Saturday, 7 April 2018

அகரமேல் பச்சை வாரண பெருமாள்

பக்தி உலா by வித்யா   



அகரமேல் பச்சை வாரண பெருமாள் கோயில் 


   புதிது புதிதாக கட்டப்படும் கோயில்களை விட பழமையான கோயில்களே என்னை கவர்கின்றன. அந்த வகையில் சென்னைக்கு மிக அருகில் ஒரு அக்ரஹாரத்துக்கு நடுவில் அமையப் பெற்றுள்ள கோவிலை கண்டு தரிசிக்கும் அநுபவம் எனக்கு வாய்த்தது.


      பூவிருந்தவல்லி அடுத்த நசரத்பேட்டை அருகில் உள்ள அகரமேல் என்ற இடம்தான் இந்த கோயில் அமைய பெற்றுள்ள புண்ணிய பூமி.

     
அகரமேல் -
பச்சை வாரண பெருமாள் கோயில்-
யானை சிற்பம் 




எல்லைபோல் அமையப்பெற்ற ஆஞ்சநேயர் கோயில், இருசாரியும் வீடுகள், ஒரு முன்மண்டபம், உள்ளே நுழைந்தால் பலிபீடம், துவஜஸ்தம்பம், மணிகள் அசைந்தாடும் கொடிமரம், குட்டியாய் ஒரு யானை சிற்பம், தனியே தாயார் சந்நிதி. ஆஹா.... மிக மிக அற்புதமான இடம். ஒரு விரலை மடக்கி நம்மை அழைத்து அருள் செய்கிறார் பெருமாள்.

      
  
பச்சை வாரண பெருமாள் கோயில் - அகரமேல்


  பெருமாள் கோவில்களுள் இது அவதாரஸ்தலம். அதாவது வைஷ்ணவத்திற்கு தொண்டாற்றிய மகான்கள் பிறந்த பூமிகளுள் ஒன்று.

        ராமானுஜர் துறவறம் மேற்கொண்டபோது ஒவ்வொன்றாக துறந்து கொண்டே வந்தாராம்.  முதலியாண்டானை துறக்கும்போது சற்றே கலங்கினாராம். ராமானுஜருக்கு அந்த அளவு தொண்டு செய்த அணுக்க தொண்டர் முதலியாண்டான். அவரது அவதார ஸ்தலம் இந்த புண்ணிய பூமி.

       சூரியா, கவுதம் மேனன் தயவில் வாரணம், என்றால் யானை என்று நாமறிவோம். . வாரணத்திற்கும் இந்த தலத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு.

       இங்கு சொல்லப்படும் புராணக்கதை மகாபாரதத்துடன் தொடர்பு உடையது. தர்மர் யாகம் செய்தபோது துஷ்டர்கள் அதனை செய்யவிடாமல் தடுத்தனர். அப்போது கிருஷ்ணர்  பச்சை நிற யானை வடிவெடுத்து, துஷ்டர்களை விரட்டினார். அதனால் இங்கு இறைவனுக்கு பச்சைவாரண பெருமாள் என்று பெயர்.  புருஷமங்கலம் என்ற பெயரும் உண்டு. இங்குள்ள முதலியாண்டானை வணங்கினால் நீண்ட ஆயுள் கிடைக்குமாம்.  முதலியாண்டான் ராமரின் அம்சமாக கருதப்படுகிறார். இங்குள்ள அமிர்தவல்லி தாயாரை வணங்கினால் வம்ச விருத்தி கிட்டும். ஆண்டாள் தாயார்  திருமண பாக்கியம் தருபவர். புஷ்கரணி தர்மபுஷ்கர்ணி. தல விருக்ஷம் பலா.

    
 கல் ஜன்னல்-பச்சை வாரண பெருமாள் கோயில்-அகரமேல் 


    கோயிலின் சிறப்பு, நிறைந்து இருக்கும் சிற்பத்தூண்கள். தசாவதாரமும் செதுக்கப்பட்டுள்ளன. அற்புதமான கல் ஜன்னல் ஒன்று ராமர் சந்நிதி செல்லும்வழியில் காணப்படுகிறது. யாரோ புண்ணியவான்கள் அதில் கைவரிசை காட்டி இருக்கிறார்கள். அருமை தெரியாமல் உடைத்தவர்களை அறைந்தால் கூட தப்பில்லை.  மிக மிக சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறது இத்திருத்தலம்.

     
அகரமேல் பச்சை வாரண பெருமாள் கோயில் கல்வெட்டு 


    நாங்கள் சென்றபோது கூட்டம் அறவே இல்லை. எங்கள் ஒருவருக்காக தாயார் சந்நிதியை திறந்து தரிசனம் செய்வித்தனர். எண்பத்தியிரண்டு வயதான ஸ்ரீனிவாச பட்டர் கோயிலின் தல வரலாறை தெளிவாகவும் சுருக்கமாகவும் எடுத்துரைத்தார். பக்தர்கள் வருகைக்காக அழகாக  அலங்காரம் செய்து கொண்டு அமர்ந்திருக்கிறார் உற்சவர்.

          காலை 7 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7.30 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

        அந்த பட்டாச்சாரியார் உருக்கமாக வேண்டி சொன்னது ஒன்றே ஒன்றுதான்.  "இப்படி ஒரு கோயில் இருக்கிறது என்று உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு சொல்லுங்கள். எல்லோரையும் வர சொல்லுங்கள்"  என்பது மட்டுமே. தட்டில் தட்சிணை போட்டபோதுகூட "இவ்வளவு எதற்கு?" என்கிறார் ஸ்ரீனிவாசபட்டர். என்ன சொல்ல?

        இப்படியும் சில கோயில்கள் நம்மிடையே இருக்கிறது.  கட்டாயம் இந்த விடுமுறையில் உங்கள் குழந்தைகளை அழைத்து சென்று வாருங்கள். பூவிருந்தவல்லியை அடைய சென்னையின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பேருந்து வசதி உண்டு. அங்கிருந்து மிக அருகில் இருக்கிறது இத்தலம்.

2 comments:

Unknown said...

Tnks

SV said...

அற்புதம். என்னுடைய Blog il இந்த கோவிலை உங்கள் பெயர் போட்டு பகிர்கிறேன்.

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...