சென்னையில் வருடந்தோறும் நடைபெறும் டிசம்பர் மாத சங்கீத கச்சேரிக்கு உலகப் புகழ் உண்டு. பாரம்பரியமான சங்கீத சபாக்கள் களை கட்டும் மாதம் இது. இந்த சீசனை முழுமையாக ரசிக்க, இதோ சில டிப்ஸ்....
மார்கழி குளிரை பற்றி கவலை படாமல், காலை ஐந்து மணிக்கு குளிர்ந்த தண்ணீரில் குளியல் போடுங்கள். நேராக மயிலாப்பூர் செல்லுங்கள். ஏதாவதொரு பஜனை கோஷ்டியோடு சேர்ந்து நடக்க ஆரம்பியுங்கள். (பார்க்க "நானறியா மார்கழி").
பஜனை முடிந்ததும் சுடச் சுட வெண்பொங்கல் கிடைக்கும். தொன்னையில் தரப் படும் இந்த பொங்கலின் சிறப்பு, மிளகு காரமும், கைவிரலில் சொட்டும் சுத்தமான நெய்யும்தான்.
அப்புறம்......
சூடாக ஒரு கப் பில்ட்டர் காபி. இங்கே ஒரு தகவல் சொல்லியாக வேண்டும். வீட்டுக்குப் போய், காபி போட்டுத் தான் குடிக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை.
முசிறி சுப்ரமணியம் சாலையில், மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப் போனால், அருமையான பில்ட்டர் காபி கிடைக்கும். இல்லையென்றால், நாரத ஞான சபா (டி.டி.கே சாலை)....அதுவும் இல்லை என்றால் பார்த்தசாரதி சுவாமி சபா. இந்த மூன்று இடங்களிலும் காலை 6 மணிக்கே காபி கச்சேரி துவங்கி விடும்.
வீட்டுக்குப் போய் 'தினமலர்' படித்து விட்டு வந்தீர்கள் என்றால், மேலே சொன்ன மூன்று சபாக்களுமே, சுடச் சுட சிற்றுண்டி வகைகளோடு உங்களுக்காகக் காத்திருக்கும்.
சாப்பிட்டு விட்டு, நேராக அலுவலகத்திற்கோ, அல்லது வீட்டுக்கோ போய் விடலாம்.
ஆனால், சரியாக ஒரு மணிக்கு மதிய சாப்பாட்டுக் கச்சேரிக்கு வந்து விட வேண்டும்.
பார்த்தசாரதி சுவாமி சபா போனால், மவுண்ட் மணி ஐயர், கல்யாண சாப்பாட்டோடு காத்திருப்பார். ரொம்ப அருமையான சாப்பாடு. நீங்கள் கட்டாயம் அங்கே சாப்பிட வேண்டும் என்று சிபாரிசு செய்கிறேன்.
என்ன ஒன்று....கூட்டம் அதிகமாக இருக்கும். மதியம் 12.30 மணிக்கே போனால் காத்திருக்காமல் சாப்பிடலாம்.
அடுத்த நாள் சாப்பாட்டிற்கு, ஒரு மாறுதலுக்கு, மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப் போகலாம். சாப்பாடு நன்றாக இருக்கும். இங்கேயும், கூட்டத்தை தவிர்க்க விரும்பினால் பந்திக்கு முந்த வேண்டும்.
மியூசிக் அகாடமியிலும் மதிய சாப்பாடு உண்டு. மின்ட் பத்மநாபன் தான் இங்கே கேண்டீன் கச்சேரி செய்கிறார். சாப்பாடு wonderful. சர்வீஸ் ரொம்ப...ரொம்ப சுமார்.
தியாகராய நகர் பக்கம் போனால், மதிய சாப்பாட்டுக்கு சிறந்த இடம் வாணி மஹால். இசை கச்சேரி தியாக பிரம்ம ஞான சபா. சாப்பாட்டுக் கச்சேரி மாம்பலம் ஞானாம்பிகா. தலைவாழை இலை போட்டு சாப்பாடு. எளிமையான ....ஆனால் அருமையான சாப்பாடு. இந்த சீசனில் அவசியம் போக வேண்டிய இடங்களில் ஒன்று. பருப்பு உசிலி, மோர்க் குழம்பு, பொரிச்ச கூட்டு, கறியமுது -இப்படி பல வகைகளை ருசிக்கலாம்.
ரொம்ப பசி இல்லை என்றால் நாரத ஞான சபா போகலாம். மினி லஞ்ச். இந்த வருடம் கேண்டீன் கச்சேரி மாம்பலம் சாஸ்தாலயா கேட்டரர்ஸ். இவர்களுக்கு இது முதல் கச்சேரி. சாப்பிட்டு பார்த்து விட்டு எப்படி இருக்கிறது என்று பிறகு சொல்கிறேன்.
லஞ்ச் முடித்து விட்டீர்களா? திருமபவும் அலுவலகத்திற்கு சென்று விடலாம்.
மாலை நேர டீ குடிக்க மறந்தும் ஆபீஸ் கேண்டீன் பக்கம் போய் விடாதீர்கள். நமது கேண்டீன் கச்சேரிக்காரர்கள் உங்களுக்காக, சுடச் சுட காசி ஹல்வா, கீரை வடை, பொங்கல், பூரியோடு காத்திருப்பார்களே! அவர்களை ஏமாற்றலாமா?
எல்லா சபாக்களிலும், மாலை ஐந்து மணி வாக்கில் டிபன் கச்சேரி ஆரம்பித்து விடும். தினம் ஒருவகை ஸ்வீட்...கீரை வடை, வாழைப்பூ வடை , தவல வடை ...இவற்றில் ஏதாவது ஒன்று....சூப்பரான பில்ட்டர் காபி. அவ்வளவுதான். வயிறு நிரம்பி விடும்.
காலாற ஒரு நடை நடந்து விட்டு, மீண்டும் எட்டு மணிக்குள் சபா கேண்டீன் கச்சேரிக்கு சென்று விடுங்கள். மக்கன் பேடா, அடை அவியல், ரவா பொங்கல், பன்சி ரவா உப்புமா, தோசை, சப்பாத்தி, டபுள் டெக்கர் இட்லி, பொடி தோசை, நீர் தோசை, பருப்பு போளி, இளநீர் இட்லி, திரட்டுப் பால், பக்கோடா, இடியாப்பம், புளி உப்புமா, உப்பு புளி தோசை, வாழைக்காய் பஜ்ஜி, கத்தரிக்காய் புளி மண்டி....அப்பாடா....மூச்சு வாங்குகிறது. மிச்சம் மீதி டிபன் ஐட்டங்கள் பற்றி அப்புறம் சொல்கிறேன்.
ஒவ்வொரு சபாவிலும் ஒவ்வொரு சிறப்பு டிபன் என்று வேறு அமர்க்களப் படுத்துவார்கள். இது மட்டுமா? தினம் தினம் புதுப் புது டிபன் கிடைக்கும்.
ஆகவே மக்களே....இன்றிலிருந்து ஜனவரி முதல் வாரம் வரை வீட்டு சாப்பாட்டை மறந்து விடுங்கள். ஹோட்டல் சாப்பாடு? மூச்...நினைத்து கூட பார்க்க கூடாது. தினம் ஒரு சபாவுக்கு செல்லுங்கள். வயிறும், மனமும் நிரம்ப சாப்பிடுங்கள்.
கச்சேரி தொடரும்.......
1 comment:
Very nice information thanks and after reading this I feel that I attended the canteen Kacheri
Post a Comment