காலி இடமே இல்லாத நகர வாழ்வில், தோட்டம் அமைக்க வேண்டும் என்று ஆசை. அதுவும் செலவில்லாமல்...
அதற்கான ஒரு திட்ட அறிக்கை:
வீட்டின் குப்பை தொட்டியில் இருந்து துவங்குகிறது நம் திட்டம். ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு குப்பை தொட்டிகள் வேண்டும். பிளாஸ்டிக் கழிவு போன்ற மக்காத குப்பைக்கு ஒன்று. காய்கறி மற்றும் பழ கழிவு, உணவு கழிவு-இவற்றுக்காக மற்றொன்று. அதையும் காசு செலவழித்து வாங்க வேண்டாம். வீட்டில் ஓட்டை, உடைசல் வாளி இருந்தால், அதுவே போதும். மக்கும் கழிவுக்கான குப்பை தொட்டியை balcony யிலோ அல்லது வீட்டிற்கு ஒதுக்குப் புறமான இடத்திலோ வைத்து விடுங்கள். தொட்டியில் ஆங்காங்கே சிறிய துளை இடுங்கள். தொட்டியின் அடியில் சிறிது மணலை நிரப்புங்கள். அதன்மேல் வீட்டின் காய்கறி, பழம், மற்றும் மீந்து போன உணவு போன்றவற்றை தினமும் கொட்டுங்கள். காய்ந்து போன கருவேப்பிலை, மற்றும் இலை சருகுகள் கிடைத்தால் இந்த உணவு கழிவு மீது போடுங்கள். குப்பை தொட்டியை ஒரு மூடி போட்டு வைத்து விடுங்கள். துளி ஈரம் கழிவின் மீது இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.
மேலே சொன்ன முறையில் கழிவுகளை தினமும் சேகரியுங்கள். தொட்டியை மூடி வைப்பதால் ஏற்படும் வெப்பம், துளைகள் வழியாக செல்லும் காற்று, ஈரப் பதம் இவை கழிவுகளை மக்க செய்யும். தேவைபட்டால், வாரம் ஒருமுறை ஒரு குச்சியால் இந்த கழிவை கிளறி விடலாம். கழிவு மக்க துவங்கியதும் அதன் அளவு (volume ) குறைந்து விடும். எனவே சற்றே பெரிய குப்பை தொட்டி, இரண்டு மாதங்களுக்கு ஒரு சிறிய குடும்பத்தின் கழிவை தாங்கும். இரண்டு மாதங்களில் கழிவு, இயற்கை உரமாக மாறிவிடும்.
உங்கள் சமையலறை தோட்டத்திற்கான உரம் தயார்.
நமது திட்ட அறிக்கையின் இரண்டாம் கட்டம். சமையலறை தோட்டத்திற்கான இடத்தை தெரிவு செய்வது. அந்த இடம் உங்கள் வீட்டின் மொட்டை மாடியாக இருக்கலாம். Balcony யாக இருக்கலாம். ஜன்னல்களாக இருக்கலாம். வீட்டின் சுற்று சுவரை சுற்றி உள்ளே இருக்கும் சிறிய இடமாக இருக்கலாம். Terrace Garden, Roof Garden, Balcony Garden, Window Garden, Vertical Garden, green roof, green wall, living wall , sky farm என்று பலவித பெயர்கள் இன்று புழக்கத்தில் உள்ளன. பெயர் எப்படி இருந்தாலும், விளைவு ஒன்றுதான். ஆரோக்கியமான காய்கறிகள்.
நமது திட்ட அறிக்கையின் மூன்றாம் கட்டம். இடத்தை தெரிவு செய்து விட்டோம். அந்த இடங்களில் ஒரு அங்குல மண் தரை கூட இல்லையே? Concrete Jungle ஆக இருக்கிறதே....கவலை வேண்டாம். உடைந்து போன வாளி, ஓட்டை, உடைசல் பாத்திரம், குப்பையில் எறிய இருக்கும் துணி பை -இவற்றை சேகரித்து கொள்ளுங்கள். அடியில் ஒரு சிறிய துளை இட வேண்டும். அதிக படியான நீர் வெளியேற உதவும். உங்கள் பகுதியில் மண் கிடைத்தால் அதை எடுத்து வந்து, பழைய பாத்திரம் அல்லது பையில் பாதியளவு நிரப்பி கொள்ளுங்கள். கிடைக்க வில்லை என்றாலும் கவலை இல்லை. செம்மண் கிலோ ஐந்து ரூபாய்க்கு கிடைக்கிறது. அதோடு உங்கள் வீட்டில் தயாரான இயற்கை உரத்தை போட்டு நன்கு கலந்து விடுங்கள்.
நமது திட்ட அறிக்கையின் நான்காம் கட்டம். என்ன பயிரிடுவது? கொத்த மல்லி, தக்காளி, மிளகாய், அவரை -இவை எல்லாம் எளிதாக பயிர் செய்ய கூடியவை. வெந்தய கீரை, முளைக் கீரை, பசலை கீரை, மணத்தக்காளி கீரை- இவையும் நமது zero budget kitchen garden க்கு ஏற்றவை. பெரும்பாலான கீரை வகைகளில், முழு கீரை செடியுமே சமையலுக்கு பயன் படுத்த முடியும். குறைந்த இடத்தில் பயிரிட்டாலும் நிறைய அளவு உணவை தருவது கீரைகளே. எனவே, இவை வீட்டு தோட்டத்திற்கு சரியான தெரிவு.
ஐந்தாம் கட்டம். விதை சேகரிப்பு. நீங்கள் சமையலுக்கு உபயோகப் படுத்தும் தக்காளி, மிளகாய் இவற்றை மண்ணில் பிழிந்து விட்டாலே போதும். தனியாக விதை வாங்க தேவையில்லை. மணத்தக்காளி கீரை வாங்கும் போது, சில கீரைகளில் காய், பழங்களும் இருக்கும். அந்த வகை கீரையை தேடி வாங்கி, பழத்தை மண்ணில் பிழிந்து விடலாம்.
ஆறாம் கட்டம். செடிகளில் பூச்சி அண்டாமல் பாதுகாப்பது. மஞ்சள் தூள் அல்லது வேப்ப இலையை அறைத்து, தண்ணீரில் கலந்து, செடிகள் மீது spray செய்தால் போதும். பூச்சி தாக்காது. செடிகளுக்கு அரண் போல் பூண்டு அல்லது வெங்காய செடி வளர்த்தாலும், அவை பூச்சி தாக்குதலில் இருந்து, நம் செடிகளை காப்பாற்றும்.
ஏழாம் கட்டம். நம் வீட்டில் விளைந்த காய்கறிகளை அறுவடை செய்து சாப்பிட வேண்டியதுதான்.
மறக்காமல் என்னையும் சாப்பிட கூப்பிடுங்கள்.