இன்று (14-11-2013) உலக நீரிழிவு தினம்.
Diabetes Mellitus, சுருக்கமாக Diabetes, சர்க்கரை வியாதி, நீரிழிவு நோய், மதுமேகம்-இப்படி பல பெயர்களில் அழைக்கப் படும் நீரிழிவு நோய், இன்று உலகை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்று. இந்தியாவை Diabetes Capital of the world என்கிறார்கள்.
நீரிழிவு நோய் பற்றி தெரிய வேண்டும் என்றால் கணையம் (Pancreas), இன்சுலின், Glucose, Cell - இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிய வேண்டும். கணையம் நம் வயிற்றுக்குப் பின்னால் அமைந்திருக்கும் சிறிய உறுப்பு. அங்கு தான் இன்சுலின் சுரக்கிறது. நாம் சாப்பிடும் உணவு, செரிமானத்தின் போது, glucose ஆக மாற்றப் படுகிறது. அந்த glucose ரத்தத்தில் கலக்கிறது. ரத்தத்தில் சேரும் glucose நம் cell களை அடைந்து சக்தியாக (energy) மாறுகிறது. அந்த சக்திதான் நம்மை இயக்குகிறது. ரத்தத்தில் உள்ள glucose, cell களை அடைய இன்சுலின் உதவுகிறது.
இன்சுலின் சுரப்பு நின்று விட்டாலோ அல்லது குறைந்தாலோ glucose ரத்தத்திலேயே தங்கி விடும்.
சிலருக்கு கணையம் வேலை செய்யாததால் இன்சுலின் சுரப்பு முற்றிலும் நின்று விடுகிறது. இதை Type 1 Diabetes என்கிறோம். இந்த வகை பாதிப்பு உள்ளவர்கள் ஒவ்வொரு வேலை உணவு உண்ணும்போதும் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும்.
சிலருக்கு இன்சுலின் சுரப்பு குறைவாக இருக்கும். அல்லது இன்சுலின் அதன் வேலையை செய்யாது (Insulin resistance). இந்த வகை பாதிப்பு Type 2 Diabetes. இது பெரும்பாலும் நடுத்தர வயதினரை பாதிக்கும்.
கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். இது gestational diabetes. குழந்தை பிறந்த பின் அவர்களின் ரத்த சர்க்கரை அளவு normal ஆகி விடும். ஆனாலும் இந்த பாதிப்புக்கு உள்ளானவர்கள் கவனமாக இருக்க வேண்டும். பிற்காலத்தில் அவர்களுக்கு நீரிழிவு நோய் வர வாய்ப்பு அதிகம்.
நாம் இங்கு சர்க்கரை என்று குறிப்பிடுவது glucose தான்.
நமக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா இல்லையா என்று தெரிந்து கொள்வது எப்படி? Blood Glucose Test மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
காலை எழுந்தவுடன், வெறும் வயிற்றில், Fasting Plasma Glucose Test செய்ய வேண்டும். அது 100 mg/dlக்கும் கீழ் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் உங்களுக்கு நீரிழிவு நோய் இல்லை. 100 லிருந்து 125 வரை இருந்தால் உங்களுக்கு விரைவில் நீரிழிவு நோய் வரும் என்று அர்த்தம் (Prediabetes). 125க்கு மேல் இருந்தால் நீரிழிவு நோய் உள்ளது.
காலை சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து ( Postprandial) 180க்கு கீழ் இருக்க வேண்டும்.
உங்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதாக அறிந்தால் மருத்துவர்கள் இரண்டு அல்லது மூன்று முறை குறிப்பிட்ட கால இடைவெளியில் Glucose Test எடுத்து அதை உறுதி படுத்துவார்கள். Glucose Tolerance Testம் நீரிழிவு நோயை உறுதி படுத்தும் பரிசோதனை முறை.
அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிக பசி, காரணம் இல்லாத எடை குறைவு, களைப்பு, கை, கால்களில் மரத்துப் போன உணர்வு, புண்கள் ஆறுவதில் கால தாமதம் ஆகியவை நீரிழிவு நோயின் அறிகுறிகளாகும். ஆனால் இந்த அறிகுறிகள் இல்லாமலும் கூட உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கலாம்.
வாரத்திற்கு ஐந்து நாள் நடை பயிற்சி, முறையான உணவு, புகை, மது தவிர்த்தல், அமைதியான மன நிலை, சரியான உடல் எடை, - இவை உங்களுக்கு வரக்கூடிய நீரிழிவு நோயை பல ஆண்டுகள் தள்ளிப் போடும்.
ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 30 கிராம் நார் சத்து (Fibre) உணவில் சேர வேண்டும். ஒரு நாளைக்கு 150 கிராம் மாவு சத்து (Carbohydrates) உணவில் சேர வேண்டும். மாவு சத்து நாம் உண்ணும் அரிசி, கோதுமை, உருளை கிழங்கு, Bread மற்றும் மற்ற தானியங்களில் இருந்து கிடைக்கிறது. மாவு சத்துதான் ரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கிறது. அதற்காக மாவு சத்தை அடியோடு ஒதுக்கவும் முடியாது. ஏனென்றால் மாவு சத்தில் இருந்துதான் நமக்கு சக்தி (Energy) கிடைக்கிறது. மாவை சக்தியாக்கும் இன்சுலின் குறைவதுதான் பிரச்சினை.
நீரிழிவு நோய் இருப்பவர்கள், இல்லாதவர்கள் எல்லோரும் மாவு சத்தை அதற்குரிய அளவில் உட்கொள்ள வேண்டும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் மட்டும் உண்ணும் கலோரிக்கு ஏற்ப இன்சுலின் அல்லது மருந்துகள் மருத்துவர் அறிவுரை படி எடுத்துக் கொள்ள வேண்டும்.
தீட்டாத முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், புரத சத்துள்ள பருப்பு வகைகள், கொழுப்பு நீக்கிய பால் இவற்றை தவறாது உட்கொள்ள வேண்டும். கொழுப்பு சத்துள்ள எண்ணெய் போன்றவையும் மிக குறைந்த அளவில் நமக்கு தேவை.
இதை Food Pyramid என்கிறார்கள் மருத்துவர்கள். ஒரு முக்கோணத்தை கற்பனை செய்யுங்கள். அதன் அடிப்பகுதி பெரியதாக இருக்கும். மேலே செல்ல செல்ல குறுகும். அடிபகுதியில் அதிகம் சாப்பிட வேண்டிய உணவுகளையும் மேலே செல்ல செல்ல அளவு குறைக்க வேண்டிய உணவுகளையும் குறிப்பிடுகிறார்கள்.
நமக்கு தேவையான கலோரியில் அதிகமான பங்கு முழு தானியங்களில் இருந்து கிடைக்க வேண்டும். இதற்கு அடுத்த படியாக நாம் சாப்பிட வேண்டியது காய்கறிகள், கொழுப்பு நீக்கிய பால், பருப்பு வகைகள் ஆகும். இவற்றை விட சற்று குறைவான அளவில் பழங்கள் உட்கொள்ள வேண்டும். கடைசியில் மிகக் குறைவான அளவில் எண்ணெய், வெண்ணெய் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.
இதெல்லாம் பொதுவான அறிவுரைகள்தான். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு , நோயின் தாக்கம், வயது, உடலுழைப்பு இவற்றை கவனத்தில் கொண்டு மருத்துவர்களும், உணவு நிபுணர்களும் (Dietitians) உணவு அட்டவணை (Diet Chart) கொடுப்பார்கள்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் பல் பராமரிப்பு சரியான முறையில் செய்ய வேண்டும். பற்களில் கிருமி தாக்குதல் இருந்தால் நீரிழிவின் தாக்கம் அதிகமாகும். நீரிழிவு நோய் இதயம், சிறுநீரகம், நரம்பு மண்டலம், கண் முதலிய உறுப்புகளை அதிகம் பாதிக்கும். கவனம் தேவை.
உலக நீரிழிவு தினத்தன்று நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வு பெறுவோம். நோய் உள்ளவர்கள் நோயின் பாதிப்புகளை தடுப்போம். நோய் இல்லாதவர்கள் வராமல் காப்போம். அல்லது வருவதை தள்ளி போடுவோம்.
No comments:
Post a Comment