மீண்டும் ஒரு மார்கழி மாத மாலை வேளை 3 வயது குழந்தையின் தாய் அவள். குழந்தை பிடிவாதம் பிடித்து அழுததால், அருகில் உள்ள பார்க்குக்கு அழைத்துச் செல்கிறாள். முன்னதாக கணவனிடமும் சொல்லி விட்டாள் "ஆபீசிலிருந்து திரும்பும்போது பார்க்குக்கு வந்து அழைத்து போகும்படி."
சறுக்கு மரம் ஏறி, ராட்டினத்தில் சுற்றி முடித்து ஓடி ஆடி விளையாடியதும் இருட்ட தொடங்கியது. சற்றே வெளிச்சம் இருக்கும் இடம் நோக்கி சென்றபோதுதான் கவனிக்கிறாள் அங்கே கொஞ்சம் நாற்காலிகள் போட்டிருப்பதை. உட்கார தயங்கி நின்றபோது full மேக்கப்பில் ஒரு பெண் "வாங்க... வாங்க" என்று வரவேற்று உட்கார சொன்னாள். உட்கார்ந்த பொழுது, குழந்தையின் அப்பாவும் வந்து சேர்ந்தார். இருவரிடமும் சூடான காபியை கொடுத்த்தார் அந்த பெண். இளம் குளிருக்கு மிக இனிமையான சுவையான காபி.
அருந்தி முடிந்து நிமிர்ந்தால், எதிரே இருந்த மேடையில் ஒரு பொடியன் மைக்குக்கு முன்னால் உட்கார்ந்து பாடத் தொடங்கினான். அருகில் இருந்த மிருதங்கத்தை விட கொஞ்சமே கொஞ்சம் உயரமான சிறுவன் ஒருத்தன் வாசிக்கத் துவங்கினான்,. எண்ணி இரண்டே இரண்டு பாட்டு. "யாரோ போட்டு வைத்திருக்கும் சேரில் உட்கார்ந்திருக்கிறோமே" "காப்பி வேறு குடித்தோமே" என்று வஞ்சனை இல்லாமல் கைதட்டினர் கணவனும் மனைவியும்.
உட்கார்ந்து கைதட்டியவர்களை, வளைத்து வளைத்து video எடுத்தார் பாடகரின்(?) தந்தை. குழந்தையும் ஒன்றும் புரியாமல் அப்பா அம்மாவை பின்பற்றி தானும் கைதட்டி மகிழ்ந்தது.
நிகழ்ச்சி முடிந்து கிளம்பிய பொழுது பாடகரின் தாயும் தந்தையும் "ரொம்ப thanks" என்று கூறி ஒரு பையை நீட்டினர். அதில் புகழ் பெற்ற கடை ஒன்றின் மைசூர்பாகு மற்றும் மிக்சர் packets.
வெளியே வந்து கணவன் கேட்டார், "அவங்க யாரு உன் friendஆ?" மனைவி சொன்னார் "யாரோ உங்க friendன்னுல்ல நினைத்தேன்."
கணவர் தன் நண்பனிடம் இந்த சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். அப்பொழுது நண்பவர் சொன்னார், நீ சாப்பாடு டிபன் கேட்டிருந்தால் கூட அவர்கள் arrange செய்திருப்பார்கள். தங்கள் மகனை instant ஏசுதாசாகவும் உன்னிகிருஷ்ணனாகவும் ஆக்கிவிட துடிக்கும் பெற்றோர்கள் இங்கு நிறைய உண்டு. அவர்களது அவசர அதிரடி அரங்கேற்றங்கள்தான் இது போன்ற பார்க் கச்சேரிகள்.
No comments:
Post a Comment