தலைவாழை விருந்து 100 வது போஸ்ட்.
அக்கார அடிசில்
முதலில் கூடாரை வல்லி ............
பெரியாழ்வாருக்கு பூமித் தாயால் கொடுக்கப் பட்ட பெண் கோதை. கோதை சூடிய மாலை பெருமாளுக்கு உகந்த மாலை என்று ஆனதால் கோதை, ஆண்டாள் ஆனாள். கண்ணனை அடைய நினைத்த கோதை நாச்சியார் (ஆண்டாள்) பால், நெய் தவிர்த்து பாவை நோன்பிருக்கிறாள். இந்த பாவை நோன்பு பற்றி ஆண்டாள் பாடிய முப்பது பாடல்கள் திருப்பாவை என்றழைக்கப் படுகின்றன. இந்த முப்பது பாடல்களும் மார்கழி மாதம் முழுதும் வைணவ கோயில்களில் பாடப் பெறும். மார்கழி 27 ம் நாளான இன்று கூடாரை வல்லி. அதாவது ' கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா!' என்று தொடங்கும் பாடல் பாடப்படும். கூடத் தகாதவர்களை அதாவது கெட்டவர்களை வெற்றி பெறும் கோவிந்தா என்று கண்ணன் புகழ் பாடுகிறாள் ஆண்டாள்.
பால், நெய் தவிர்த்து நோன்பிருந்த ஆண்டாள், கண்ணன் அருள் பெற்று, விரதத்தை முடித்து, பாற்சோறில் ஊற்றிய நெய் முழங்கை வழியாக வழியும்படி எல்லோரும் கூடி உண்டு மகிழ்வோம் என்று பாடுகிறார்.
அந்த பாடல்....திருப்பாவை 27ம் பாசுரம்:
கூடாரை வெல்லும்சீர்க்கோவிந்தா! உன்தன்னை
பாடிப் பறைகொண்டு யாம்பெரும் சம்மானம்;நாடு புகழும் பரிசினால் நன்றாக,
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்;
ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
ஆண்டாள் பாடிய பாடல்கள் நாச்சியார் திருமொழி என்ற பெயரில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இடம் பெற்றுள்ளன.
நாறு நறும் பொழில்மா லிருஞ் சோலை நம்பிக்கு, நான்
நூறு தடாவில் வெண்ணை வாய் நேர்ந்து பராவி வைத்தேன்.
நூறு தடாநிறைந்த அக்கார வடிசில் சொன்னேன்.
ஏறு திருவுடையான் இன்று வந்திவை கொள்ளுங் கொலோ!
அதாவது.....
" நறுமணம் வீசும் திருமாலிரும் சோலையில் வீற்றிருக்கும் எம்பெருமானே,
நான் உனக்கு நூறு தடா (அண்டா) நிறைய வெண்ணையும், நூறு தடா நிறைய அக்கார அடிசிலும் படைப்பதாய் வாக்கு தருகிறேன். அழகர் தாங்கள் இன்று வந்து இவற்றை ஏற்பீரோ?" என்கிறாள் ஆண்டாள்.
ஆண்டாள் இறைவனோடு ஐக்கியமான பின் ஆண்டாளின் இந்த வாக்கை யாரும் நிறைவேற்றவில்லையோ என்று ஐயுறுகிறார்ஆண்டாளுக்கு பலகாலத்துக்கு பின் அவதரித்த ஸ்ரீ ராமானுஜர். திருமாலிரும் சோலை ( அழகர் கோவில் மலை) சென்று ஆண்டாள் வாக்கை நிறைவேற்றுகிறார். இந்த கைங்கர்யம் முடித்த பிறகு ஸ்ரீவில்லிபுத்தூர் செல்கிறார் ஸ்ரீராமானுஜர். ஆண்டாள், தெய்வ சன்னதியிலிருந்து வெளி வந்து " நம் " அண்ணாரே" என்று ஸ்ரீ ராமானுஜரை விளிக்கிறார். இதனை ஒட்டித்தான ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கருவறையை விட்டு வெளியே வந்து நின்ற இடத்தையும் கருவறையாகவே கருதி அந்த இடத்திலும் பக்தர்கள் கால் பட அனுமதிப்பதில்லை.
கூடாரை வல்லி அன்று அனைத்து வைணவ கோயில்களில் மட்டும் அல்ல பக்தர்கள் வீடுகளிலும் அக்கார அடிசில் அதாவது பாலில் மட்டுமே வேக வைத்த சக்கரை பொங்கல் செய்து மகிழ்கிறார்கள்.
தலைவாழை விருந்து தனது 100 வது post ஆக வழங்குகிறது, அக்கார அடிசில் செய்முறை. 100 வது postக்கு graphics செய்து கொடுத்த Sundarramg (A.S. Sundaram) அவர்களுக்குக்கு நன்றி.
அக்கார அடிசில் |
தேவையான பொருள்கள்
பால் - 1 லிட்டர்
பச்சரிசி - 1/2 கப்
பயத்தம் பருப்பு - 2 பிடி
வெல்லம் (பொடித்தது) - 1 கப்
நெய் - தாராளமாக
ஏலம்,முந்திரி, உலர் திராட்சை - சிறிதளவு.
வெல்லம் |
ஏலக்காய் |
நெய் |
முந்திரி, காய்ந்த திராட்சை |
அரிசி, பருப்பு இரண்டையும் 20 நிமிடம் ஊற விடவும். தண்ணீரை வடித்து விட்டு பால் சேர்த்து வேக வைக்கவும். வெந்தவுடன் வெல்லத்தை தூளாக்கி போடவும். நன்கு கலந்து, வெல்லம் கரைந்ததும் நெய் ஊற்றி நன்கு கிளறவும். பின் இறக்கி வைத்து முந்திரி, திராட்சை இவற்றை நெய்யில் பொறித்து போடவும்.
சூடான, முழங்கை வரை நெய் வழியும் அக்கார அடிசில் தயார்.
பாலில் அரிசியும் பருப்பும் வேக நிறைய நேரம் பிடிக்கும். அதுவரை கைவிடாமல் கிளற வேண்டும். நேரம் ஆக ஆக பால் நன்கு சுண்டி விடும். சுண்டிய பால் அளவு குறைந்து நல்ல தளர்வான பொங்கல் பதம் வரும். வழக்கமான சக்கரை பொங்கல் போல் இறுகலாக இருக்காது. அக்கார அடிசில் குழைவான, தளர்வான பதத்தில் உள்ள இனிப்பு.
பால் சுண்டியபிறகும் அரிசி வேகவில்லை என்றால் திரும்பவும் பால் சேர்த்து கொள்ளலாம். அப்படி சேர்த்தால் பாலை கொதிக்க வைத்து சேர்க்க வேண்டும். பச்சை பாலை சேர்த்தால் அரிசி விறைத்து போகும்.
அடி கனமான பாத்திரத்தில் செய்யவும்.
புது அரிசி பயன்படுத்தினால் நல்லது. புது அரிசி நன்கு குழையும். அரிசி களையும்போது கழுநீர் பால் போல் வெண்மையாக இருக்கும். அப்படி இருந்தால் அது புது அரிசி என்று உறுதி படுத்தி கொள்ளலாம்.
நெய்யும், பாலும், வெல்லமும் சேர்ந்த சுவையை எழுத்தில் கொண்டுவர முடியாது. அக்கார அடிசில் சாப்பிடுவது நிஜமாகவே ஒரு தெய்வீக அனுபவம் போல் இருக்கும்.
அக்கார அடிசில் |
3 comments:
அன்புள்ள ராமன் அவர்களுக்கு அக்கரா அடிசல் மிக அருமை படங்கள் பிரமாதம் . கூடாரை வல்லி பற்றி செய்தி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் . மொத்தத்தில் மிக அருமையான தொகுப்பு .நன்றி சுந்தர்
'அக்கார அடிசில்'...இந்த பெயர் காதில் பலவாறாக விழுந்து, வித விதமான உரு பெற்று பலரிடம் தவறாக உச்சரித்து ஒருவழியாக சரியான ஒன்றை புரிந்து கொள்ள உங்கள் blogspot உதவிகரமாக இருந்தது. உங்களது அக்கார அடிசில் உண்மையில் பிரமாதம். எப்படி என்றால், என்னை சுயநலவாதியாக மாற்றிவிட்டது. மற்றவர்களுக்கு கொடுக்க மனம் வரவில்லையே!
Dear Raman Sir,
Thank you very much for your posting of Akkara Adisil. Its tempting me a lot even i didn't prefer sweets. Your pictures are superb. Totally your postes are too good very interesting and informative.
Post a Comment