A Guest Post by Srividya Raman:
சுதந்திர தின Graphics by Sundarramg |
காலநிலை மாறுதலுக்கேற்ப உணவுகளை உண்டு, " நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்று வாழ்ந்தவன் தமிழன். அரிசி சற்று குளுமை அளிக்கும் உணவு. நம் தமிழகம் வெப்ப பிரதேசம். அதனால் தமிழனின் உணவு பெரும்பாலும் குளுமை அளிப்பதாகவே இருக்கும். கோதுமை சற்று சூடு கொடுக்கும் உணவு. வட மாநிலங்களில் உள்ள குளிருக்கு அதுதான் சரி. நல்ல வெய்யிலில் , வாய்க்கு ருசியாக இருக்கிறது என்று சப்பாத்தி, பூரி, Bread, பரோட்டா என்று தின்றுவிட்டு பேதி பிடுங்கி கொண்டு போனால் 'ஐயோ அம்மா ' என்று கூக்குரல் இடுவதுதான் உணவு சுதந்திரமா?
ஒவ்வொரு seasonஇலும் ஒவ்வொரு வகையான உணவை உண்டவன் தமிழன். சித்திரை, வைகாசியில். மாவும் பலாவும் உண்டு சீரணத்தை செழிப்பாக்கினான். சித்திரை முதல் நாளில் வேப்பம்பூ மாங்காய் பச்சடி சாப்பிட்டு வருடத்தை துவக்கினான். ஆடி மாதம் முதல் நாள் தேங்காய் ஏதோ ஒரு விதத்தில் சேர்க்கபடுகிறது. சேலம் பகுதிகளில் தேங்காயை சுட்டு சாப்பிடுவார்கள். காத்தடி காலம் என்பதால் தலை சுற்றல் வராமல் இருக்க தேங்காயை சேர்த்து கொள்வார்கள். ஆடி 18 அன்று கலந்த சாதவகைகளை சாப்பிட்டு மகிழ்வார்கள். புளி உபயோகத்தை குறைப்பார்கள்.
"புரட்டாசி மாதம் பகல் ஆனால் பொன்னுருக காயும், இரவானால் மண்ணுருக பெய்யும்" என்பார்கள். இது போன்ற நேரங்களில் மனிதனுக்கு நிறைய தேவை protein அதற்காகவே வந்ததுதான் நவராத்திரி. ஒன்பது நாளும் வித விதமான சுண்டல்களை தின்று தீர்த்தார்கள்.
ஐப்பசி மாதம் பொதுவாகவே சிறு பூச்சிகள் பெருகும் காலம் அவற்றை கட்டுப்படுத்தவே பட்டாசு வெடித்தார்கள். மழை தொடங்கி சற்றே குளிர் தொடங்கும். அதனால்தான் நிறைய ஓமம், மிளகு சேர்த்த பட்சணங்களை செய்து சாப்பிட்டு சீரண சக்தியை தூண்டினார்கள்.
கார்த்திகை மாதம் முழுவதும் வீட்டு வாசலில் விளக்கேற்றி வைத்து பூச்சி முதலிய ஜந்துக்கள் வீடுகளுக்குள் வராமல் தடுத்தார்கள். அது மட்டுமின்றி பொரி பொரிக்கும்போது வரும் புகை, பறந்து வரும் பூச்சிகளை தடுக்கும்.
மார்கழி முன்பனிக்காலம். சுலபமாக செரிப்பதற்காகவே படைக்கப்பட்ட உணவு பொங்கல். அதில் உள்ள மிளகும் சீரகமும் சளி பிடிக்காமல் தடுக்கும். மார்கழி மாதத்தில் Ozone layer பூமிக்கு அருகில் வருகிறது. விடியற்காலையில் வீட்டிற்கு வெளியே சென்று உலாவினால் நல்லது. சொன்னால் செய்வோமா?. அதற்காகவே வந்தது மார்கழி பஜனை. பஜனை பாடி பொங்கலை சாப்பிட்டு வந்ததில் மார்கழி மகிழ்ச்சியாகவே கழிந்தது.
தை மாதம் பின்பனி காலம். நினைத்து, நினைத்து சர்க்கரை பொங்கல் செய்வார்கள். பொங்கல் திருநாள் அன்று மட்டும் அல்ல. ரத சப்தமி யிலும் சர்க்கரை பொங்கல் உண்டு. அதில் சேரும் நெய் குளிரினால் வரும் வயிற்று வறட்சியை போக்கும். இந்த கால கட்டங்களில் உணவில் நிறைய காய்கறிகளை சேர்ப்பார்கள். ஒரு கோடையை எதிர் கொண்டாக வேண்டுமே. இப்படி அரிசியும் அதனை சார்ந்த பொருள்களுமாக சாப்பிட்டு வாழ்ந்தவன் தமிழன்.
இன்று " நான் அரிசியை தொடுவதேயில்லை" என்று சொல்லிக்கொள்வது ஒரு fashion. அரிசியும் மற்ற சிறு தானியங்களும் சாப்பிட்டு வாழ்ந்தவரெல்லாம் ஆரோக்கியம் கெடாமல் வாழ்ந்தார்கள். பிட்சா burger என்று சாப்பிட்டுவிட்டு வியாதிகளில் உழன்று கொண்டிருப்பவன்தான் இன்றைய தமிழன் . பெரிய பன்னாட்டு கம்பெனிகள் இங்குள்ள இளைஞர்களுக்கு வேலையையும் கொடுத்து சம்பளத்தையும் கொடுத்து பின் அவற்றை பிடுங்கி செல்ல பிட்சா, burger கடைகளையும் அனுப்பி விட்டனரோ என்று தோன்றுகிறது. இன்னும் தெளிவாக சொன்னால் 2025ல் இந்தியாவில் மட்டும்தான் 5௦ சதவிகிதத்திற்கு மேல் இளைஞர்கள் இருப்பார்கள் என்று கணித்திருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரையும் நோயாளிகளாக ஆக்கிவிட செய்யப்பட்ட சதியோ என்று கூட தோன்றுகிறது. நோயாளி நாடு வல்லரசு ஆவது எப்படி?.
புத்தியோடு பிழைக்க வேண்டும் என்ற வேண்டுதல்களுடன் சுதந்திர தின வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment