பத்திரிகை மற்றும் செய்திதாள்களில் நாம் படிக்கும் சில விஷயங்கள் மட்டும், மிக தீவிரமான பாதிப்பை நம்முள் ஏற்படுத்தி விடுகின்றன. சில வாரங்களுக்கு முன், ஒரு பிரபல தமிழ் வார இதழில் நான் படித்த சிறுகதை அந்த ரகம். ஒரு பெண்ணின் கணவன் இறந்து விடுகிறான். இறுதி சடங்குகள் முடிந்த அன்று இரவு அந்த பெண்ணால் தூங்கவே முடியவில்லை. கணவன் தன் மீது கொண்டிருந்த அன்பு, தன்னை வெளி வேலை எதையும் செய்ய விடாமல் அனைத்தையும் கணவனே பார்த்துக் கொண்டது என கடந்த காலத்தில் மூழ்குகிறாள். கணவன் இல்லாமல் இனி தன்னால் எப்படி குடும்பத்தை நடத்திச் செல்ல இயலும்? என்று மருகுகிறாள்.
தூங்காத அந்த நடு நிசியில் அவள் மகன் அருகே வருகிறான். "அப்பாவுக்காக ஏன் துயரப் படுகிறாய்?" என்கிறான். "அப்பா நமக்காக எதையும் பெரிதாக செய்து விடவில்லை. எல்லா வேலையும் தானே செய்கிறேன் என்ற பெயரில் அவர் உன்னை சுயமாக செயல் படவோ, சிந்திக்கவோ அனுமதிக்கவில்லை. இத்தனை நாள் அவருக்காக வாழ்ந்த நீ, இனி உனக்காக வாழ வேண்டும். அப்பாவின் இறப்பு உனக்கு தந்திருப்பது கிடைத்தற்கரிய சுதந்திரம்" என்றும் சொல்கிறான். தாயும் அவன் சொல்வது சரிதான் என உணர்கிறாள்.
இந்த கதையை படித்த போது, கதாசிரியரின் அணுகுமுறையை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ஒருவன் இறந்த அன்று இரவே இப்படி விவாதிப்பார்களா என நினைத்தேன்.
02-06-2013 தினகரன் வசந்தம் இணைப்பில், மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி, (கணவர் மறைவிற்கு பிறகுதான்) "......என்னோட நேரங்கள் எனக்கானதா செலவாகுது" என்று சொல்லியிருக்கிறார். தன் கணவர் குறித்து இன்னும் பல விஷயங்களை சொல்லியிருக்கும் அவர், ".....அந்த கால கட்டம் அப்படி. அதுவே இன்றைய சூழ்நிலையா இருந்திருந்தா ........குழந்தைகளோட தனியா வந்திருப்பேன்......" என்கிறார்.
ஒரு தினசரியின் இணைப்பில் வந்ததாலோ என்னவோ மிகவும் பர பரப்பாகவில்லை இந்த மேட்டர்.
மாறி விட்ட இந்த உலகம், பழைய விஷயங்களை கூட புதிய கோணத்தில் பார்க்க வைக்கிறதா? இல்லை மனைவிக்கு நிஜமான சுதந்திரம் தராத ஆண்களின் செயல் தான், இறந்த மனிதர் மீது கூட குற்றம் சொல்ல வைக்கிறதா? கணவர்கள் தங்களை மாற்றிக் கொண்டால் நல்லது. Otherwise, wives won't let their husbands rest (in graves) in peace.
1 comment:
உயர்த்திரு ராமன் அவர்களுக்கு , நல்ல கதை சுந்தர்
Post a Comment