சென்னை டிசம்பர் மாத சங்கீத சீசன். தொடரும் சுவாரசியங்கள்.
வழங்குகிறார்......
ஸ்ரீவித்யா ராஜகோபாலன்
மீண்டும் ஒரு மார்கழி. அதிகாலை 5 மணிக்கு அவன் எழுந்திருக்கிறான்.
குளித்து விட்டு கோயிலுக்கு செல்லப்போகிறானா?
அல்லது மார்கழி பஜனை எங்காவது நடக்கிறதா?
ஏதாவது உபன்யாசமா?
இல்லை இல்லை
அவனது ஆபிசரின் மகன் கச்சேரி.
"எங்கே?" என்று கேட்குறீங்களா?
ஆபிசரின் வீட்டுக்கு அருகில் உள்ள பார்க்கில்.
வழக்கம் போல் audienceசேர்த்தாக வேண்டுமே. நம்ம ஆளு மாட்டினான். கச்சேரி தி.நகர் பார்க் ஒன்றில். இவன் வீடு இருப்பதோ பெருங்குடி தாண்டி. ஸ்வெட்டர், குல்லா இன்ன பிற சமாச்சாரங்களால் உடலை போர்த்திக் கொண்டு, பனிக்கரடி போல் வந்து இறங்குகிறான், பார்க் வாசலில். பாடுவது ஆபிசரின் மகன். வராமல் விட்டு, அடுத்த அப்ரைசலில் ஆபீசர் கை வைத்து விட்டால்? (தி. நகர் என்ன? திருவண்ணாமலையில் பையன் பாடினாலும் போயாக வேண்டியதுதான்.)
பற்கள் தந்தி அடிக்க அடிக்க பாடி முடிக்கிறான் பையன். டென்ஷன்ல வியர்த்து நிற்கிறார் ஆபீசர்.
அடுத்ததுதான் கிளைமாக்ஸ். கூட்டியிருந்த சொற்ப கூட்டத்தை இரண்டு வேனில் ஏற்றினார் நம்ம ஆபீசர். தன வீட்டுக்கு அழைத்து சென்று சுடச் சுட பொங்கல் வடை, கேசரி, இட்லி, சட்னி, சாம்பார், காபி என்று பரிமாறினார். திவ்யமான டிபன். தின்னுபுட்டு வந்து வீட்டில் நுழைந்தால் கண் சொருகுகிறது. காலை வேலையில் பொங்கலும் கெட்டி சட்னியும் சாப்பிட்டு ஒருத்தன் தூங்க ஆரம்பித்தால் அவனுக்கு ஆப்பரேஷனே செய்யலாம் மயக்க மருந்து இன்றி. இடையில் விழிக்கவே மாட்டான்.
பிறிதொருநாள் ஆபீசர் நல்ல மூடில் இருக்கும்போது அவன் கேட்டான் "பார்க் கச்சேரிக்கு என்ன சார் செலவு?" என்று . 2௦௦௦௦ ஆச்சு என்று பெருமையாக புன்னகைத்தார் ஆபீசர். (காப்பி குடித்த வவுச்சருக்கு கையெழுத்து போட கால் மணி நேரம் யோசிக்கற மனுஷன்) கச்சேரிக்கு உடை தயார் செய்யலாம். ஒத்திகை செய்யலாம். ஆனால் audience தயார் செய்யறது...!? கச்சேரி சீசன்ல இதெல்லாம் சாதாரணமப்பா......
கச்சேரி தொடரும்......
No comments:
Post a Comment