Sunday, 6 April 2014

முசுமுசுக்கை தோசை

முசுமுசுக்கை தோசை 



முசுமுசுக்கை கொடி

முசுமுசுக்கை கொடி வகையை சார்ந்தது. கிராம பகுதிகளில் பொது இடங்களில் தானாக முளைத்து வளரும் கொடி முசுமுசுக்கை. கொம்புபுடலை, பேய்புடலை என்றும் அழைக்கப்படுகிறது. முசுமுசுக்கை கொடியின் தண்டு பகுதியை வெட்டி நட்டாலே வளர்ந்துவிடும். புரோட்டின், நார்சத்து, இரும்பு சத்து, கால்சியம் மற்றும் விட்டமின் 'C' கொண்டது முசுமுசுக்கை. இதை சமையலில் சேர்த்து கொண்டால் சளி, கோழை, தும்மல், குறட்டை ஆகிய பிரச்சினைகள் சரியாகும். குறிப்பாக மூச்சுக் குழாயில் ஏற்படும் நோய் தொற்றுக்கு சிறந்த மருந்தாக (anti-biotic) முசுமுசுக்கை பயன்படுகிறது.



இலையும், தண்டுகளும் சொர சொரப்பாக இருக்கும். தண்டுகளில் மயிரிழை போன்று காணப்படும்.
முசுமுசுக்கை தோசை, துவையல் ஆகியவை செய்யலாம். மற்றபடி சாதாரணமாக கீரைகளில் என்ன என்ன சமையல் வகைகள் செய்வோமோ  (கீரை மசியல், துவட்டல்....) அவற்றை முசுமுசுக்கையிலும் செய்யலாம். முசுமுசுக்கை ரசம் செய்யலாம். முசுமுசுக்கை தைலம் காய்ச்சியும் தலை குளிக்க பயன்படுத்தலாம். முசுமுசுக்கை இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டும் குடிக்கலாம்.

முசுமுசுக்கை இலை 
அடை மாவில் முசுமுசுக்கை இலை சேர்த்து அரைத்து முசுமுசுக்கை அடை செய்யலாம். முசுமுசுக்கை இலையில் தண்ணீர் விட்டு அரைத்து, அதில் அரிசி மாவு, மிளகு, ஜீரகம், உப்பு   சேர்த்து, கெட்டியாக பிசைந்து முசுமுசுக்கை ரொட்டி செய்து சாப்பிடலாம். கேழ்வரகு மாவில் சீரகம், பச்சை மிளகாய், உப்பு, முசுமுசுக்கை இலை சேர்த்து  கேழ்வரகு முசுமுசுக்கை அடை செய்யலாம். நாம் வழக்கமாக செய்யும் கேழ்வரகு அடை யில் முருங்கை இலைக்கு பதில் முசுமுசுக்கை இலை சேர்த்து  செய்ய வேண்டும். அவ்வளவுதான்.

முசுமுசுக்கை காய், பழம் மூலம் இலைகளை அடையாளம் காண இந்த படம் உதவும் 
இப்போது முசுமுசுக்கை தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.



 தேவையான                       பொருள்கள் 
புழுங்கல் அரிசி  - 1 டம்ளர்
உளுந்து                   -1 பிடி
முசுமுசுக்கை இலை  - 1 கைப்பிடி
மிளகு - 1/2 ஸ்பூன் 
ஜீரகம் -1/2 ஸ்பூன்
நெய் - தோசை வார்க்க 
கல் உப்பு - 1 ஸ்பூன்


இட்லி அரிசி (புழுங்கல் அரிசி), உளுந்து இரண்டையும் 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் உப்பு போடாமல்  நன்கு நைசாக அரைக்கவும். இப்போது வழக்கமான தோசை மாவு (மைனஸ் உப்பு) தயார். வழக்கமான தோசைக்கு தேவைப்படுவதை விட, சற்று குறைவாக உளுந்து போட்டால் போதும்.

முசுமுசுக்கை இலைகளை மட்டும் ஆய்ந்து நன்கு கழுவவும். 

மிக்சியில் கல் உப்பு, மிளகு, ஜீரகம் போட்டு, கொரகொரப்பாக அரைக்கவும். பின் சுத்தம் செய்த முசுமுசுக்கை இலைகளை போட்டு, சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும். 

தோசை மாவுடன், அரைத்த முசுமுசுக்கை சேர்த்து நன்கு கலக்கவும்.

முசுமுசுக்கை தோசை மாவு தயார்.
தோசை மாவு

இந்த மாவை புளிக்க வைக்க வேண்டியதில்லை. 

முசுமுசுக்கை இலைகளை ஆய்ந்து சுத்தம் செய்யவும் 


மிளகு, சீரகம், கல் உப்பு....பொடி செய்து, முசுமுசுக்கை இலைகளையும் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும்


அரைத்த முசுமுசுக்கை+மிளகு, சீரகம்  தோசை  மாவுடன் கலந்தால், முசுமுசுக்கை தோசை மாவு தயார்
தோசை கல்லில் நெய் ஊற்றி, முசுமுசுக்கை தோசை மாவை ஊற்றவும் 
முசுமுசுக்கை மாவை கரண்டியால் தேய்த்து,, சுற்றிலும் சிறிது நெய் விட்டு, நன்கு வேக வைக்கவும் 
நன்கு வெந்ததும், திருப்பி போட்டு வேக வைக்கவும் 

முசுமுசுக்கை தோசை ரெடி 
புளித்த தோசை மாவில் கூட முசுமுசுக்கை இலை சேர்த்து தோசை வார்க்கலாம். அதில் இவ்வளவு பச்சை நிறம் வராது. தோசை லேசான பொன்னிறத்தில்  இருக்கும்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பயனுள்ள குறிப்பு...

நன்றி...

vijayasamundeeswari said...

மிக அருமையான குளிர்் காலத்்துககு ஏற்ற் குறிப்்பு... நன்்றி!

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...