Friday, 24 January 2014

காவாத்து கிழங்கு வதக்கல்

காவாத்து கிழங்கு வதக்கல் 


காவாத்து கிழங்கு (purple yam) பற்றி  கேள்வி பட்டிருக்கிறீர்களா? இது சேனை கிழங்கு வகையை சேர்ந்தது. கிழங்கு மேல்தோலை சுற்றிலும் முடி முளைத்தது போல் சிறு சிறு வேர்கள் இருக்கும். உள்தோல் purple நிறத்தில் இருக்கும். உள்ளே பழுப்பு நிறத்தில் இருக்கும். இதை வேக வைத்து, வதக்கலாம். சர்க்கரை போட்டு இனிப்புகள் செய்யலாம். உருளை கிழங்கு, சேப்பங் கிழங்கு, சேனை கிழங்கு இவற்றில் என்ன என்ன சமையல் செய்வோமோ அவற்றை எல்லாம் காவாத்து கிழங்கிலும் செய்யலாம்.



சேப்பங் கிழங்கு போன்று வழு வழுப்பாக இருக்கும். மர வள்ளி கிழங்கு, சேனை கிழங்கு இவற்றின் சுவையும் காவாத்து கிழங்கில் இருக்கும். இதை சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி இல்லாமல் இருக்கும். சுவை மிக நன்றாக இருக்கும். நல்ல காரம், எண்ணெய் விட்டு சமைத்து பாருங்கள். சுவை ஆளை அசத்தும்.



காவாத்து கிழங்கு 
காவாத்து கிழங்கு வேக வைத்தது 
காவாத்து கிழங்கு இன்னொரு தோற்றம் 

காவாத்து கிழங்கு













          தேவையான பொருள்கள் 

காவாத்து கிழங்கு - 250 கிராம் 
மிளகாய் பொடி -  1 ஸ்பூன் 
மஞ்சள் பொடி -   1/4 ஸ்பூன் 
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன் 
கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் - தாளிக்க 
உப்பு - தேவைக்கேற்ப 

செய்வது  எப்படி?

காவாத்து கிழங்கை மூழ்கும் அளவு தண்ணீரில் போட்டு வேக வைக்கவும். கிழங்கு நன்கு வெந்ததும் தோல் உரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் போட்டு தாளிக்கவும். நறுக்கிய கிழங்கு துண்டுகளை போடவும். மஞ்சள் தூள், மிளகாய் பொடி, உப்பு சேர்க்கவும். இவற்றை நன்கு கலந்து , கிழங்கு துண்டுகள் மொறு மொறுவென வரும் வரை வதக்கவும்.அவ்வப்போது கிளறி விட்டால் எல்லா பக்கமும் நன்கு வதங்கும். 

கிழங்கில் மொறு மொறுப்பு வந்ததும் அடுப்பை அணைத்து மூடி வைக்கவும்.

சூடான, சுவையான, மொறு மொறுப்பான காவாத்து கிழங்கு வதக்கல் தயார்.

வேக வைத்த காவாத்து கிழங்கை சிறு சிறு துண்டுகளாக்கி தண்ணீரில் போடவும். நிறம் மாறாமல் இருக்கும்.
வதக்கும் நேரத்தில் தண்ணீரை வடிக்கவும் 
வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து, நறுக்கிய காவாத்து கிழங்கு துண்டுகளை போடவும் 
மஞ்சள் தூள், மிளகாய் பொடி, உப்பு சேர்க்கவும்
நன்கு வதக்கவும் 
மொறு மொறுப்பு வரும் வரை வதக்கவும்.  காவாத்து கிழங்கு வதக்கல் ரெடி. 
சாப்பிட்டு பார்த்து சொல்லுங்கள்.

Thursday, 23 January 2014

ஆந்திரா காலிஃப்ளவர் ஊறுகாய்

ஆந்திரா காலிஃப்ளவர் ஊறுகாய்                                          PHOTO: Srividya Raman


தேவையான பொருள்கள் 



காலி ஃப்ளவர் - ஒரு பூ
வெந்தயம் - ஒரு ஸ்பூன்
மிளகாய் பொடி -  ஒரு டம்ளர் 
கடுகு பொடி -        - ஒரு டம்ளர்
கடலை எண்ணெய்  - ஒன்றரை டம்ளர் 
எலுமிச்சை சாறு       -  ஒரு டம்ளர்   
பூண்டு        -                5 பல் 
கல் உப்பு -              - ஒரு டம்ளர்     


 PHOTOS: Srividya Raman


எப்படி செய்வது?

இது ஆந்திரா ஸ்டைல் ஊறுகாய். எங்கள் அபார்ட்மென்ட்டில் குடியிருக்கும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த திருமதி.ஜகதீஸ்வரி நாகேஸ்வரராவ்   செய்து காட்டிய காலிஃப்ளவர் ஊறுகாய் இது. எந்த பொருளையும் வேக வைத்தோ, வதக்கியோ செய்யாமல், பச்சையாகவே சூரிய ஒளியை நம்பி செய்யப்படும் இயற்கை ஊறுகாய் இந்த காலிஃப்ளவர் ஊறுகாய் . இதை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம். தயிர் சாதத்திற்கு தொட்டு சாப்பிடலாம். சப்பாத்தியோடு சாப்பிடவும் நன்றாக இருந்தது. 

15 நாட்கள் வரை வைத்து சாப்பிட முடியும் .

காலிஃப்ளவர்                                                                               PHOTO: Srividya Raman


காலிஃப்ளவரை  சுத்தம் செய்து, பூ பூவாக ஆய்ந்து கொள்ளவும். மூழ்கும் அளவு தண்ணீரில் சிறிது கல் உப்பு போட்டு 20 நிமிடம் ஊற வைக்கவும். பின் தண்ணீர் வடித்து வெய்யிலில் காய வைக்கவும். மூன்று நாட்கள் வெய்யிலில் காய வைக்க வேண்டும்.







காலி ஃப்ளவர்  நன்கு காய்ந்ததும், ஒரு பாத்திரத்தில் போட்டு, மிளகாய் பொடி சேர்க்கவும். 











கடுகு பொடி சேர்க்கவும். கடுகை வறுக்காமல் பொடி செய்து சேர்க்க வேண்டும்.








கல்  உப்பை  மிக்சியில் போட்டு பொடித்து சேர்க்கவும்.











மிளகாய் பொடி, கடுகு பொடி, உப்பு  இவை  மூன்றையும்  நன்கு கிளறி விடவும்.










பூண்டு சேர்க்கவும். தோல் உறித்த பூண்டு பற்களை அப்படியே சேர்க்கலாம்.






கடலை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் - இரண்டில் ஒன்றை காய்ச்சாமல் அப்படியே சேர்க்கவும்.










கடலை எண்ணெயை நன்கு கிளறி விட்டு, எலுமிச்சை சாறையும் சேர்க்கவும்.






திரும்ப நன்கு கிளறி விட்டு இரண்டு அல்லது மூன்று நாட்கள் மூடி வைக்கவும். மூன்று நாட்களுக்கு பிறகு ஊறுகாயை பயன்படுத்தலாம்.

அவ்வளவுதான்...
காலிஃப்ளவர் ஊறுகாய் ரெடி ...

வேக வைக்காமலே செய்யப் படும் இயற்கை ஊறுகாய் இது.


 PHOTOS by  Srividya Raman

Saturday, 18 January 2014

மைலாப்பூர் உணவு திருவிழா

மைலாப்பூர் உணவு திருவிழாவில் கட்டுக் கடங்காத கூட்டம்            PHOTO: Srividya Raman


சென்னையில் மைலாப்பூர், மேற்கு மாம்பலம், திருவல்லிக்கேணி ...இந்த பகுதிகளை தனி நகரங்கள் என்றே கூறலாம்.  இவற்றுக்கு தனி கலாசாரம், வரலாறு உண்டு. பழமையும், புதுமையும் கைகோர்த்து செல்லும் பகுதிகள் இவை. மயிலையில் கபாலீஸ்வரர், திருவல்லிக்கேணியில் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள், மேற்கு மாம்பலத்தில் காசி விஸ்வநாதர்...இப்படி இவற்றை கோயில் நகரங்கள் எனலாம்.


ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் மயிலை கோயிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளும் களை கட்டும். பத்திரிக்கையாளர் வின்சன்ட் டி சௌசா முயற்சியில் துவங்கிய ,சுந்தரம் ஃபைனான்ஸ் ஆதரவில் நடக்கும் மைலாப்பூர் பெஸ்டிவல் பற்றி குறிப்பிடுகிறேன். 12 வருடங்களாக தொடர்ந்து நடக்கும் இந்த திருவிழா, மயிலையின் கலாசார அடையாளமாக மாறிவருகிறது. வருடா வருடம் இந்த திருவிழாவின் பிரமாண்டம் அதிகரித்து வருகிறது.

மயிலை வடக்கு மாட வீதியில் கோல போட்டி PHOTO: Srividya Raman

நிகழ்ச்சிகள் அனைத்துமே திறந்த வெளிகளில் நடப்பது இதன் சிறப்பு. வடக்கு மாட வீதியில் கோல போட்டி, கபாலீஸ்வரர் சன்னதி தெருவில் தினசரி பாரம்பரிய  நிகழ்வுகள், பிச்சு பிள்ளை தெருவில் ஓவியரின் கைவண்ணங்கள் , நாகேஸ்வர ராவ் பூங்காவில் அதி காலை நேர சிறுவர் இசை கச்சேரிகள் என்று நான்கு நாட்களுக்கு அமர்க்களப் படும் மைலாப்பூர்.
சன்னதி தெருவில் ....       PHOTO: Srividya Raman
இந்த வருடம் ஜனவரி  9,10,11,12 தேதிகளில் நடந்தது மைலாப்பூர் திருவிழா.

                                                                                        PHOTO: Srividya Raman
மைலாப்பூர் திருவிழாவின் முக்கிய பகுதி உணவு திருவிழா. நான்கு நாட்களும் தற்காலிக உணவு ஸ்டால்கள் இயங்கும். ஒரு நாள் மதியம் மைலாப்பூரில் குறிப்பிட்ட நான்கைந்து வீடுகளில் இலை சாப்பாடு உண்டு.  யாரோ முன்பின் தெரியாத ஒருவரின் வீட்டிற்கு சென்று சாப்பிடும் அனுபவம் அது. முன்பதிவு அவசியம். இந்த வருடம் இலை சாப்பாட்டிற்கு கட்டணம் 150  ரூபாய்.


சுந்தரேஸ்வரர் தெருவில் உணவு ஸ்டால்கள் அமைக்கப் பட்டிருந்தன. நூற்றுக் கணக்கான ஸ்டால்கள்...பல நூறு வகை உணவுகள்...பஞ்சு மிட்டாயும் உண்டு. சிறுவர் ராட்டினமும் உண்டு. மர பொருள்கள் விற்பனை வண்டி கண்ணை கவர்ந்தது. பாசி பருப்பு பாயசம், கத்தரிக்காய் போண்டா, பால் கொழுக்கட்டை  கிடைத்தன.

பிரமாண்டமும், கூட்டமும் இருந்தாலும் பொருட்காட்சி உணவக உணர்வு ஏற்பட்டது ஒரு குறையே. டெல்லி அப்பளம் கூட விற்றார்கள். எந்த ஸ்டால் சென்றாலும்  உணவுகள் தரமாக இருக்கும் என்ற உத்தரவாதமில்லை.




வீட்டில் தயாரித்த நமது பாரம்பரிய உணவுகளை விற்பனை செய்திருக்கலாம். அதே நேரத்தில் பொடி இட்லி, அம்மிணி கொழுக்கட்டை, ரச வடை  போன்ற எளிய, இனிய உணவுகளும் கிடைத்தன. உணவு விலை குறைவு தான். பிச்சு பிள்ளை சந்தில் இரண்டு உணவு கடைகளில் home made food கிடைத்தன.

மொத்தத்தில் திருவிழாவிற்கு சென்ற குழந்தையின் குதூகல மனதோடு வீடு திரும்பினோம்.




அம்மிணி கொழுக்கட்டை 
வாழைப் பூ வடை 


பொடி இட்லி 




























மர பொருள் விற்பனை...


























படங்கள்: Srividya Raman

கனு பொங்கலும்....காணும் பொங்கலும்....

காணும் பொங்கல் அன்று சென்னை மெரினாவில் இளைஞர்களின் கானா கொண்டாட்டம் 

பொங்கல் ஒரு நெடிய பண்டிகை. தை முதல்நாள் பொங்கல், அதற்கு முதல்நாள் போகி, பொங்கலுக்கு அடுத்தநாள் மாட்டுப் பொங்கல், கனு பொங்கல், அதற்கடுத்த நாள் சென்னையில் காணும் பொங்கல் .....இப்படி நீளும் இந்த பண்டிகை கொண்டாட்டங்கள். சகோதரர் நலன் வேண்டி, சகோதரிகள்  காக்கைகளுக்கு கலர் கலராக கலந்த சாத வகைகள், இனிக்கும் பொங்கல், பழங்கள், தேங்காய் இப்படி விதம் விதமான படையல் வைத்து வழி படுவர். மஞ்சள் கொத்து இலைகளில் வைக்கப் பட்டிருக்கும் இந்த கனு படையல் ஒரு கண்கொள்ளா காட்சி. திருமணமான பெண்களுக்கு அம்மா வீட்டிலிருந்து கனுசீர் கொடுக்கும் வழக்கம் உண்டு.  ஆயிரம்  ஆயிரமாக கணவன் சம்பதித்துக் கொடுத்தாலும் அம்மா  வீட்டில் இருந்து வரும்  கனுசீர் பணத்திற்கு பெண்கள் கொடுக்கும் மரியாதையே தனி
சகோதரருக்காக சகோதரிகள் வைக்கும் கனுபிடி  காக்கா பிடி

கனுவிற்கு அடுத்த நாள், வழக்கமாக பீச் செல்லும் சென்னை வாசிகள் வீட்டில் அடைந்து கிடக்க, வெளியூர் வாசிகள் சென்னை மெரீனா, வண்டலூர், கேளிக்கை பூங்காக்கள் என்று அனைத்து இடங்களிலும் கூடி கொண்டாடுவர். கட்டு சாத கூடை, கானா பாட்டு என்று ஊரெங்கும் கொண்டாட்டம்தான். சென்னை மெரினாவில் கண்ட காணும் பொங்கல் காட்சிகளின் படப் பதிவு இதோ:

காணும் பொங்கல் காண வந்திருக்கேன்...
இங்கே வந்து சாப்பிட்டால்தான் சாப்பிட்ட மாதிரி இருக்கு...
கட்டு சாதம் 





கிளி ஜோசியம் 



இந்த வருடம் கூட்டம் அதிகமில்லை ...





Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...