Tuesday, 7 January 2014

கிராமத்து துவையல் வகைகள் - மிதி பாகல் விதை துவையல்




மிதி பாகல் விதை துவையல் 


எனது நண்பர் அச்சுந்தன்வயல் திரு. கண்ணன் ஒரு பாகற்காய் ரசிகர். கசப்பு, துவர்ப்பு  - இவையும் சுவைதான் என்பதை இவரிடமிருந்துதான் கற்று கொண்டேன். எனக்கு அறிமுகம் இல்லாத ஆரோக்கிய உணவுகள் பற்றி அவ்வப்போது கூறுவார். அப்படி அவர் சொன்னதுதான் மிதி பாகற்காய் விதை துவையல். செய்து பார்க்கலாம் என்று ரெசிபி கேட்டேன். அவரது சகோதரி திருமதி. கலா முத்துமணி அவர்களிடம் கேட்டு சொன்னார். இருவருக்கும் நன்றி.




தேவையான பொருள்கள் 

மிதி பாகல் விதைகள் (நன்கு முற்றியது) - ஒரு கைப்பிடி அளவு.
கருவேப்பிலை - 10 அல்லது  15 இலைகள்.
கொத்தமல்லி தழை - கருவேப்பிலை அளவே.
புளி - சிறு கோலி குண்டு அளவு.
வர மிளகாய் - 5
கடுகு - தாளிக்க. 
உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு - 2 ஸ்பூன்.
பெருங்காயம் - சிறிது.
உப்பு - தேவைக்கேற்ப.




எப்படி செய்வது?

பாக விதைகளை ஒரு வாணலியில் போட்டு (எண்ணெய் இல்லாமல்) சிவக்க வறுக்கவும். கருகி விடக் கூடாது. விதை பொன்னிறம் வந்து, வாசனை வரத் துவங்கும். அப்போது வறுப்பதை நிறுத்திவிட வேண்டும். வறுத்த மிதி பாக விதைகளை ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும். 

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, வர மிளகாய் - இவற்றை போட்டு சிவக்க வறுக்கவும். கடைசியாக கடுகு, பெருங்காயம் போட்டு தாளிக்கவும்.

இவை அனைத்தையும் வறுத்த பாக விதைகளுடன் சேர்த்து, புளி, உப்பும் சேர்த்து, மிக குறைந்த அளவு தண்ணீர் விட்டு, மிக்சியில் போட்டு நைசாக அறைக்கவும். 

ஆரோக்கியமான  மிதி பாகல் விதை துவையல் ரெடி.

இட்லி, தோசை, உப்புமா , பொங்கல் என்று வழக்கமாக நாம் தேங்காய் சட்னி தொட்டு சாப்பிடும் டிபன் வகைகள் அனைத்திற்கும் பாக விதை துவையல் சுவை சேர்க்கும்.

குறிப்பாக இட்லி, தோசைக்கு இந்த துவையல் மிக நன்றாக இருக்கிறது.














கிராமங்களில் அடுத்த பட்டத்திற்காக விதை சேகரித்து வைப்பார்கள். அப்படி சேகரித்து வைத்த மிதி பாக விதைகளில் கொஞ்சம் எடுத்து எளிமையான ஆனால் இனிமையான இந்த துவையலை செய்திருக்கிறார்கள்.

அவர்கள் அவ்வளவு எளிமையாக செய்த இந்த துவையலை செய்ய நான் இரண்டு மாதம் காத்திருக்க வேண்டியதாயிற்று. சென்னையில் பாக விதைகள் கிடைப்பதில்லை. பாக்கெட்டில் போட்டு விற்கும் விதைகளில் எத்துணை உரமும் பூச்சிக் கொல்லியும் இருக்குமோ?

ஆகவே நானே விதை சேகரிக்க முடிவு செய்தேன். சூப்பர் மார்க்கெட்டில் கூட்டு, பொறியல் செய்வதற்காக பிஞ்சு மிதி பாகற்காய் தான் வைத்திருப்பார்கள். ஒருநாள் கடைக்கு சென்றால் ஒன்றோ, இரண்டோ பழுத்த பாகற்பழம்  கிடைக்கும். அதை மட்டும் வாங்க முடியாதே? கூடவே கொஞ்சம் பிஞ்சு பாகற்காய் வாங்குவேன்.

ஒன்றரை மாதம் ஆயிற்று ஒரு கைப்பிடி பாக விதை சேகரிக்க. அந்த விதைகளை இரண்டு வாரம் காய வைத்தேன். கடும் முயற்சி ஆனாலும் இதன் சுவை, இந்த முயற்சியை மீண்டும் மீண்டும் எடுக்கலாம் என நினைக்க வைத்தது. 


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

வலைச்சர தள இணைப்பு : சொர்க்கமே என்றாலும்...

Traditional Food Blog said...

அறிமுகத்திற்கு நன்றி. தங்கள் வருகை தொடரட்டும்.

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...