Saturday 11 May 2013

கீரை சொல்லித்தரும் சந்தை படுத்தும் உத்திகள்


      என் பள்ளிப்பருவ நாட்கள் திருச்சி தில்லைநகரில் கழிந்தன. அன்றும் இன்றும் திருச்சி நகரின் இதயம் தில்லைநகர். இன்று அடுக்குமாடி கட்டிடங்களால் உரு மாறிப்போயிருக்கும் வயலூர், சோமரசம்பேட்டை பகுதிகளிலிருந்து தன் வீட்டு தோட்டத்தில் விளைந்த காய்கறிகளையும் கீரைவகைகளையும் தலையில் சுமந்து வருவார் ஒரு பாட்டி. அந்த எளிமையான ருசி மீண்டும் எனக்கு கிடைக்கவேயில்லை. சிறுவாட்டு பண சேமிப்பிற்காக பல கிலோமீட்டர் தூரம் தலை சுமையோடு தள்ளாடி வந்த வியாபாரி அவர். வருமான ரீதியாக சமூகத்தின் கடை நிலையில் உள்ள குடும்பங்களை எடுத்துக்கொண்டால் பெண்கள் தான் அதிகம் உழைக்கிறார்கள்.  கீரை விற்கும் ஆயாக்களும் அத்தகைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். இவர்களை அடிக்கடி அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறார்கள்  நவீன வணிகர்கள்.

        சந்தை படுத்தும் உத்திகளை மேலாண்மை கல்லூரிகளில் தான் கற்க முடியும் என்று நினைத்திருந்தேன் நேற்று வரை. இன்று காலை அந்த நினைப்பு மாறியது. இடம்-தியாகராய நகர் நடேசன் பூங்கா வாசல். நேரம்-காலை 7.15 மணி. திடீரென ஒரு டூ வீலரில் வந்தார்கள் இருவர். வண்டியை குறுக்கே நிறுத்தி ஒரு பேனரை கட்டினார்கள். நானும் இன்னொருவரும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தோம். அங்கிருந்த சிறு வியாபாரிகள் தான் அதிக ஆர்வமானார்கள். மள மள வென்று கீரை கட்டுகள் வண்டி மேல் அடுக்கப்பட்டன. அட...நல்ல கீரை இன்று முதல் நடேசன் பார்க்கில் விற்கப்படுகிறதாம். பாய்ந்து வந்தார் பக்கத்தில் கீரை விற்று கொண்டிருந்த ஆயா. " என் வியாபாரத்தை கெடுக்கிறியே ? அப்பால போ." ஆயிரம் ரூபாய் முதலீடு அதோ கதி தானா என்ற கவலை அவருக்கு.

   ஆயாவிற்கு பதில் சொல்லக்கூட நேரமில்லை நல்ல கீரை விற்றவருக்கு. ஆர்கானிக் கீரை என்று தெரிந்ததும் மொய்த்து விட்டார்கள். அரை மணியில் அத்தனை கட்டுக்களும் காலி.  நஞ்சில்லா உணவு பற்றி நல்ல விழிப்புணர்வு வந்து விட்டது இப்போது. சுக்கான் கீரை விற்றார்கள். புதிதாக இருக்கிறது. கால்சியம் சத்து அதிகமாம். செவ்வாய் சனியில் வாரம் இருமுறை காலையில் நல்ல கீரை நடேசன் பூங்காவில் கிடைக்கும். 

     வாங்கியவர்களின் கேள்வியிலிருந்து ஒன்று புரிந்து கொள்ள முடிந்தது. கீரை என்பது எளிதாக கிடைக்க வேண்டிய பொருள். வாரம் இருநாள் காலையில் காத்திருந்து வாங்க வேண்டும்...லேட்டா போனா கிடைக்காது...இப்படி இருந்தால் நிரந்தர வாடிக்கையாளர்கள் கிடைக்க மாட்டார்கள்.

           சில மாற்று யோசனைகள். ஆங்காங்கே கீரை விற்கும் பெண்கள் மூலமாகவே நல்ல கீரையையும் விற்கலாம். சுய உதவி குழு பெண்கள் கூட இதற்கு பொருத்தமானவர்கள் தான். மக்கள் கூடும் இடங்களில் ஒரு கலர் குடையின் கீழ் கடை பரப்பலாம். தள்ளு வண்டிக்காரர்கள் உதவியுடன் தெரு தெருவாக விற்கலாம்.

            ஆர்கானிக் உணவு பொருள் விற்பனையில் இன்று நவீன உத்திகளை  காண முடிகிறது. Face bookம் வலை தளங்களும் நன்கு பயன் படுத்த படுகின்றன. திருநின்றவூர் அருகில் விளைந்த கீரையை தியாகராய நகரில் பசுமை மாறாமல் கொடுக்கிறார்கள். e-mailம் smsம் உற்பத்தியாளரையும் நுகர்வோரையும் இணைக்கின்றன. பாவம் கீரை விற்கும் பாட்டிகள்!

பின்குறிப்பு: என் பள்ளிப்பருவ நாட்களில் நான் ருசித்த அந்த எளிமையான, உண்மையான கீரை ருசி மீண்டும் கிடைத்தது.

பின் பின் குறிப்பு: நல்ல கீரை  வாங்க தொடர்பு எண்கள்-9094758930  மற்றும் 9043426826.


No comments:

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...