|
திருச்சியில் சிறுதானிய உணவகம்
பொதுவாக இயற்கை சிகிச்சை மையங்களில், சமைக்காத உணவு கிடைக்கும். திருச்சி, சிவகாசி, கோவை, திருவனந்தபுரம் ஆகிய சில ஊர்களில் இத்தகைய இயற்கை உணவுகள் கிடைக்கின்றன. சில ஹோட்டல்களில் ஆரோக்கிய உணவு என்று இப்போது கம்பு, கேழ்வரகு, கோதுமை தோசை தர ஆரம்பித்திருக்கிறார்கள். திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகில் இருக்கும் சரஸ்வதி ஹோட்டலில் கோதுமை ஆப்பம் போடுகிறார்கள். அதே சரஸ்வதி ஹோட்டலில் மதியம் மூன்று மணிக்கு சுடச் சுட சுண்டல் உண்டு. சென்னை சாலிகிராமத்தில் சில மூலிகை உணவகங்கள் இருக்கின்றன. மற்ற உணவகங்கள் எல்லாம் துரித உணவகங்கள்தான்.
இந்த சூழலில், முழுக்க முழுக்க சிறுதானிய உணவுகளுக்காகவே திருச்சியில் ஓர் உணவகம் துவங்கி இருக்கிறார்கள். திருச்சி தில்லை நகர், 11 வது கிராஸ் கிழக்கில், சாரதாம்பாள் கோயில் எதிரில் இருக்கிறது " ஆப்பிள் மில்லட் சிறுதானிய சிறப்பு உணவகம்". ஆரம்பித்து ஒருமாதம்தான் ஆகிறது. தூதுவளை கீரை சூப், சுக்கா கீரை சூப், வரகு மோர் கஞ்சி, தினை அல்வா, கம்பு அல்வா, கம்பு சுழியம், முடக்கத்தான் தோசை, முள்ளு முருங்கை தோசை, காசினி கீரை தோசை, சுரைக்காய் தோசை, கோவைக்காய் தோசை, பரங்கிக் காய் தோசை, பூசணிக்காய் தோசை, சுக்கா கீரை தோசை, பாகற்காய் தோசை, கரிசலாங்கண்ணி கீரை தோசை, மணத்தக்காளி சாதம், கம்பு பொங்கல், திரிகடுகம் காபி என மெனுவே அசத்துகிறது.
மெனுவை பார்த்தால் இதனை சிறுதானிய உணவகம் என்றும் சொல்லலாம், பாரம்பரிய உணவகம் என்றும் சொல்லலாம், ஆரோக்கிய உணவகம் என்றும் சொல்லலாம் என்று தோன்றுகிறது.
|
தண்ணீர் குடுவையும், தண்ணீர் டம்ப்ளரும் மண்பாண்டமாக இருப்பது பார்க்கவே குளிர்ச்சியாக இருக்கிறது. வெட்டி வேர், துளசி, சீரகம் போட்ட தண்ணீரை கொடுக்கிறார்கள்.
சனி, ஞாயிறு மட்டும் மில்லட் மேளா......பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை. 150 ரூபாய்க்கு 150 வகை உணவுகளாம். மில்லட் மேளாவில் மதிய உணவு மெனு: தூதுவளை/வாழைத் தண்டு சூப், சிறுதானிய இனிப்பு, சுண்டல், சப்பாத்தி, வரகரிசி வெண்பொங்கல், எள்ளு சாதம், கொள்ளு சாதம், மணத்தக்காளி கீரை சாதம், புதினா/மல்லி, தேங்காய், சாம்பார், புளி, தயிர் சாதம்....இவற்றோடு தினை பாயசம்.
இரவில் சூப், இனிப்பு, தோசை வகைகள், சுழியம் என்று 150 வகை உணவு தருகிறார்கள்.
மற்ற நாட்களிலும் சிறுதானிய உணவு கிடைக்கும்.
வித்தியாசமான முயற்சியாக இருக்கிறது. தமிழகமெங்கும் இது போன்ற முயற்சிகளை முன்னெடுத்து செல்ல இன்னும் பலர் முன்வருவார்கள் என நம்புகிறேன்.
முகவரி:
10 - B/1, 11 வது கிராஸ் கிழக்கு, சாஸ்திரி ரோடு, சாரதாம்பாள் கோயில் எதிரில், தில்லை நகர், திருச்சி - 18.
தொலைபேசி - 0431-4220990
அலைபேசி - 91501 91794
|
ஆப்பிள் மில்லட் சிறுதானிய உணவகம் - முதல் மாடியில். கீழ் தளத்தில் வழக்கமான உணவகம் இருக்கிறது. |
1 comment:
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் பெண்களால் நடத்தப்படும் ஆரோக்யம் இயற்கை மற்றும் பாரம்பரிய உணவகம் கடந்த ஒரு வருடமாக சிறப்பாக நடைபெறுகிறது.சிறுதானிய உணவுவகைகள் மட்டுமே.செல் 9489324220 .
Post a Comment