Thursday, 12 December 2013

வாழைப்பூ பருப்பு உசிலி

வாழைப் பூ பருப்பு உசிலி



துவரம் பருப்பு - 100 கிராம் 


வர மிளகாய் (நீள மிளகாய்) - 8


சீரகம் 


கடலை பருப்பு - 2 ஸ்பூன் 


பெருங்காயம் 


உப்பு 





வாழைப்பூ (நடுத்தர அளவில்) - 1





வாழைப் பூவை, காளான் நீக்கி, பொடிப் பொடியாக நறுக்கி, மோரில் போடவும்.

நறுக்கிய வாழைப் பூவை, மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும். நன்கு வெந்ததும், ஒரு வடி தட்டில் கொட்டி தண்ணீரை வடிக்கவும்.

துவரம் பருப்பு, கடலை பருப்பு இரண்டையும் ஒன்றாக போட்டு, மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.  ஒன்றரை மணி  நேரம்,    ஊற வைக்க  வேண்டும்.

ஊறிய பருப்பில் தண்ணீர் வடித்து, உப்பு, வர மிளகாய், பெருங்காயம் சேர்த்து கர கரவென்று அரைக்கவும்.

அரைத்த பருப்பை பத்து நிமிடங்களுக்கு, குக்கரில் விசில் போடாமல் வேக வைக்கவும்.


வேக வைத்த பருப்பு சற்றே இறுகலாக இருக்கும். அதை கைகளால் உடைத்து உதிர்த்து விடவும்.

வாணலியில் 4 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, சூடேறியதும், கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்து, உளுத்தம் பருப்பு சிவந்ததும், சீரகத்தையும்  போட்டு பொரிக்கவும்.

உதிர்த்து வைத்த பருப்பை வாணலியில் போட்டு, நன்கு கிளறவும். பருப்பு ஓரளவிற்கு உதிரியானதும், வாழைப் பூவை துளி கூட தண்ணீர் இல்லாமல் ஓட்ட பிழிந்து, பருப்போடு சேர்த்து கிளறவும். பொல பொல வென்று வரும் வரை கிளற வேண்டும். மூன்று நிமிடங்கள் கிளறினாலே பொல பொல வென வந்து விடும்.

அடுப்பை அணைத்து இறக்கவும்.



வாழைப்பூ பருப்பு உசிலி ரெடி.

வாழைப் பூ
வாழைப் பூ
                  
வாழைப் பூ ஆய்ந்தது 

வாழை மடல் மீது ஆய்ந்த வாழைப் பூ
வாழைப் பூவில் காளான் நீக்கி 
வாழைப் பூவில் இருந்து நீக்கிய காளான் 
காளான் நீக்கப் பட்ட வாழைப் பூ 
வாழைப் பூவை பொடிப் பொடியாக நறுக்கி...
நறுக்கிய வாழைப் பூ
வேக வைத்த வாழைப் பூ 
இனி பருப்பு உசிலி செய்வோம்.


துவரம் பருப்பு + கடலை பருப்பு -ஊற வைத்து...

மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து ...
கொர கொர வென அறைத்து ...


அறைத்த பருப்பு+மிளகாய் ஆவியில் வேக வைத்து  ...
ஆவியில் வெந்த பருப்பு+மிளகாய் உதிர்த்து...
பருப்பு உசிலி ரெடி.  இனி  வாழைப்பூ .....



தாளித்து...



பருப்பு உசிலி சேர்த்து.......
வேக வைத்து, தண்ணீர் இல்லாமல் ஒட்ட பிழிந்த வாழைப்பூ வும் சேர்த்து .....
வாழைப் பூ  பருப்பு உசிலி ரெடி
பெண்களின் கர்ப்பப் பை ஆரோக்கியத்திற்கு உகந்தது வாழைப் பூ. வயிற்றுப் புண் வராமலும் தடுக்கும். வாழைப் பூ பயன் படுத்தி, வாழைப் பூ பருப்பு உசிலி, வாழைப் பூ பொறியல் வாழைப் பூ கூட்டு, வாழைப் பூ வடை, வாழைப் பூ அடை  ஆகியவை செய்யலாம். வாழைப் பூ ஆய்ந்த பின், அதன் கடைசி பகுதி மிகவும் இளசாக (பூம்பிஞ்சு) இருக்கும். இதை வாழைப் பூ கூச்சு என்பார்கள். இந்த வாழைப் பூ கூச்சை அப்படியே சாப்பிடலாம். லேசாக துவர்க்கும். ஆனால் உடல் நலத்திற்கு மிக நல்லது.




மோர்குழம்பு சாதம், எலுமிச்சை பழ ரசம் சாதம் ஆகியவற்றுடன், தொட்டுக்  கொண்டு சாப்பிட பெஸ்ட் சாய்ஸ் வாழைப் பூ பருப்பு உசிலி.

பருப்பு உசிலி இன்னொரு முறையிலும் செய்யலாம். ஊற வைத்து அறைத்த பருப்புகளை நிறைய எண்ணெய் விட்டு வாணலியில் போட்டு வதக்க வேண்டும். பருப்பு வெந்தவுடன் வாழைப் பூவை சேர்க்க வேண்டும். இந்த முறையில் பருப்பு நிறைய எண்ணெய் குடிக்கும். நேரமும் அதிகமாகும்.

வாழைப் பூ பருப்பு உசிலி

Wednesday, 11 December 2013

சென்னை மார்கழி சங்கீத சீசன் - இன்றைய சாப்பாட்டுக் கச்சேரி

ஞானாம்பிகா அசோகா 


நான் வருடா வருடம் செல்லும் சபாக்களில் முக்கியமானது ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா-சென்னை தியாகராய நகர் வாணி மகாலில். இங்கே ஞானாம்பிகாவின் கேண்டீன் கச்சேரி. கச்சேரி ஆரம்பித்த இரண்டாம் நாளே (நேற்று) நான் அங்கே ஆஜர்.

ஞானாம்பிகா ஜெயராமன் அவர்களின் புதல்வர் ராஜன் நடத்தும் ஞானாம்பிகா இது. கொஞ்சம் காஸ்ட்லி. விலை பட்டியல் தந்துள்ளேன்.

ஞானாம்பிகா விலை பட்டியல் 
இதை விலைக்காக மட்டும் தரவில்லை. என்ன என்ன  variety தருகிறார்கள் என்றும் தெரிந்து கொள்ளலாம்.

அசோகா ஹல்வாவும், சுடச் சுட நெய் பொங்கலும் சாப்பிட்டேன். எப்போதுமே ஞானாம்பிகாவில் இனிப்பு வகைகள் மிக நன்றாக இருக்கும். அந்த வகையில் அசோகா A-one. காசி ஹல்வா நான் போனபோது தீர்ந்து விட்டது. நெய் பொங்கலும் ditto. விரல் இடுக்கில் நெய் வழிய தொன்னையில் இருந்து அள்ளி சாப்பிட்ட கோயில் பிரசாதம் நினைவுக்கு வந்தது.

அளவும் கோயில் ப்ரசாதம்தான்.

பூரி கிழங்கு சிறிது டேஸ்ட் பார்த்தேன். அவ்வளவு சுகமில்லை.

அப்புறம் கீரை வடை. அவசியம் சாப்பிட்டுப் பார்க்க வேண்டிய ஒன்று.

"ஞானாம்பிகா பில்டர் காபி ஓஹோ".

ஹோட்டல் போல டிபன் வகைகளில் variety அதிகம். தினசரி இரண்டு இனிப்புகள், வடை வகைகளில் ஒன்று (கீரை வடை, தவள வடை..........), தோசை வகைகள், பூரி, சப்பாத்தி, சேவை, வெரைட்டி ரைஸ், ரவா பொங்கல் .....இது தவிர அடை அவியல் அல்லது பெசரட்.

காலை 11 மணியிலிருந்து மதியம் 3 மணி வரை சாப்பாடு. அப்புறம் இரவு சபா கடைசி கச்சேரி முடிந்து அரை மணி நேரம் வரை டிபன். 

ஜனவரி 1, 2014 அன்று முஹூர்த்த சாப்பாடு போடப் போகிறார்களாம். ரூபாய் 200 மொய் கட்டாயம்.

ஞானாம்பிகா பொறுத்தவரை என்ன ஸ்வீட்டாக இருந்தாலும் தைரியமாக சாப்பிடலாம். சுவைக்கு நான் கரண்டி ...தப்பு தப்பு  காரண்டி. நெய் பொங்கல், கீரை வடை, சேவை - இது போன்று சில வகைகள் நன்றாக இருக்கும். 

 எனது முந்தைய வருட அனுபவங்களின் படி சாப்பாடு  சுமார்தான். சாப்பாட்டு ஹால் சுத்தமாக, அமைதியாக இருக்கும். நல்ல உபசரிப்பு. பரிமாறுபவர்களை கேட்டு அவர்கள் advice படி order செய்தால் நல்ல சாப்பாட்டு அனுபவம் உறுதி.

இன்று, மீண்டும் ஜெய ராகவேந்திரா ஒரு விசிட் அடித்தேன்.  வெஜ். வடை
ஜெய ராகவேந்திரா கேடரர்ஸ் வெஜ். வடை 
நன்றாக இருந்தது. இங்கே நான் நன்றாக இருந்தது என்று குறிப்பிட்டேன் என்றால், ஹோட்டல்களில் இல்லாத வீட்டுச் சுவை என்று அர்த்தம் செய்து கொள்ள வேண்டும்.

Sweet சாப்பிட ஒரு சபா, டிபன் சாப்பிட இன்னொரு சபா, திரும்ப காபிக்கு முதல் சபா. இப்படி சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என தோன்றுகிறது.

ஞானாம்பிகா கேண்டீன் -தியாக பிரம்ம கான சபா (வாணி மஹால்)

Monday, 9 December 2013

சாப்பாட்டுக் கச்சேரி தொடர்கிறது

ஜெய ராகவேந்திராவில் (சென்னை கல்சுரல் அகாடமி) பன்சி கிச்சடி 


மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் சபா கேண்டீன் 

எல்லா வருடங்களும் போல இந்த வருடமும் எந்த சபா (சாப்பாட்டுக்) கச்சேரியையும் நான்  miss பண்ணப் போவதில்லை. கச்சேரி கேண்டீன் பொறுத்தவரை recipe தரப் போவதில்லை. வகை வகையாக சாப்பிட்டு வந்து உங்கள் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்வதாக உத்தேசம்.  

நேற்று பாஸ்கரன் மீனாம்பிகா கேடரர்ஸ் (மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸ்  க்ளப்), நம்ம வீட்டு கல்யாணம் கேடரர்ஸ் (பிரம்ம கான சபா) இரண்டுக்கும் சென்றிருந்தேன். இன்று ஜெய ராகவேந்திரா கேடரர்ஸ் (சென்னை கல்சுரல் அகாடமி).
பிரம்ம கான சபா கேண்டீன் 

மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸில் நேற்றுதான் துவக்க தினம். கேண்டீனுக்கு வந்தவர்கள் எல்லோருக்கும் கேசரி இலவசம். ரவா பொங்கல், தேங்காய் சேவை இரண்டும் சாப்பிட்டேன். தேங்காய் சேவை பிரமாதமாக இருந்தது. அப்புறம் பில்டர் காபி. வீட்டை தவிர வெளியில் சாப்பிடும் பில்டர் காபியில் இந்த சபா கேண்டீன் காரர்களை அடித்துக் கொள்ள ஆளில்லை. ஹோட்டல்களில் இது போன்ற பில்டர் காபி கிடைப்பதில்லை. காபி விலை இருபது ரூபாய். எந்த டிபன் சாப்பிட்டாலும் 40 ரூபாய். ஸ்வீட் 30 ரூபாய். இதுதான் மேலே சொன்ன 3 கேண்டீன் விலை நிலவரம்.

கட்டாயம் செல்ல வேண்டிய சபா கேண்டீன்களில் ஒன்று மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கேண்டீன்.

பிரம்ம கான சபா கேண்டீன் அவ்வளவு சுகமில்லை. காபி கூட நன்றாக இல்லை. அதனால் இந்த சீசனுக்கு அங்கெ திரும்பி செல்வதாக உத்தேசமில்லை. பிரம்ம கான சபா காரர்களுக்கு கேண்டீனுக்கு என்று தனி ரசிகர்கள் இருப்பது பிடிக்கவில்லை. சங்கீதம் கேட்க வருபவர்களுக்கு ஏதோ போனால் போகிறதென்று சாப்பாடும் கொடுத்தால் போதும் என்கிறார்கள் அவர்கள். ஒதுக்கு புறத்தில் எதோ ஒப்புக்கு இடம் கொடுத்திருக்கிறார்கள்.

ஜெய ராகவேந்திரா கேண்டீன் 


ஜெய ராகவேந்திராவில் பருப்பு போளி, வாழைப் பூ வடை, பன்சி கிச்சடி மூன்றும் சுவைத்தேன். மூன்றுமே நல்ல சுவை. சூடாக இல்லாவிட்டால் கூட பருப்பு போளி மீது நெய் ஊற்றி சாப்பிடும்போது அற்புதமாக இருக்கிறது. வாழைப் பூ வடை பெரும்பாலும் ஹோட்டல்களில் கிடைப்பதில்லை. பன்சி கிச்சடி என்பது ஒரு வகை கோதுமை ரவையிலிருந்து செய்யப் படுகிறதாம். வழக்கமான கோதுமை ரவை அல்ல. மாறுபட்ட சுவை. நன்றாக இருந்தது. இந்த ரவை (சென்னை மேற்கு மாம்பலம் ) துரைசாமி சப்வே அருகில் உள்ள பாம்பே ஸ்டோர்ஸில் மட்டுமே கிடைக்கும் என்ற உபரி தகவலையும் தந்தார்கள்.
பில்டர் காபியும் ஓஹோ.
ஜெய ராகவேந்திராவில் சிறுவனின் சாப்பாட்டுக் கச்சேரி 

இதுவரை நான் சென்று வந்த மூன்று கச்சேரி கேண்டீன்களில் என் முதல் சாய்ஸ் ஜெய ராகவேந்திராதான். சிறிய இடம்தான். முன்பெல்லாம் அவ்வளவு சுகாதாரமாக இல்லாதது போல் தோன்றும். இந்த வருடம் பளிச்சென்று சுத்தமாக இருக்கிறது. ஹோம்லி அட்மாஸ்பியர்.

இன்று ஸ்ரீ தியாக பிரம்ம கான சபாவில் (வாணி மஹால்) ஞானாம்பிகாவின் கச்சேரி ஆரம்பம். இன்று துவக்க தினம் என்பதால் மாலையில் தான் ஆரம்பித்தது. நாளையிலிருந்து காலை பத்தரை மணிக்கு சாப்பாட்டுடன் கேண்டீன் ஆரம்பிக்கும்.

இன்னும் சில சபாக்களுக்கு சென்று வந்தபின் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.

Saturday, 7 December 2013

சங்கீதமும் சாப்பாடும்




கச்சேரி ஆரம்பமாகி விட்டது. சென்னையில் நடைபெறும் மார்கழி மாத சங்கீத கச்சேரி பற்றிதான் சொல்கிறேன். நமக்கு சங்கீதம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு சாப்பாடும் முக்கியம். கர்நாடக சங்கீதம், பில்டர் காபி, சுண்டியிழுக்கும் சுவைமிகு உணவு - இவை மூன்றும் ஒன்றிலிருந்து மற்றொன்றை  பிரிக்க முடியாத அளவுக்கு பின்னி பிணைந்தவை.

மாறிவரும் இன்றைய வாழ்வியல் சூழலில், நமக்கு பிடித்த விஷயங்களில்  மூழ்கி போக, மார்கழி சங்கீத சீசன் ஒரு நல்ல வாய்ப்பை தருகிறது. மேலே சொன்ன சங்கீதம், பில்டர் காபி, சுவையான உணவு - இவற்றை ஒரே இடத்தில் அளித்து சேவை செய்கின்றன   நமது சென்னை சபாக்கள். 

நான் முடிந்த வரை எல்லா சபாக்களுக்கும் சென்று விடுவேன். பெரும்பாலான சபாக்களில் canteen செல்ல தனி வழி இருப்பது ஒரு சௌகர்யம். 

டிசம்பர் 15 லிருந்து 31 வரை  அனைத்து சபா canteen களும் இருக்கும். இது இந்த சீசனின் பொற்காலம். விதி விலக்காக சில சபாக்கள் முன்னதாகவே கச்சேரியை துவங்கி விடும். சில சபாக்களில் பொங்கல் வரை கச்சேரி நடக்கும்.

அனைத்து சபாக்களின் நிகழ்ச்சி நிரலும் மனதில் நிற்காத காரணத்தினால், சில சபா நிகழ்ச்சிகள் (Canteenகள் என வாசிக்கவும்) முடிவடைந்த அடுத்த நாள் போய் ஏமாந்து திரும்பியதுண்டு.

எனவே சங்கீத சீசன் canteen பிரியர்கள் வசதிக்காக சீசன் 2013 canteen நிகழ்ச்சி நிரல் இதோ.

Chennai Margazhi Season music festival 2013 Sabha Canteen Schedule:

1. பிரம்ம கான சபா (Brahma Gana Sabha)
இடம் - M.Ct.M. Chidambaram Chettiar Matriculation பள்ளி, லஸ் சர்ச் சாலை.
நாட்கள் - 03-12-2013 முதல் 31-12-2013 வரை.
நம்ம வீட்டு கல்யாணம் கேடரர்ஸ் 
கேண்டீன் மதியம் 2 மணியிலிருந்து மாலை 9 மணி வரை இயங்கும்.


2.சென்னை கல்சுரல் அகடமி (Chennai Cultural Academy)
இடம் - கர்நாடகா சங்கா பள்ளி, ஹபிபுல்லா சாலை, தி.நகர்.
நாட்கள் -05-12-2013 முதல் 10-01-2014 வரை.
ஸ்ரீ ஜெய ராகவேந்திரா கேடரர்ஸ்
(Sri  JayaRaghavendhra Caterers)
044 2223 4238, 2223 4891, 2223 0887 
98410 16323 
மதியம் 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
சனி, ஞாயிறு காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
சனி, ஞாயிறுகளில் மட்டும் மதியம் கலந்த சாத வகைகள் உண்டு.

3.முத்ரா (Mudhra)
இடம் - ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி, 31, கிருஷ்ணா தெரு, தி.நகர்
நாட்கள் - 06-12-2013 முதல் 05-01-2014 வரை.
சேஷா கேடரர்ஸ், பம்மல்
(Sesha Caterers, Pammal) 
97103 61977, 99411 66838

4.மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் க்ளப் (Mylapore Fine Arts Club)
இடம்  - 45, முசிறி சுப்ரமணியன் சாலை, மைலாப்பூர்.
நாட்கள் -  08-12-2013 முதல் 17-01-2014 வரை.
பாஸ்கரன் மீனாம்பிகா கேடரர்ஸ் 
(Baskaran Meenambiga caterers)
9841031513
கேண்டீன் காலை 7 மணியிலிருந்து மாலை 9 மணி வரை இயங்கும்.
மதியம் சாப்பாடு உண்டு.

5. ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா 
(Sri Thyaga Brahma Gana Sabha)
இடம் - வாணி மஹால், தியாகராய நகர்.
நாட்கள் - 10-12-2013 முதல் 15-01-2014 வரை.
ஞானாம்பிகா கேடரர்ஸ் 
(Gnanambiga caterers, West Mambalam))
044 24743045
98400 32684, 98400 69067, 91766 60082.
காலை 10.30 மணி முதல் இரவு 9 மணி வரை.
காலை 10.30 மணி முதல் மதியம் 3 மணி வரை சாப்பாடு. மற்ற நேரங்களில் இனிப்பு, டிபன்  வகைகள் மட்டும். ஜனவரி 1, 2014 புத்தாண்டு தினத்தன்று மட்டும் முஹூர்த்த சாப்பாடு.
ஞானாம்பிகா N. ஜெயராம ஐயரின் புதல்வர் J.ராஜன் நடத்தும் ஞானாம்பிகா இது.

6. ஸ்ரீ கிருஷ்ண கான சபா (Sri Krishna Gana Sabha)
இடம் - 20, மகாராஜபுரம் சந்தானம் சாலை, தியாகராய நகர்.
நாட்கள் - 13-12-2013 முதல் 16-01-2014 வரை.
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் (Rassa)

7. நாரத கான சபா (Narada Gana Sabha)
இடம் - T.T.K. சாலை 
நாட்கள் - 14-12-2013 முதல் 01-01-2014 வரை.
ஞானாம்பிகா 
(Gnanambiga , Valasaravakkam))
98400 50114, 98400 16493
044 2486 3171, 044 2486 2763
ஞானாம்பிகா N. ஜெயராம ஐயரின் புதல்வர்கள் J. ரமேஷ், J. விட்டல் ஆகிய இருவரும் நடத்தும் ஞானாம்பிகா இது.

8. ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி சபா
(Sri Parthasarathy Swami Sabha)
இடம் - வித்யா பாரதி கல்யாண மண்டபம், பீமசேனா  கார்டன் தெரு, மைலாப்பூர்.
மவுண்ட் மணி ஐயர்
(Mount Marriage Catering Services)
044- 2432 0699, 98400 24400
நாட்கள் - 15-12-2013 முதல் 02-01-2014 வரை.
காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை.
மதியம் 12-3 சாப்பாடு. மற்ற நேரங்களில் டிபன் வகைகள்.

9. மியூசிக் அகாடமி (Music Academy)
நாட்கள் - 15-12-2013 முதல் 01-01-2014 வரை.
கொண்டித்தோப்பு பத்மநாபன் 
(N.Padmanabhan)
044-2520 9574
044-2520 3087
98400 33165
94444 55473
காலை 7.30 மணி முதல் மதியம்  2.30 மணி வரை.
மீண்டும் மதியம் 3.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை.
மதிய சாப்பாடு 10.30 - 2.00 

10. தி இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி
(The Indian Fine Arts Society)
நாட்கள் - 18-12-2013 முதல் 05-01-2014 வரை.
வேணுஸ் கேட்டரிங் சர்விஸ், மாம்பலம் 
(Venus Catering Services)
044-4269 6302
98410 26302, 98407 16593

11. சென்னையில் திருவையாறு 
(Chennaiyil Thiruvaiyaru)
காமராஜர் அரங்கம்
உணவு திருவிழா (Food Festival) நடைபெறுகிறது.
நாட்கள் - 18-12-2013 முதல் 25-12-2013 வரை.
தீவுத் திடல் பொருட்காட்சி போல பல உணவு ஸ்டால்கள் அமைந்துள்ளன.

மைலாப்பூர் ஸ்ரீ சங்கரா கேட்டரர்ஸ், மேற்கு மாம்பலம் சம்பத் கௌரி மேரேஜ் கேட்டரிங் சர்விஸ்,  வேளச்சேரி அந்தி கடை, MSG  Kitchen, விவேகானந்தா காபி ஆகியோர் ஸ்டால் போட்டிருக்கின்றனர். இது தவிர அடையார் OrganicDepotவழங்கும்  ஆர்கானிக் பொருள்கள்  ஸ்டால் இருக்கிறது. தேனி Yazh Institute of vegetables & Fruits Carving நிறுவனத்தினர் காய்கறியை வெட்டி அழகு செய்வது குறித்து ஸ்டால் போட்டிருக்கின்றனர்.

Canteen உள்ள சபாக்களை மட்டும்தான் இங்கே கொடுத்துள்ளேன். Canteen இல்லாமல் சங்கீத கச்சேரி மட்டும் நடத்தும் இன்னும் பல சபாக்கள் சென்னையில் உண்டு. 

சில சபா கேண்டீன்கள் காலை 6 மணியிலிருந்து  இரவு 10 மணி வரை இயங்குகின்றன. இத்தகைய சபாக்களில் தலைவாழை இலை சாப்பாடும் உண்டு. இன்னும் சில சபா கேண்டீன்கள் மதியம் இரண்டு மணி வாக்கில் டிபனோடு தங்கள் கச்சேரியை துவங்குவார்கள்.

கன்னட பிராமின் உணவுகளை சுவைக்க வேண்டும் என்றால்  சென்னை கல்சுரல் அகாடமி செல்ல வேண்டும்.

நல்ல இனிப்பு வகைகளுக்கு நாரத கான சபா. சூப்பர் ஸ்டார்  ரஜினி காந்த் வீட்டு கல்யாணத்திற்கு அழைப்பிதழ் கிடைக்கப் பெறாதவர்கள், அந்த கல்யாணத்தில் பரிமாறப் பட்ட 'மால் புவா' இனிப்பை நாரத கான சபா canteen ல் சுவைக்கலாம்.

Authentic திரட்டுப் பால் சாப்பிட விரும்பினால் மியூசிக் அகாடமி செல்லலாம்.

தவல வடை, அடை, காசி ஹல்வா, அசோகா, சேப்பங்கிழங்கு பாத், கருவேப்பிலை சேவை - இப்படி பலவித உணவுகள், ஹோட்டலில் கிடைக்காத வீட்டு சமையல் சுவை, இதுதான் சபா கேண்டீன் சிறப்பு.

பிரமாண்டமான சபா கேண்டீன்கள் என்றால் மியூசிக் அகாடமி கேண்டீன், நாரத கான சபா கேண்டீன், ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா கேண்டீன் ஆகிய மூன்றுமே  முதலிடத்திற்கு தகுதியானவை.

இந்த மூன்று சபா கேண்டீன்களின் சிறப்பே, விசாலமான இட வசதி, ஸ்டார் ஹோட்டலுக்கு நிகரான சூழல், அதிக எண்ணிக்கையிலான டிபன் வகைகள் ஆகியவைதான். அதற்கேற்ப விலையும் அதிகம்தான்.

சபாவில் இருந்து கசிந்து வரும் மெல்லிய சங்கீதம் நம் காதை  வருட, உணவருந்தும் வசதி கிடைப்பதால் மியூசிக் அகாடமி கேண்டீன் முதல் இடத்தை தட்டிச் செல்லும்.

சபா கேண்டீன் வரலாற்றில் முக்கியமாக நாம் குறிப்பிட வேண்டியது அறுசுவை அரசு நடராஜன் சகோதரர்கள் பற்றி. நடராஜன், ஜெயராமன், கண்ணன் - இவர்கள் மூவரும் சகோதரர்கள்.

பல வருடங்கள் மியூசிக் அகாடமி கேண்டீனில் அறுசுவை அரசின் கொடிதான் பறந்தது. பின்னர் அவர் ஸ்ரீ பார்த்தசாரதி சபாவிற்கு சென்றார். அங்கே அவர் வழங்கிய தலைவாழை இலை சாப்பாடு ரசிகர்களிடம் பெரிய அளவில் ஒரு பரபரப்பையே ஏற்படுத்தியது.

அப்புறம் மவுண்ட் பேட்டன் மணி ஐயர் ஸ்ரீ பார்த்தசாரதி சபாவிற்கு வந்தார். இந்தியாவின் கவர்னர் ஜெனரல் ஆக இருந்த மவுண்ட் பேட்டன் இவர் சமைத்த உணவை விரும்பி சாப்பிட்டதால் இந்த பெயர். 

அறுசுவை அரசு நடராஜனின் சகோதரர் ஜெயராமனும் அவர் வாரிசுகளும் நாரத கான சபாவில் கேண்டீன் (ஞானாம்பிகா)  நடத்தி வருகிறார்கள். இவரது உறவினர்தான் தியாக பிரம்ம கான சபா (வாணி மஹால்)வில் கேண்டீன் நடத்துகிறார்.

அறுசுவை அரசு நடராஜனின் இன்னொரு சகோதரர் கண்ணன் ரொம்ப நாட்களாக மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப் ல் கேண்டீன் (மீனாம்பிகா)நடத்தினார். இப்போது அவர் புதலவர் பாஸ்கர் நடத்துகிறார்.

இது முன்னுரை தான். கேண்டீன் கச்சேரிகளுக்கு நான் சென்று வந்ததும் இன்னும் பல தகவல்களுடன் உங்களை மீண்டும் சந்திப்பேன்.

Friday, 6 December 2013

அவல் பாயசம்

சிவப்பு அவலில் செய்த சிறப்பு பாயசம். செய்ய மிகவும் எளிதானது.

அவல்  பாயசம் 



சிவப்பு அவல் - 1 கப் 
வெல்லம் - 1 கப் 
பால் - 200 மி.லி.

சாரை பருப்பு 
முந்திரி
உலர் திராட்சை 

ஏலக்காய் 
பிஸ்தா 














அவலை நன்கு களைந்து, மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, கொதிக்க விடவும். கொதிக்கும் போதே, முந்திரி, சாரை பருப்பு, உலர் திராட்சை, பிஸ்தா இவற்றையும் சேர்க்கவும். 

இன்னொரு அடுப்பில், பாலை வைத்து, சுண்ட காய்ச்சவும்.

அவல்  வெந்ததும், வெல்லம், ஏலக்காய் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் நன்கு கரைந்ததும், காய்ச்சிய பாலை சேர்த்து, மீண்டும் ஒரு கொதி விடவும்.

அவல் பாயசம் ரெடி.

உலர் பழங்களின் சத்து முழுக்க நம்மை சேர வேண்டும் என்பதற்காகவே, அவற்றை நெய்யில் பொரிக்காமல், கொதிக்கும் போது சேர்த்து வேக வைக்கிறேன்.  முடிந்த வரையில் பொரித்த பதார்த்தங்களை தவிர்ப்பது ஆரோக்கியமானது.


அவல் பாயசம் சுடச் சுட தயாராகிறது
அவல்  பாயசம் 



Thursday, 5 December 2013

மைசூர்பாக்

தீபாவளிக்கு செய்து, சுவைத்த மைசூர் பாக் ரெசிபி ........இதோ உங்களுக்காக...........
மைசூர் பாக் 


மைசூர் பாக் 
" மைசூர் பாக்கில் மைசூர் இருக்கிறதா? "  என்று ஜோக்கடிப்பார்கள். " மைசூர் பாக்கில் மைசூர் இருக்கிறது " என்பேன் நான். மைசூரின் உணவு கலாசாரம் மைசூர் பாக்கில் ஒளிந்திருக்கிறது. 

மைசூர் மகாராஜாவுக்காக மாடப்பா என்பவர் செய்து கொடுத்த பிரத்தியேக இனிப்பு, மைசூர் பாக். பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை. மைசூர் பாக்குக்கும் தான். இதை நீங்கள் மைசூர் போனால் உணரலாம். எந்த விளம்பர வெளிச்சமும் இல்லாமல், இனிப்பு கடைகளில் கொட்டிக் கிடக்கும் மைசூர்பாக். பெயர் சொன்னாலே  போதும். நாக்கெல்லாம் இனிக்கும்.

அதிக நெய்யும், அதிக சர்க்கரையும் தேவைப்படும் இனிப்பு மைசூர் பாக். ஆனாலும், கடிக்க கர கரவென்று இருக்கும். மொறுமொறுப்பு என்றும் சொல்வார்கள். ஆனால் கடிக்க முடியும். இதுதான் மைசூர்பாக்கின் சிறப்பே.  வாயில் வைத்த உடன் கரைவதெல்லாம் மைசூர்பாக்கே அல்ல. மைசூர் பாக்கை துண்டு போட்டு அதன் பக்கவாட்டு பகுதியை பார்த்தீர்கள் என்றால், தேன்கூடு போல சிறு சிறு துளைகள் தெரியும். அப்படி தெரிந்தால் அதுதான் authentic mysore pak.                                                                                                                                      

கடலை மாவு - 1 டம்ப்ளர் 
சர்க்கரை  - 2 டம்ப்ளர்
நெய் - 1 டம்ப்ளர்
ஏலக்காய் - சிறிது 





மைசூர் பாக் எப்படி செய்வது? இதோ, மைசூர் பாக் செய்த என் மனைவியின் குரலில் தருகிறேன்.
மைசூர் பாக்

"  மொத வேலையா, ஒரு வாணலியில, கொஞ்சம் நெய்ய குத்தி, கடலை மாவ கட்டி தட்டாம வறுத்துக்கணும். அப்புறமா, சக்கரைல கா டம்ப்ளர் தண்ணிய குத்தி, அடுப்பில வச்சு கொதிக்க வைக்கணும். கம்பி பதம் வந்த ஒடனே, வறுத்த மாவ பாகுல கொட்டி, கட்டி தட்டாம  கிளறணும். மாவு வெந்து, நொரை நொரையா பூத்துண்டு வரும். அப்ப நெய்ய கொஞ்சம் கொஞ்சமா குத்தி, மாவு சுருண்டு வர்ற வரைக்கும் கைவிடாம கிளறணும். மாவு சுருண்டு கெட்டியானதும், ஏலக்காய் தூள தூவி நெய் தடவி வச்ச தாம்பாளத்தில கொட்டி, கொஞ்சம் ஆறினப்புறமா துண்டு போடணும். ரொம்ப ஆற விட்டா இறுகிடும். அப்புறம் துண்டு போட முடியாது.

சக்கர பாகு பதம் சரியா இருக்கணும். இல்லாம போனா மைசூர் பாகை சுத்தியல வச்சுண்டுதான் ஓடைக்க வேண்டி இருக்குமாக்கும்." 


கடலை மாவு 

சக்கரை பாகு
சக்கரை பாகில் கடலை மாவு 

நெய் ஊற்றி 
நன்கு கிளறி .....

                                           தாம்பாளத்தில் கொட்டி....துண்டு போடவும்

Tuesday, 3 December 2013

மாவு உப்புமா அல்லது புளி உப்புமா

மாவு உப்புமா- " தலைவாழை விருந்து "  தரும் 75 வது போஸ்ட்.




மாவு உப்புமா  , அரிசி மாவு உப்புமா அல்லது புளி உப்புமா


மாவு உப்புமா - தேவையான பொருள்கள் 


அரிசி மாவு - 150 கிராம் 
புளி - சிறிய எலுமிச்சை அளவு.
உப்பு - தேவைக்கேற்ப 

வர மிளகாய் - 10


கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பெருங்காயம் - தாளிக்க

நல்லெண்ணெய் -  7 ஸ்பூன் 




புளியை ஒரு டம்ப்ளர் தண்ணீரில் ஊற வைத்து, நன்கு கரைக்கவும். புளி கோது, சக்கை நீக்கி, தெளிவான புளி கரைசலாக எடுத்து கொள்ளவும். 

இந்த புளி கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து,  அரிசி மாவை பிசையவும். இறுகலாக, சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். மாவு பிசைய புளி கரைசல் போதவில்லை என்றால் சிறிது தண்ணீர் சேர்த்து பிசையலாம்.
மாவு உப்புமா செய்ய ...பிசைந்த மாவு 


ஒரு வாணலியில் 7 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பெருங்காயம் இவற்றை போடவும். கூடவே வர மிளகாயும் போட வேண்டும். வர மிளகாய்களை  லேசாக சிவக்க வறுக்க வேண்டும். அதேபோல் பருப்புகள், பெருங்காயம் இவற்றையும் சிவக்க வறுக்க வேண்டும். கடுகு வெடிக்க வேண்டும்.




இப்போது பிசைந்து வைத்த மாவை வாணலியில் போட்டு, நன்கு கிளற வேண்டும். மாவோடு எண்ணெய் மற்றும் தாளித்த பொருள்கள் நன்கு கல பட வேண்டும்.









இப்போது கைவிடாது கிளற வேண்டும். கல்லுபோல் இருக்கும் மாவு உதிர் உதிராக பிரியும் வரை கரண்டியால் கிளற வேண்டும். பெரிய மாவு கட்டிகளாக இருந்தால் அவற்றை கரண்டியால் உடைத்து விடவும். மாவு மிக சிறு சிறு கட்டிகளாகவும், சில பகுதி மணல் போலவும் தூளாகும். 





இப்போது ஒரு மூடி போட்டு வேக வைக்கவும். அடுப்பை சிம்மில் வைக்கவும்.

15 நிமிடங்களாவது வேக வேண்டும். மாவு வெந்து பொன்னிறமாகும். இதுதான் பக்குவம்.

இப்போது மாவு உப்புமா (புளி உப்புமா) ரெடி.





மாவு உப்புமா - சில வரலாற்று குறிப்புகள் 


என் அம்மா செய்த டிபன் வகைகளில் எனக்கு மிக, மிக பிடித்தது அரிசி மாவு உப்புமா. 

அரிசி மாவு உப்புமா ஹோட்டல்களில் கிடைக்காது. மிதமான புளிப்பு சுவையும், சற்றே தூக்கலான கார சுவையும் அரிசி மாவு உப்புமாவின் தனித்துவ ருசி. 

பக்குவமாக செய்த அரிசி மாவு உப்புமா கடிக்க மிருதுவாக இருக்கும். 

பதம் மாறினால், ஒன்று ரப்பர் போல இருக்கும். அல்லது ஆற்று மணல் போல நற நற வென பல்லில் கடிபடும்.

மேலே சொன்னது போல, போல மாவை கிளரும் போது, பெரிய பெரிய கட்டிகளாக இல்லாமல் மிக சிறு கட்டிகளாக உடைத்து விட வேண்டும். எல்லா மாவும் மணல் போல உதிர்ந்து விடவும் கூடாது. அப்படி ஆனால் அதிகமாக வெந்து, மாவில் ஈரப் பதம் குறைந்து விடும். அப்போதுதான் பல்லில் நற நற வென கடிபடும்.

சரியான பக்குவத்தில் செய்தால் அரிசி மாவு உப்புமாவை போல சுவையான டிபன்  வேறு ஒன்றில்லை.

இந்த பக்குவ குறிப்புகளை பார்த்து பயப் பட வேண்டாம். செய்து பழகி விட்டால், மிக எளிதாக செய்யக் கூடிய உடனடி டிபன் அரிசி மாவு உப்புமா. 

உடனடியாக என்ன டிபன் செய்வது என்ற குழப்பத்திற்கு விடையாக தான் அரிசி மாவு உப்புமாவை கண்டுபிடித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அரிசி மாவும், புளியும் எப்போதும் எல்லார் வீட்டிலும் இருக்கக் கூடிய பண்டங்கள். புளி கரைத்து, மாவு பிசைந்து, தாளித்து, மாவை கொட்டி, வேக வைத்து - அரை மணி நேரம் கூட ஆகாது. தோசை, இட்லி போன்ற டிபன்கள் செய்ய, முதல் நாளே மாவு அரைத்து வைக்க வேண்டும்.

ரவா உப்புமா, நொய் உப்புமா போலவே அரிசி மாவு உப்புமாவும் ஓர் உடனடி உணவு. 

பிராமிணர் வீடுகளில் செய்யப் படும் உணவு மாவு உப்புமா. 

புளி சேர்த்து செய்வதால் சிலர் இதை புளி உப்புமா என்றும் சொல்கிறார்கள். சில வீடுகளில் இப்படி மாவு உப்புமாவை, புளி உப்புமா என்று அழைக்கும் பழக்கம் இருக்கிறது. இன்னும் சில வீடுகளில் அல்லது தமிழகத்தின் சில பகுதிகளில் புளி ஊற்றி செய்யும் நொய் உப்புமாவை புளி உப்புமா என்கிறார்கள். 

அந்த நாளைய உணவுகள் இப்படித் தான். பகுதிக்கு பகுதி அல்லது வீட்டுக்கு வீடு உணவு பழக்கம் மாறும். சில குடும்பங்களில் மட்டுமே சில உணவு வகைகளை பரம்பரை பரம்பரையாக செய்வார்கள். ஒரு பெண்ணின் பிறந்த வீட்டு உணவு பழக்கம் ஒன்றாக இருக்கும். புகுந்த வீட்டு உணவு பழக்கம் வேறாக இருக்கும். பெரும்பாலும் புகுந்த வீட்டு உணவு பழக்கத்தையே கடை பிடிப்பார்கள். ஒரு பெண்ணிடம் இருந்து மாட்டுப் பெண்ணுக்கு (மருமகள்), அவரிடமிருந்து அவரது மருமகளுக்கு என்று உணவின் பக்குவங்கள் கைமாறும்.

ஒரு பகுதியில் ஒரு பெயர் சொல்லி அழைக்கும் உணவுக்கு,  இன்னொரு பகுதியில் வேறு  ஒரு பெயர் சொல்லுவார்கள். 

என் மனைவி திருமதி. ஸ்ரீவித்யா ராமன் சொல்கிறார்.......................................


பெண்கள் புகுந்த வீட்டு உணவு பழக்கத்தை கடை பிடிப்பார்கள் என்று சொல்வதில் நான் வேறுபடுகிறேன். கடைபிடிப்பார்கள் என்று சொலவதை  விட கடைபிடிக்க கட்டாயப்படுத்தப் படுவார்கள் என்பதே உண்மை. எந்த உணவை எப்படி செய்து வைத்தாலும், என் அம்மா செய்வதை போல் வராது என்று சொல்பவன்தான் ஆண். இதனால்தான் பெரும்பாலும் பெண்கள் கணவன் வீட்டு உணவு முறைக்கு மாறி விடுகிறார்கள். (விட்டு கொடுத்தல் பெண்ணின் இயல்பு).  ஆனாலும் மனைவிகளுக்கு அவரவர்தம் பிறந்த வீட்டு உணவின் மேல் இருக்கும் ஏக்கம் எத்தனை கணவர்களுக்கு  புரியும்?


மாவு உப்புமா 

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...