயாக  வேண்டியதுதான்.)

பற்கள் தந்தி  அடிக்க  அடிக்க பாடி  முடிக்கிறான்  பையன்.  டென்ஷன்ல வியர்த்து நிற்கிறார்  ஆபீசர்.

 அடுத்ததுதான்  கிளைமாக்ஸ்.  கூட்டியிருந்த  சொற்ப  கூட்டத்தை  இரண்டு  வேனில்  ஏற்றினார் நம்ம  ஆபீசர்.  தன   வீட்டுக்கு  அழைத்து  சென்று  சுடச்  சுட  பொங்கல் வடை,  கேசரி,  இட்லி,  சட்னி,  சாம்பார்,  காபி  என்று  பரிமாறினார்.  திவ்யமான  டிபன்.  தின்னுபுட்டு  வந்து  வீட்டில்   நுழைந்தால்  கண்  சொருகுகிறது.  காலை  வேலையில்  பொங்கலும்   கெட்டி  சட்னியும்  சாப்பிட்டு ஒருத்தன்  தூங்க  ஆரம்பித்தால்  அவனுக்கு  ஆப்பரேஷனே  செய்யலாம் மயக்க  மருந்து  இன்றி.  இடையில்  விழிக்கவே  மாட்டான்.

பிறிதொருநாள்  ஆபீசர்  நல்ல  மூடில்  இருக்கும்போது  அவன்  கேட்டான்  "பார்க்  கச்சேரிக்கு என்ன சார்  செலவு?"  என்று . 2௦௦௦௦ ஆச்சு  என்று  பெருமையாக  புன்னகைத்தார்  ஆபீசர். (காப்பி குடித்த  வவுச்சருக்கு  கையெழுத்து  போட கால்  மணி  நேரம்  யோசிக்கற  மனுஷன்)  கச்சேரிக்கு உடை தயார்  செய்யலாம். ஒத்திகை  செய்யலாம்.   ஆனால் audience தயார் செய்யறது...!?  கச்சேரி சீசன்ல    இதெல்லாம்  சாதாரணமப்பா......


கச்சேரி தொடரும்......

Sunday, 11 December 2016

கச்சேரி கலாட்டா

          டிசம்பர் சீசன் 2016. இந்த மாதம் 14 ம் தேதிக்கு மேல் எல்லா சபாக்களும் களை கட்டி விடும். பிரபல பாடகர்கள் பாடும் மாலை நேர கச்சேரி, சென்னையின் பிரபல சமையல் கலைஞர்களின் கேண்டீன் கச்சேரி-இவற்றை தாண்டியும் பல விஷயங்கள் இந்த சங்கீத சீசனில் உண்டு. சீரியசான சங்கீதம் மட்டும் அல்ல. பல காமெடியான விஷயங்களும் அரங்கேறும். நாலைந்து பிரபல சபாக்கள் மட்டுமே நடத்துவது அல்ல இந்த சங்கீத கச்சேரி. திடீர் திடீர் என முளைக்கும் சின்ன சின்ன சபாக்கள், சீசனில் பாடுவதற்காகவே flight பிடித்து வந்து, மண்டபத்தை வாடகைக்கு எடுத்து,  பாடி விட்டுப் போகும் N.R.I. கள், இரண்டு வருட  பாட்டு கிளாஸ் முடிந்ததுமே மேடை ஏறத் துடிக்கும் வாண்டுகள் ....இன்னும் பல ரசிக்க வேண்டிய நிகழ்வுகள் இந்த மாதத்தில் அரங்கேறும்.      

             இதோ...உங்களுக்காக கலாட்டா கச்சேரி செய்ய வருகிறார் ஸ்ரீவித்யா ராஜகோபாலன்.

            இனி.....over to..... 


ஸ்ரீவித்யா ராஜகோபாலன்

        கச்சேரி  சீசன் ஆரம்பிக்கப்  போகிறது.  சபா  விசிட் செய்யலாமா? காண்டீன் கச்சேரிகளை  நிறையவே  பார்த்தாகி  விட்டது.  ஒரு  மாறுதலுக்கு  சில கச்சேரி  சங்கதிகளை பார்க்கப்  போகிறோம்  இந்த  முறை.  ஆனால்  சத்தியமாக  இதில்  சங்கீதம்  இருக்காது.    
        
முதல் கச்சேரி:  

        ஒரு  வெள்ளிக்கிழமை மாலை  போன்  கால் :  உறவினர்  மகள் லைனில்.  நான்  **** சபாவில்  பாடப்போகிறேன்.  வரும்  சண்டே காலை  11.௦௦ மணி  அளவில்.  கட்டாயம்  வரவேண்டும்.  நானும்  'ஓகே'  சொல்லிவிட்டேன்.  சனிக்கிழமை  காலை  மீண்டும் அதே போன்... அதே  கோரிக்கை.  ஓகே. சனிக்கிழமை  மாலை  மீண்டும் போன். நானும்  ஓகே... இத்யாதி..இத்யாதி.  இரவு  பத்து  மணிக்கு  SMS.  அட  அப்படி  என்ன  கச்சேரி  போய்  பார்த்து  விடலாம்  என்று  கிளம்பி  விட்டேன்.  

      சபா  வாசலில்  முதலில்  வரவேற்றது  ஒரு water purifier company representative (Main Sponsor). கையில்  சில  notice மற்றும்  கட்டாயமாக  கொடுக்க பட்ட  ஒரு  தம்ளர் தண்ணீரை  குடித்து  விட்டு  உள்ளே   சென்றேன்.  மேடையில் ஒரு கும்பல்  ஏறி  எதையோ  சரி  செய்து  கொண்டிருந்தது.  நாங்களும்  ஒரு  fanக்கு  கீழே  இடம்  பிடித்து  வசதியாக  உட்கார்ந்தோம்.  திடீரென  உறவினரின்  மனைவி  எங்கிருந்தோ  பார்த்து  விட்டு  வேகமாக  எங்கள்  அருகில்  வந்தார்.  

       "என்ன  இங்க  உட்கார்ந்து  விட்டீர்கள்.  முன்  வரையில்  வந்து  உட்காருங்கள்."  
       "இல்ல  இந்த  இடமே  சவுகரியமாக  இருக்கிறது."

       "இல்ல...  இல்ல...  நம்ம  செட்டு  எல்லாம்  முன்னால்  இருக்கிறது.  இது  வேற செட்டு"

         (நம் mind voice) "என்ன  பெரிய  டபரா  செட்  ...ஷேவிங்  செட்."  

      முன்  வரிசைக்கு   சென்றோம்.  சுத்தி முத்தி பார்த்தால்  உறவினரின்  மாமியார்  மைத்துனி,  அக்கம்  பக்கத்து வீட்டுகாரர்கள் etc.  எனக்கு  ஏதோ  உறவினர் வீட்டு  கல்யாணத்துக்கு   வந்த  feeling.  மூன்று  வரிசை முழுவதும்  தெரிந்த  முகங்கள். அடுத்த  6 வரிசைக்கு  ஆள்  கிடையாது.  கடைசி  6 வரிசையில்  சிதறலாக  ஆட்கள்.

      இரண்டே இரண்டு பாடல்களுடன்   கச்சேரி  இனிதே  முடிந்தது. 

      என்ன  விஷயம்  என்றால்:

     சபா (ஆடிட்டோரியம்)  ஒருநாளைக்குதான்  வாடகைக்கு  எடுத்திருக்கிறார்  அந்த  பாட்டு  டீச்சர். அவரே  ஒரு  சபாவும்  நடத்துகிறார்.  தன்னிடம்  பாட்டு  கற்றுக்  கொள்ளும்  அத்தனை  மாணவர்களையும்  அடுத்து  அடுத்து  மேடை  ஏற்றி  சீசனில் பாட  வைத்ததாக  கணக்கு   காட்டியாக  வேண்டும்.  மொத்தமாக  பக்கவாத்திய  ஆர்ட்டிஸ்ட்  பேசி  கச்சேரி  நடத்துகிறார்கள்.  உறவினர்  மகள்  மேடையை  விட்டு  எழுந்ததும்  முன்  வரிசை  முழுவதும்  காலி.  கடைசி  வரிசையில்  உட்கார்ந்து  இருப்பவர்கள்  எழுந்து  முன்  மூன்று  வரிசைகளை  நிரப்புகிறார்கள்.   

tail piece: கச்சேரி   செய்யும் பாடகர்களே audience ஐயும்  அழைத்து  வந்தது  இங்குதான். 

கச்சேரி தொடரும்......

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...