குரோம்பேட்டை வீட்டுத் தோட்ட பயிற்சி முகாம் |
கடந்த ஞாயிறு அன்று (13-04-2014) குரோம்பேட்டையில் நடந்த வீட்டுத் தோட்டம் குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் சென்றிருந்தேன். பயோ ஆர்கானிக் (Bio-Organic) இயற்கை உணவு பொருள்கள் விற்பனை கடை சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த பயிற்சி வகுப்பு. ஆர்கானிக் உணவு பொருள்கள், மண் பாண்டங்கள் (மண்ணில் செய்யப் பட்ட கப் & சாசர், oil pot ஆகியவை கவனத்தை ஈர்த்தன), நாட்டு விதைகள், ஆர்கானிக் கீரை ஆகியவை விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்தன. Plant Grow Bag, Protray, cocopeat ஆகியவையும் கிடைத்தன. சென்னையில் கிடைப்பதை விட விலை குறைவாகவே இருந்தது.
திரு. ஷியாம் சுந்தர் (இடது) |
காஞ்சிபுரம் மாவட்டம், பாலூரில் இயங்கி வரும் சோலார் அறப் பேரவையிலிருந்து வந்திருந்தார் திரு. ஷியாம் சுந்தர். அவர் வீட்டுத் தோட்ட பயிற்சி வகுப்பை நடத்தினார்.
அதிக செலவில்லாமல் வீட்டுத் தோட்டம் அமைப்பது, வீட்டுத் தோட்டத்திற்கு தேவையான உரம், இயற்கை பூச்சிக் கொல்லி, விதை ஆகியவற்றை நாமே உற்பத்தி செய்வது, குறுகிய காலத்தில் பயன் தரும் செடிகளை வளர்ப்பது ஆகியவை பயிற்சியின் அடிப்படையாக அமைந்திருந்தது.
வீட்டுத் தோட்ட செடிகளுக்கு சீசன் கிடையாது. வருடம் முழுதும் எல்லா செடிகளும் பயிரிடலாம் என்றார். மலைப் பிகுதிகளில் மட்டுமே விளையும் என்று கருதப் பட்ட கேரட், சௌ சௌ, முட்டைகோஸ் போன்ற பயிர்களை கூட சென்னையிலும் வளர்க்கலாம் என்ற தகவலையும் தந்தார்.
பயோ ஆர்கானிக் திரு. வினோத் (இடமிருந்து இரண்டாவது) |
அவர் கனடாவில் கண்ட community kitchen garden பற்றி குறிப்பிட்டு, "நமக்கு தேவையான உணவை முடிந்த வரையில் நாமே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும். விலைவாசி உயர்விலிருந்தும் நம்மை இது காக்கும்" என்று கூறினார்.
வருடம் முழுதும் பயன் தரக் கூடிய கீரைகள், கத்தரி, தக்காளி, வெண்டை போன்ற காய்கறி பயிர்கள்....இரண்டு வருடம் வரை பயன்தரக் கூடிய பப்பாளி, செடி முருங்கை போன்ற சிறு மரங்கள், இரண்டு வருடம் கடந்தும் பயன்தரக் கூடிய முருங்கை, கருவேப்பிலை ....என்று வகைப் படுத்தியது பயனுள்ளதாக இருந்தது.
protray |
வீட்டில் தோட்டம் அமைக்கும்போது hybrid விதைகளை தவிர்த்து நாட்டு விதைகளை பயிரிட வேண்டும். ரசாயன உரத்தை தவிர்க்க வேண்டும். வீட்டிலேயே compost pit அமைத்தால், நம் வீட்டிலிருந்து வெளியேறும் திடக் கழிவு குறையும்.
நம் வீட்டுத் தோட்டத்தில் சோத்துக் கத்தாழை, தூதுவளை, பொடுதலை, முடக்கத்தான், கரிசாலை, தவசிக் கீரை போன்ற மருத்துவ பயனுள்ள பயிர்களை பயிரிட வேண்டும். பல வண்ண பூக்களுடன் இவை பார்க்க அழகாகவும் காட்சி தரும். கரிசாலையில் மஞ்சள் கரிசாலை, வெள்ளை கரிசாலை (பூக்களின் நிறம்) என்று இரண்டு வகை உண்டு. வெள்ளை கரிசாலை (கரிசலாங்கண்ணி) அதிக மருத்துவ பயன் உள்ளது.
சென்னை போன்ற நகரங்களின் வெய்யில் செடிகளின் வளர்ச்சிக்கு நல்லது. கேரட், சௌ சௌ போன்ற செடிகளை மட்டும் நிழலான இடத்தில் அமைக்கலாம் என்ற தகவலையும் தந்தார் திரு. ஷியாம் சுந்தர்.
ஒரு சிறிய வீட்டின் மாடியில் 30 செடிகள் வரையில் வளர்க்க முடியும்.
Growbagல் முழுக்க முழுக்க கோகோபிட் மட்டும் போட்டு, சிறிது இயற்கை உரம் சேர்த்து பயிரிடலாம். அல்லது செம்மண் 2 பங்கு, மணல் 1 பங்கு, மக்கு உரம் 1 பங்கு கலந்து பயிர் செய்யலாம். மாடியில் அமைக்கும்தொட்டத்திற்கு cocopeat தான் நல்லது. இதில் அதிக எடை இருக்காது. அதேபோல் growbagலிருந்து வெளியேறும் நீர் தளத்தை பாதிக்காமல் இருக்க geotextile material பயன்படுத்தலாம்.
எட்டாம் வகுப்பு மாணவன் துவங்கி, 70 வயதை தொடும் மூத்த குடிமக்கள் வரை நூற்றுக்கும் அதிகமானோர் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்.
மதியம் திணை பாயசம், சாமை சாம்பார் சாதம், குதிரைவாலி தயிர் சாதம் ஆகியவை கிடைத்தன. சுவை நன்றாகவே இருந்தது.
மதியத்திற்குமேல் பயிர்களில் பூச்சித் தாக்குதலை இயற்கை முறையில் எதிர்கொள்வது குறித்து திரு. ஷியாம் சுந்தர் விளக்கமளித்தார். தொடர்ந்து மருத்துவர் காசி பிச்சை அவர்கள் இயற்கை வழியில் உடல் நலம் காப்பது குறித்து பேசினார்.
மொத்தத்தில் வீட்டுத் தோட்டம் அமைத்திருப்பவர்கள், அமைக்க இருப்பவர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டிய பயிற்சி வகுப்பு இது. மறந்தவர்கள் அடுத்த பயிற்சி வகுப்பை எதிர்பாருங்கள். தொடர்புக்கு : 7812099366
No comments:
Post a Comment