Monday, 19 May 2014

சாப்பிடுவோமா....சமைக்காத உணவு...

இயற்கை வாழ்வியல் பயிற்சி மையம், பெருகமணி, திருச்சி மாவட்டம் 
கடும் கோடையிலும் கணுக்கால் நனைக்கும் தண்ணீர் ஓடும் நதிக் கரையோரம்....வாழை, மா, பப்பாளி என பலவித பழவாசனையோடு அடர்ந்த நிழல் தரும் மரங்கள். மரங்களுக்கு மத்தியில் சிறிய குடில். இதுதான்...திருச்சி மாவட்டத்தில், காவிரி கரையில் அமைந்த 
பெருகமணியில் இருக்கும் இயற்கை வாழ்வியல் பயிற்சி மையம்.



திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து, கம்பரசம் பேட்டை, முக்கொம்பு வழியாக, கரூர், ஈரோடு செல்லும் மெயின் ரோட்டில் இருந்து இந்த பாலத்தின் வழியாகத்தான் இயற்கை வாழ்வியல் பயிற்சி மையத்திற்கு செல்ல வேண்டும்.


Fr. Jacob

கிறிஸ்தவ அறக்கட்டளையால் நடத்தப் பட்டு வரும் பெருகமணி இயற்கை வாழ்வியல் பயிற்சி மையத்தின் பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார் Fr. Jacob. சமைக்காத இயற்கை உணவே மருந்தாகிறது. இதுதவிர மண் குளியல், நீராவி குளியல் ஆகிய மருத்துவ முறைகளும் பின்பற்றப் படுகின்றன. "பஞ்ச பூத சக்திகளும் மருத்துவத்தில் பயன்படுகின்றன" என்கிறார் Fr. Jacob. இங்கேயே தங்கி இயற்கை மருத்துவம் பெரும் வசதி உண்டு. தங்கும் இடத்தின் சூழலே பாதி மருந்தாகி விடும். இதுதவிர, மாதம் ஒருமுறை இரண்டாம் சனிக் கிழமையில் "இயற்கையோடு இணைந்த வாழ்வு" குறித்த ஒருநாள் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இதற்கான பயிற்சி கட்டணம்  75 ரூபாய்தான். வருடம் ஒருமுறை மே மாதத்தில் ஐந்து நாள் பயிற்சி வகுப்பும் நடத்தப் படுகிறது.



10-05-2014 அன்று நடைபெற்ற பயிற்சி வகுப்புக்கு எனது நண்பர் திரு. கணேசன் என்னை அழைத்துச் சென்றார். முனைவர். வை. குமாரவேல் (சாகாதேவன்) பயிற்சி வகுப்பை நடத்தினார். இயற்கை வாழ்வியல் குறித்த பல புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளார் முனைவர். வை. குமாரவேல் (9790120195). பச்சை அரிசி சாப்பாட்டில்தான், புழுங்கல் அரிசியை விட கால்சியம் சத்து அதிகம் உள்ளது என்றார். மலச் சிக்கலும், செரிமான பிரச்சினையும் இல்லாமல் பார்த்துக் கொண்டாலே மருத்துவரை அணுக வேண்டிய அவசியம் இருக்காது என்றும் கூறினார். மருந்துகள், மருத்துவர் தேவையில்லாத வாழ்வே நல்வாழ்வு என்பது சுருக்கமாக அவர் சொல்ல விரும்புவது. 


சாப்பாட்டிற்குப் பின் வாழைப் பழம் சாப்பிடுவதை தவிர்த்து, பேரிச்சம் பழம் அல்லது உலர் திராட்சை சாப்பிட்டால் செரிமானத்திற்கு நல்லதாம். 

எண்ணெயில் பொறித்த பதார்த்தங்களுக்கு நூறு சதவீதம் "NO" சொல்ல வேண்டும் என்கிறார். நம் உடலில் செரிமானம் மூன்று நிலைகளில் நடைபெறுகிறது. அவை உமிழ்நீர், இரைப்பை மற்றும் சிறுகுடல் ஆகும். பொதுவாக மாவுப் பொருள்கள் உமிழ்நீரில் செரிமானம் ஆகும். புரோட்டின் பொருள்கள் இரைப்பையில் செரிமானம் ஆகும். ஆனால் எண்ணெயில் பொறித்த பதார்த்தங்கள் சிறுகுடலில்தான் செரிமானம் ஆகும். அதனால் உடலில் ஒருவித மந்த தன்மை (சோர்வு) ஏற்படும். 

உணவை .....இயற்கை உணவு, நயப்படுத்திய உணவு, பதப்படுத்திய உணவு  என மூன்று வகையாக பிரிக்கிறார். சமைக்காத இயற்கை காய் கனிகள் இயற்கை உணவு வகையில் வரும். சமைத்த உணவுகள் நயப் படுத்திய உணவுகளாகும். Fast food, junk food என அழைக்கப் படும் துரித உணவுகள் மூன்றாவது வகையில் வரும். இவை அறவே தவிர்க்கப் பட வேண்டிய உணவுகளாகும்.

பயிற்சி வகுப்பின்போது சில உணவு recipeகளும் சொன்னார்.

உலர் திராட்சையை முதல்நாள் இரவே மூழ்கும் அளவு தண்ணீரில் ஊற வைத்து விட வேண்டும். காலையில் ஊறிய உலர் திராட்சையுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட வேண்டும். இவ்வாறு  சாப்பிட்டால் மலச் சிக்கல் நம்மை அண்டாது.

கோதுமை தோசைக்கு, பட்டாணி, பாசி பயறு, உருளை கிழங்கு சேர்த்த side dish செய்து சாப்பிடலாம். ஆரோக்கியத்திற்கு உகந்தது.



பயிற்சிக்கு இடையில் காலை பதினோரு மணிக்கு இயற்கை பானகம் தந்தார்கள். சுவை நன்றாக இருந்தது.


சமைக்காத உணவுகள் 

மதிய உணவு இடைவேளையில் சமைக்காத உணவு தந்தார்கள். தர்பூசணி துண்டுகள், நறுக்கிய பச்சை வெண்டைக்காய் துண்டுகள், வெள்ளரி, முள்ளங்கி, கேரட் வில்லைகள், பேரிச்சம் பழங்கள், தேங்காய் பத்தை, தேங்காய் துருவல், முளைகட்டிய வேர்க் கடலை, கார அவல், இனிப்பு அவல், கதம்ப காய்கறிகள் ஆகியவை கொடுத்தார்கள். இவை மட்டுமே மதிய உணவு. சமைத்த உணவு எதுவும் இல்லை. ஆனாலும் வயிறு நிரம்பியது. மாலை வரை பசி உணர்வே இல்லை.


தர்பூசணி, வெண்டைக்காய், கேரட் 
இனிப்பு அவல், கார அவல், கதம்ப காய்கறி 
வெள்ளரி, பேரிச்சை, தேங்காய், முளை கட்டிய வேர்க் கடலை 
மேலே சொன்னவற்றில் .......கதம்ப காய்கறி செய்முறைதான் முக்கியமானது. புடலங்காய், சௌ சௌ, வெள்ளரி, முட்டைகோஸ், கேரட், துருவிய தேங்காய் ஆகியவற்றோடு உப்பு, மிளகு, சீரக தூள், கொத்தமல்லி தழை, கருவேப்பிலை ஆகியவை சேர்த்து செய்கிறார்கள்.

இதில் முக்கிய குறிப்பு, தேங்காய், கேரட் தவிர மற்றவற்றை துருவ கூடாது. அரிய வேண்டும். துருவினால் நீர் விட்டுப் போகும். முடிந்த வரையில் பொடிப் பொடியாக அரிய வேண்டும்.

இனிப்பு அவலில் ஊற வைத்த அவலோடு, பேரிச்சை, முந்திரி, உலர் திராட்சை (அனைத்தும் பொடியாக நறுக்கியது), ஏலக்காய், நாட்டு சக்கரை சேர்க்கிறார்கள்.

கார அவலில், ஊற வைத்த அவலோடு உப்பு, மிளகு, சீரக தூள் சேர்க்கிறார்கள்.



தொடர்புக்கு: Fr. ஜேக்கப், இயற்கை வாழ்வியல் பயிற்சி மையம், பெருகமணி (Post), திருச்சி - 639 115.
தொலைபேசி : 0431-2902961
அலைபேசி : 94431 64945.

Sunday, 18 May 2014

தூதுவளை ரசம்

தூதுவளை ரசம் 


தூதுவளை ரசம் செய்ய 

தேவையான பொருள்கள் 

தூதுவளை  இலை - -  2 பிடி (ஆய்ந்து                                                சுத்தம் செய்தது)

ரசப் பொடி-1 ஸ்பூன் 
புளி- எலுமிச்சை அளவு
துவரம் பருப்பு - 2 ஸ்பூன் 
மிளகு  சீரக தூள் -1/2 ஸ்பூன் 
தக்காளி -1                
                                                                                    நெய்         - 1 ஸ்பூன் 
                                                                    உப்பு  - தேவைக்கு




                                                  


தூதுவளை காம்பு, இலையின் இரு பக்கங்கள் என எங்கு பார்த்தாலும் முட்களாக இருக்கும். கவனமாக முட்களை நீக்கி பயன்படுத்த வேண்டும். தூதுவளை இலையினை ஆய்ந்து எடுக்க கத்தரிக்கோல் பயன் படுத்தலாம். மூலிகை கீரை, மருந்து பொருள் என வேறுபடுத்திப் பார்க்காமல், நாம் அன்றாட சமையலில் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒன்று தூதுவளை.

தூதுவளை ரசம், தூதுவளை அடை, தூதுவளை நெய் வதக்கல் என பலவிதங்களில் இதை சமையலில் பயன்படுத்தலாம்.

நெஞ்சு சளியை நீக்கக் கூடியது தூதுவளை.




தூதுவளை கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து கொள்ளவும். துவரம்பருப்பை நன்கு வேகவைத்து சிறிது நீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். ஆய்ந்த தூதுவளை கீரையை  அரை டம்ப்ளர் நீர் விட்டு, மிக்சியில் போட்டு, நன்கு அரைத்து,  வடிகட்டி  வைத்துக்கொள்ளவும். புளியை நன்கு கரைத்து புளி ஜலத்தை அடுப்பில் வைத்து, உப்பு, மஞ்சள் பொடி, ரசப்பொடி சேர்த்து கொதிக்கவிடவும். தக்காளியை வெட்டிப் போடவும். பொடிவாசனை போகும் வரை கொதித்தபின்........ பருப்பு ஜலத்தை சேர்க்கவும். அதனுடன் வடிகட்டி வைத்திருக்கும் தூதுவளை சாறையும் சேர்க்கவும். இதனுடன் மிளகு, சீரக பொடியையும் சேர்த்து...... அடுப்பை சிம்மில் வைத்து விடவும். நுரைத்து வரும்பொழுது, அடுப்பை அணைத்து விடவும். 

கொதித்தால் கசந்து போய்விடும்.  

ஒரு கடாயில் சிறிது நெய் விட்டு, கடுகு, பெருங்காயம் தாளித்து கொட்டவும். 

தூதுவளை ரசம் ரெடி.

                              தூதுவளை ரசம் ரெடி                                      

Thursday, 15 May 2014

சித்ரா பௌர்ணமி


Guest Post by Srividya Raman:

நேற்று (14-05-2014) சித்ரா பௌர்ணமி. அதாவது சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி. தமிழ் மாதங்களில் வரும் ஒவ்வொரு பௌர்ணமி முழு நிலவு நாளுக்கும் ஒரு விசேஷம் உண்டு. சித்திரை மாதம் சித்திரா பௌர்ணமி. வைகாசி விசாகம், ஆவணி அவிட்டம், ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம்,  தை பூசம், பங்குனி உத்திரம் என்று முழு நிலவு நாளில் இறைவன் சம்பந்தமாக ஏதாவது செய்வார்கள். அதன்படி இன்று சித்ரா பௌர்ணமி.  ஆற்றங்கரையோர  கிராமம் மற்றும் நகரங்களில் வசிப்பவர்கள் வீட்டில் சிற்றன்னங்களை தயாரிப்பார்கள்.  மாலை வேளையில் நண்பர்கள் உறவினர்கள் எல்லோருமாக ஆற்றங்கரைக்கு  சென்று  உண்டு மகிழ்வார்கள்.



நகரத்தில் வசிக்கும் நாம் என்ன செய்யலாம்?  

மனமிருந்தால் மார்க்கமுண்டு. எங்கள் அடுக்ககத்தில்  நேற்று MOONLIGHT DINNER. 

பொங்கல் - சட்னி,  எலுமிச்சை சேவை,  ரவை கேசரி,  சேமியா கேசரி,  சப்பாத்தி - குருமா,  இட்லி - சாம்பார் என எல்லாவற்றையும் 


தயார் செய்து மொட்டை மாடியில் நிலவொளியில் அமர்ந்து உண்டோம். என்ன ஒன்று..... ஆற்றின் மணல்வெளிக்கு பதிலாக மொட்டை மாடியின் தண்ணீர் தொட்டி. அவ்வளவுதான். முடிந்தவரை பழைய சம்பிரதாயங்களை கடை பிடிக்க முயற்சி செய்யலாமே. 



சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு எங்கள் தெருவில் இரவு பதினொன்றரை மணிக்கு வந்த மதுரை வீரன் தரிசனம் இதோ உங்களுக்காக. நல்ல உடல் நிலையில் இருப்பவர்கள் இறைவனை தேடி கோயில்களுக்கு செல்லலாம். மாற்று திறனாளிகளுக்கும் ,வயசாளிகளுக்கும் இறைவனே தேடி வந்து தரிசனம் தருவதுதான் சுவாமி வீதி உலாவின் தாத்பர்யம். 


photos: srividya raman

Monday, 5 May 2014

அப்பம்

அப்பம் 
' தலைவாழை விருந்து '  துவங்கி,  நேற்றுடன் ஒரு வருடம் நிறைவு பெற்றது.      இன்று முதல் (05-05-2014) இரண்டாம் வருடம் துவங்குகிறது. ஆதரவு அளித்துவரும் அனைவருக்கும் நன்றிகள். இரண்டாம் வருடத்தை இனிப்புடன் துவங்குவோமே என்ற எண்ணத்தில் அப்பம் இனிப்பு ரெசிப்பி தருகிறேன். 

அப்பம்....எளிய, பாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்று. பண்டிகை தினங்களில் என் அம்மா கட்டாயமாக செய்யும் இனிப்பு... அப்பம். அரிசி,கொஞ்சம் உளுந்து ....வெல்லம்...அவ்வளவுதான். ஊற வைத்து, அரைத்து... நல்லெண்ணெய்யில் பொறித்து எடுத்து விடுவார் என் அம்மா. நொடியில் ரெடி என்பார்களே. அப்படிப்பட்ட தயாரிப்பு அப்பம். பின்னாளில் தேங்காய் சேர்க்கும் வழக்கம் ஏற்பட்டது. தேங்காய் சேர்த்தால் உளுந்து தேவையில்லை.


தேவையான பொருள்கள் 

பச்சை அரிசி -1 கப்
வெல்லம்       -3/4 கப்
தேங்காய்       -5கீறல்கள் 
ஏலக்காய்       - சிறிது
நல்லெண்ணெய் -பொரிக்க 





எப்படி செய்வது?


பச்சரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும். mixieல் அரிசி, தேங்காய் துருவல் இரண்டையும் நன்கு அரைக்கவும். கடைசியாக வெல்லம், ஏலக்காய் சேர்த்து ஒரு சுற்று சுற்றி ....வேறு பாத்திரம் மாற்றிக்கொள்ளவும்.  உடனடியாக  அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, சூடானதும் குழி கரண்டியில் மாவை எடுத்து நடுவாக ஊற்றவும். மூழ்கிய அப்பம் மேலெழுந்து வந்ததும் ஜல்லி கரண்டியால் திருப்பி விடவும். லேசாக கரண்டியால் அழுத்திவிட்ட்டால் நன்கு வெந்துவிடும். ஒரு பாத்திரத்தில் எடுத்துப் போட்டு ஆறியதும் சாப்பிடவும். 

அரைத்த மாவு உடனடியாக பயன்படுத்த வேண்டும். தாமதமானால் எண்ணெய்  நிறைய குடிக்கும். taste வராது.


அப்பம் மாவு 
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு படுத்தவும் 
ஒரு கரண்டியில் அப்ப மாவு எடுத்து கொதிக்கும் எண்ணெயில் ஊற்றவும் 
வெந்ததும் திருப்பி விட்டு வேக வைக்கவும் 
அப்பம் ரெடி 
குழிப் பணியார கல்லில் செய்தால் குறைவான எண்ணெய் போதும். எண்ணெய்க்கு பதில், நெய்யில் பொரித்தால் அது நெய் அப்பம். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்சில் அப்படித்தான் செய்கிறார்கள். கொஞ்சம் திகட்டும். மாவில் சிறிது நெய் விட்டு பிசைந்து, எண்ணெயில் பொரித்து எடுப்பதும் உண்டு.

அரிசி மாவை கெட்டியாக அரைத்து, பருப்பு, தேங்காய் பூரணம் உள்ளே வைத்து, பொரித்து எடுத்தால் அது சுய்யம் அல்லது சிய்யம். கேரளாவின் உன்னியப்பம் ஏறக்குறைய இதே போன்ற ஓர்  இனிப்புதான். அங்கே வாழைப் பழமும் சேர்த்து அரைப்பார்கள்.

இதே அப்பத்தை கடலை மாவு அல்லது கோதுமை மாவு பயன் படுத்தியும் சிலர் செய்கிறார்கள். அப்படி செய்யும்போது கொஞ்சம் அரிசி மாவும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கார்த்திகை அன்று கட்டாயம் அப்பம் செய்வார்கள். அதனால் அப்பத்தை கார்த்திகை அப்பம் என்றும் சொல்வார்கள்.

Saturday, 3 May 2014

முட்டைகோஸ் அடை

முட்டைகோஸ் அடை



முட்டைகோஸ் வடை (cabbage vada) சாப்பிட்டிருப்பீங்க........ முட்டைகோஸ் அடை ? வாங்க சாப்பிடலாம்.....


முட்டைகோஸ் - 2 கப் 
(பொடியாக நறுக்கியது)

புழுங்கல் அரிசி - 1 கப் 
பச்சை அரிசி - ஒரு பிடி 
துவரம் பருப்பு - 1/2 கப் 
உளுத்தம் பருப்பு - 1/4 கப் 
கடலை பருப்பு - ஒரு பிடி 
பாசி பருப்பு 1/4 கப்
நல்லெண்ணெய் - அடை வார்க்க 
பெருங்காயம் - சிறிது 
வர மிளகாய் - 10
உப்பு - தேவைக்கு 



அரிசி, பருப்புகளை ஒன்றாக போட்டு ஊற வைக்கவும். வற்றல் மிளகாய், கட்டி பெருங்காயம் இரண்டையும் தனித் தனியாக ஊற வைக்கவும்.

மூன்று மணி நேரம் கழித்து, முதலில் வர மிளகாயை நைசாக அரைக்க வேண்டும். ஒரு கைப்பிடி அளவு அரிசி சேர்த்து அரைத்தால் வர மிளகாய் நன்கு மசியும். 

அதற்குமேல் அரிசி, பருப்புகள், பெருங்காய கரைசல் சேர்த்து கொர கொரப்பாகவும், கெட்டியாகவும் அரைக்கவும். தண்ணீர் குறைவாக சேர்த்து அரைக்க வேண்டும்.

இப்போது அடை மாவு தயார்.





பொடியாக நறுக்கிய முட்டைகோஸை அடை மாவில் சேர்த்து நன்கு கலக்கவும்.





அடை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு, எண்ணெய் சூடானதும் இரண்டு கரண்டி அடை மாவை ஊற்றவும்.                                      






ஒரு கரண்டியால் லேசாக தேய்க்கவும்.









ஒரு தட்டை போட்டு மூடி நன்கு வேக வைக்கவும்.






திருப்பி போட்டு இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு வேக வைக்கவும்.
முட்டைகோஸ் அடை ரெடி 


நிறைய  முட்டைகோஸ் சேர்ப்பதால், இது நார்ச்சத்து  மிகுந்த உணவாகிறது. சர்க்கரை நோய், உடல் பருமன் உள்ளவர்கள் கூட பயமில்லாமல் அதிகமாக உட்கொள்ள ஏற்ற  உணவு முட்டைகோஸ் அடை. முட்டைகோஸ் வயிறு புண்ணுக்கு நல்லது. முட்டைகோஸ் பொரியல் செய்து சாப்பிட்டு அலுத்துப் போனவர்கள் ஒரு மாறுதலுக்கு முட்டைகோஸ் அடை செய்து பாருங்களேன்.

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...