கத்திரி வெய்யில் கதற வைக்கிறது. சாலை ஓரங்களில் கம்மங் கூழ்...லெமன் ஜூஸ் வியாபாரம் அமோகம். பெப்சி, கோலா விற்பனையிலும் குறைவில்லை. ஐந்து ரூபாயில் இருந்து ஐநூறை தாண்டிய விலையிலும் ஐஸ் கிரீம்.
ஆனால் உண்மையில் உடல் சூட்டைக் குறைக்கும் ஒரு பொருளை மறந்து விட்டோம். அதுதான் நன்னாரி சர்பத். ஒருகாலத்தில் கோடை காலம் வந்து விட்டால் போதும். திடீர் சர்பத் கடைகள் முளைத்து விடும். நன்னாரி சர்பத் பாட்டில்கள், எலுமிச்சை பழங்கள், பானையில் தண்ணீர், கொஞ்சம் சர்க்கரை...கொஞ்சம் உப்பு...சேர்த்து கலக்கினால் சர்பத் ரெடி. தண்ணீர் சுகாதாரமாக இருக்குமோ என்னவோ என்ற அச்சத்தில் சோடாவில் சர்பத் கலக்க சொல்லி குடிப்பேன். சுத்தத்திற்கு ஆரம்பித்த வழக்கம் அதன் சுவைக்காய் தொடர்ந்தது.
திருச்சியில் மலைக்கோட்டைக்கு நேர் எதிரில் No. 1, தேரடி கடைத் வீதியில் அமைந்த corner கடை T.A.S. ரத்தினம் பட்டணம் பொடி கடை. பொடியை தாண்டியும் ஒரு விஷயத்திற்கு அந்த கடை மிகவும் பிரசித்தம். அதுதான் நன்னாரி சர்பத். L.R. சர்பத் கொடி கட்டி பறந்த காலத்திலேயே இவர்களது சொந்த தயாரிப்பில் நன்னாரி சர்பத் ரொம்ப popular.
இந்த சர்பத்திற்கு எலுமிச்சை பிழிய தேவையில்லை. சர்க்கரை தனியாக போட தேவையில்லை. எல்லாம் சேர்ந்த ரெடிமிக்ஸ் அது. குளிர்ந்த நீர் விட்டு குடித்தால் போதும். உடம்பும் மனமும் குளிர்ந்து விடும். ஒரு கண்ணாடி டம்ப்ளரில் ஊற்றி fridgeல் வைத்திருப்பார்கள்.
அப்போது குங்குமபூ சர்பத் கூட போட்டார்கள். சென்னை வந்தபின்னும் நன்னாரி சர்பத் பந்தம் மட்டும் இன்னமும் தொடர்கிறது.
கடந்த வாரம் திருச்சி சென்ற போது மறக்காமல் மலைக்கோட்டை கார்னர் சர்பத் கடைக்கும் சென்றிருந்தேன். மீதமிருக்கும் கோடை நாட்களுக்கு தேவையான சர்பத் பாட்டில்கள் வாங்கி வந்தேன். விரைவில் நூற்றாண்டு விழா கொண்டாட இருக்கும் கடை. இத்தனைக்கும் பட்டணம் பொடி, வெற்றிலை, பாக்கு, நன்னாரி சர்பத் ....இவைதான் இந்த கடையின் product range. இதுபோன்ற கடைகளை எல்லாம் இனிவரும் காலங்களில் காண்பது அரிது என்றே நினைக்கிறேன்.
No comments:
Post a Comment