Friday 30 May 2014

வெள்ளரி பச்சடி



வெள்ளரி பச்சடி 


சாட் மசாலா, சீரக பொடி, கொத்தமல்லி தூவிய  வெள்ளரி தயிர் பச்சடி செய்முறை முன்னரே தந்திருக்கிறேன். அந்த வெள்ளரி தயிர் பச்சடி தனி ஆகாரமாக சாப்பிடக் கூடியது. சாட் மசாலாவும், சீரக பொடியும் தரும் சுவை நம்மை அதிக அளவு பச்சடி சாப்பிட சொல்லும். உடல் எடை குறைக்க விரும்புவோருக்கு ஏற்றது.

இப்போது தந்திருக்கும் வெள்ளரி பச்சடி எளிமையாக செய்யக் கூடிய பச்சடி. காரமான கலவை சாதங்களுக்கு தொட்டு சாப்பிட ஏற்றது.



இந்த பச்சடி செய்ய தேவையான பொருள்கள் - நடுத்தர அளவில் 2 வெள்ளரி, அரை கப் கெட்டியான தயிர், 2 ஸ்பூன் பாசி பருப்பு, உப்பு மற்றும் தாளிக்க தேவையான கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம். அவ்வளவுதான்.



பயத்தம் பருப்பை தண்ணீரில் போட்டு 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். வெள்ளரியை தோல் சீவி, பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய வெள்ளரியுடன், ஊற வைத்த பயத்தம் பருப்பை தண்ணீர் வடித்து சேர்க்கவும். தயிர் சேர்க்கவும். ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் போட்டு தாளித்து ஊற்றவும். ஒரு கரண்டியால் நன்கு கிளறி விட்டால் வெள்ளரி பச்சடி ரெடி.

விருப்பப் பட்டால் வர மிளகாய் (பாதி மிளகாய்) சேர்த்து தாளிக்கலாம். அல்லது அதற்கு பதில் பச்சை மிளகாய் (பாதி மிளகாய்) பொடிப் பொடியாக நறுக்கி சேர்க்கலாம்.



வெள்ளரி பச்சடிக்கு பாசி பருப்பு

நறுக்கிய வெள்ளரி

நறுக்கிய வெள்ளரியுடன் பாசி பருப்பு சேர்த்து.........

வெள்ளரி, பாசி பருப்புடன் தயிர் சேர்த்து........
தாளித்து கொட்டி.......கலந்து விட்டால்.......

வெள்ளரி பச்சடி ரெடி 

Monday 26 May 2014

மசாலா லஸ்ஸி அல்லது மசாலா மோர்

மசாலா லஸ்ஸி அல்லது மசாலா மோர் 
   




    தயிர்  - 2 கப் 
   சீரக தூள் (வறுத்து அரைத்தது) - சிறிது 
   சாட் மசாலா பொடி - சிறிது 
   இஞ்சி - சிறிது 
   பச்சை மிளகாய் - சிறிய துண்டு 
  கருவேப்பிலை  5 இலைகள் 
  கொத்தமல்லி தழை - சிறிது 
  உப்பு - சிறிது 







 வறுத்து அரைத்த சீரக தூள், இஞ்சி , பச்சை மிளகாய், கருவேப்பிலை, உப்பு  ஆகியவற்றை ஒரு மிக்சியில் போட்டு, சிறிது தயிர் விட்டு நன்கு அரைக்கவும். மீதமுள்ள தயிரையும் விட்டு நன்கு சுற்றவும். பிறகு சாட் மசாலா பொடி தூவி மீண்டும் சுற்றவும். மேலாக சிறிது சீரக பொடி, சாட் மசாலா பொடி, கொத்தமல்லி தழை தூவி....fridgeல் வைத்து, சிறிது நேரம் கழித்து........ கோடைக்கு இதமான மசாலா லஸ்ஸி குடிக்க வேண்டியதுதான்.


                          மசாலா லஸ்ஸி

Saturday 24 May 2014

பலதானிய தோசை

பலதானிய தோசை 


என் நண்பர் அச்சுந்தன் வயல் திரு. கண்ணன் அவர்களுக்கு மீண்டும் நன்றி. கேழ்வரகு (ராகி), கம்பு, நாட்டு சோளம் ஆகிய தானியங்களை சேர்த்து செய்யக் கூடிய சில ரெசிபிகளை சொன்னார். தன வயலில் விளைந்த தானியங்களையும் தந்தார்.



மூன்று சிறுதானியங்களையும் ஏறக்குறைய சம அளவு எடுத்து சிறிது நேரம் வெய்யிலில் காய வைத்தேன். அரைக்க எளிதாக இருக்கும். அதற்காகத்தான் இந்த வெய்யில் காய்ச்சல்.








காய்ந்த தானியங்களை மாவு மில்லில் அரைத்து வாங்கினேன்.


இந்த மாவில் பலவிதமான ரெசிபிகள் செய்யலாம். அரிசி மாவு, அதைவிட குறிப்பாக கோதுமை மாவு பயன்படுத்த வேண்டிய பண்டங்களில் எல்லாம் இந்த பலதானிய மாவு பயன்படுத்தலாம்.





இதோ முதலில் பலதானிய தோசை. 


பலதானிய மாவு 

நாம் அரிசி உபயோகித்து தோசை வார்க்கும்போது உளுந்து பயன்படுத்துவோம். கோதுமை தோசைக்கு உளுந்து தேவையில்லை. பலதானிய தோசைக்கும் உளுந்து தேவையில்லை. வழக்கமான் தோசை, கோதுமை தோசை சாப்பிட்ட நாக்குகளுக்கு இந்த பலதானிய தோசை ஒரு மாறுதலான, நல்ல ருசியை தரும். Gluten இல்லாததால், செரிமான பிரச்சினைகளும் இருக்காது.
கேழ்வரகு (Finger Millet-Ragi), கம்பு (Pearl Millet), நாட்டு சோளம் (Jowar) ஆகிய சிறுதானியங்களை சம அளவில் சேர்த்து அரைத்த மாவு - 1 கப் 

தண்ணீர்  - தோசை மாவு பதத்திற்கு கரைக்கும் அளவு தண்ணீர். 1 டம்ப்ளருக்கு சற்று அதிகமான தண்ணீர் தேவைப் படும். 

மிளகு, சீரக பொடி - 1/2 ஸ்பூன் 

பச்சை மிளகாய் - 1

கருவேப்பிலை - சிறிது 

பெருங்காயம், கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்க 

உப்பு - தேவைக்கு 

நல்லெண்ணெய் - தோசை வார்க்க 




பலதானிய மாவை, தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து  தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். 


பலதானிய தோசை மாவு - கப் 
மிளகு, சீரக பொடி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றையும் சேர்த்து கலக்கவும். 

கடுகு, பெருங்காயம், உளுத்தம் பருப்பை தாளித்து கொட்டி, நன்கு கலந்து, மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். 

ஊற வைக்காமல் உடனே தோசை வார்க்க வேண்டும் என்றால் சிறிது மோர் விட்டு கரைத்து உடனே தோசை வார்க்கலாம்.


பலதானிய தோசை மாவில் உப்பு சேர்த்து ............................
மோர் விட்டு கரைத்து அல்லது தண்ணீரில் கரைத்து மூன்று மணி நேரம் ஊறிய பலதானிய தோசை மாவை............





 வழக்கமான தோசை ஊற்றுவதுபோல் ஊற்றி, வெந்ததும் திருப்பி போட்டு எடுக்க வேண்டியதுதான்.


பலதானிய தோசை ரெடி.





தண்ணீர் விட்டு கரைக்கவும் 


தோசை மாவு பதத்தில் கரைக்கவும் 
மிளகு, சீரக தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்க்கவும். கடுகு, பெருங்காயம், உளுத்தம் பருப்பு தாளித்து கொட்டவும் 
மூன்று மணி நேரம் மாவு ஊறிய பின், தோசை வார்க்கவும். மோர் சேர்த்து கரைத்தால் ஊற வைக்க தேவையில்லை 
வெந்ததும் திருப்பி போட்டு..............
நன்கு வேக வைத்தால், பலதானிய தோசை ரெடி 

Thursday 22 May 2014

10 நிமிடத்தில் பீட்சா



நான்கு இறக்கை கொண்ட
ஆளில்லா விமானம் (drone)
"குறைந்த செலவில் குறுகிய காலத்தில் பொருள்களை நுகர்வோர் நுழைவாயிலில் கொண்டு செல்வது எப்படி?" என்பது Amazon.com போன்ற இணைய வணிக நிறுவனங்களின் கேள்வியாக உள்ளது. அதுவும் மும்பை, நியூயார்க் போன்ற வானுயர்ந்த கட்டடங்கள் நிறைந்த பெருநகரங்களில் இது மிகப் பெரிய சவால்தான். நுகர்வோருக்கு தேவையான பொருள்களை, Drone எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்கள் மூலம், நுகர்வோரின் வீட்டிற்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் Amazon.com இறங்கி இருக்கிறது.  இத்தகைய ஆளில்லா விமானங்களின் வணிக பயன்பாடு, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இன்னமும் சட்டரீதியாக அனுமதிக்கப் படவில்லை. பல கட்டுப்பாடுகள் உள்ளன.  

8k.m. பறந்த பின் பேட்டரி சார்ஜ்
செய்ய வேண்டும் 
மும்பையில் இயங்கி வரும் சிறிய பீட்சா நிறுவனமான Francesco Pizzeria, சோதனை முயற்சியாக Drone மூலம் பீட்சா டெலிவரி செய்வதில் வெற்றி கண்டுள்ளது. Francesco Pizzeria வின் தலைமை செயல் அதிகாரி திரு. மைக்கேல் ரஜானி (Mikhel Rajani) யின் நெருங்கிய நண்பர் வீட்டிற்கு Drone மூலம் பீட்சா அனுப்பியுள்ளது அந்த நிறுவனம்.

8 இறக்கை கொண்ட ஆளில்லா விமானம்
8 கிலோ எடை வரை தாங்குமாம் 
மே 11 அன்று, மத்திய மும்பையின் Lower Parel பகுதியில் இருக்கும் Francesco Pizzeria நிறுவன கிளையில் இருந்து, 1.5 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் வொர்லியில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 21 வது மாடிக்கு, Drone மூலம் அரை கிலோ எடையுள்ள பீட்சாவை  அனுப்பியுள்ளது. இதற்கு ஆன நேரம் பத்து நிமிடங்கள்தான். இந்தியாவில் முதன்முறையாக இத்தகைய முயற்சி நடைபெற்றிருக்கிறது.

இந்த ஆளில்லா விமானத்தை வடிவமைக்க 2000 அமெரிக்க டாலர்கள் செலவாகியுள்ளது. நம்மூர் மதிப்பில் ஏறக்குறைய ஒரு லட்சத்து பதினேழாயிரம் ரூபாய். இன்னும் ஐந்து வருடங்களில் Drone மூலம் பொருள்கள் அனுப்பும் முறை நடைமுறைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப் படுகிறது. 

21 வது மாடியில் பீட்சா இறக்கப் படுகிறது 


நம்ம ஊர் சரவண பவனும், சங்கீதாவும் இட்லி, தோசைகளை நம் வீட்டு மொட்டை மாடியில் போட்டு விட்டு செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை.என்ன ஒன்று....காக்கா கொத்திச் செல்லும் முன் நாம் முந்த வேண்டும். அவ்வளவுதான்.

Photos captured from you tube video

திருச்சியில் சிறுதானிய உணவகம்

திருச்சியில் சிறுதானிய உணவகம் 

பொதுவாக இயற்கை சிகிச்சை மையங்களில், சமைக்காத உணவு கிடைக்கும். திருச்சி, சிவகாசி, கோவை, திருவனந்தபுரம்  ஆகிய சில ஊர்களில் இத்தகைய இயற்கை உணவுகள் கிடைக்கின்றன. சில ஹோட்டல்களில் ஆரோக்கிய உணவு என்று இப்போது கம்பு, கேழ்வரகு, கோதுமை தோசை தர ஆரம்பித்திருக்கிறார்கள். திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகில் இருக்கும் சரஸ்வதி ஹோட்டலில் கோதுமை ஆப்பம் போடுகிறார்கள். அதே சரஸ்வதி ஹோட்டலில் மதியம் மூன்று மணிக்கு சுடச் சுட சுண்டல் உண்டு. சென்னை சாலிகிராமத்தில் சில   மூலிகை உணவகங்கள் இருக்கின்றன.  மற்ற உணவகங்கள் எல்லாம் துரித உணவகங்கள்தான். 

இந்த சூழலில், முழுக்க முழுக்க சிறுதானிய உணவுகளுக்காகவே திருச்சியில் ஓர் உணவகம் துவங்கி இருக்கிறார்கள். திருச்சி தில்லை நகர், 11 வது கிராஸ் கிழக்கில், சாரதாம்பாள் கோயில் எதிரில் இருக்கிறது   " ஆப்பிள் மில்லட் சிறுதானிய சிறப்பு  உணவகம்". ஆரம்பித்து ஒருமாதம்தான் ஆகிறது. தூதுவளை கீரை சூப், சுக்கா கீரை சூப், வரகு மோர் கஞ்சி, தினை அல்வா, கம்பு அல்வா, கம்பு சுழியம், முடக்கத்தான் தோசை, முள்ளு முருங்கை தோசை, காசினி கீரை தோசை, சுரைக்காய் தோசை, கோவைக்காய் தோசை, பரங்கிக் காய் தோசை, பூசணிக்காய் தோசை, சுக்கா கீரை தோசை, பாகற்காய் தோசை, கரிசலாங்கண்ணி கீரை தோசை, மணத்தக்காளி சாதம், கம்பு பொங்கல், திரிகடுகம் காபி என மெனுவே அசத்துகிறது. 


மெனுவை பார்த்தால் இதனை சிறுதானிய உணவகம் என்றும் சொல்லலாம், பாரம்பரிய உணவகம் என்றும் சொல்லலாம், ஆரோக்கிய உணவகம் என்றும் சொல்லலாம் என்று தோன்றுகிறது.
தண்ணீர் குடுவையும், தண்ணீர் டம்ப்ளரும் மண்பாண்டமாக இருப்பது பார்க்கவே குளிர்ச்சியாக இருக்கிறது. வெட்டி வேர், துளசி, சீரகம் போட்ட தண்ணீரை கொடுக்கிறார்கள்.

சனி, ஞாயிறு மட்டும் மில்லட் மேளா......பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை. 150 ரூபாய்க்கு 150 வகை உணவுகளாம். மில்லட் மேளாவில் மதிய உணவு மெனு:  தூதுவளை/வாழைத் தண்டு சூப், சிறுதானிய இனிப்பு, சுண்டல், சப்பாத்தி, வரகரிசி வெண்பொங்கல், எள்ளு சாதம், கொள்ளு சாதம், மணத்தக்காளி  கீரை சாதம், புதினா/மல்லி, தேங்காய், சாம்பார், புளி, தயிர் சாதம்....இவற்றோடு தினை பாயசம். 

இரவில் சூப், இனிப்பு, தோசை வகைகள், சுழியம்  என்று 150 வகை உணவு தருகிறார்கள். 

மற்ற நாட்களிலும் சிறுதானிய உணவு கிடைக்கும். 

வித்தியாசமான முயற்சியாக இருக்கிறது. தமிழகமெங்கும் இது போன்ற முயற்சிகளை முன்னெடுத்து செல்ல இன்னும் பலர் முன்வருவார்கள் என நம்புகிறேன்.

முகவரி:
10 - B/1, 11 வது கிராஸ் கிழக்கு, சாஸ்திரி ரோடு, சாரதாம்பாள் கோயில் எதிரில், தில்லை நகர், திருச்சி - 18.

தொலைபேசி - 0431-4220990 
அலைபேசி - 91501 91794

ஆப்பிள் மில்லட் சிறுதானிய உணவகம் - முதல் மாடியில். கீழ் தளத்தில் வழக்கமான உணவகம் இருக்கிறது. 

Wednesday 21 May 2014

மாம்பழ லஸ்ஸி

மாம்பழ லஸ்ஸி 

இந்த வருடம் மாம்பழ சீசன் கொஞ்சம் தாமதமாக துவங்கியது. இன்னமும் ஓரிரு மாதங்களுக்கு மாம்பழ வரத்து இருக்கும். ஆனால் அல்போன்சா சீசன் ஏறக்குறைய முடியப் போகிறது. எனவே இந்த வருட மாம்பழ சீசனை அல்போன்சாவுடன் துவங்கினேன்.

வழக்கம்போல் மயிலாப்பூர் Organic Shandy தான் நான் மாம்பழம் விரும்பி வாங்கும் இடம்.

பொதுவாக மாம்பழத்தை கத்தி வைத்து கூட வெட்டாமல் அப்படியே கடித்து சாப்பிட வேண்டும். அதான் மாம்பழத்திற்கு நாம் தரும் பூரண கும்ப மரியாதை.

இதற்கப்புறம்தான் மாம்பழத்தை வைத்து செய்யப் படும் ரெசிபிகள். இருந்தாலும் போனால் போகிறது என்று மாம்பழ லஸ்ஸி செய்து பார்த்தேன். இதோ.....மாம்பழ லஸ்ஸி.......




அல்போன்சா மாம்பழம் - 2 
தயிர் - 2 கப் 
ஏலக்காய் - சிறிது 
பனங்கற்கண்டு - 1 டீஸ்பூன் 
பாதாம் பருப்பு, உலர் திராட்சை - சிறிது 







அல்போன்சா மாம்பழ துண்டுகள் 







மாம்பழத்தை சிறு சிறு துண்டுகளாக்கவும்.





மாம்பழம்+தயிர்+பனங்கற்கண்டு+ஏலக்காய்







மாம்பழ துண்டுகளுடன், தயிர், ஏலக்காய், பனங்கற்கண்டு சேர்த்து, மிக்சியில் போட்டு நன்கு சுற்றவும். 





மாம்பழ லஸ்ஸி





பாதாம் பருப்பு, உலர் திராட்சை தூவி, fridgeல் இரண்டு மணி நேரம் வைத்து குடிக்கவும். சுவையான மாம்பழ லஸ்ஸி தயார்.

திருச்சி ஐயப்பன் கோயில்

திருச்சி ஐயப்பன் கோயில் photo courtesy: http://kcmcrselvarathinam.hpage.co.in/
கடந்த வாரம் திருச்சி சென்ற போது, என் நண்பர்கள் திரு. கணேசன், திரு. மீனாட்சி சுந்தரம் ஆகியோருடன் ஐயப்பன் கோயில் சென்றிருந்தேன். திருச்சி நீதிமன்றத்தில் (Trichy Court Bus Stop) இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் இருக்கிறது ஐயப்பன் கோயில். கோயில் இருக்கும்  இடம் கோர்ட்டிற்கு மிக சமீபம். திருச்சி மத்திய பேருந்து நிலையம், ரயில்வே சந்திப்பு ஆகிய இடங்களில் இருந்தும் 2 கிலோமீட்டர தூரம்தான் இருக்கும். Trichy Cantonment பகுதிக்கு மிக அருகில் இருக்கிறது. இவ்வளவு பரபரப்பான இடத்தில் இருந்தாலும், உள்ளே விஸ்தாரமாக தோப்பும் துரவுமாக, காற்றோட்டமாக இருக்கிறது. 

பொதுவாக கோயில்களை நான் இருவகை படுத்துவேன். பழைய கால கோயில்கள். காலாற நடக்க இடம், காற்றோட்டம் என்று தெய்வீக சாங்கித்யத்துடன்  இருக்கும். உள்ளே நுழைந்தாலே ஆரோக்கியமாக உணர்வோம். பக்தி உணர்வும் தானாக வந்து விடும்.

இரண்டாவது வகை....புதிதாக கட்டப்பட்ட கோயில்கள். இவற்றை நான் apartment கோயில்கள் என்பேன். அடுக்கக குடியிருப்பு வாழ்வின் மூச்சு முட்டல்கள் கோயிலிலும் இருக்கும்.

திருச்சி ஐயப்பன் கோயில் சமீப கால கோயிலாக இருந்தாலும் (20 அல்லது 25 வருடங்களுக்குள் கட்டப்பட்டது), பழைய கால கோயில்கள் போல் இருந்தது. உள்ளே நுழைந்து விட்டால் இரண்டு மணி நேரமாவது மன அமைதியுடன் கழிக்கலாம். 

கோயிலின் சட்ட திட்டங்கள் மிகவும் கட்டுப்பாடானவை. கோயிலின் உள்ளே இருக்கும்போது உங்கள் செல்போன் ஒலித்தால், செல்போனை உங்களிடம் இருந்து வாங்கி வைத்து, 24 மணி நேரம் கழித்துதான் தருவார்கள்.

கோயிலின் உள்ளே ஆங்காங்கே எழுதி இருக்கும் பொன்மொழிகள், தத்துவங்கள், ஆன்மீக விஷயங்கள் ஆகியவை படிக்க தகுந்தவை. அவற்றை முழுமையாக படிக்க நேரம் ஒதுக்கி கொண்டு செல்வது நல்லது. 

அனைத்து நட்சத்திரங்களுக்கான மரங்கள்  குறித்த விவரங்களும் எழுதி வைத்திருக்கிறார்கள். அனைத்து நட்சத்திரங்களுக்கும் உகந்த மரக் கன்றுகளையும் நட்டு வைத்திருக்கிறார்கள். அனைத்து நட்சத்திரங்களுக்கான பரிகார தலங்கள் குறித்த விவரங்களும் எழுதி வைக்கப் பட்டிருக்கிறது.

தமிழகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தெய்வீக திருத்தலங்கள் உள்ள அனைத்து ஊர்களில் இருந்தும் கற்களை எடுத்து வந்து ஊரின் பெயருடன் வரிசையாக வைத்திருக்கிறார்கள். மிகவும் கஷ்டமான் , வித்தியாசமான முயற்சி இது.

கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் என் கண்ணில் பட்டது செம்பு பாத்திரத்தில் வைக்கப் பட்டிருந்த குடிநீர். முன் காலத்தில் நாம் பயன்படுத்திய பாத்திர வகைகள் நம் ஆரோக்கியத்துடன் சம்பந்தப் பட்டவை. அந்த வகையில் செம்பு பாத்திரத்தில் குடிநீர் வைப்பது நமது பழைய வழக்கம். குடிநீரில் உள்ள ஆரோக்கியத்திற்கு கேடு  விளைவிக்கும் நுண்ணியிரிகளை செம்பு  அழித்து விடும். பித்தம், கபம் சார்ந்த நோய்கள், சுவாச கோளாறுகள் இன்னும் பல நோய்களை எதிர்க்கும் ஆற்றல் செம்பிற்கு உண்டு.

திருச்சி ஐயப்பன் கோயிலில் செம்பு பாத்திரத்தில் குடிநீர் 
அடுத்து என் கண்ணில் பட்டது சந்தன இழை கல். வட்ட வடிவ மர கல்லின் மீது சந்தன கட்டை வைத்திருக்கிறார்கள். நாமே சந்தனத்தை இழைத்துப்  பூசிக் கொள்ளலாம். முன்பெல்லாம் அனைத்து வீடுகளிலும் சந்தன கட்டை வைத்திருப்பார்கள். முகப் பொலிவும், உடல் குளிர்ச்சியும் 
தரக் கூடியது சந்தனம்.

சந்தன இழைகல் 

" நமது பழைய கலாச்சார வழக்கங்களை நினைவில் வைத்துக் கொள்ளவும், முடிந்தால் அவற்றை மீண்டும் வழக்கத்தில் கொண்டு வரவும் வேண்டும் என்ற எண்ணத்தில்தான் செம்பு பாத்திர குடிநீர், சந்தன இழை கல் ஆகியவற்றை வைத்திருக்கிறார்கள் " என்றார் திரு. கணேசன். நூற்றுக்கு நூறு உண்மை.



திருச்சி சென்றால் ஐயப்பன் கோயில் சென்று வாருங்கள்.

Monday 19 May 2014

நன்னாரி நல்லது


கத்திரி வெய்யில் கதற வைக்கிறது. சாலை ஓரங்களில் கம்மங் கூழ்...லெமன் ஜூஸ் வியாபாரம் அமோகம். பெப்சி, கோலா விற்பனையிலும் குறைவில்லை. ஐந்து ரூபாயில் இருந்து ஐநூறை தாண்டிய விலையிலும் ஐஸ் கிரீம். 

ஆனால் உண்மையில் உடல் சூட்டைக் குறைக்கும் ஒரு பொருளை மறந்து விட்டோம். அதுதான் நன்னாரி சர்பத். ஒருகாலத்தில் கோடை காலம் வந்து விட்டால் போதும். திடீர் சர்பத் கடைகள் முளைத்து விடும். நன்னாரி சர்பத் பாட்டில்கள், எலுமிச்சை பழங்கள், பானையில் தண்ணீர், கொஞ்சம் சர்க்கரை...கொஞ்சம் உப்பு...சேர்த்து கலக்கினால் சர்பத் ரெடி. தண்ணீர் சுகாதாரமாக இருக்குமோ என்னவோ என்ற அச்சத்தில் சோடாவில் சர்பத் கலக்க சொல்லி குடிப்பேன். சுத்தத்திற்கு ஆரம்பித்த வழக்கம் அதன் சுவைக்காய் தொடர்ந்தது.

திருச்சியில் மலைக்கோட்டைக்கு நேர் எதிரில் No. 1, தேரடி கடைத் வீதியில்  அமைந்த corner கடை T.A.S. ரத்தினம் பட்டணம் பொடி கடை. பொடியை தாண்டியும் ஒரு விஷயத்திற்கு அந்த கடை மிகவும் பிரசித்தம். அதுதான் நன்னாரி சர்பத். L.R. சர்பத் கொடி கட்டி பறந்த காலத்திலேயே இவர்களது சொந்த  தயாரிப்பில் நன்னாரி சர்பத் ரொம்ப popular. 

இந்த சர்பத்திற்கு எலுமிச்சை பிழிய தேவையில்லை. சர்க்கரை தனியாக போட தேவையில்லை. எல்லாம் சேர்ந்த ரெடிமிக்ஸ் அது. குளிர்ந்த நீர் விட்டு குடித்தால் போதும். உடம்பும் மனமும் குளிர்ந்து விடும். ஒரு கண்ணாடி டம்ப்ளரில் ஊற்றி fridgeல் வைத்திருப்பார்கள். 

அப்போது குங்குமபூ சர்பத் கூட போட்டார்கள். சென்னை வந்தபின்னும் நன்னாரி சர்பத் பந்தம் மட்டும் இன்னமும் தொடர்கிறது.

கடந்த வாரம் திருச்சி சென்ற போது மறக்காமல் மலைக்கோட்டை கார்னர் சர்பத் கடைக்கும் சென்றிருந்தேன். மீதமிருக்கும் கோடை நாட்களுக்கு தேவையான சர்பத் பாட்டில்கள் வாங்கி வந்தேன். விரைவில் நூற்றாண்டு விழா கொண்டாட இருக்கும் கடை. இத்தனைக்கும் பட்டணம் பொடி, வெற்றிலை, பாக்கு, நன்னாரி சர்பத் ....இவைதான் இந்த கடையின் product range. இதுபோன்ற கடைகளை எல்லாம் இனிவரும் காலங்களில் காண்பது அரிது என்றே நினைக்கிறேன். 

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...