Thursday 4 July 2013

மாம்பழம் - சில உண்மைகள்

காயாக ............
மெல்ல கனியும் 
கனியாக 
சென்னையில் அவ்வப்போது மாலையில் மழை. கொதிக்கும் வெய்யிலில் சின்ன ஆறுதல். இப்போதெல்லாம் வருடம் முழுதும் கோடைதான். ஆனால் செய்தி தாள்களிலும்,
புத்தகங்களிலும் குளிர் கால உடல் நல பராமரிப்பு பற்றி எழுத துவங்கி விட்டார்கள். படிக்கும் போது சிரிப்பு தான் வருகிறது. அடிக்கிற வெய்யிலில் நமக்கிருந்த ஒரே நல்ல விஷயம்  மாம்பழம். கோடை காலத்தின் சிறப்புகளே விடுமுறையும், மாம்பழமும் தானே. இதோ மாம்பழ சீசன் முடிவுக்கு வரப் போகிறது. ருமானி மாம்பழம் வரத் துவங்கி விட்டது. கடைசி பாட்ச் பங்கனப் பள்ளி வந்து கொண்டிருக்கிறது. இனி அடுத்த வருடம் வரை காத்திருக்க வேண்டும். நினைத்தாலே கஷ்டமாயிருக்கிறது. இதோ, முடிந்து கொண்டிருக்கும் சீசனுக்கான மாம்பழ ஆடிட்.

மாம்பழம் வாங்குவது எப்படி?

சில வருடங்களாக  நான் குறிப்பிட்ட  இடங்கள் தவிர மற்ற இடங்களில் மாம்பழம் வாங்குவதில்லை. காரணம் மாம்பழம் பழுக்க வைக்கப் படும் முறை தான். Calcium Carbide எனும் chemical உதவியோடு பழங்கள் பழுக்க வைக்கப் படுகின்றன. மாம்பழமே சாப்பிடாவிட்டாலும் பரவாயில்லை. இந்த பழங்களை வாங்க கூடாது என்பது என் எண்ணம். ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோயில் அருகில் உள்ள Sunday Shandy தான் நான் மாம்பழம் வாங்கும் இடம். மார்க்கெட் விலை போன்று இரு மடங்கு விலை. ஆனால் இயற்கையான முறையில் பழுக்க வைக்கப் பட்ட மாம்பழம் என்பது உறுதி.

தோல் சுருங்கி..............
பச்சையும்..... மஞ்சளும்
கறை, புள்ளி.....நல்லது 
போன வாரம் போனேன். காய்களாக இருந்தன. மாம்பழத் தேவைக்கு காயாக வாங்கி கனிய வைப்பதும் ஒரு அனுபவம் தான். மாங்காயை வெறும் தரையில்,  ஒரு செய்தித்தாள் மீது போட்டு வைத்தாலே போதும். பழங்கள் ஒன்றோடு ஒன்று உரசாமல் அடுக்கி விட வேண்டும். பழுத்து விடும். கிராமங்களில் காயை சுற்றி வைக்கோலை திணித்து விடுவார்கள்.

ஏறக்குறைய ஐந்து நாட்கள் காத்திருந்தேன்.தினமும் பழுத்திருக்கிறதா என்று பார்த்து, காத்திருப்பதும் ஒரு வித அனுபவம் தான். இந்த முறையில் இன்னொரு அனுகூலம். Chemical இல்லாமல் பழுக்கிறது என்பது உறுதி படுகிறது. Chemical போட்டு வைக்கப் பட்டிருந்த காயாக இருந்தால் சீக்கிரம்  பழுத்து விடும். அதாவது பழுத்தது போல் தோலின் நிறம் மஞ்சளாக மாறி விடும்.

இயற்கையாக பழுக்க ஏழிலிருந்து பத்து நாட்கள் வரை ஆகும். இன்னொன்று. பழங்கள் ஒரே நேரத்தில் பழுக்காது. ஒவ்வொரு பழம் ஒவ்வொரு நாள் பழுக்கும்.முதலில் காயின் ஒரு சில இடங்கள் மட்டும் நிறம் மாற துவங்கும். கொஞ்சம் கொஞ்சமாக காய் முழுதும் நிறம் மாறும். அப்போதும் பளிச்சென்று பாலிஷ் போட்ட cricket ball போல பார்க்க அழகாக இருக்காது. ஆங்காங்கே சில புள்ளிகள், கறைகள்  இருக்கும். நிறம் கொஞ்சம் மட்டாக தான் இருக்கும். ஆனால் பழுத்து வரும் ஒவ்வொரு நிலையிலும் அதன் கெட்டி தன்மை குறைந்து கொண்டே வரும். Chemical போட்ட பழங்கள் தொட்டால் கெட்டியாக இருக்கும். இயற்கையாக பழுத்த பழங்கள் கொஞ்சல் அழுத்தி பிடித்தாலே  கன்றி விடும். 

இன்னொரு முக்கியமான விஷயம் வாசனை. இயற்கையான பழங்கள் கும்மென்று மணக்கும். பழுக்க, பழுக்க ஒரு விதமான வாசனை வரத் துவங்கும் பாருங்கள். உங்களால் பழுக்கும் வரை பொறுக்க முடியாது. நன்கு பழுத்ததும் தோலில்  சுருக்கங்கள் ஏற்பட்டு விடும். பழத்தின் மீது அடி பட்டால் அந்த இடம் அழுக துவங்கி விடும். நன்கு பழுத்த உடனே சாப்பிட்டு விட வேண்டும். இல்லை என்றால் அழுகி விடும். பழத்தில் நீர்ச் சத்து அதிகமாக இருக்கும்.

நான் மைலாப்பூரில் இருந்த போது, தண்ணீர் துறை மார்க்கெட்டில் (இப்போது ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ஆகி விட்டது), ஒரு பெண்ணிடம் மாம்பழங்கள் வாங்குவேன். அப்போது எனக்கு calcium carbide பற்றிய knowledge கிடையாது. சில நேரங்களில், "காயாக இருக்கிறது. சாயுங்காலம் வாங்க" என்பார். "நான் பழுக்க வைத்து கொள்கிறேன்" என்பேன். "அது பழுக்காது. சாயுங்காலம் வாருங்கள்" என்பார் மீண்டும். சாயங்காலத்துக்குள் பழுத்து விடுமா என்று ஒருநாள் கேட்டேன். "பக்குவப் படுத்தி தருவேன். நாளைக்குள் பழுத்து விடும்" என்றார். அப்போது தான் கவனித்தேன். அவர் உள்ளங்கை முழுவதும் வெளுத்து, அழுகிய பழம் போல் தோற்றமளித்தது. கையில் என்ன பிரச்சினை என்று கேட்டேன். காயை பழுக்க வைக்க மருந்து போட்டது இப்படி ஆகி விட்டது என்றார்.

பிறகு சிலரிடம் விசாரித்த போதுதான் calcium carbideன் மகாத்மியம் தெரிந்தது. அந்த chemicalஐ பயன் படுத்துவது தனக்கே கெடுதல் என்பது அந்த பெண்ணுக்கு தெரியவில்லை. பாவம். அதை உபயோகிப்பது வியாபார உத்தி என்ற அளவில் மட்டும் இருந்தது அவரது அறிவு. கையின் நிலைமை இப்படி என்றால், வயிறு? நினைக்கவே பயமாயிருக்கிறது. இந்த chemicalஐ வியாபாரிகள் அளவு தெரியாமல், அதிகமாக பயன்படுத்தினால், உடனடி வாந்தி, மயக்கம், உடலில் நீர் வற்றுதல் என மரணம் வரை கூட கொண்டு சென்று விடும். பல ஊர்களில் இத்தகைய மரணங்கள் நடந்திருக்கின்றன. அளவாக உபயோகிப் படுத்தினால், உடனே ஒன்றும் செய்யாது. Slow poison போல வேலை செய்யும். அவ்வளவுதான்.

"எப்போதோ சீசனில் கொஞ்சம் மாம்பழம் சாப்பிடுகிறேன். அவ்வளவுதானே" என்ற அலட்சியம் வேண்டாம். Calcium carbide பழங்கள், முதலில் வயிற்றில் புண் ஏற்படுத்தும். நாளடைவில் இந்த புண் cancer ஆகவும் மாறக் கூடும். உங்கள் இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகியவற்றையும் பாதிக்கும். நரம்பு மண்டலத்தின் இயக்கத்தில் இடையூறு செய்யும்.

Calcium carbide போட்ட மாங்காய் இரண்டே நாட்களில்  பழுத்தது போல் நிறம் மாறி விடுகிறது. அவற்றை நாமும் பழம் என்று நம்பி வாங்குகிறோம். வியாபாரிக்கு, வட்டிக்கு வாங்கிய முதலீடு விரைவில் காசாகிறது. இயற்கையாக பழுக்க ஏழு நாட்கள் ஆனால், அதுவரை வியாபாரியின் முதலீடு காயாக கிடங்கில் முடங்கி விடுகிறது. இயற்கையாக பழுக்கும் மாம்பழங்களில் 15 சதவீதம் வரை அழுகி வீணாகிப் பொய் விடும். Chemical போட்ட காய்கள் தான் பழுப்பதே இல்லையே. பின் எப்படி வீணாகும்? மாம்பழத்தின் பின்னால் உள்ள வணிக ரகசியம் இவ்வளவுதான். மாம்பழம் மட்டுமில்லை. வாழை, பப்பாளி, தர்பூசணி என்று இந்த பட்டியல் நீள்கிறது.

Calcium carbide லிருந்து acetylene வாயு வெளியாகிறது. இந்த வாயு தரும் வெப்பத்தில் காயின் நிறம் மாறுகிறது. Gas welding ல் பயன் படுத்தப் படுவது இதே acetylene வாயுதான். சூரிய ஒளியில் நம் ஆடைகள் எப்படி நிறம் மாறுகின்றனவோ (bleaching) அப்படித்தான் காய்களும் பழங்கள் போல் நிறம் மட்டும் மாறுகின்றன.

இன்று விற்கப் படும் மாம்பழங்களை பார்த்து, பலருக்கும் original மாம்பழம் எப்படி இருக்கும் என்பதே மறந்து விட்டது. பார்க்க அழகாக இல்லையே என்கிறார்கள். அவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஆங்கிலத்தில் unlearning என்று சொல்வார்கள். கற்றதை மறப்பது. பல நேரங்களில் நாம் தேவையில்லாமல் தவறாக கற்ற விஷயங்களை மறந்தாலே, அது புதிய பல விஷயங்களை கற்றதற்கு சமம் ஆகும். அவற்றில் ஒன்றுதான் இந்த மாம்பழ சமாச்சாரமும்.

நீங்கள் கண்ணை மூடிக் கொண்டு நல்ல மாம்பழத்தை தெரிவு செய்து விடலாம். வாசனை. இதுதான் நல்ல மாம்பழத்தின் அடையாளம். இயற்கையான மாம்பழத்தை முதலில் நுகர்ந்து பார்த்து, அதன் மணத்தை மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள். முதலில் இயற்கையான மாம்பழம் எது என்று கண்டு பிடிக்க வேண்டும்.  ஒன்று, உங்களுக்கு இது பற்றி அறிந்த நண்பர்கள் இருக்க வேண்டும். இல்லை என்றால் என்னை நம்புங்கள். நான் முதலில் குறிப்பிட்ட Sunday Shandy யில் ஒரு முறை மாம்பழம் வாங்கி அதன் வாசனையை  மனதில் கொள்ளுங்கள். பிறகு நீங்களே நல்ல மாம்பழத்தை தெரிவு செய்யும் கலையில் தேறி விடுவீர்கள்.

இயற்கையாக பழுத்த மாம்பழம் நல்ல இனிப்பு சுவையோடு இருக்கும். Chemical போட்டு பழுத்த மாம்பழம் சுவையற்றதாக இருக்கும்.  அடுத்து பழத்தின் தோல் நிறம், ஒரே மஞ்சள் நிறத்தில் இல்லாமல், சில இடங்களில் வெளிர் பச்சையாக, சில இடங்களில் அதிக மஞ்சளாக என்று பல விதங்களில் இருக்கும். பச்சையும், மஞ்சளும் தனித் தனி திட்டுகளாக இருக்காது. பச்சை நிறத்தின் மீது மஞ்சள், மஞ்சள் நிறத்தின் மீது பச்சை என்று ஒன்றோடொன்று பிணைந்திருக்கும் (overlapping of colours).

இப்பக்கத்தில் உள்ள படங்கள் உங்களுக்கு இந்த விஷயத்தில் உதவ கூடும்.

அடுத்து.....

மாம்பழம் சாப்பிடுவது எப்படி?


மாம்பழம் சாப்பிடுவதில் இரண்டு விதங்கள் உண்டு. ஒன்று, மாம்பழத்தை கொலை செய்து, பிறகு சாப்பிடுவது. இரண்டாவது, பழத்தை உயிருடன் சாப்பிடுவது. மாம்பழத்தை கொலை செய்வது எப்படி? மாம்பழத்தை வெட்ட கத்தியை கையில் எடுக்கும் போதே, நீங்கள் ஒரு கொலைக்கு தயாராகி விடுகிறீர்கள். கத்தியால் வெட்டப் பட்ட பழத்தில், லேசான புளிப்பு சுவை வந்து விடும். அது, பழத்தை வெட்டாமல், கடித்து சாப்பிட்டு பார்த்தவர்களுக்கு தான் தெரியும். பொதுவாக எந்த உணவு பொருளையும் எப்படி சாப்பிடுவது என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். Knife & Fork உபயோகிக்கும் வெளிநாட்டுக் காரர்களிடம் அந்த உரிமையை விட்டு கொடுக்கக் கூடாது.

மாம்பழத்தை, தோலை சீவி, கத்தியால் சிறு சிறு துண்டுகளாக்கி சாப்பிடுவது ஒரு வகை. அல்லது இரண்டு பக்க கதுப்புகளை தனியாகவும், கொட்டை பகுதியை தனியாகவும் வெட்டி சாப்பிடுவது.அது தான் நான் சொன்ன, மாம்பழத்தை கொலை செய்து சாப்பிடும் முறை. இப்போது, மாம்பழத்தை உயிருடன் சாப்பிடுவது எப்படி என பார்க்கலாம்.

கத்தியின் உதவி இல்லாமல், நம் கையையும், பல்லையும் பயன்படுத்தி சாப்பிடும் முறை தான் அது. இயற்கையாக நன்கு பழுத்த மாங்கனி, கொஞ்சம் juicy ஆக இருக்கும். அத்தகைய கனியை, நம் விரல்களால் மெல்ல அழுத்தம் கொடுத்து, இன்னும் juicy ஆக ஆக்க வேண்டும். அவ்வாறு அழுத்தம் கொடுக்கும் போது, பழம் உடைந்து விடக் கூடாது. இப்போது பழத்தின் உச்சி பகுதியில் பற்களால் ஒரு சிறிய துளை போட வேண்டும். அந்த து;ளையில் வாய் வைத்து மெல்ல உறிஞ்ச வேண்டும். இயற்கையால் pack செய்யப் பட்ட மாம்பழ ஜூஸ் இது. எந்த tetra-pack juiceம் இதன் சுவையோடு போட்டி போட முடியாது.

அடுத்து, மேலே சொன்னதற்கு முந்தைய நிலை கனிவில் உள்ள மாம்பழம். நன்கு கழுவிய பிறகு, அப்படியே முழு பழத்தையும் கடித்து சாப்பிட வேண்டும். தோலோடு சேர்த்து சாப்பிடும் போது, தோலின் துவர்ப்பு பழத்தின் இனிப்பை கூட்டி காட்டும். கத்தியால் ஏற்படும் புளிப்பும் இருக்காது. பழத்தின் கொட்டை மீது ஒட்டி இருக்கும் சதை பகுதியை, துளிக்கூட விடாமல் சாப்பிட வேண்டும். முழுமையான  பழம் சாப்பிட்ட மன திருப்தி கிடைக்கும்.

டெயில் பீஸ்: நல்ல மாம்பழ விற்பனையில் இந்த வருட புதிய வரவு, Vaer Online Organic Shop. இந்தியாவின் முதல் Online Organic Shop என்கிறார்கள். மார்க்கெட்டில் கிடைக்காத புதிய மாம்பழ வகைகளை இந்த சீசனில் விற்பனை செய்திருக்கிறார்கள். சேலம் நடு சாலை மாம்பழம் அவற்றில் ஒன்று. அடுத்த வருட சீசனுக்கு நினைவில் கொள்ள வேண்டிய கடை.


No comments:

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...