ஷாகம்பரி (சென்னை அண்ணாநகர் ஷ்யாம் பாபா மந்திர் ) |
முன்னொரு காலத்தில், துர்கம் என்ற அரக்கனின் கோரப் பிடியில் சிக்கி தவித்தது பூலோகம். மழையில்லை. மக்கள் உண்ண உணவின்றி தவித்தனர். எங்கும் பசி, பஞ்சம், பட்டினி. மக்கள் தேவியிடம் முறையிட்டனர். தேவி தோன்றினாள். அற்புத வடிவத்துடன். எண்ணிலங்கா கண்களுடன். அதனால் சடாக்ஷி என்றழைக்கப் பட்டாள். அது மட்டுமா? தானியங்கள், பழங்கள், காய்கறிகள், மூலிகைகள் இவற்றுடன் தோன்றினாள். அதனால் ஷாகம்பரி என்றழைக்கப் பட்டாள். சமஸ்க்ரிதத்தில் 'ஷாக' என்றால் 'காய்கறிகள்' என்று பொருள். 'அம்பரி' என்றால் 'அணிந்திருப்பவர்' அல்லது 'கொணர்ந்திருப்பவர்' என்று பொருள். மக்கள் படும் பாட்டை பார்த்து தேவியின் கண்கள் ஆறாக பெருக்கெடுத்து ஓடின,
துர்கம் என்ற அரக்கனுடன் போரிட்டு அழித்தாள். மக்களின் துன்பம் நீங்கியது. துர்கம் என்ற அரக்கனை அழித்ததால், துர்கா என்றும் அழைக்கப் படுகிறாள்.
மக்களின் பசி தீர்ப்பவள் ஷாகம்பரி. நோய், நொடி இல்லாமல் பாதுகாப்பவள் ஷாகம்பரி.
பொதுவாக தேவிக்கு இரண்டு குணங்கள் உண்டு. கோபாவேசம் ஒன்று. அது தீயதை அழிக்கும். சாந்த குணம். அது மக்களுக்கு அருள் பாலிக்கும் இரக்க குணம்.
விஜயதசமி அன்று அம்மனுக்கு ஷாகம்பரி அலங்காரம் செய்யும் வழக்கம் தமிழக கோயில்களில் உண்டு. அனைத்து விதமான காய்கறிகள், பழங்கள் கொண்டு செய்யப் படும் அலங்காரம் அதி அற்புதமாக இருக்கும். சில கோயில்களில் காய்கறி பந்தல் அமைப்பார்கள். மக்கள் தங்களால் இயன்ற காய், பழங்களை கட்டி விட்டு செல்வார்கள். அந்த காய், பழங்கள் ஷாகம்பரி அலங்காரத்திற்கும், அன்னதானத்திற்கும் பயன் படுத்தப் படும்.
இந்த வருடம் விஜயதசமி அன்று சென்னை வெங்கட் நாராயணா ரோட்டில் உள்ள சிருங்கேரி மடத்திற்கு சென்றிருந்தேன். அம்பாள் ஷாகம்பரி அலங்காரம் எனப் படும் அற்புத தோற்றத்தில் அருள் பாலித்தார்.
Shakambari தேவி நீல நிறமுடையாள். கணகள் தாமரை மலரை ஒத்தவை. தேனீக்கள் மொய்க்கும் தாமரை மலரை ஒரு கையில் ஏந்தி இருப்பாள். மற்றொரு கையில் அம்புகள், இன்னுமொரு கையில் வில், இன்னொரு கையில் காய், கனி, மலர்கள் ஏந்தியிருப்பாள் ஷாகம்பரி.
தாவர உணவுக்கான கடவுள் ஷாகம்பரி. அவளை வணங்கினால், நம்மிடம் உள்ள தீய குணங்கள் அழியும். நமக்கு வரும் தீமைகள் தடுக்கப் படும். உண்ண உணவும், தாகம் தணிக்கும் நீரும், குறைவில்லா ஆனந்தமும் என்றும் கிட்டும்.
உத்தர பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், உத்தரகான்ட், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் shakambari கோயில்கள் இருக்கின்றன. பிற்காலத்தில், பெங்களூரு போன்ற நகரங்களிலும் ஷாகம்பரி கோயில்கள் கட்டப் பட்டன. புராதன ஷாகம்பரி கோயில்கள் தந்த உத்வேகத்தில் இவை கட்டப் பட்டன.
கர்நாடகாவில் உள்ள பதாமி அருகில், காட்டுக்கு நடுவில், பனசங்கரி என்ற பெயரில் வீற்றிருக்கிறாள் ஷாகம்பரி. சாளுக்கிய மன்னர்கள் குல தெய்வமாக வழிபட்ட கோயில் இது.
20 ம் நூற்றாண்டின் துவக்கத்தில் கட்டப் பட்ட பனசங்கரி கோயில் பெங்களூருவில் உள்ளது.
ராஜஸ்தானில் சிகார் மாவட்டத்தில், உதய்பூர் வாடி அருகில் உள்ள சகரை என்ற ஊரில் ஷாகம்பரி ஆலயம் உள்ளது.
ராஜஸ்தானில் சிகார் என்ற இடத்திலும், குச்சமன் என்ற இடத்திலும் ஷாகம்பரி ஆலயங்கள் அமைந்துள்ளன.
கொல்கட்டாவில் மூன்று ஷாகம்பரி ஆலயங்கள் அமைந்துள்ளன.
உத்தரகாண்டில் கேதார் மலையில் கேதார்நாத் கோயில் செல்லும் வழியில் ஷாகம்பரி அன்னைக்கு கோயில் உள்ளது. ரிஷிகள் அன்னையின் அருள் வேண்டி தவம் புரிந்த இடமாகவும், ஷாகம்பரி கோயில்களிலேயே புராதன கோயிலாகவும் கருதப் படுகிறது.
உத்தர பிரதேசத்தில் saharanpur என்ற இடத்தில் ஷாகம்பரி ஆலயம் உள்ளது.
மகாராஷ்டிராவில் satara அருகில் ஷாகம்பரி ஆலயம் உள்ளது.
சென்னையில் வருடத்திற்கு ஒருமுறை ஷாகம்பரி ஜெயந்தி கொண்டாடப் படுகிறது. தை மாத பௌர்ணமி அன்று ஷாகம்பரி ஜெயந்தி. இந்த விழா,
ஷாகம்பரி பூர்ணிமா என்றும் அழைக்கப் படுகிறது.
ஆந்திராவில் உள்ள வாரங்கல் பத்ரகாளி அம்மன் கோவிலில் ஆனி மாதத்தில் (June-July) ஷாகம்பரி விழா கொண்டாடப்படுகிறது.
பொதுவாக நம் நாட்டில் நன்கு நவராத்திரிகள் கொண்டாடப் படுகின்றன. வசந்த நவராத்திரி (March-April), குப்த் அல்லது ஆஷாட நவராத்திரி(June-July), சாரதா நவராத்திரி (September-October), பௌஷ்ய நவராத்திரி அல்லது ஷ்யாமளா நவராத்திரி (December_January). இந்த நான்கு நவராத்திரிகளிலுமே ஷாகம்பரி விழாக்கள் கொண்டாடப் படுகின்றன. நாட்டின் ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு நவராத்திரியின் போது இந்த விழா கொண்டாடப் படுகிறது.
அறுவடை காலத்தை ஒட்டி, ஷாகம்பரி விழா கொண்டாடப் படுகிறது என்று கருத இடமிருக்கிறது. அறுவடை காலம் நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் மாறுபடுகிறது. அறுவடை கால விழாக்களின் போது, தாவர உணவின் கடவுளான ஷாகம்பரி வழிபாடு நடைபெறுகிறது.
சென்னையில் அண்ணா நகர் சாந்தி காலனியில் Shyam Baba Mandir உள்ளது. ராஜஸ்தானிலிருந்து வந்து சென்னையில் வசித்து வருபவர்கள் வழிபடும் கோயில். இந்த கோயிலில் ஷாகம்பரி அம்மன் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கிறாள். சமீபத்தில் நானும் எனது நண்பர் திரு. கண்ணன் அவர்களும் இந்த கோயிலுக்கு சென்றிருந்தோம்.
அண்ணா வளைவில் இருந்து செல்லும் போது சாந்தி காலனி இரண்டாவது பஸ் நிறுத்தத்திற்கு சற்று முன்னதாக இடது பக்கம் ஒரு aavin பூத் உள்ளது. அந்த பூத்தை ஒட்டி செல்லும் ரோட்டில் சென்றால் பூந்தமல்லி சாலையை இணைக்கும் மேம்பாலம் வரும். அந்த மேம்பாலத்திற்கு சற்று முன்னதாக இடது புறம் திரும்பி சற்று தொலைவு சென்றால் Shyam Baba Mandir வரும். மிக சிறிய சந்தில் உள்ள பெரிய கோயில் இது. Aavin பூத் பக்கம் சென்று இந்தி கோயில், வடக்கத்திகாரங்க கோயில், கிருஷ்ணன் கோயில் (இங்கு கிருஷ்ணருக்கு தனி சன்னதி உள்ளது) என்று கேட்டால் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது.
பூந்தமல்லி ரோட்டிலிருந்தும் வரலாம்.
ஷாகம்பரி அன்னை, கிருஷ்ணர், சிவலிங்கம், விநாயகர், ராம், லக்ஷ்மன், சீதா, ஆஞ்சநேயர் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளனர். மகாபாரத கதையை நினைவு கூறும் கோயில் இது.
மகாபாரத போர் துவங்கு முன், களப் பலி அளிக்கப் படுகிறது. பீமனின் பேரனும், கடோத்கஜனின் பையனுமாகிய Shyam Babu பலியிடப் படுகிறார். அவரது தலை Barbarik மலை மீது இருக்கும் கோலத்தில் வழிபடப் படுகிறது.
ஷாகம்பரி தேவிக்கு தனி சன்னதி இருப்பது இந்த கோயிலின் சிறப்பு. ஜனவரி மாதத்தில் ஷாகம்பரி ஜெயந்தி இங்கு விமரிசையாக கொண்டாடப் படுகிறது.
தீய அரக்கனை அழித்து மக்களை பசி துன்பத்திலிருந்து காத்தவள் ஷாகம்பரி. உரம், பூச்சிக் கொல்லிகள், துரித உணவுகள் என்று உணவே எமனாக மாறி வரும் இந்த கால கட்டத்தில் ஷாகம்பரி தேவியின் பரிபூர்ண அருள் நமக்கு கிட்ட வேண்டும். இந்த அரக்கர்களிடமிருந்து தேவி நம்மை காக்கட்டும்.
ஷாகம்பரி |
No comments:
Post a Comment