Friday, 22 November 2013

கருவேப்பிலை பொடி

கருவேப்பிலை பொடி 



கருவேப்பிலை - 2 பிடி 

உளுத்தம் பருப்பு - 100 கிராம் 

கடலை பருப்பு -2 ஸ்பூன் 
மிளகு - 1 ஸ்பூன் 
வர மிளகாய் - 4
வெந்தயம்  - 8-10


உப்பு - தேவைக்கேற்ப                                                                                                                                                                                                                                                                                                                    
                                                            
கருவேப்பிலை பொடி - செய்முறை:
                                                            


உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, மிளகு, வரமிளகாய், பெருங்காயம் இவற்றை நன்கு சிவக்க வறுக்கவும். இறக்குவதற்கு சற்று முன்பாக கறிவேப்பிலை இலைகளும் சேர்த்து நன்கு வறுக்கவும்,. இறக்கி வைத்து ஆறியதும் தேவையான உப்பு சேர்த்து மிக்சியில், கொர கொரப்பாக  அறைக்கவும். 
  
வறுத்த உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, மிளகு, வரமிளகாய், பெருங்காயம், கருவேப்பிலை 


கருவேப்பிலை பொடி ரெடி 

                                                                                                                                       
கருவேப்பிலை பொடி - பயன்கள்: 
                                                                                                                    
                                                                              

சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு, கருவேப்பிலை பொடியை போட்டு சாப்பிட்டால் வயிற்று கோளாறுகள் நீங்கும். தலை முடி உதிர்வது குறையும். முடி நன்கு நீளமாக வளரும்.    கண் பார்வை பலம் பெரும்.

நல்ல  சுவையாக இந்த பொடியை செய்ய விரும்புபவர்கள், அடுப்பை சிம்மில் வைத்து நிதானமாக வறுக்க வேண்டும். 

இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட கருவேப்பிலை பொடி அருமையாக இருக்கும்.

தயிர் சாதத்தோடு கருவேப்பிலை பொடி தொட்டு சாப்பிட்டு பாருங்கள். அவ்வளவு நன்றாக இருக்கும்.

ஆரோக்கியமான, அதே சமயம் சுவையான உணவு பண்டங்களில் ஒன்று கருவேப்பிலை பொடி.

Monday, 18 November 2013

வலைபதிவுகளும் அறிவுசார் சொத்துரிமையும்



இன்று அறிவுசார் சொத்துரிமை பற்றி அதிகம் பேசப் படுகிறது. அறிவுசார் சொத்துரிமை தொடர்பான வழக்குகளும் அதிகரித்து வருகின்றன.

அறிவுசார் சொத்துரிமை என்றால் என்ன?

அறிவுசார் சொத்துரிமையை இரண்டாகப் பிரித்திருக்கிறார்கள்.

முதலில் வருவது, காப்புரிமை அல்லது பதிப்புரிமை (Copyright). எழுத்தாளர்களின் படைப்புகள், இசை படைப்புகள், ஓவியங்கள், சிற்பங்கள், கணினி மென்பொருளாக்கம், திரைப்படம் ஆகியவற்றிற்கு காப்புரிமை உண்டு. படைப்பாளர் இறந்து 5௦ ஆண்டுகள் வரை காப்புரிமை அமலில் இருக்கும்.

இரண்டாவதாக வருவது தொழில்சார் சொத்துரிமை (industrial property right). Trademark, Logo, தொழில் ரகசியங்கள் (உதாரணத்திற்கு coca  cola வின் formula), புதிய கண்டுபிடிப்புகள், புவிசார் குறியீடு (Geographical Indication) ஆகியவை தொழில்சார்  சொத்துரிமையில் அடங்கும்.

புதிய கண்டுபிடிப்புகளுக்கான உரிமை (Patents), பொதுவாக, 20 வருடங்களுக்கு அளிக்கப் படுகிறது.

படைப்பாளி, வணிக நிறுவத்தினர் ஆகியோரின் உரிமையை பாதுகாக்கவும், புதிய படைப்புகள், முயற்சிகளை ஊக்குவிக்கவும் இந்த உரிமைகள் தரப்படுகின்றன.

இதில் புவிசார் குறியீடு (Geographical Indication) ஒரு சுவாரசியமான விஷயம். உணவு பிரியர்களுக்கு அதில் நிறையவே சுவாரசியங்கள் உண்டு. அதை பற்றி விரிவாக அடுத்த ஒரு postல் காண்போம்.

இப்போது, எழுத்தாளர்களின் உரிமை பற்றி சில கருத்துக்கள்.

எழுத்தாளர்களின் உரிமை அதிகம் பறிபோவது இணையத்தில்தான் என்பது என் கருத்து. இணையத்தில் புகுந்து ஒரு தகவலை தேடினால், ஒரே விஷயங்கள், கருத்துக்கள், recipe கள் வரி மாறாமல் பலரது பெயர்களில், பல இணைய தளங்களில் கிடைக்கின்றன. மணிக் கணக்காக தேடியிருப்போம். ஆனால் கொஞ்சம் தான் புதிய செய்தி கிடைத்திருக்கும்.

ஒரே தகவல் ஏன் பல இடங்களில் பதிவு செய்யப் பட வேண்டும்? இணையத்தில் எல்லாமே இலவசம் என்பதாலா?

பல இடங்களில் இருப்பதால் அந்த கருத்து வேகமாக பரவுகிறது. உண்மைதான். ஆனாலும் கிடைக்கும் தகவல்களின் நம்பக தன்மை போய் விடுகிறது.

வலைப்பூ (Blog) பதிவர்களுக்கு (Bloggers) இந்த அறிவுசார் சொத்துரிமை திருட்டு நன்கு பழகிய  விஷயம். பலர் அதை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதுமில்லை.

அறிவுசார் திருட்டுகளை இணையத்தில் தடுக்க முடியாது என்பது பலரது கருத்து. ஒரு வலைப் பதிவில், " எனது எழுத்துக்களை வரி மாறாமல் அப்படியே எடுத்து பதிவு செய்பவர்கள் சொல்லி விட்டு செய்யவும்" என்ற ரீதியில் ஓர் அறிவிப்பை கொடுத்திருந்தார் அந்த வலை பதிவர்.

சில தினங்களுக்கு முன் எனக்கு அப்படி ஓர் அனுபவம் ஏற்பட்டது. இணையத்தில் உலா  வந்தபோது 'தலைவாழை விருந்து' blogல் நான் எழுதிய 'குப்பைமேனி தைலம்' போஸ்ட் வரி மாறாமல், படங்கள் உள்பட வேறொரு வலைப்பதிவில் (http://beautytipsinherbalproducts.blogspot.in/2013/11/blog-post_6.html) வெளியாகி இருந்தது.

எனது கண்டனத்தை அந்த வலை தளத்தில் பதிவு செய்தேன். அந்த வலை பதிவரின் G+ பக்கத்திலும் என் கண்டனத்தை பதிவு செய்தேன்.

இப்போது அந்த ஆட்சேபனைக்குரிய வலைப் பதிவு நீக்கப் பட்டு விட்டது. வலைப்பதிவர் தனது G+ பக்கத்தில்,  வலது புறத்தில் காணப் படும் Sorry messageயை இன்று (18/11/2013) post செய்திருக்கிறார்.

இணைய படைப்பாளர்கள் தங்கள் உரிமையை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது. நமது சிறிய கண்டனம் நாளை பெரிய மாற்றங்களை கொண்டு வரும்.

அதற்காக தான் இந்த கட்டுரை.

Sunday, 17 November 2013

கார்த்திகை நெல்பொரி உருண்டை

நெல்பொரி உருண்டை





நெல்பொரி - 1 கிலோ 
வெல்லம் - 1/2 கிலோ 
ஏலக்காய் - சிறிது 
தேங்காய் அல்லது பொட்டுக் கடலை - சிறிது 









நெல்பொரியை  சுத்தம் செய்யவும். உலர்ந்த பாத்திரத்தில் சுத்தம் செய்த நெல்பொரியை போடவும்.

வெல்லத்தை பாகு வைக்கவும். 

தேங்காயை பல்லு, பல்லாக கீறி போடவும். அல்லது சிறிது பொட்டுக் கடலை போடவும். தேங்காயோ, பொட்டுக் கடலையோ, பாகு கொதிக்கும் முன் சேர்க்க வேண்டும்.

பாகு கம்பி பதத்திற்கும் அதிகமாக முறுக வேண்டும்.

பாகு நன்கு முறுகியதும், நெல்பொரியில் கொட்டி, நன்றாக  கிளறவும். தாமதம் இல்லாமல் கிளற வேண்டும். இல்லை எனில், பாகு இறுகி விடும்.


பாகு பொரியில் முழுவதும் கலந்தவுடன் உருண்டையாக பிடிக்கவும்.



சூட்டோடு பிடித்தால்தான் உருண்டை பிடிக்க முடியும். ஆறினால் இறுகி விடும். கையில் ஒட்டாமல் இருக்க சிறிது அரிசி மாவை தொட்டு உருண்டை பிடிக்கலாம்.



சூட்டோடு உருண்டை பிடிக்க வேண்டும். கையில் சுட்டுக் கொள்ளவும் கூடாது. அதுதான் நெல்பொரி உருண்டை பிடிப்பதில் சவால்.





















நெல்பொரி உருண்டை 

நெல்பொரி உருண்டை 

நெல்பொரி உருண்டை 

கார்த்திகை அவல்பொரி உருண்டை

அவல்பொரி உருண்டை 

திருக் கார்த்திகை தீபத் திருநாள் அன்று அவல்பொரி உருண்டை செய்வார்கள். இந்த இனிப்பு உருண்டையை   கார்த்திகை அன்று மட்டும் தான் செய்வார்கள். மற்ற நாட்களில், வீடுகளில் அவல்பொரி உருண்டை செய்ய மாட்டார்கள். வருடத்திற்கு ஒருமுறைதான் செய்யப் படுகிறபோது அதற்கென ஓர் எதிர்பார்ப்பு இருக்கும்.  அவல் , வெல்லம் சேர்ந்த எளிமையான, ஆரோக்கியமான இனிப்பு அவல்பொரி உருண்டை.


அவல்பொரி+வெல்லம்

அவல்பொரி - 1 கிலோ 
வெல்லம் - 1/2 கிலோ 
ஏலக்காய் -சிறிது 
தேங்காய் அல்லது பொட்டுக் கடலை - சிறிது 


அவல் பொரியை  சுத்தம் செய்யவும். உலர்ந்த பாத்திரத்தில் போடவும். வெல்லத்தை பாகு வைக்கவும். 

தேங்காயை பல்லு, பல்லாக கீறி போடவும். அல்லது அதற்கு பதில் சிறிது பொட்டுக் கடலை போடவும். தேங்காய், பொட்டுக் கடலை எதுவாக இருந்தாலும், பாகு கொதிக்குமுன் சேர்க்கவும். 

பாகு கம்பி பத பத்திற்கும் அதிகமாக முறுக வேண்டும்.

பாகு ரெடியானதும், அவல்பொரியில் கொட்டி, நன்கு கிளறவும்.பாகை கொட்டிய உடனே கிளறி பொரியில் கலக்க செய்ய வேண்டும். தாமதமானால் பாகு இறுகி விடும். பாகு பொரியில் நன்கு கலந்ததும் உருண்டையாக பிடிக்கவும். 

சூட்டோடு பிடித்தால்தான் உருண்டையாக பிடிக்க முடியும்.  கையில் ஒட்டாமல் இருக்க சிறிது அரிசி மாவை தொட்டு உருண்டை பிடிக்க வேண்டும்.

அவல்பொரி உருண்டை 






















அவல்பொரி உருண்டை 



கார்த்திகை-தீபத் திருநாள் வாழ்த்துக்கள் 

கார்த்திகை தீபம்

இன்று (17-11-2013) கார்த்திகை தீபத் திருநாள். சிறப்பு புகைப் படங்கள்.


கார்த்திகை தீபம் 

மைலாப்பூர் வடக்கு மாட வீதியில் அகல் விளக்கு விற்பனை


 
புது மாடல் அகல் விளக்குகள் -மயிலை வடக்கு மாட வீதியில்



இன்வெர்டர்  வேண்டாம்.....மண் விளக்கே போதும்.........



கார்த்திகை அகல் விளக்குகள்.....சென்னை, மயிலை வடக்கு மாட வீதியில் விற்பனைக்கு .




Saturday, 16 November 2013

ஷாகம்பரி தேவி

ஷாகம்பரி                       (சென்னை அண்ணாநகர் ஷ்யாம் பாபா மந்திர் )
Photo: Raman

முன்னொரு காலத்தில், துர்கம் என்ற அரக்கனின் கோரப் பிடியில் சிக்கி தவித்தது பூலோகம். மழையில்லை. மக்கள் உண்ண உணவின்றி தவித்தனர். எங்கும்  பசி, பஞ்சம், பட்டினி. மக்கள் தேவியிடம் முறையிட்டனர். தேவி தோன்றினாள். அற்புத வடிவத்துடன். எண்ணிலங்கா கண்களுடன். அதனால் சடாக்ஷி என்றழைக்கப் பட்டாள். அது மட்டுமா? தானியங்கள், பழங்கள், காய்கறிகள், மூலிகைகள் இவற்றுடன் தோன்றினாள். அதனால் ஷாகம்பரி என்றழைக்கப் பட்டாள். சமஸ்க்ரிதத்தில் 'ஷாக' என்றால் 'காய்கறிகள்' என்று பொருள். 'அம்பரி' என்றால் 'அணிந்திருப்பவர்' அல்லது 'கொணர்ந்திருப்பவர்' என்று பொருள். மக்கள் படும் பாட்டை பார்த்து தேவியின் கண்கள் ஆறாக பெருக்கெடுத்து ஓடின,

துர்கம் என்ற அரக்கனுடன் போரிட்டு அழித்தாள். மக்களின் துன்பம் நீங்கியது. துர்கம் என்ற அரக்கனை அழித்ததால், துர்கா என்றும் அழைக்கப் படுகிறாள்.

மக்களின் பசி தீர்ப்பவள் ஷாகம்பரி. நோய், நொடி இல்லாமல் பாதுகாப்பவள் ஷாகம்பரி.

பொதுவாக தேவிக்கு இரண்டு குணங்கள் உண்டு. கோபாவேசம் ஒன்று. அது தீயதை அழிக்கும். சாந்த குணம். அது மக்களுக்கு அருள் பாலிக்கும் இரக்க குணம்.

விஜயதசமி அன்று அம்மனுக்கு ஷாகம்பரி அலங்காரம் செய்யும் வழக்கம் தமிழக கோயில்களில் உண்டு. அனைத்து விதமான காய்கறிகள், பழங்கள் கொண்டு செய்யப் படும் அலங்காரம் அதி அற்புதமாக இருக்கும். சில கோயில்களில் காய்கறி பந்தல் அமைப்பார்கள். மக்கள் தங்களால் இயன்ற காய், பழங்களை கட்டி விட்டு செல்வார்கள். அந்த காய், பழங்கள் ஷாகம்பரி அலங்காரத்திற்கும், அன்னதானத்திற்கும் பயன் படுத்தப் படும்.

இந்த வருடம் விஜயதசமி அன்று சென்னை வெங்கட் நாராயணா ரோட்டில் உள்ள சிருங்கேரி மடத்திற்கு சென்றிருந்தேன். அம்பாள் ஷாகம்பரி அலங்காரம் எனப் படும்  அற்புத தோற்றத்தில் அருள் பாலித்தார். 

Shakambari தேவி நீல நிறமுடையாள். கணகள் தாமரை மலரை ஒத்தவை. தேனீக்கள் மொய்க்கும் தாமரை மலரை ஒரு கையில் ஏந்தி இருப்பாள். மற்றொரு கையில் அம்புகள், இன்னுமொரு கையில் வில், இன்னொரு கையில் காய், கனி, மலர்கள் ஏந்தியிருப்பாள் ஷாகம்பரி.

தாவர உணவுக்கான கடவுள் ஷாகம்பரி. அவளை வணங்கினால், நம்மிடம் உள்ள தீய குணங்கள் அழியும். நமக்கு வரும் தீமைகள் தடுக்கப் படும். உண்ண உணவும், தாகம் தணிக்கும்  நீரும், குறைவில்லா ஆனந்தமும் என்றும் கிட்டும்.

உத்தர பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், உத்தரகான்ட், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் shakambari கோயில்கள்  இருக்கின்றன. பிற்காலத்தில், பெங்களூரு போன்ற நகரங்களிலும் ஷாகம்பரி கோயில்கள் கட்டப் பட்டன. புராதன ஷாகம்பரி கோயில்கள் தந்த உத்வேகத்தில் இவை கட்டப் பட்டன.

கர்நாடகாவில் உள்ள பதாமி அருகில், காட்டுக்கு நடுவில், பனசங்கரி என்ற பெயரில்  வீற்றிருக்கிறாள் ஷாகம்பரி. சாளுக்கிய மன்னர்கள் குல தெய்வமாக வழிபட்ட கோயில் இது.

20 ம் நூற்றாண்டின் துவக்கத்தில் கட்டப் பட்ட பனசங்கரி கோயில் பெங்களூருவில் உள்ளது.

ராஜஸ்தானில் சிகார் மாவட்டத்தில், உதய்பூர் வாடி அருகில் உள்ள சகரை என்ற ஊரில் ஷாகம்பரி ஆலயம் உள்ளது.

ராஜஸ்தானில் சிகார் என்ற இடத்திலும், குச்சமன் என்ற இடத்திலும்  ஷாகம்பரி ஆலயங்கள்  அமைந்துள்ளன.

கொல்கட்டாவில் மூன்று ஷாகம்பரி ஆலயங்கள் அமைந்துள்ளன.

உத்தரகாண்டில் கேதார் மலையில் கேதார்நாத் கோயில் செல்லும் வழியில் ஷாகம்பரி அன்னைக்கு கோயில் உள்ளது. ரிஷிகள் அன்னையின் அருள் வேண்டி தவம் புரிந்த இடமாகவும், ஷாகம்பரி கோயில்களிலேயே புராதன கோயிலாகவும் கருதப் படுகிறது.

உத்தர பிரதேசத்தில் saharanpur என்ற இடத்தில் ஷாகம்பரி ஆலயம் உள்ளது.

மகாராஷ்டிராவில் satara அருகில்  ஷாகம்பரி ஆலயம் உள்ளது.

சென்னையில் வருடத்திற்கு ஒருமுறை ஷாகம்பரி ஜெயந்தி கொண்டாடப் படுகிறது. தை மாத பௌர்ணமி அன்று ஷாகம்பரி ஜெயந்தி.       இந்த விழா,
 ஷாகம்பரி பூர்ணிமா என்றும் அழைக்கப் படுகிறது. 

ஆந்திராவில் உள்ள வாரங்கல் பத்ரகாளி அம்மன் கோவிலில் ஆனி மாதத்தில் (June-July) ஷாகம்பரி விழா கொண்டாடப்படுகிறது.

பொதுவாக நம் நாட்டில் நன்கு நவராத்திரிகள் கொண்டாடப் படுகின்றன. வசந்த நவராத்திரி (March-April), குப்த் அல்லது ஆஷாட நவராத்திரி(June-July), சாரதா நவராத்திரி (September-October), பௌஷ்ய நவராத்திரி அல்லது ஷ்யாமளா நவராத்திரி (December_January). இந்த நான்கு நவராத்திரிகளிலுமே ஷாகம்பரி விழாக்கள் கொண்டாடப் படுகின்றன. நாட்டின் ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு நவராத்திரியின் போது இந்த விழா கொண்டாடப் படுகிறது.

அறுவடை காலத்தை ஒட்டி, ஷாகம்பரி விழா கொண்டாடப் படுகிறது என்று கருத இடமிருக்கிறது. அறுவடை காலம் நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் மாறுபடுகிறது. அறுவடை கால விழாக்களின் போது, தாவர உணவின் கடவுளான ஷாகம்பரி வழிபாடு நடைபெறுகிறது.
ஷ்யாம் பாபா மந்திர் அண்ணாநகர் சென்னை 

சென்னையில் அண்ணா நகர் சாந்தி காலனியில் Shyam Baba Mandir உள்ளது. ராஜஸ்தானிலிருந்து வந்து சென்னையில் வசித்து வருபவர்கள் வழிபடும் கோயில். இந்த கோயிலில் ஷாகம்பரி அம்மன் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கிறாள். சமீபத்தில் நானும் எனது நண்பர் திரு. கண்ணன் அவர்களும் இந்த கோயிலுக்கு சென்றிருந்தோம்.

அண்ணா வளைவில் இருந்து செல்லும் போது சாந்தி காலனி இரண்டாவது பஸ் நிறுத்தத்திற்கு சற்று முன்னதாக இடது பக்கம் ஒரு aavin பூத் உள்ளது. அந்த பூத்தை ஒட்டி செல்லும் ரோட்டில் சென்றால் பூந்தமல்லி சாலையை இணைக்கும் மேம்பாலம் வரும். அந்த மேம்பாலத்திற்கு சற்று முன்னதாக இடது புறம் திரும்பி சற்று தொலைவு சென்றால் Shyam Baba Mandir வரும். மிக சிறிய சந்தில் உள்ள பெரிய கோயில் இது. Aavin பூத் பக்கம் சென்று இந்தி கோயில், வடக்கத்திகாரங்க கோயில், கிருஷ்ணன் கோயில் (இங்கு கிருஷ்ணருக்கு தனி சன்னதி உள்ளது) என்று கேட்டால் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது.

பூந்தமல்லி ரோட்டிலிருந்தும் வரலாம்.

ஷாகம்பரி அன்னை, கிருஷ்ணர், சிவலிங்கம், விநாயகர், ராம், லக்ஷ்மன், சீதா, ஆஞ்சநேயர் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளனர். மகாபாரத கதையை நினைவு கூறும் கோயில் இது.

மகாபாரத போர் துவங்கு முன், களப் பலி அளிக்கப் படுகிறது. பீமனின் பேரனும், கடோத்கஜனின் பையனுமாகிய Shyam Babu பலியிடப் படுகிறார். அவரது தலை Barbarik மலை மீது இருக்கும் கோலத்தில் வழிபடப் படுகிறது.
ஷாகம்பரி 

ஷாகம்பரி தேவிக்கு தனி சன்னதி இருப்பது இந்த கோயிலின் சிறப்பு. ஜனவரி மாதத்தில் ஷாகம்பரி ஜெயந்தி இங்கு விமரிசையாக கொண்டாடப் படுகிறது.

தீய அரக்கனை அழித்து மக்களை பசி துன்பத்திலிருந்து காத்தவள் ஷாகம்பரி. உரம், பூச்சிக் கொல்லிகள், துரித உணவுகள் என்று உணவே எமனாக மாறி வரும் இந்த கால கட்டத்தில் ஷாகம்பரி தேவியின் பரிபூர்ண அருள் நமக்கு கிட்ட வேண்டும். இந்த அரக்கர்களிடமிருந்து தேவி நம்மை காக்கட்டும்.

ஷாகம்பரி 

Thursday, 14 November 2013

வெந்தய தோசையும் திடீர் மல்லி சட்னியும்

வெந்தய தோசை 


வெந்தய தோசை - தேவையான பொருள்கள் 


புழுங்கல் அரிசி  (பட்டை தீட்டாத அரிசி - Brown boiled rice)
உளுந்து 
வெந்தயம் 
உப்பு 
நல்லெண்ணெய்  -தோசை வார்க்க.

வெந்தய தோசை - எப்படி செய்வது?


புழுங்கல் அரிசி, உளுந்து இரண்டையும் ஒன்றாக ஊற வைக்கவும். வெந்தயத்தை தனியாக ஊற வைக்கவும். மூன்று மணி நேரம் ஊறிய பின், அரிசி, உளுந்து இவற்றை ஒன்றாக Grinderல் போட்டு அரைக்கவும். இரண்டும் ஓரளவு மசிந்த உடன், வெந்தயத்தையும் சேர்த்து அரைக்கவும். நைசாக அரைக்கவும். உப்பு சேர்த்து கலக்கவும். ஆறு மணி நேரம் கழித்து தோசை வார்க்கலாம்.


திடீர் மல்லி சட்னி 

திடீர் மல்லி  சட்னி 






கொத்தமல்லி தழை - ஒரு பெரிய கட்டு



பச்சை மிளகாய் - 1



பெருங்காயம் - சிறிது 



உப்பு - தேவைக்கு 


தயிர் - 2 கரண்டி 




கொத்தமல்லி இலைகளையும், துளிர் காம்பையும் ஆய்ந்து கொள்ளவும். 

மண் போக அலசவும். 






நீரை வடிய விட்டு, 
இலைகளை பிழிந்து எடுக்கவும். 


பச்சை மிளகாய் (சிறு துண்டுகளாக), 
பெருங்காயம், உப்பு சேர்த்து, மிக்சியில் 
அரைக்கவும். 





பின் தயிர் சேர்த்து, ஒரு சுற்று சுற்றி, நிறுத்தவும்.


திடீர் மல்லி சட்னி தயார்.


தீட்டப் படாத அரிசி, வெந்தயம், கொத்தமல்லி தழை இவை மூன்றுமே ஆரோக்கியத்திற்கு உகந்தது. இந்த தோசை மாவு மிகவும் கொழ கொழப்பாக இருக்கும். 

தீட்டாத அரிசி, வெந்தயம் இரண்டுமே சர்க்கரை வியாதி வராது தடுக்கும். உடல் எடை குறைக்க விரும்புவோருக்கு நல்லது. கொத்தமல்லி தழை ரத்த அழுத்தத்தை குறைக்கக் கூடியது.



Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...