திருச்சி ஐயப்பன் கோயில் photo courtesy: http://kcmcrselvarathinam.hpage.co.in/ |
கடந்த வாரம் திருச்சி சென்ற போது, என் நண்பர்கள் திரு. கணேசன், திரு. மீனாட்சி சுந்தரம் ஆகியோருடன் ஐயப்பன் கோயில் சென்றிருந்தேன். திருச்சி நீதிமன்றத்தில் (Trichy Court Bus Stop) இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் இருக்கிறது ஐயப்பன் கோயில். கோயில் இருக்கும் இடம் கோர்ட்டிற்கு மிக சமீபம். திருச்சி மத்திய பேருந்து நிலையம், ரயில்வே சந்திப்பு ஆகிய இடங்களில் இருந்தும் 2 கிலோமீட்டர தூரம்தான் இருக்கும். Trichy Cantonment பகுதிக்கு மிக அருகில் இருக்கிறது. இவ்வளவு பரபரப்பான இடத்தில் இருந்தாலும், உள்ளே விஸ்தாரமாக தோப்பும் துரவுமாக, காற்றோட்டமாக இருக்கிறது.
பொதுவாக கோயில்களை நான் இருவகை படுத்துவேன். பழைய கால கோயில்கள். காலாற நடக்க இடம், காற்றோட்டம் என்று தெய்வீக சாங்கித்யத்துடன் இருக்கும். உள்ளே நுழைந்தாலே ஆரோக்கியமாக உணர்வோம். பக்தி உணர்வும் தானாக வந்து விடும்.
இரண்டாவது வகை....புதிதாக கட்டப்பட்ட கோயில்கள். இவற்றை நான் apartment கோயில்கள் என்பேன். அடுக்கக குடியிருப்பு வாழ்வின் மூச்சு முட்டல்கள் கோயிலிலும் இருக்கும்.
திருச்சி ஐயப்பன் கோயில் சமீப கால கோயிலாக இருந்தாலும் (20 அல்லது 25 வருடங்களுக்குள் கட்டப்பட்டது), பழைய கால கோயில்கள் போல் இருந்தது. உள்ளே நுழைந்து விட்டால் இரண்டு மணி நேரமாவது மன அமைதியுடன் கழிக்கலாம்.
கோயிலின் சட்ட திட்டங்கள் மிகவும் கட்டுப்பாடானவை. கோயிலின் உள்ளே இருக்கும்போது உங்கள் செல்போன் ஒலித்தால், செல்போனை உங்களிடம் இருந்து வாங்கி வைத்து, 24 மணி நேரம் கழித்துதான் தருவார்கள்.
கோயிலின் உள்ளே ஆங்காங்கே எழுதி இருக்கும் பொன்மொழிகள், தத்துவங்கள், ஆன்மீக விஷயங்கள் ஆகியவை படிக்க தகுந்தவை. அவற்றை முழுமையாக படிக்க நேரம் ஒதுக்கி கொண்டு செல்வது நல்லது.
அனைத்து நட்சத்திரங்களுக்கான மரங்கள் குறித்த விவரங்களும் எழுதி வைத்திருக்கிறார்கள். அனைத்து நட்சத்திரங்களுக்கும் உகந்த மரக் கன்றுகளையும் நட்டு வைத்திருக்கிறார்கள். அனைத்து நட்சத்திரங்களுக்கான பரிகார தலங்கள் குறித்த விவரங்களும் எழுதி வைக்கப் பட்டிருக்கிறது.
தமிழகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தெய்வீக திருத்தலங்கள் உள்ள அனைத்து ஊர்களில் இருந்தும் கற்களை எடுத்து வந்து ஊரின் பெயருடன் வரிசையாக வைத்திருக்கிறார்கள். மிகவும் கஷ்டமான் , வித்தியாசமான முயற்சி இது.
கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் என் கண்ணில் பட்டது செம்பு பாத்திரத்தில் வைக்கப் பட்டிருந்த குடிநீர். முன் காலத்தில் நாம் பயன்படுத்திய பாத்திர வகைகள் நம் ஆரோக்கியத்துடன் சம்பந்தப் பட்டவை. அந்த வகையில் செம்பு பாத்திரத்தில் குடிநீர் வைப்பது நமது பழைய வழக்கம். குடிநீரில் உள்ள ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் நுண்ணியிரிகளை செம்பு அழித்து விடும். பித்தம், கபம் சார்ந்த நோய்கள், சுவாச கோளாறுகள் இன்னும் பல நோய்களை எதிர்க்கும் ஆற்றல் செம்பிற்கு உண்டு.
திருச்சி ஐயப்பன் கோயிலில் செம்பு பாத்திரத்தில் குடிநீர் |
அடுத்து என் கண்ணில் பட்டது சந்தன இழை கல். வட்ட வடிவ மர கல்லின் மீது சந்தன கட்டை வைத்திருக்கிறார்கள். நாமே சந்தனத்தை இழைத்துப் பூசிக் கொள்ளலாம். முன்பெல்லாம் அனைத்து வீடுகளிலும் சந்தன கட்டை வைத்திருப்பார்கள். முகப் பொலிவும், உடல் குளிர்ச்சியும்
தரக் கூடியது சந்தனம்.
சந்தன இழைகல் |
" நமது பழைய கலாச்சார வழக்கங்களை நினைவில் வைத்துக் கொள்ளவும், முடிந்தால் அவற்றை மீண்டும் வழக்கத்தில் கொண்டு வரவும் வேண்டும் என்ற எண்ணத்தில்தான் செம்பு பாத்திர குடிநீர், சந்தன இழை கல் ஆகியவற்றை வைத்திருக்கிறார்கள் " என்றார் திரு. கணேசன். நூற்றுக்கு நூறு உண்மை.
திருச்சி சென்றால் ஐயப்பன் கோயில் சென்று வாருங்கள்.
No comments:
Post a Comment