05-06-2013
இன்று உலக சுற்றுச்சூழல் தினம்.
''சிந்தனை செய். சாப்பிடு. மீதம் வை."''
இந்த வருட உலக சுற்றுச்சூழல் தினத்துக்கான தீம் இது.
உணவு சேதாரத்திற்கு எதிரான பிரச்சாரத்தை குறிக்கும் வார்த்தைகள் இவை. நமது பயன்பாடு இவ்வுலகின் தாங்கும் திறனை தாண்டிக் கொண்டிருக்கிறது என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது. நாளைய சந்ததியினருக்கும் உணவளிக்கும் திறனை நம் பூமியிடமிருந்து பறித்து விடுவோமோ என்பதே பலரின் அச்சம்.
உணவு சேதாரம் (Food Wastage), தொடரக் கூடிய பயன்பாடு (Sustainable Consumption)-இவை இன்று சுற்றுச் சூழல் விஞ்ஞானிகள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள். இவற்றின் பொருளை முழுமையாக உணர்ந்து செயல் படுத லே, சுற்றுச் சூழலுக்கான நமது பங்களிப்பாகும்.
உணவு சேதாரம் என்பது இலையில் மீதம் வைக்கும் உணவு பொருளை மட்டும் குறிப்பிடுவதல்ல. காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் பயிரிடுவதில் செலவாகும் தண்ணீர், விளைந்த பொருட்களை நுகர்வோர் வரை கொண்டு சேர்ப்பதில் செலவாகும் எரிபொருட்கள், இப்பொருட்களின் சேமிப்பு கிடங்கு மற்றும் விற்பனை அங்காடிகளின் குளிர் சாதன பயன்பாடு, நம் வீட்டின் குளிர் சாதன பெட்டிக்கான மின்சார பயன்பாடு, உணவு பெருள் தயாரிப்பிற்கு செலவாகும் எரிபொருள்-இவை அனைத்தும் சுற்றுச் சூழலுக்கு கெடுதல் விளைவிப்பவை தான்.
நம்மால் என்ன செய்ய முடியும்?
விளைவிக்க தண்ணீர் அதிகம் தேவைப்படும் அரிசிக்கு பதில், வறண்ட நிலங்களில் கூட விளைச்சலை தரும் சிறு தானியங்களை உணவில் அதிகம் சேர்க்கலாம்.
அதிக தூரத்திலிருந்து வரும் உணவு பொருட்களை தவிர்த்து, அருகில் விளையும் பொருள்களை பயன் படுத்தலாம். உடல் நலத்திற்கும் நல்லது. உலகின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
குளிரூட்டப் பட்ட கடைகளில் பொருட்கள் வாங்குவதை குறைக்கலாம்.
காய்கறி நறுக்குவதில் தொடங்கி (அதிக சேதாரம் இல்லாமல் தோல் சீவுவது), சமைப்பது (குறைந்த எரிபொருள் பயன்பாடு) வரை நமக்கு சுற்றுச் சூழல் பொறுப்புணர்வு இருக்கிறது.
இறுதியாக இலையில் வீணாகும் உணவு பொருள். உணவு பொருளை இலையில் வீணாக மீதம் வைப்பது நமது செல்வ நிலையை காட்டும் ஆடம்பர செயல். தேவையான உணவை மட்டும் பரிமாறி, அதை சாப்பிட்ட பிறகே மீண்டும் பரிமாற வேண்டும். திருச்சி ஆண்டார் வீதியில் 'மதுரா ஹோட்டல்' என்றொரு உணவகம் இருந்தது. இன்றும் இருக்கும். அந்த உணவகத்தில் unlimited meals ரொம்ப பிரசித்தம். சாப்பிடும் போது நம் கண்ணில் படும் உயரத்தில் ஒரு போர்டில் இவாறு எழுதி வைத்திருப்பார்கள்: ''வயிறு நிரம்ப சாப்பிடுங்கள். ஆனால் உணவு பதார்த்தங்களை வீணடிக்காதீர்கள்." ஒவ்வொரு கவளம் உணவு உண்ணும் போதும் இந்த வாசகங்களையும், நாளைய சந்ததியினருக்கு உணவு கிடைக்குமா என்ற எண்ணத்தையும் மனதில் நிறுத்தினால் போதும். நாமும் வாழ்வோம். நாளையும் வாழ்வோம்.
No comments:
Post a Comment