சிவப்பரிசி இனிப்பு புட்டு தேவையான பொருள்கள்
சிவப்பு புட்டு அரிசி - 1 கப்
வெல்லம் - 3/4 கப்
தேங்காய்
நெய்
உலர் திராட்சை
முந்திரி
ஏலக்காய்
|
எப்படி செய்வது?
சிவப்பு புட்டு அரிசியை, வாணலியில் போட்டு, சூடு காட்டி, மூழ்கும் அளவு தண்ணீரில் ஊற வைக்கவும். மூன்று மணி நேரம் ஊறிய பின், நீரை சுத்தமாக வடித்து, மிக்சியில் போட்டு அரைக்கவும். தண்ணீர் ஊற்ற வேண்டியதில்லை. அரிசி உறிஞ்சி வைத்துள்ள ஈரப்பதமே போதும்.
அரைத்த மாவை, இட்லி பாத்திரத்தில் போட்டு, ஆவியில் வேக வைக்கவும். 20 நிமிடங்கள் வேக வேண்டும். வெந்த மாவை ஆற வைத்து, கட்டிகள் இருந்தால் உடைத்து விடவும். வெந்த மாவு உதிர் உதிராக இருக்க வேண்டும். கட்டியாக இருந்தால் மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றினால் உதிர் உதிராக மாறி விடும்.
தேங்காயை துருவிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு, கால் தம்ப்ளர் அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். சற்று நேரம் கழித்து தேங்காய் துருவல் சேர்க்கவும். வெல்லம் பாகு பதம் வருவதற்கு முன் தேங்காய் சேர்த்தால் தான், தேங்காயில் உள்ள ஈரப் பதம் குறைந்து புட்டோடு ஒத்தாற்போல் வரும். தேங்காய் சேர்க்கும் போதே முந்திரி, உலர் திராட்சை இரண்டையும் சேர்த்து விடவும். இவை இரண்டும் வெல்லத்தோடு சேர்ந்து நன்கு வெந்து விடும்.
பொதுவாக எல்லோரும் முந்திரி, உலர் திராட்சையை நெய்யில் பொறித்து போடுவார்கள். நான் செய்வது போல் வேக வைப்பது ஆரோக்கியமானது. வெந்த முந்திரி, திராட்சை சுவையும் நன்றாக இருக்கும்.
கம்பி பாகு பதம் வந்ததும் ஏலக்காய் சேர்த்து, வேக வைத்த மாவையும் கொட்டி நன்கு கிளறவும். நெய் சேர்த்து, மீண்டும் நன்கு கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
சிவப்பு அரிசி இனிப்பு புட்டு தயார்.
No comments:
Post a Comment