Sunday 12 May 2019

மோர் மிளகாய் செய்முறை-ஒரு காணொளி

மோர் மிளகாய்


கோடை வெயிலை வீண் செய்யாமல், அருமையான தஞ்சாவூர் குடை மிளகாய் வாங்கி, மோர் மிளகாய் செய்வது எப்படி? 

இதோ, மோர் மிளகாய் வீடியோ ரெசிப்பி.







Sunday 5 May 2019

தஞ்சாவூர் குடை மிளகாய்.....மொறு...மொறு.....மோர் மிளகாய்


மோர் மிளகாய் 


தனித்துவமான ..........

தஞ்சாவூர் குடை மிளகாய் 


இப்போது எல்லா  'சீசனிலும்'  எல்லா உணவுகளும் கிடைக்கின்றன. Cold Storage புண்ணியத்தால்  வருடம் முழுவதும் ஆப்பிள் கிடைக்கிறது. அதில் "சுவையும் இல்லை... ஆரோக்கியமானதும் இல்லை " என்பது வேறு  விஷயம். 

ஆனால் இன்றும்  கோடையில்  மட்டுமே கிடைக்கக் கூடியவை  மாங்காய், மாம்பழம், மாவடு மற்றும் தஞ்சாவூர் குடை மிளகாய்.

ஆவக்காய் ஊறுகாய், மாவடு & மோர் மிளகாய்  - இந்த மூன்றையும் கோடையின் அற்புதம் எனலாம். 

இந்த அற்புதங்களில் ஒன்றான மோர் மிளகாய்  பற்றி தான் இந்த பதிவு.

Capsicum a.k.a. Simla Mirchi, Green Chilli - இந்த இரண்டும் ஆண்டு முழுவதும் கிடைக்கும். ஆனால்  மோர் மிளகாய் போட இவை உதவாது.

ஹோட்டல்களில்  பரிமாறப் படும்  மோர் மிளகாய் , இந்த நீளமான பச்சை  மிளகாய் கொண்டுதான் செய்யப் படுகிறது. சட்னி  செய்ய பயன் படும் பச்சை  மிளகாயில்  மோர் மிளகாய் போடுவது  அபத்தமான செயல். அதில் வாசனையோ, கெட்டி தன்மையோ இருக்காது. வாணலியில் போட்ட உடன் கருகி விடும்.

தஞ்சாவூர் குடை மிளகாய் 



   ஆனால்  தஞ்சாவூர் குடை மிளகாயின்  சுவையும், மணமும் வார்த்தைகளால் சொல்ல இயலாதவை. சாப்பிட்டு பார்த்து மட்டுமே உணர  முடியும்.

இன்று  தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளிலும் கிடைத்தாலும், தஞ்சாவூர்தான் குடை மிளகாயின் தாய் வீடு.


எப்போது கிடைக்கும்?

பிப்ரவரியில்  துவங்கி  ஏப்ரல்  முதல் வாரம் வரை  மட்டுமே  தஞ்சாவூர் குடை மிளகாய் கிடைக்கும். சென்னையில்  மாம்பலம் மார்க்கட், மைலாப்பூர்  மார்க்கட், நங்கநல்லூர், திருச்சியில்  நந்தி கோயில்  தெரு ஆகிய இடங்களில்  கிடைக்கும். ஆனால் தஞ்சாவூரில்  ஃபிரெஷ் ஆகவும், விலை  குறைவாகவும் கிடைக்கும்.


இயற்கையோடு ......... 

இணைந்து வாழ்வோம் .........

   அந்த அந்த சீசனில் கிடைக்கும் உணவு பொருள்கள்  தரமானதாகவும், விலை குறைவாகவும் இருக்கும். முடிந்த வரையில்  நாம் வசிக்கும் பகுதிக்கு அருகில் விளையும்  உணவு பொருள்களை  பயன் படுத்துவது  நல்லது. கோடை வெய்யிலை  பயன்  படுத்தி  அரிசி வடாம், ஜவ்வரிசி வடாம், சுண்டைக்காய் வற்றல், மணத்தக்காளி வற்றல், வெண்டைக்காய் வற்றல், கொத்தவரங்காய் வற்றல், மோர் மிளகாய்  -.- ஆகியவை செய்யலாம்.


அது என்ன குடை மிளகாய்? 


பார்த்தால் குடை போன்றே தோற்றம் இருக்கும். அதனால் இப்படி பெயர்  வைத்திருக்கலாம்.


மோர்  மிளகாய்  செய்முறை 

மோர் மிளகாய் 

STEP 1: 


தஞ்சாவூர்  குடை மிளகாய்களை  ஒரு  வாயகன்ற  பாத்திரத்தில்  போட்டு, தண்ணீர் விட்டு  நன்கு சுத்தம் செய்யவும். 

அழுகிய  மிளகாய் இருந்தால்  தூக்கிப் போட்டு விடவும். 

குட்டி மிளகாய்களை  தூக்கிப் போட வேண்டாம். சிறிய மிளகாய்...பெரிய மிளகாய்  - இரண்டுமே ருசியாகவே  இருக்கும்.

கழுவிய  பின், ஒரு வடி தட்டில் போட்டு, நீரை  வெளியேற்றவும்.

STEP 2 :



   பிறகு, ஒரு சிறிய  ஊசி வைத்து, ஒவ்வொரு மிளகாயிலும், இரண்டு அல்லது மூன்று சிறிய ஓட்டைகளை போடவும். தயிரில்  ஊற வைக்கும் போது, இந்த ஓட்டை வழியாக , தயிர் ஊடுருவி  செல்லும். சுவை கூடும்.

STEP 3 :




   நன்கு  புளித்த தயிரை, சிலுப்பி  வைத்துக் கொள்ளவும். சிலுப்பிய தயிரில் உப்பு சேர்க்கவும். உப்பு  சற்று அதிகமாக போட வேண்டும். அப்போதுதான் மோர் மிளகாயின் காரம் அடங்கும். ஒரு கிலோ குடை மிளகாய்க்கு  ஒரு கைப்பிடி உப்பு போடலாம்.

தயிர்  அதிகமாக தேவைப் படும். எனவே  மோர் மிளகாய்  போடுவதற்கு ஒரு வாரம் முன்பே தயிர் சேகரிக்க துவங்கி விட வேண்டும். தினமும் வீட்டில் மீதமாகும் புளித்த தயிரை  Fridgeல்  வைக்கவும். இப்படி மூன்று நாட்களுக்கு  செய்தால்  ஓரளவு  தயிர் சேர்ந்து விடும்.







STEP 4 :


   சுத்தம் செய்து, துளையிட்ட மிளகாய்களை, ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு, தேவையான அளவு  தயிர் சேர்க்கவும். தயிர் கெட்டியாக இருப்பதால், எவ்வளவு  சேர்த்தாலும்  மிளகாய் தயிரை உறிஞ்சி விடும். இந்த தயிர்தான் மிளகாய்க்கு சுவை தரும். தயிர்  மிளகாய் மேல் பிசிறிக் கொண்டு நிற்கும். இப்போது உப்பு  போட்ட மோர்  கொஞ்சம் சேர்த்தால்  மிளகாய் மோரில் மூழ்கும். மிளகாய்  உள்ளேயும்  மோர்  ஈசியாக செல்லும்.

STEP 5 :


மறுநாள்  காலையில், தயிரில் ஊறிய மிளகாய்களை  தயிரை பிழிந்து விட்டு,  தட்டுகளில் பரப்பி, மொட்டை மாடியில் காய வைக்கவும். மிளகாய் ஊற வைத்த தயிரை பத்திரமாக மூடி வைக்கவும்.

பகல் முழுக்க வெய்யிலில்  காய்ந்த மிளகாய்களை, திரும்பவும் அதே தயிரில்  இரவு முழுக்க போட்டு  வைக்கவும். 

   இப்படி, மூன்று நாட்களுக்கு, பகலில் காய வைப்பது, இரவில் தயிரில் ஊற வைப்பது என்று செய்ய வேண்டும்.



மூன்று நாட்களுக்கு பிறகு, மிளகாயின் பச்சை நிறம் மாறி, பழுப்பு நிறம் வரும். இனி, தயிரில்  ஊற வைக்க வேண்டியது இல்லை.








   ஆனால் நேர்  வெய்யிலில், மிளகாய்,  ஒரு வாரமாவது காய வேண்டும். நீளமான  காட்டன் துணியில்  போட்டால்  சீக்கிரம் காய்ந்து விடும்.

மொறு....மொறு....மோர் மிளகாய் 

   மிளகாயில் விரல் தொட்டு, மெதுவாக அழுத்தினால், மிளகாய் உடைய வேண்டும். இதுதான் சரியான பதம். இந்த பதம் வந்த பின் காய வைக்க வேண்டியது இல்லை.

   காற்றுப் புகாத பாத்திரத்தில் போட்டு வைத்து பயன் படுத்தவும்.

   மாதம் ஒருமுறை மட்டும், லேசாக வெய்யிலில் வைத்து எடுத்தால், வருடம் முழுவதும் கெடாமல் இருக்கும்.

வறுத்த மோர் மிளகாய் 

மோர் மிளகாய் 

   வாணலியில் தேவையான அளவு நல்லெண்ணெய் விட்டு, எண்ணெய் சூடானதும், மோர் மிளகாய்களை போட்டு, வறுத்து எடுக்கவும். மிளகாய் ரொம்பவும் கருகி விடக் கூடாது. மிளகாய் உள்ளே உள்ள விதைகளும் வறுபடும் வரை வறுக்க வேண்டும்.

   தஞ்சாவூர் குடை மிளகாயில் செய்த இந்த மோர் மிளகாய், தயிர் சாதத்திற்கு தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.


தயிர் சாதம்+மோர் மிளகாய்=சூப்பர் காம்பினேஷன் 

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...