Monday, 28 April 2014

தூதுவளை அடை

தூதுவளை அடை
தூதுவளை 



தேவையான பொருள்கள் 

தூதுவளை இலை - 1 பிடி  (ஆய்ந்து சுத்தம் செய்தது)

புழுங்கல் அரிசி - 1 கப் 
பச்சை அரிசி - 1 பிடி 

துவரம் பருப்பு -1/2 கப்  
உளுத்தம் பருப்பு -1/4 கப் 
கடலை பருப்பு  -1/4 கப் 
பாசி பருப்பு -2 ஸ்பூன் 

நெய்  - அடை வார்க்க 

பெருங்காயம் - சிறிது 

வர மிளகாய் -10 to 12

உப்பு - தேவைக்கு 



தூதுவளை இலை 
தூதுவளை அடை......

செய்வது எப்படி?


அரிசி, பருப்பு வகைகளை ஒன்றாகப் போட்டு, மூழ்கும் அளவு தண்ணீரில் மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். அதேபோல் வற்றல் மிளகாய், கட்டிப் பெருங்காயம் இவற்றை தனித் தனியாக மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.

தூதுவளை இலைகளை கழுவி, சுத்தம் செய்து பொடிப் பொடியாக நறுக்கி வைக்கவும்.


தூதுவளை இலைகளை ஆய்ந்து எடுப்பது அவ்வளவு எளிதான வேலையில்லை. தூதுவளை காம்பு, இலைகள் முழுதும் முள் இருக்கும். இலைகளின் இரண்டு பக்கமும் முள் இருக்கும்.

கத்தரிக்கோல் வைத்து இலைகளை வெட்டி எடுக்கலாம். பிறகு இலையின் இரண்டு பக்கமும் உள்ள முட்களை ஜாக்கிரதையாக வெட்ட வேண்டும். 

அடை மாவுக்கு, வற்றல் மிளகாய்களை உப்பு பெருங்காயத்துடன் நைசாக அரைக்க வேண்டும். அரிசி, பருப்பு வகைகளை கொரகொரப்பாக அரைக்க வேண்டும். அப்படியில்லாமல் நைசாக அரைத்தால் அது பருப்பு தோசையாகி விடும்.

தூதுவளை அடை மாவு 
கைப்பிடி அளவு ஊறிய அரிசி, பருப்பு கலவையை எடுத்து, உப்பு வற்றல் மிளகாயோடு சேர்த்து அரைத்தால் மிளகாய் நன்கு மசிந்து விடும்.

பிறகு மீதம் உள்ள அரிசி, பருப்பு கலவை, தூதுவளை இலைகளை சேர்த்து  கொர கொரப்பாக அரைக்கலாம்.



இப்போது தூதுவளை அடை மாவு தயார்.




அடை கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும் சிறிது நெய் விட்டு, ஒரு கரண்டிஅடை மாவை தடியாக ஊற்றி வேக வைக்கவும்.


நன்கு வெந்ததும், திருப்பிப் போட்டு மறுபடியும் நன்கு வேக வைக்கவும்.

தூதுவளை அடை தயார்.

தூதுவளை நெஞ்சு சளிக்கு நல்லது. வழக்கமான அடையிலிருந்து ஒரு மாறுபட்ட சுவையை தரும். மூலிகை என்றால் கசப்பாக இருக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். நிறைய பருப்பு, மிளகாய் சேர்த்த அடை போன்ற டிபன் வகைகளில் மூலிகைகளை சேர்த்தால் கசப்பு தெரியாது.

தோசை மாவில் மூலிகைகளை சேர்க்கும்போது மிளகு, சீரகம் சேர்த்தால் கசப்பு தெரியாது.

முருங்கை கீரை அடையில் போடுவதுபோல் இலைகளை அப்படியே போடாமல் அரைத்து சேர்ப்பதும் கசப்பு சுவையை மாற்றுவதற்கே.

Sunday, 20 April 2014

நார்த்தங்கா சாதம்

நார்த்தங்கா சாதம் 
சிட்ரஸ் பழ வகைகளில் எலுமிச்சை நட்சத்திர அந்தஸ்தை பெற்று விட்டது. எலுமிச்சை ஜூஸ், எலுமிச்சை சாதம் இரண்டும் தெருமுக்கு கடையிலிருந்து, ஸ்டார் ஹோட்டல் வரைக்கும் ஒரு தனி இடத்தை பிடித்து வைத்துள்ளது. எலுமிச்சைக்கு அண்ணன்களான கிடாரங்கா, நார்த்தங்கா இரண்டும் இன்று இருக்கும் இடம் தெரியாமல் இருக்கின்றன. மாம்பலம் மார்க்கட்டில் சொல்லி வைத்து வாங்க வேண்டி உள்ளது.

நார்த்தங்காயை  பொறுத்த மட்டில் நார்த்தங்கா ஊறுகாய் மட்டும் ரொம்ப பாப்புலர். இது நாரத்தை என்றும் அழைக்கப் படுகிறது.

எலுமிச்சையை விட அளவில் பெரிதாகவும், சாத்துக்குடியை விட சற்றே சிறிதாகவும் காணப் படும். அதிக புளிப்பு சுவையும், மிக லேசான கசப்பு சுவையும் உள்ளது. பித்தத்திற்கு நல்லது.

நார்த்தங்காயில் ஜாதி நார்த்தங்கா (ஜாதி நாரத்தை), கொளஞ்சிக்காய் என்று இரண்டு வகைகள் உண்டு. ஜாதி நார்த்தங்காயில் சற்று துவர்ப்பு அதிகம். அந்த துவர்ப்பு சுவையை நிறைய பேர் விரும்புவார்கள். இரண்டு வகை நார்த்தங்காயிலுமே ஊறுகாய் போடலாம். சாதம் பிசைய கொளஞ்சிக்காய்தான் நன்றாக இருக்கும்.

நார்த்தங்காயில் சாதம் பிசையலாம் என்பது பலருக்கும் புதிய செய்தியாக இருக்கும். செய்து பாருங்கள். அதன் சுவையை ரசியுங்கள்



தேவையான பொருள்கள்

நார்த்தங்கா -4
பொல பொலவென வடித்த சாதம் - 2 கப் 
மஞ்சள் பொடி-சிறிது
வர மிளகாய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பெருங்காயம்-தாளிக்க 
பச்சை மிளகாய், கருவேப்பிலை -சிறிது

செய்வது எப்படி?

        முதலில் சாதத்தை பொல பொலவென வடித்துக் கொள்ளவும்.

நார்த்தங்கா 






ஒரு cupல் தேவையான உப்பை போட்டு அதில் நான்கு 
நார்த்தங்காய்களை, இரண்டிரண்டாக வெட்டி, ஜூஸ் பிழிந்து கொள்ளவும்.
பாத்திரத்தில் நேரடியாக citrus பழ ஜூஸ் பிழிந்தால் ஜூஸ் கசந்து விடும். உப்பை போட்டு அதில் பிழிந்தால் கசக்காது.

நார்த்தங்கா சாறு 
சாதத்தின் மேல் மஞ்சள் தூள் போட்டு, நார்த்தங்கா சாறு விடவும்.

கடுகு, மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பச்சை மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்து கொட்டி, நன்கு கலக்கவும். அரைமணி நேரம் அமிழ்த்தி மூடி வைத்துப்  பரிமாறவும்.
நார்த்தங்கா சாதம் ரெடி 

Saturday, 19 April 2014

தளர கூட்டு

தளர கூட்டு 

நாம் மறந்து போன உணவு வகைகளில் ஒன்று தளர கூட்டு.  மீண்டும் நினைவு படுத்தவே இந்த recipe.



தேவையான பொருள்கள் 



கத்தரிக்காய் --4

பிஞ்சு வெண்டைக்காய் --10
கொத்தவரங்காய் -- 10

வாழைத் தண்டு - 1/2 தண்டு
பச்சை மிளகாய் --2
வத்த மிளகாய்  (தாளிக்க) --  8 to10
உப்பு -- சிறிது
புளி -- ஒரு சிறிய எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் 
பெருங்காய பொடி
கடுகு - தாளிக்க 



எப்படி செய்வது?

புளியை கரைத்து எடுத்துக் கொள்ளவும். வாழைத் தண்டை நார் நீக்கி சிறிது நீள வாக்கில் நறுக்கவும். கத்தரிக்காயை பொடிப் பொடியாக நறுக்கவும். வெண்டைக் காய்களை நீள வாக்கில் நறுக்கவும். பச்சை மிளகாயை நீளமாக கீறி வைக்கவும். (சாப்பிடும்போது கடிபடாமல் தூக்கி போட வசதியாக இருக்கும்). கொத்தவரங்காயை இரண்டு, மூன்றாக கிள்ளிப் போடலாம். 

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, கரைத்து வைத்த புளி தண்ணீர் ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காய பொடி போட்டு கொதிக்க விடவும். 

கொதித்த பின், நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து வேக வைக்கவும். வெண்டைக்காய் வெந்து, குழைந்து, கொழ கொழ என ஆகி, கூட்டு கெட்டிப் படும். இந்த பதம் வந்ததும், அடுப்பை அணைத்து, பாத்திரத்தை கீழே இறக்கி, வாணலியை அடுப்பில் வைத்து, சூடானவுடன்....

நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, 8-10 வர மிளகாய்களை சிறு சிறு துண்டுகளாக  கிள்ளி, கடுகுடன் சேர்த்து .....தாளித்துக் கொட்டவும்.

கூட்டை நன்கு கலந்து விட்டு, 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

சாதத்தில் இந்த தளர கூட்டை போட்டு பிசைந்து, சுட்ட அப்பளத்துடன் சாப்பிட்டுப் பாருங்கள். " பேஷ்....பேஷ்...ரொம்ப நன்னாருக்கு" என்பீர்கள். 
பின் கதை சுருக்கம் by ஸ்ரீவித்யா ராமன் :

தளர கூட்டு...தோசையுடன் 
ன் பாட்டி  திருமதி. சத்யாபாமா அடிக்கடி செய்யும் receipe இது. அவரது கை மணத்தில் ஓஹோ வென்று இருக்கும். அவரது  அன்பு கலந்து  பரிமாறுவார்.  அதை உங்களுக்கும் பறிமாறுகிறேன் . அந்த காலத்தில்  வீட்டு மருமகள்கள் தீட்டானால் தனியாக இருந்து விடுவார்கள். மாமியார்தான் சமைக்க வேண்டும். பெரிய குடும்பங்களாக இருக்கும். நிறைய  குழம்பு,  பொரியல், கூட்டு என்று வகை வகையாக செய்து கொண்டிருக்க முடியாது. அதற்காக புளியும்  சேர்த்து,  காயும் சேர்த்து  all in one ஆக செய்து விடுவார்கள். புளி இருப்பதினால் அதுவே குழம்பு. காய் இருப்பதால் அதுவே கூட்டு.  காய்களை தவிர்த்து gravy ஐ போட்டு சாதத்தில் பிசைந்தால் ரசம் போலும் இருக்கும். அதுதான் தளர கூட்டு.
மோர் சாதத்திற்க்கு குழம்பு போல் தொட்டுக் கொள்ளலாம்.

தோசை, இட்லிக்கும், தளர கூட்டு நன்றாக இருக்கும். நொய் உப்புமாவிற்கு தளர கூட்டு மிகச் சிறந்த காம்பினேஷன்.

Friday, 18 April 2014

கொடி எலுமிச்சை ஊறுகாய்

கொடி எலுமிச்சை ஊறுகாய்....



கொடி எலுமிச்சை  பழம் - 4
நல்லெண்ணெய் -200 ml
வரட்டு மிளகாய் பொடி 3 spoon
மஞ்சள் பொடி -சிறிது
கடுகு - தாளிக்க 
உப்பு   - 2 spoonபெருங்காயம்-சிறிது









இந்த படங்களில் உள்ள மூன்று விதமான பழங்களுமே கொடி எலுமிச்சை பழங்கள்தான். இதை கொளுமிச்சை என்றும் சொல்வார்கள். ஊறுகாய் போட கொடி எலுமிச்சை சிறந்தது. ஊறுகாய் அளவு நிறைய காணும். பழத்தின் வாசனை, சுவை எல்லாம் எலுமிச்சை போலவேதான் இருக்கும். கொடி எலுமிச்சை ஊறுகாய், வழக்கமான எலுமிச்சை ஊறுகாயை விட சுவையாக இருக்கும். எலுமிச்சையை விட பல மடங்கு பெரிதாக, நீள் வட்டமாகவும், வட்ட வடிவிலும் கூட இது இருக்கும்.

நகரங்களில் கொடி எலுமிச்சை பற்றி நிறைய பேருக்கு தெரிவதில்லை. அதிகம் கிடைப்பதுமில்லை. என் மனைவியின்  உறவு வழியில் சில வயதான பாட்டிகளிடம் கேட்டபோது..." குண்டு குண்டாக இருக்குமே. நீளமா கூட இருக்கும். சாப்பிட நன்னா இருக்கும். சாப்பிட்டப்புறம் அடிநாக்கில் கசப்பு எட்டிப் பாக்கும்" என்றார்கள்.






கொ ளுமிச்சை காய்களை அலம்பி, நன்கு துடைத்துக் கொள்ளவும். பின் பொடிப் பொடியாக  நறுக்கவும். நறுக்கும் போது, பழத்தின் தோலில் கை படாமல் நறுக்க வேண்டும்.இல்லாவிட்டால் பழச் சாறு கசந்து விடும்.

 ஒரு வாணலியில் நல்லெண்ணெய் 100 ml விட்டு சூடானதும் கடுகு, பெருங்காயம் தாளிக்கவும். பின் கொளுமிச்சை  பழங்களை  போட்டு நன்கு கிளறவும். உப்பு போட்டு கிளறி மூடி வைக்கவும். அவ்வப்பொழுது திறந்து கிளறி விட வேண்டும். பின்னர் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி  சேர்த்து நன்கு கிளறவும். மீதி உள்ள எண்ணெயும்  விட்டு சிறிது நேரம் கிளறினால், ஊறுகாய் சுண்டி,  எண்ணெய் பிரிந்து வரும்.  அடுப்பை அணைத்து, சிறிது இடைவெளி  விட்டு, மூடி வைக்கவும். அப்போதுதான் சூடு வெளியேறும். ஆறிய பிறகு, fridgeல் வைத்து பயன்படுத்தினால் 15 நாட்கள் வரை உபயோகப்படுத்தலாம். 

விரும்பினால் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து, நன்கு பொடி செய்து, அடுப்பை அணைக்கும் முன் தூவி விட்டு, கிளறி விடவும்.
கொடி எலுமிச்சை ஊறுகாய் ரெடி 

Wednesday, 16 April 2014

வீட்டுத் தோட்டம் ....ஒரு நாள் பயிற்சி முகாம்

குரோம்பேட்டை வீட்டுத் தோட்ட பயிற்சி முகாம் 



கடந்த ஞாயிறு அன்று (13-04-2014) குரோம்பேட்டையில் நடந்த வீட்டுத் தோட்டம் குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் சென்றிருந்தேன். பயோ ஆர்கானிக் (Bio-Organic) இயற்கை உணவு பொருள்கள் விற்பனை கடை சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த பயிற்சி வகுப்பு. ஆர்கானிக் உணவு பொருள்கள், மண் பாண்டங்கள் (மண்ணில் செய்யப் பட்ட கப் & சாசர், oil pot ஆகியவை கவனத்தை ஈர்த்தன), நாட்டு விதைகள், ஆர்கானிக் கீரை ஆகியவை விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்தன. Plant Grow Bag, Protray, cocopeat ஆகியவையும் கிடைத்தன. சென்னையில் கிடைப்பதை விட விலை குறைவாகவே இருந்தது.


திரு. ஷியாம் சுந்தர் (இடது)
இதெல்லாம் விட முக்கியமான விஷயம் வீட்டுத் தோட்டம் பற்றிய பயிற்சி வகுப்பு. நமக்கு தெரியாமல் புதிதாக என்ன சொல்லி விடப் போகிறார்கள் என்ற நினைப்பில், சற்றே அசுவாரசியத்துடன் தான் சென்றேன். சற்று நேரம் வேடிக்கை பார்த்து விட்டு வந்து விடும் நோக்கம் எனக்கு. ஆனால் அப்படி திரும்பி வர மனமில்லாமல் வகுப்போடு ஒன்றி விட்டேன்.

காஞ்சிபுரம் மாவட்டம், பாலூரில் இயங்கி வரும் சோலார் அறப் பேரவையிலிருந்து வந்திருந்தார் திரு. ஷியாம் சுந்தர். அவர் வீட்டுத் தோட்ட பயிற்சி வகுப்பை நடத்தினார்.

அதிக செலவில்லாமல் வீட்டுத் தோட்டம் அமைப்பது, வீட்டுத் தோட்டத்திற்கு தேவையான உரம், இயற்கை பூச்சிக் கொல்லி, விதை ஆகியவற்றை நாமே உற்பத்தி செய்வது, குறுகிய காலத்தில் பயன் தரும் செடிகளை வளர்ப்பது ஆகியவை  பயிற்சியின் அடிப்படையாக அமைந்திருந்தது.

வீட்டுத் தோட்ட செடிகளுக்கு சீசன் கிடையாது. வருடம் முழுதும் எல்லா செடிகளும் பயிரிடலாம் என்றார். மலைப் பிகுதிகளில் மட்டுமே விளையும் என்று கருதப் பட்ட கேரட், சௌ சௌ, முட்டைகோஸ் போன்ற பயிர்களை கூட சென்னையிலும் வளர்க்கலாம் என்ற தகவலையும் தந்தார்.
பயோ ஆர்கானிக் திரு. வினோத் (இடமிருந்து இரண்டாவது)

அவர் கனடாவில் கண்ட community kitchen garden பற்றி குறிப்பிட்டு, "நமக்கு தேவையான உணவை முடிந்த வரையில் நாமே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும். விலைவாசி உயர்விலிருந்தும் நம்மை இது காக்கும்" என்று கூறினார்.

வருடம் முழுதும் பயன் தரக் கூடிய கீரைகள், கத்தரி, தக்காளி, வெண்டை போன்ற காய்கறி பயிர்கள்....இரண்டு வருடம் வரை பயன்தரக் கூடிய பப்பாளி, செடி முருங்கை போன்ற சிறு மரங்கள், இரண்டு வருடம் கடந்தும் பயன்தரக் கூடிய முருங்கை, கருவேப்பிலை ....என்று வகைப் படுத்தியது பயனுள்ளதாக இருந்தது.


protray
தக்காளி, மிளகாய், கத்தரி போன்றவை கட்டாயமாக நாற்றங்கால் முறையில் வளர்த்து, பின் அதற்கான இடத்தில் பயிரிடப் பட வேண்டும். முள்ளங்கி போன்ற பயிர்களை பிடுங்கி நட்டால் வளராது. வெண்டை, முள்ளங்கி, சௌ சௌ, கிழங்கு வகைகள், கேரட், பீட்ரூட் இவை எல்லாம் நேரடியாக விதைக்க வேண்டிய செடிகள். நாற்றங்கால் போட protray பயன்படும். பல ஏக்கரில் பயிர் செய்யும் விவசாயி கூட protray பயன்படுத்தினால் செலவு குறையும். பரந்த வயல்வெளிகளில் காய்கறிகள் பயிரிடுவதை விட வீட்டுத் தோட்டத்தில் Growbagல் பயிர் செய்வது லாபகரமானது. இதில் உர செலவு, தண்ணீர் செலவு குறைவு.


வீட்டில் தோட்டம் அமைக்கும்போது hybrid விதைகளை தவிர்த்து நாட்டு விதைகளை பயிரிட வேண்டும். ரசாயன உரத்தை தவிர்க்க வேண்டும். வீட்டிலேயே compost pit அமைத்தால், நம் வீட்டிலிருந்து வெளியேறும் திடக் கழிவு குறையும்.

நம் வீட்டுத் தோட்டத்தில் சோத்துக் கத்தாழை, தூதுவளை, பொடுதலை, முடக்கத்தான், கரிசாலை, தவசிக் கீரை போன்ற மருத்துவ பயனுள்ள பயிர்களை பயிரிட வேண்டும். பல வண்ண பூக்களுடன் இவை பார்க்க அழகாகவும் காட்சி தரும். கரிசாலையில் மஞ்சள் கரிசாலை, வெள்ளை கரிசாலை (பூக்களின் நிறம்) என்று இரண்டு வகை உண்டு. வெள்ளை கரிசாலை (கரிசலாங்கண்ணி) அதிக மருத்துவ பயன் உள்ளது.

சென்னை போன்ற நகரங்களின் வெய்யில் செடிகளின் வளர்ச்சிக்கு நல்லது. கேரட், சௌ சௌ போன்ற செடிகளை மட்டும் நிழலான இடத்தில் அமைக்கலாம் என்ற தகவலையும் தந்தார் திரு. ஷியாம் சுந்தர்.

ஒரு சிறிய வீட்டின் மாடியில் 30 செடிகள் வரையில் வளர்க்க முடியும்.


Growbagல் முழுக்க முழுக்க கோகோபிட் மட்டும் போட்டு, சிறிது இயற்கை உரம் சேர்த்து பயிரிடலாம். அல்லது செம்மண் 2 பங்கு, மணல் 1 பங்கு, மக்கு உரம் 1 பங்கு கலந்து பயிர் செய்யலாம். மாடியில் அமைக்கும்தொட்டத்திற்கு cocopeat தான் நல்லது. இதில் அதிக எடை இருக்காது. அதேபோல் growbagலிருந்து வெளியேறும் நீர் தளத்தை பாதிக்காமல் இருக்க geotextile material பயன்படுத்தலாம். 


எட்டாம் வகுப்பு மாணவன் துவங்கி, 70 வயதை தொடும் மூத்த குடிமக்கள் வரை நூற்றுக்கும் அதிகமானோர் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்.

மதியம் திணை பாயசம், சாமை சாம்பார் சாதம், குதிரைவாலி தயிர் சாதம் ஆகியவை கிடைத்தன. சுவை நன்றாகவே இருந்தது.

மதியத்திற்குமேல் பயிர்களில் பூச்சித் தாக்குதலை இயற்கை முறையில் எதிர்கொள்வது குறித்து திரு. ஷியாம் சுந்தர் விளக்கமளித்தார். தொடர்ந்து மருத்துவர் காசி பிச்சை அவர்கள் இயற்கை வழியில் உடல் நலம் காப்பது குறித்து பேசினார்.

மொத்தத்தில் வீட்டுத் தோட்டம் அமைத்திருப்பவர்கள், அமைக்க இருப்பவர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டிய பயிற்சி வகுப்பு இது. மறந்தவர்கள் அடுத்த பயிற்சி வகுப்பை எதிர்பாருங்கள். தொடர்புக்கு : 7812099366



Monday, 14 April 2014

நஞ்சு கொண்டான் கீரை கூட்டு

நஞ்சு கொண்டான் கீரை கூட்டு 
            

 நஞ்சு கொண்டான் கீரை, நச்சு கொட்டை கீரை, லச்ச கெட்ட கீரை , நஞ்சுண்டான் கீரை என பல பெயர்களில் அழைக்கப் படும் இந்த கீரை மூட்டு வலியை தீர்க்கும் ஆற்றல் கொண்டது. சிறு மரமாக வளரும். இலைகள் பெரிதாக இருக்கும். நகரங்களில் இதை அலங்கார மரமாக வளர்க்கிறார்கள். வீட்டின் முன்னால் சில நச்சு கொட்டை மரங்களை வைத்து வளர்த்தால், நிறைய வெளிர் பச்சை நிற இலைகளுடன் வீட்டிற்கு தனி அழகை தரும். இந்த மரத்தை வீட்டில் வைத்திருக்கும் பலருக்கும் இதன் மருத்துவ குணம் தெரிவதில்லை. இதன் கீரை சமையலில் சேர்த்துக் கொள்ள தகுந்தது என்பதே பலருக்கும் தெரிவதில்லை. என் நண்பர் திரு. சுந்தரம் நச்சு கொட்டை இலைகளில் மதிய உணவை pack செய்து கொண்டுவருவார். முதன் முதலில் அவர் சொல்லித் தான் எனக்கு இந்த கீரையின் மகத்துவம் தெரிந்தது.


'நஞ்சு கொன்றான் கீரை' என்பது 'நஞ்சு கொண்டான்' என மருவியிருக்கலாம். கிராமங்களில் 'லச்ச கெட்ட கீரை' என்கிறார்கள். இந்த பெயரும், 'நச்சு கொட்டை' என்ற பெயரும் எப்படி வந்தது என தெரியவில்லை. பெயர் என்னவாக இருந்தாலும் இது பயனுள்ள கீரை என்பதில் மாற்று கருத்தில்லை.


இந்த கீரையில் பாசி பருப்பு சேர்த்து கூட்டு செய்யலாம். கீரை மசியல் (கடைசல்)  செய்யலாம். நச்சு கொட்டை கீரையில் உப்பு, புளி, மிளகாய் , துவரம் பருப்பு சேர்த்து துவையல்  செய்யலாம். சுருக்கமாக சொன்னால் நாம் மற்ற கீரைகளை பயன்படுத்தி என்ன சமையல் செய்வோமோ அத்தனையும் நச்சு கொட்டை கீரையில் செய்யலாம். 

பொதுவாக கிராமத்தில் வசிப்பவர்களை கேட்டால் இந்த கீரை பற்றி நிறைய சொல்கிறார்கள்.

இது மரமாக வளர்ந்தாலும், பலம் இல்லாதது. எளிதில் உடைபடக் கூடியது. கனம் இல்லாதது. நிறைய இடம் தேவைப் படாது. எனவே வீட்டிற்கு ஒரு நச்சு கொட்டை மரம் எளிதில் வளர்க்கலாம். இதன் கிளையை உடைத்து நட்டாலே வளர்ந்து விடும்.

தவசிக் கீரை, நஞ்சு கொண்டான் கீரை போன்று பல கீரைகள் இன்றைய சமையலில் இடம் பெறுவதில்லை. இத்தகைய கீரைகளை ஒருமுறை பயன்படுத்திப் பார்த்தால் அதன் சுவையும், மருத்துவ குணமும் உங்களை மீண்டும் மீண்டும் அவற்றை பயன் படுத்த தூண்டும். 



கைப்பிடி அளவு பாசி பருப்பை ஊற வைக்கவும்.






நஞ்சு கொண்டான் கீரைகளை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து, தண்ணீரில் நன்கு அலசி சுத்தம் செய்யவும்.










வெற்றிலையில் நரம்பை கிள்ளி எறிவது  போல், இந்த கீரையிலும் நடுவில் உள்ள நரம்பை எடுத்து விட வேண்டும். கத்தியால் கீறி விட்டு நரம்பை எடுத்து விடலாம்.










நரம்பு நீக்கிய கீரையை, பொடிப் பொடியாக நறுக்கவும்.











பாசி பருப்பு, நறுக்கிய நச்சு கொண்டான் கீரை இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.











கீரை நன்கு மசிந்ததும்...........












மஞ்சள் தூள், சாம்பார் பொடி, உப்பு போட்டு................












சாம்பார் பொடி வாசனை மாறும்வரை கொதிக்க விடவும்.










சாம்பார் பொடியின் பச்சை வாசனை மாறியதும், அடுப்பில் இருந்து இறக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து கொட்டவும். 

நஞ்சு கொண்டான் கீரை கூட்டு ரெடி.

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...