Sunday, 22 December 2013

சென்னையில் திருவையாறு

சென்னையில் திருவையாறு உணவுத் திருவிழா

லக்ஷ்மன் ஸ்ருதி இசை குழுவினர் வழங்கும் சென்னையில் திருவையாறு இசை திருவிழா. டிசம்பர் 18, 2013ல் துவங்கிய Chennaiyil Thiruvaiyaru இசை விழா டிசம்பர் 25, 2013 வரை நடைபெறும். இசை விழாவோடு உணவுத் திருவிழாவும் நடத்துகிறார்கள். சென்றிருந்தேன்.

பொருட்காட்சி ஸ்டால் பாணியில் உணவு ஸ்டால்கள்.



சென்னையில் திருவையாறு

முருகன் இட்லி கடையின் மதுரை ஜிகர்தண்டா எல்லோரையும் கவர்ந்தது. மற்றபடி விவேகானந்தா காபியின் பில்டர் காபி  ஸ்டால், மைலாப்பூர் ஸ்ரீ சங்கரா கேட்டரர்ஸ் (044-2461 0442, 90940 82325, 99413 97422), மேற்கு மாம்பலம் சம்பத் கெளரி மேரேஜ் கேட்டரிங் சர்விஸ் (044-2470 0185, 93808 07294, 80564 35987) - இவர்களின் ஸ்டால்கள் இருந்தன.  சம்பத் கெளரி ஸ்டால் தான் பெரிய ஸ்டால். கல்யாண பந்தி போல இருந்தது. மதியம் சாப்பாடும் உண்டாம். டிபன் எதுவும் நன்றாக இல்லை.


முருகன் இட்லி கடையின் ஜில் ஜில் ஜிகர்தண்டா



என்னை கவர்ந்தது அந்தி கடை. ' அந்தி ' நேரம் என்றால் ' மாலை ' நேரம் என்று பொருள். அழகான தமிழ் பெயர். முன்பு மாலை நேரம் மட்டும்  சிறு உணவுகள் விற்கும் கடைகள் பல ஊர்களிலும் இருந்தன. அதை நினைவு படுத்தியது அந்தி கடை. வேளச்சேரியில் இயங்கி வருகிறது  அந்தி கடை (044-6461 1234, 98402 43591). இலை கொழுக்கட்டை (இனிப்பு), கார கொழுக்கட்டை ஆகியவை நன்றாக இருந்தன. முருங்கை கீரை அடை கூட வைத்திருந்தனர். நமது பாரம்பரிய உணவு  கொழுக்கட்டை.  வீடு தவிர மற்ற இடங்களில் அவ்வளவு ருசிக்காது. இனிப்பு கொழுக்கட்டை மாவை தடியாக தட்டி விடுவார்கள். அந்தி கடையில் சரியாக செய்திருந்தார்கள். அதைவிட முக்கியமாக வாழை இலையில் வேக வைத்திருந்தார்கள். கொஞ்சம் எண்ணெய் பிசு பிசுப்பு அதிகமாக இருந்தது. அதை சரி செய்தால் இன்னும் அருமையாக இருக்கும். 
அந்தி கடை 
இலை கொழுக்கட்டை (இலைக்கு உள்ளே இருக்கிறது)


இலை கொழுக்கட்டை


கார கொழுக்கட்டை



சேத்துப் பட்டு MSG Kitchen ஸ்டால் போட்டிருந்தார்கள். இட்லி கடப்பாவும் இருந்தது. இட்லி கடப்பா MSG Kitchen Speciality. எப்போது சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்.
MSG Kitchen

அடையார் Organic Depotன் Organicஉணவு பொருள்கள்  ஸ்டால் குறிப்பிட வேண்டிய ஒன்று. (044-6452 5500)



அடையார் Organic Depot

தேனி Yazh Institute of Carving Vegetables & Fruits ஸ்டால் நுழைந்தவுடன் இருக்கிறது. காய்கறிகளில் கலை உணர்வை காட்டியிருந்தார்கள். நிறைய கல்யாண கேட்டரர்கள் கூட விசாரித்து கொண்டிருந்தார்கள்.


காய்கறி கணேசர் 

பரங்கியில் இசை வெள்ளம் கேட்டேன் 
பரங்கியில் தியாகய்யர்

Saturday, 21 December 2013

நானறியா மார்கழி

மைலாப்பூரில் மார்கழி பஜனை 





மாதங்களில் மார்கழிக்கு தனி சிறப்புகள் பல உண்டு. "   மாதங்களில் நான் மார்கழி " என்று பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா அருளினார். மாணவர்களுக்கு கோடை விடுமுறை போல, குடும்ப சுமைகளில் சிக்கி தவிக்கும் சராசரி மனிதர்கள், குடும்ப கடமைகளை மறந்து ஆன்மீகத்தில் திளைக்கும் மாதம் மார்கழி. அதனால்தான் போலும் திருமணம் போன்ற நிகழ்வுகளை இந்த பீடுடை மாதத்தில் வைப்பதில்லை.



மார்கழி அதிகாலை பொழுதில் மைலாப்பூர் எப்படி இருக்கிறது பார்த்து வரலாம் என கிளம்பினேன்.



மாட வீதிகளில் சுற்றிய பொது இரண்டு பஜனை குழுக்கள் இசைத்த பகவான் நாமாவளி கேட்கும் பாக்கியம் கிடைத்தது.



மைலாப்பூரில் மார்கழி பஜனை 


நமது கலாச்சாரத்தில் மார்கழி அதிகாலை பஜனை முக்கியமானது. எல்லா ஊர்களிலும் பஜனை கோஷ்டியினரை காண முடியும். அனைத்து வீதிகளிலும் வலம் வரும் பஜனை கோஷ்டிக்கு வீட்டு வாசலில் நின்று வரவேற்புகொடுத்து காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் வாங்குவார்கள்.


மார்கழி பூ 



அது மட்டுமா? வீட்டு வாசலில் அழகிய பெரிய கோலங்கள்...கோலத்தின் நடுவில் சாணி உருண்டையில் பரங்கி பூ வைத்து அலங்காரம்....கார்த்திகை மாத கடைசியிலே மாதம் முழுதும் பரங்கி பூ போடலாமா என்று கேட்டு வருவார்கள். சொற்ப பண செலவில் மார்கழி முழுதும் பரங்கிபூ வீடுதேடி வந்து விடும்.


மார்கழி  கோலம் 


மார்கழி  கோலம் by யுவனிகா 
யார் வீட்டு கோலம் அழகு என்று ஒரு அறிவிக்கப் படாத போட்டியே நடக்கும்.

மார்கழி அதிகாலை, வீதிகளில் நடந்தாலே ரம்மியமாக இருக்கும்.

இடைவிடாத பஜனை கோஷ்டிகளின் வருகை....பல் கிட்டிப் போகும் குளிரில் பச்சை தண்ணீரில் குளித்து, பொழுது புலரும் முன் கோயிலுக்கு செல்வது ஆனந்தம். பெருமாள் கோவில் வெண் பொங்கல் பிரசாதத்தை நினைக்காமல் இருக்க முடியவில்லை. தூக்கலான மிளகு காரத்தில், நெய்யொழுகும் அந்த பிரசாதம்....வீட்டில் நம்மால் செய்ய முடியாத அற்புதம். குளிர் காலத்தில் மிளகு சேர்ப்பது நம்மை குளிர்கால நோய்களில் இருந்து காக்கும்.

இன்று பஜனை கோஷ்டியோடு நடந்தேன். மனதுக்கு இதமாக இருந்தது. 

கோலங்களும் பரங்கி பூவும் மிஸ்ஸிங்.

குறைந்தது ஐந்து பஜனை குழுக்கள் மைலாப்பூரில் பஜனை பாரம்பரியத்தை காத்து வருகின்றன. 

கோலங்கள் போட்டு, பரங்கிபூ அலங்காரத்திற்கும் யாராவது மெனக்கெட்டால் நல்லது. நல்லவை என்றும் தொடர வேண்டும்.

வேகமாய் சுழலும் கால சக்கரத்தை சில மணித்துளிகள் நிறுத்தி, முன்பு நானறிந்த...இன்று நானறியா மார்கழியை காட்டிய பஜனை குழுவிற்கு நன்றி.
மாட வீதிகளில் மார்கழி பஜனை 

அதிகாலை மார்கழி பஜனை




மார்கழி பஜனை 


மாட வீதி மார்கழி பஜனை 


 மார்கழி பஜனை  ரசனை 


மயிலாப்பூரில்  அதிகாலை குளிரில் மார்கழி பஜனை 


மார்கழி பஜனை  முடிந்ததும் பொங்கல் பிரசாதம் 

                      மிளகு சேர்த்த பொங்கல்  மார்கழி குளிருக்கு நல்லது 

Wednesday, 18 December 2013

இன்றைய சங்கீத கச்சேரியில்........


மியூசிக் அகாடமி பத்மநாபன் கேண்டீன் காபி  க்ளப் 

சங்கீத சீசனின் மிக சிறந்த கேண்டீனுக்கு சென்றிருந்தேன். மியூசிக் அகாடமியில் கொண்டித்தோப்பு பதநாபன் நடத்தும் கேண்டீன். ஸ்டார் ஹோட்டலின் ரூப் கார்டனில் நுழைந்த உணர்வு. மெல்லிய சங்கீத ஒலியுடன் சாப்பாட்டு கடை. சாப்பிட்ட அனைத்திலுமே ஓர் அற்புத சுவை தெரிந்தது. சுவை, அட்மாஸ்பியர் இரண்டையும் கணக்கில் கொண்டால் இந்த 2014 சென்னை மார்கழி சங்கீத சீசனின் சிறந்த உணவகம் என்ற விருதினை பத்மனாபனுக்கே தரலாம்.




சூடான செரோட்டி கீர் ரெடி 


மியூசிக் அகாடமி பத்மநாபன் கேண்டீன்  சூடான செரோட்டி பாதாம் கீர் 


சூடான செரோட்டி பாதாம் கீர் எங்களுக்கு வார்ம் வெல்கம் தந்தது. அவசியம் சாப்பிட வேண்டிய இனிப்பு. அடுத்து ரச வடை. அது ராச வடை. இன்னும் இன்னும் சாப்பிட தூண்டும் சுவை. சூடான வெங்காய பக்கோடா பக்க வாத்தியம் போல் பக்கத்தில் இருந்தது. ஒரு விள்ளல் ரச வடை. வெங்காய பக்கோடா ஒரு கடி. அவ்வளவு எளிதில் சொல்லி விட முடியாது இந்த சுகானுபவத்தை.


மியூசிக் அகாடமி பத்மநாபன் கேண்டீன் பொடி தோசை 


வடை தீர்ந்ததும் மிச்சம் இருந்த ரசத்தில் பக்கோடாவை முக்கி....ரச பக்கோடாவை நாங்களே தயார் செய்து விட்டோம்.  பக்கோடாவும் ரசமும் சுர பேதமில்லாமல் சேரும் என்பதை இன்றுதான் உணர்ந்தேன்.

அரிசி உப்புமா. வீட்டில் மட்டுமே கிடைக்கும் நன்கு குழைந்த அரிசி உப்புமா. இங்கே கிடைத்தது. பொடி தோசை. குறை சொல்ல முடியாது.

நிறைய வாழைபூ வுடன் வாழைபூ வடை.

பில்டர் காபியுடன் மங்களம் பாடினோம். மறக்க முடியாத அசல் பில்டர் காபி சுவை.



கொண்டித்தோப்பு பத்மநாபன் கேண்டீன்

காபி  கச்சேரி 
 கச்சேரி  சமையலறை 

சுட....சுட.....ரவா தோசை 
குடும்பத்துடன் கச்சேரிக்கு....

Tuesday, 17 December 2013

ஜேசுதாஸ் கச்சேரியில்......

தஞ்சாவூர் போளி


இன்று  ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபாவில் ஜேசுதாஸ் பாடினார். மவுண்ட் பேட்டன் மணி ஐயர் சாப்பாட்டுக் கச்சேரிக்கு செல்ல இதுதான் சரியான தருணம். சென்றிருந்தேன். செம கூட்டம். ஏழு வகை ஸ்வீட்டில் தொடங்கி பில்டர் காபி வரை மொத்தம் 38 வகையான சிற்றுண்டிகள். டபுள் டெக்கர் இட்லி, சாக்கலேட் தோசை, மோர்குழம்பு இட்லி, மோர்குழம்பு வடை, இளநீர் இட்லி, குழாபுட்டு, குழி பணியாரம், சாட் கவுண்டர் ......கலக்கல் மெனு. ஏழு வகை ஸ்வீட் என்று சொன்னது இன்றைய மெனு மட்டும்தான். தினம் மாறும் இனிப்பு வகைகளை எண்ணினால் இரண்டு டஜன் தாண்டும்.


வாழை பூ வடை - நல்ல சுவை

தஞ்சாவூர் போளி சாப்பிட்டேன். சாப்பிட வேண்டிய இனிப்பு.

போளி தெரியும். அது என்ன தஞ்சாவூர் போளி? மவுன்ட் பேட்டன் மணி ஐயரின் புதல்வர் திரு. சீனிவாசனிடம் கேட்டேன். 

" பொதுவாக போளி செய்யும்போது இரண்டு வகையான பூரணம் வைப்பார்கள். பருப்பு பூரணம் மற்றும் தேங்காய் பூரணம்.  பருப்பு சேர்த்த பூரணம் வைத்து செய்தால் பருப்பு போளி. தேங்காய் சேர்த்த பூரணம் வைத்து செய்தால் தேங்காய் போளி. நாங்கள் செய்யும் போளியில் அதிக அளவு கடலை பருப்போடு குறைவான அளவில் தேங்காய் சேர்த்து செய்த பூரணம் வைக்கிறோம்.வெல்லம், ஏலக்காயும் உண்டு. அதுதான் தஞ்சாவூர் போளி " என்றார் சீனிவாசன்.

போளி மகாராஷ்டிராவின் சிறப்பு இனிப்பு. மராத்தி அரசர்கள் தஞ்சையை ஆண்டபோது தஞ்சைக்கு வந்த இனிப்பு போளி. சர்க்கரை, தேங்காய் பூரணம் வைத்து, சர்க்கரை பாகில் தோய்த்து எடுக்கப் படும் சுருள் போளியும் தஞ்சை பகுதியில் பிரபலம்.

சங்கீத சக்கரவர்த்திகளின் படங்களுடன் அமர்க்களமான சினிமா செட் போன்ற வடிவமைப்பு.

இனி கல்யாண சாப்பாட்டு பந்திக்கு தோட்டா தரணியை வைத்து செட் போட்டாலும் போடுவார்கள், இந்த கேட்டரிங் காரர்கள்.

நிற்க. அதிக எண்ணிக்கையிலான உணவு பண்டங்கள், சங்கர் படம் போன்ற லொக்கேஷன் ......இதை தாண்டி சொல்லிக் கொள்ளும்படியான சுவையில்லை-சில உணவுகள் தவிர.


காஞ்சிபுரம் இட்லி 


இங்கு சுவை என்று நான் குறிப்பிடுவது நமது பாரம்பரிய உணவுகளின் உண்மையான சுவையை. காஞ்சிபுரம் இட்லியும், தவல வடையும் சாப்பிட்டேன். இலையில் வைத்து கொடுத்த ஜோடனை தவிர, அது  காஞ்சிபுரம் இட்லியே அல்ல. தவல வடையும் ditto. அதை பருப்பு வடை என்று சொல்லி இருந்தால் ஒப்புக் கொள்ளலாம். யாருக்கு வேண்டும் பாரம்பரியம் எல்லாம். அழகிய நாமகரணம், புதுசு புதுசான fusion உணவுகள். கூட்டம் சேர்ந்து விடுகிறது.

பில்டர் காபி அற்புதம். 


அத்தி பழ ஹல்வா 

அத்தி பழ ஹல்வா superb. 


தவல வடை -பாரம்பரிய முறையில் செய்யவில்லை 


விலை தவிர - காபி முப்பது ரூபாய், இனிப்புகள் 50 ரூபாய். காஞ்சிபுரம் இட்லி போன்ற சிறப்பு உணவுகள் (தம்மா துண்டு இட்லி மாவு தான் ஊற்றி இருப்பார்கள்) 70 ரூபாய், மதிய சாப்பாடு 210 ரூபாய், சாப்பாடு பார்சல் 230 ரூபாய் -வேறு எதுவும் சொல்லிக் கொள்ளும் படி இல்லாததால் வெறும் போட்டோ கேலரி மட்டும்.

சாப்பிட வாங்க



சமையலறை 


சாப்பாட்டு கச்சேரி
குழா புட்டு கவுண்டர் 
சாட் கவுண்டர்

சாப்பாடு பலே...பலே...

குழா புட்டும் குழி பணியாரமும் 

Sunday, 15 December 2013

மீண்டும் சங்கீத சபாவில்.........




ஜெய ராகவேந்திரா (சென்னை கல்சுரல் அகடமி) ப்ரூட் ஹல்வா
(பழ அல்வா)

       இன்று கச்சேரிக்கு விடுமுறை விடலாம் என்றுதான் நினைத்திருந்தேன்.   " ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது"   என்பார்கள். நிஜம்தான் போலும். மதியம் வாணி மகாலில் (மேற்கு மாம்பலம் ஞானாம்பிகா) இருந்தேன். முழு சாப்பாடு. 120 ரூபாய். இரண்டு வருடங்களுக்கு முன் இதே ஞானாம்பிகாவில் சாப்பாடு அவ்வளவு சுகமில்லை. அதற்குப்பின் அங்கே மதிய வேளையில் செல்வதில்லை. இந்த வருடம் அப்படியில்லை.



           அருமையான கல்யாண தளிகை. பருப்பும், வடையும்தான் மிஸ்ஸிங். அதை ஜனவரி 1 முஹூர்த்த சாப்பாட்டில் பார்த்துக் கொள்ளலாம்.



             பால் பாயசம், புடலங்காய் பொரிச்ச கூட்டு, கத்தரிக்காய் காராமணி கூட்டு, அவரைக்காய் கறியமுது, அளவில்லா சாதம், வெண்டைக்காய்  பருப்பு குழம்பு, சௌ சௌ மோர் குழம்பு,  கல்யாண ரசம், அப்பளம், கெட்டி மோர், பல காய் ஊறுகாய், பீடா - அப்படியே நம்மாத்து ருசி. ரசம் இலையில் ஓட, இலை ஓரத்தை மடக்கி பிடித்து, அத்தனை ரசத்தையும் உறிஞ்சு முடிச்சு......இதெல்லாம் அனுபவிச்சு ரொம்ப நாளாச்சு. வீட்டில் தட்டு சாப்பாடு. கல்யாண அழைப்புகளுக்கு மாலை ரிசப்ஷன் buffet க்குதான் போக முடிகிறது.

                    எங்கள் வீட்டில் வாரம் ஒருமுறை மோர்குழம்பு, பருப்பு உசிலி, மாதம் ஒருமுறை பொரிச்ச கூட்டு உண்டென்றாலும் .....இவை அனைத்தையும் ஒரே வேளையில் சாப்பிடுவது ஓர் அனுபவம்தான். 

          தேங்காய் போட்ட சிம்பிள் அவரைக்காய் பொறியல். அவரைக்காயின் பச்சை நிறம் மாறாமல் இருந்தது. அது மட்டும் இல்லை அவரைக்காய் துவண்டு, சுருண்டு போகாமல் பச்சை காய் போலவே இருக்க வேண்டும். சாப்பிடும்போது மென்மையாக இருக்க வேண்டும். அதுதான் நல்ல அவரைக்காய் கறியமுதின் இலக்கணம். அப்படியே இருந்தது.



                                                                                                               
              முன்பெல்லாம் காஞ்சிபுரத்து சமையல் ஒரு சுவையில் இருக்கும்.
தஞ்சை மண்ணின் கைமணம் வேறுமாதிரி இருக்கும். சென்னையில் வீட்டு சமையலுக்கு கூட ஒரு cosmopolitan சாயம் வந்து விடுகிறது. வெளியே சாப்பிட்டாலும் அச்சில் வார்த்தெடுத்த பொம்மை போல் ஒரே சுவை. Standardisation, quality control எல்லாம் corporate sector க்கு O.K. அது சமையலில் நுழைவதுதான் சகிக்கவில்லை.ஹோட்டல் சரவண பவன் சென்று பாருங்கள். எந்த கிளையில் சாப்பிட்டாலும், என்றைக்கு சாப்பிட்டாலும் சுவை மாறாது. இதில் ஒருவித சலிப்பு வந்துவிடுகிறது. சென்னையின் சங்கீத சீசன் இந்த சலிப்பிலிருந்து தற்காலிக விடுதலை தருகிறது.

                   சாயங்காலம் சென்னை கல்சுரல் அகடமியில் ஜேசுதாஸ். நல்ல கூட்டம்.... ஜெய ராகவேந்திராவில். ஜேசுதாஸ் கச்சேரி அன்று நிறைய வெரைட்டி உண்டு என்று இரண்டு நாட்களுக்கு முன்னரே சொல்லி விட்டார்கள். அப்புறம் அங்கு நான் இல்லை என்றால் எப்படி?

                       ப்ரூட் ஹல்வா (பழ அல்வா)வுடன் இனிய மாலை பொழுது துவங்கியது. அவசியம் சாப்பிட வேண்டிய இனிப்பு. அப்புறம்...அவல் பிசிபேளாபாத். ஒரு நல்ல மாறுதலான சுவை. அல்வாவும், அவல் பிசிபெளாபாத்தும் சாப்பிட்டால் போதும். அடுத்த 12 மணி நேரத்திற்கு பசிக்காது. Sumptuous food.


ஜெய ராகவேந்திரா (சென்னை கல்சுரல் அகடமி) அவல் பிசிபேளாபாத் 

                         இன்னமும் இரண்டு கச்சேரி பாக்கி இருக்கிறது. போகாவிட்டால் மவுண்ட்பேட்டன் மணி ஐயரும் (ஸ்ரீ பார்த்தசாரதி சபா), கொண்டித்தோப்பு பத்மநாப ஐயரும் (மியூசிக் அகாடமி) கோபித்து கொள்வார்கள். நீரு தோசை மற்றும் திரட்டுபாலுடன் காத்திருக்கிறார்கள். சென்று வந்தபின் சந்திக்கிறேன்.

Saturday, 14 December 2013

சங்கீத சாப்பாடு தொடர்கிறது........

நாரத கான சபாவில் ஞானாம்பிகா கேண்டீன் 
இன்று சாப்பாட்டுக் கச்சேரி விமர்சனம் செய்பவர் திருமதி. ஸ்ரீவித்யா ராமன்.

என்ன ஆயிற்று சென்னை சபாக்களுக்கு? மீனாம்பிகாவின் சாப்பாட்டுக் கச்சேரி நடக்கும் மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் சபாவில் கட்டண கச்சேரி நடக்கும் நேரங்களில், கச்சேரி கேட்க வருபவர்களுக்கு மட்டும்தான் கேண்டீன் செல்ல அனுமதி என்கிறார்கள். ஆக சனி, ஞாயிறு என்றால் மாலை 4 மணியிலிருந்து 8 மணி வரை இசை ரசிகர்களுக்கு மட்டும்தான் மீனாம்பிகா.

பிரம்ம ஞான சபாவிலும் இதே நிலைமைதான். 

சாப்பாட்டு கச்சேரி ரசிகர்கள் என்ன செய்வார்கள் என்று யோசிக்க மாட்டார்களா? 

 அடுத்த வருடமாவது இந்த கெடுபிடிகளை தளர்த்துவார்களா இந்த சபாக் காரர்கள்? அப்படி செய்தால் அவர்களுக்கு B.P., sugar, cholesterol இல்லாது, எல்லா உணவையும் ரசித்து சாப்பிடக் கூடிய வரம் அருள்வாள் அன்னபூரணி அன்னை.

நிற்க. இன்று ஞானாம்பிகாவின் கச்சேரி நாரத  கான சபாவில் ஆரம்பம். ஞானாம்பிகா N. ஜெயராம ஐயரின் புதல்வர்கள் J. ரமேஷ், J. விட்டல் ஆகிய இருவரும் நடத்தும் ஞானாம்பிகா இது. தினம் ஒரு menu பட்டியல் போட்டு அசத்துகிறார்கள். உணவு பிரியர்களுக்கு வேட்டைதான். மதியத்திலிருந்தே வயிற்றை காயப் போட்டு, மாலை 4 மணிக்கு உள்ளே நுழைந்தால் வாசலிலேயே அபஸ்வரம் ...." கச்சேரி பாஸ் வைத்திருப்பவர்களுக்கு மட்டும்தான் கேண்டீன் செல்ல அனுமதி"   என்று.


ஆனால் நாங்கள் உள்ளே சென்று விட்டோம்.

குங்குமம், சந்தனம், பன்னீர் சொம்பு என்று வாசலிலேயே அசத்துகிறார்கள்.

சுத்தம், வெரைட்டி, நல்ல சுவை, சுகமான கவனிப்பு இவற்றில் ஞானாம்பிகா Simply Superb.




முதலில் காசி அல்வா சாப்பிட்டோம். கல்யாண வீட்டு மாலை டிபன். கிண்ணத்தில் உள்ளே குதித்து நக்காததுதான் பாக்கி. அவ்வளவு சுவை.

நாரத கான சபா ஞானாம்பிகா காசி ஹல்வா 

அப்புறம்.....இடியாப்பம். கத்தரிக்காய் புளி மண்டி side dish. பொதுவாக இட்லி, இடியாப்பம் இரண்டும் side dish ஐ பொறுத்துதான் உள்ளே இறங்கும். இங்கே நிமிடத்தில் தட்டு காலி. நன்றி கத்தரிக்காய் புளி மண்டிக்கு.

கத்தரிக்காய் புளி மண்டி 
இடியாப்பம் கத்தரிக்காய் புளி மண்டி 


வாழைக்காய் பஜ்ஜி. வழக்கமான சுவை. குறிப்பிட்டு சொல்ல எதுவுமில்லை.

அவல் பொங்கல் 

அவல் பொங்கல். புதிதாய் தெரிந்தது. அச்சு அசலாய் வெண் பொங்கல் சுவை. அவலை வைத்து நன்றாக செய்திருந்தார்கள்.

கடைசியாக பில்டர் காபி.   பொதுவாக நல்ல காபி குடித்து முடித்ததும் அடி நாக்கில் ஒரு கசப்பு தட்டும். வெறுக்கும் கசப்பல்ல. அது ரசிக்கும் கசப்பு. நாக்கை சுற்றிக் கொண்டே இருக்கும். அந்த taste ஐ மிக சரியாக கொண்டு வந்திருந்தார்கள். 

அடுத்ததாக கை அலம்பும் இடம். நான் பார்த்த வரை கை அலம்பும் இடம் இவ்வளவு சுத்தமாக இருப்பது இங்கு மட்டும்தான்.

ரியல் எஸ்டேட் காரர்கள் மாடல் வீடு கட்டி, அதை காட்டி marketing செய்வார்கள். அதுபோல கல்யாண கேட்டரிங் எப்படி செய்வார்கள் என்பதற்கு ஒரு மாடல் போல் சபா கேண்டீன் ஐ நடத்தி காட்டுகிறார்கள் ஞானம்பிகா காரர்கள்.

ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்றால்.....காசி அல்வா பிளாஸ்டிக் தட்டில் வைத்தார்கள். மற்ற டிபன் ஐடம்ஸ், வாழை இலையில் பரிமாறியது போல் காசி அல்வாவையும் வாழை இலையில் பரிமாறி இருக்கலாம்.

சென்ற வருடம்போல் இந்த வருடமும் ஞானாம்பிகா முதல் இடத்தை தக்க வைப்பது உறுதி.

ஆற்காடு மக்கன் பேடா, தவலை  வடை - இப்படி இனிவரும் நாட்களில் ஏகப் பட்ட menu வகைகள் வைத்திருக்கிறார்கள். 

வாட்ச்மேன் கண்ணில் மண்ணை தூவி விட்டு எப்படி உள்ளே நுழைவது என்பதுதான் யோசிக்க வேண்டிய விஷயம். 

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...