Tuesday, 31 December 2013

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மறைந்தார்


இயற்கை வேளாண் விஞ்ஞானி (Organic Farming Scientist) Dr. G. நம்மாழ்வார் காலமானார். அவருக்கு வயது 75. தஞ்சை மாவட்டத்தில் பிறந்த நம்மாழ்வார்  B.Sc. (Agri.)பட்டம் பெற்று தமிழக அரசு வேளையில் இருந்தவர். வேலையை உதறி விட்டு, இயற்கை  வேளாண்மை விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார். பிரச்சாரத்தோடு நிற்காமல், கரூர் அருகே 'வானகம்' (நம்மாழ்வார் உயிர் சூழல் நிறுவனம்-Dr. Nammalvar Ecological Foundation) என்ற இயற்கை வேளாண் பண்ணை நிறுவி தன் கருத்துக்களுக்கு செயல் வடிவம் கொடுத்தார்.

காந்திகிராமம் பல்கலைக்கழகம் (Gandhigram Rural University) அவருக்கு சில வருடங்களுக்கு முன் டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

இயற்கை வேளாண்மையின் தந்தை என்ற அளவிற்கு மதிக்கப் பட்டவர் நம்மாழ்வார்.

" நாளை நாம் தினமும் உண்ண போகும் நஞ்சில்லா உணவை நமக்கு தந்தவர் நம்மாழ்வார் "  என்ற அறிமுகத்தை நாளைய சந்ததியினருக்கு தர நாம் கடமை பட்டுள்ளோம்.

நம்மாழ்வாருக்கு அஞ்சலி.


Monday, 30 December 2013

தவல வடை



இட்லி, வடை, தோசை, பொங்கல் .....இவை தமிழரின் தலையாய டிபன் வகைகள். இவற்றில் வடைக்கு ஒரு தனி முக்கியத்துவம் உண்டு. வடை இல்லாமல் கல்யாண சாப்பாடு இல்லை.

மெது வடை அல்லது உளுந்து வடை, பருப்பு வடை, மசால் வடை, ஆமை வடை, சாபுதானா  வடை, அரிசி வடை, தவல வடை, கீரை வடை, வாழைப்பூ வடை, சாம்பார் வடை, ரச வடை, தயிர் வடை, வெஜிடபிள்  வடை, மிளகு வடை, ரவை வடை என்று எத்தனையோ வடை வகைகள் இருந்தாலும், அடிப்படையில் நான்கு வகை வடைகள்தான். உளுந்து வடை, பருப்பு வடை, அரிசி வடை, தவல  வடை. இந்த நான்கின் வழித்தோன்றல்தான்  மற்றவை   எல்லாம்.

தவல வடைக்கு என்று ஒரு  மகத்துவம் உண்டு. தனி வரலாறும் உண்டு. பழங்கால தவல அடையின் மருவிய வடிவம்தான் தவல வடை. வெண்கல தவலையின் உள்ளே தட்டி போட்டு எடுத்ததால் அதன் பெயர் தவல அடை என்றனர். 'தவலை'யின் பேச்சு வழக்கு 'தவல'. காலப் போக்கில் உருளி, தவலை போன்ற பாத்திரங்கள் வழக்கொழிந்தன. 

வெண்கல தவலையில் செய்த அடை, எண்ணெயில் பொறித்த தவல வடை ஆயிற்று. Flat ஆன அடிபாகம் கொண்ட, ஜாங்கிரி செய்ய பயன்படும் தவி என்ற பாத்திரத்தில் தவல வடை பொரித்தெடுக்கும் வழக்கம் வந்தது. பின்னர் வாணலியில் பொரித்தெடுக்க ஆரம்பித்தனர்.

எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கும் முறையிலேயே மற்ற வடைக்கும் தவல வடைக்கும் வேறுபாடு உண்டு.

சரியான முறையில் செய்யப் பட்ட தவல வடை (thavala vadai or thavala vada) சுவையே தனி. ஒருமுறை சாப்பிட்டவர்கள் தவல வடையில்  தனியாவர்தனம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

செய்முறை கடினம் என்பதாலோ என்னவோ இப்போது வீடுகளில் தவல வடை அதிகம் செய்வதில்லை. இன்னும் பலருக்கு தவல வடை பற்றி தெரிவது கூட இல்லை.

பழைய மோஸ்தர் ஹோட்டல்களில் மட்டும் தவல வடை போடுகிறார்கள். அதுவும் வாரம் ஒருமுறை மாலை வேளையில் இரண்டு மணி நேரம் மட்டும் கிடைக்கும். திருச்சி ராமா கபே, திருச்சி ஆதிகுடி க்ளப், மதுரை ஆர்ய பவன்.......இவற்றில் தவல வடை கிடைக்கும். 

சென்னை மேற்கு மாம்பலம் மேட்லி சுரங்கப்பாதை அருகில் திருநெல்வேலி மிட்டாய் கடை என்று ஒரு சிறிய ஸ்வீட் ஷாப் உள்ளது. இங்கு தினமும் மதியம் இரண்டு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை தவல வடை கிடைக்கும். 

நான் மேலே கூறிய கடைகள் எல்லாம் authentic சுவையில் தவல வடை கிடைக்கும் இடங்கள்.

இது தவிர சென்னை மார்கழி சங்கீத சபா உணவகங்களில் சீசனுக்கு ஒருமுறை கட்டாயம் தவல வடை போடுவார்கள்.

அதில் நான் மிகவும் விரும்பிய இடம் மேற்கு மாம்பலம் ஞானாம்பிகா கேட்டரர்ஸ் (தியாகராய நகர் தியாக பிரம்ம கான சபா-வாணி மகால்). (Gnanambiga Caterers, No.26/3, Thambiah Road, West Mambalam, Chennai-600 083. 044-24743045, 9840032684, 9840069067)

எனது வலைப் பதிவுகளுக்கு தொடர்ந்து கணினி வரைகலை படங்களை தருவதோடு, இந்த பதிவிற்கு வீடியோவும் எடுத்து தந்துள்ள எனது நண்பர், Sundarramg (சென்னை தொலைக் காட்சி நிலையம்), அவர்களுக்கு என் நன்றி.

தவல வடை வலைப்  பதிவு முயற்சிக்கு பல தகவல்களை  அளித்து உதவினார் எனது நண்பர் திரு. முரளி  (அகில இந்திய வானொலி நிலையம்  சென்னை). அவருக்கு என் நன்றிகள்.

ஞானாம்பிகா உரிமையாளர் திரு. ராஜன் அவர்களும், அவர் மனைவி திருமதி. ரேவதி அவர்களும் தவல வடை செய்யும் விதத்தை (recipe) எழுதி கொடுத்ததோடு நில்லாமல் தலைவாழை விருந்திற்காக தவல வடை செய்தும் காட்டினார்கள்.

தவல வடை (thavala vada)


இதோ மேற்கு மாம்பலம் ஞானாம்பிகாவின் தவல வடை recipe.

தவல வடை செய்முறை 

15 வடைக்கு 

துவரம் பருப்பு - 200 கிராம் 
கடலை பருப்பு - 100 கிராம் 
உளுத்தம் பருப்பு - 50 கிராம் 
ப.பருப்பு - 50 கிராம் 
பச்சை அரிசி -  50 கிராம் 
மிளகாய் வத்தல் - 10

தேங்காய் துருவல் - 1/2 மூடி 
பெருங்காய தூள் - 1/4 ஸ்பூன் 
தேவையான உப்பு 
தேவையான சீரகம் - 1 ஸ்பூன் 


மேற்கு மாம்பலம் ஞானாம்பிகா உரிமையாளர் திரு.J. ராஜன் அவர்கள் 

எப்படி செய்வது தவல வடை?

பருப்பு வகைகளை 3/4 மணி நேரம் ஊற வைத்து , தண்ணீர் வடித்து, ரவை போல கெட்டியாக அரைத்து அதனுடன் தேங்காய் துருவல், பெருங்காய தூள், உப்பு இவற்றை கலந்த பிறகு, எண்ணெய் இளஞ்சூடில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

வடை சாப்பிடுவதற்கு கொர கொர என நன்றாக இருக்கும்.

மாவில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு பொரித்தால் வடையின் வாசனை நன்றாக இருக்கும்.

இதற்கு பதில் மாவில் கொஞ்சம் டால்டா விட்டு பொரித்தால் வடை கர கரப்பாக இருக்கும்.


தவல வடை சூடாக சாப்பிட்டால் தான் நன்றாக இருக்கும். அதனால்தான் தவல வடை போடும் ஹோட்டல்களில், குறிப்பிட்ட நேரம் மட்டும்தான் தவல வடை போடுவார்கள். அதுவும் வாரம் ஒருமுறைதான். 

தவல வடை வெளியே மொறு மொறுப்பாகவும், உள்ளே மிருதுவாகவும் இருக்கும்.

வடை மாவை உள்ளங்கையில் வைத்து உருட்டி, ஜார்ணியை திருப்பி வைத்து, அதன் மேல் சிறிய துணி போட்டு, உருட்டிய வடைமாவை வைத்து, தட்டி, துணியை தலைகீழாக திருப்பி, தட்டிய வடை  மாவை ஜார்ணியில் போட்டு,  அப்படியே வாணலி எண்ணெய்க்குள் இறக்கி, திருப்பினால் தட்டிய வடை மாவு எண்ணெய்க்குள் இறங்கி விடும். வெந்ததும், திருப்பி போட்டு, மறுபுறமும் வெந்ததும் எடுத்து விட வேண்டும்.

இவ்வாறு செய்யாமல் நேரடியாக எண்ணெயில் போட்டால் மாவு உடைந்து விடும். இந்த வடை மாவின் தன்மை அப்படி.





























தவல வடை 



எண்ணெய்  தல புல வென கொதிக்க கூடாது. அதனால் தான் இளஞ்சூடில் பொரித்து எடுக்க வேண்டும் என சொல்லி இருக்கிறோம்.

அதேபோல் வாணலியில் நிறைய எண்ணெய் இருக்க வேண்டும். அப்போதுதான் தவல வடை பொரிக்க முடியும்.

ஜார்ணியில் வடை தட்டுவதற்கு பதில் இன்னொரு முறையிலும் செய்யலாம். தேங்காய் மூடி முனையில், சுத்தமான காட்டன் துணியை போட்டு, அதன்மேல் தட்டி, அப்படியே துணியில் இருந்து கவிழ்த்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கலாம். அப்போது வடையின் ஒரு பக்கத்தில் நடுவில் சின்ன குழிவை  பார்க்கலாம். தவல வடையின் அடையாளமே அந்த குழிவுதான்.

இந்த செய்முறையில் சிறிய தவறு செய்தால் கூட வடை சரியாக வராது.












மேற்கு மாம்பலம் ஞானம்பிகா kitchenல் தவல வடை செய்த போது எடுத்த வீடியோ பதிவுகள். வீடியோ பதிவு - Sundarramg.






Saturday, 28 December 2013

அடை அவியலும் மக்கன் பேடாவும்

அடை அவியல்-இது ஜெய ராகவேந்திரா தயாரிப்பு 

மார்கழி சங்கீத சீசன்  சபா கேண்டீன் ரவுண்டப் முதல் ரவுண்ட் வெற்றிகரமாக முடிந்தது. திரும்ப சில கேண்டீன் விசிட் செய்தேன். ஜெய ராகவேந்திரா அடை அவியல் - உணவு பிரியர்கள் miss பண்ணக் கூடாத ஒன்று.
மக்கன் பேடா - இது மேற்கு மாம்பலம் ஞானாம்பிகா தயாரிப்பு 

வாணி மஹால் மேற்கு மாம்பலம் ஞானம்பிகாவில் மக்கன் பேடா. பார்க்க குலாப் ஜாமூன் போல் இருந்தாலும், குலாப் ஜாமூனை விட அதிகமான சுவை. இனிப்பு பிரியர்கள் கவனத்திற்கு இந்த மக்கன் பேடா சமர்ப்பணம்.
முந்திரி மைசூர் பாக் - இது மவுன்ட் மணி ஐயரின் இந்த வருட சபா ஸ்பெஷல்  அறிமுகம் 

மவுன்ட் மணி ஐயரின் இந்த வருட சிறப்பு இனிப்பு முந்திரி மைசூர் பாக். சில மைசூர் பாக் (அவை மைசூர் பாக்கே அல்ல என்பது வேறு விஷயம் ) போல நாவில் போட்ட உடனே கரையாமல், மெல்ல கரைந்தது. நெய், சர்க்கரை  அதிகம் இருந்தாலும் திகட்டாத சுவை.

டபுள் டெக்கர் இட்லி - மவுன்ட் மணி ஐயர் 
டபுள் டெக்கர் இட்லி - உட்புற தோற்றம் - மவுன்ட் மணி ஐயரின் கைவண்ணம் 

டபுள் டெக்கர் இட்லி. உள்ளே உடைத்தால் மல்லி சட்னியும், தக்காளி சட்னியும். இது டபுள் கலர் இட்லியாம். போதாத காலம்டா சாமி.


கோதுமை ஹல்வா
காசி ஹல்வா 


மவுன்ட் மணி ஐயரின் கோதுமை ஹல்வாவும், காசி ஹல்வாவும் முந்திரி, dry fruits பலத்தில் சுவை தந்தன. காசி ஹல்வாவின் original சுவை இல்லை. 

மியூசிக் அகடமியில் பத்மநாபன் கேண்டீனில் திரட்டுப் பால் (அல்லது திரட்டிப் பால் ) பாரம்பரிய சுவை. வாழைப் பூ போண்டா (அட ஆமாங்க ....வாழைப் பூ வடை இல்லை. போண்டாதான்.....வடையை விட போண்டாவிற்கு வாழைப் பூ பெஸ்ட் என்று நினைக்க வைத்தது அதன் சுவை.

புளி உப்புமா கூட இருந்தது. இதுபோன்ற புராதன டிபன்  வகைகளுக்கு இன்றைக்கும் இடம் தருவது சபா கேண்டீன்கள்தான். 

அப்புறம் சிய்யம்....நன்றாக இருந்தது. இதெல்லாம் வீட்டில் அம்மா அடிக்கடி செய்த எளிமையான இனிப்பு. என்னதான் புது புது இனிப்புகள் வந்தாலும் சிய்யம்  போன்று இனிய நினைவுகளை கிளறி விட அவற்றால் முடியாது.


Thursday, 26 December 2013

வேணுஸ் கேண்டீன் பொடி தோசை

பொடி தோசை 

மார்கழி சீசனில், பெரிய  சபா கேண்டீன் எல்லாம் போய் வந்தாயிற்று. கிருஷ்ண கான சபாவில் ஸ்ரீ கிருஷ்ணாவின் Rassa கேண்டீன் என்பதால் அங்கு போக வேண்டியதில்லை என்று முடிவு. அப்புறம்? இண்டியன் பைன் ஆர்ட்ஸ் ( The Indian Fine Arts Society) நடத்தும்   சங்கீத நிகழ்ச்சிகள், தியாகராய நகர் பிரகாசம் தெருவில் பால மந்திர் ஜெர்மன் ஹாலில். மாம்பலம் வேணுஸ் கேட்டரிங் (Venus Catering Services, West mambalam) கேண்டீன் போட்டிருந்தார்கள். போயிருந்தேன். பில்டர் காபி தவிர மற்ற அனைத்தும் சுவையாக இருந்தன. வழக்கமான அசோகா, கிச்சடி.....அப்படியே வீட்டு சுவை. பொடி தோசை-டாப் கிளாஸ். 

பூரி கிழங்கு நன்றாக இருந்தது. பொதுவாக பூரிக்கான கிழங்கு பொடி பொடியாக இருக்க வேண்டும்.  நன்கு வெந்திருக்க வேண்டும். ஆனால் கூழாக இருக்க கூடாது. வெங்காயம் நைசாக நறுக்கி, உருளை கிழங்கோடு ஜோடி பொருத்தத்தோடு இருக்க வேண்டும். உருளை கிழங்கு நல்ல தரத்தில் இருப்பது அவசியம். மொத்தத்தில் கிழங்கு சுவையாக இருந்தால்தான் பூரி சுவை எடுபடும். அப்படியே இருந்தது வேணுஸ் கேண்டீனில். பூரிக்கு கிழங்கோடு தேங்காய் சட்னியும் நல்ல காம்பினேஷன். வேணுஸ் கேண்டீனில் தேங்காய் சட்னி  சிம்ப்ளி சூபர்ப்.

மொத்தத்தில் அவசியம் செல்ல வேண்டிய சபா கேண்டீன் லிஸ்டில் வேணுஸ் கேண்டீனுக்கும் ஓர் இடம் கொடுக்க வேண்டும். திரும்பவும் சொல்கிறேன். காபி மட்டும் அங்கே குடித்து விடாதீர்கள்.

பொடி தோசை-உட்பகுதி



வேணுஸ் கேண்டீன்

Wednesday, 25 December 2013

உப்பு புளி தோசை

உப்பு புளி தோசை
உப்பு புளி தோசை நல்ல உறைப்பாக, கர கரவென்று  நம்ம ஊர் அடை போல், ஆனால் அடையை விட மெல்லியதாக இருக்கும். தோசைக்கு பெயர் போன உடுப்பி  பகுதியின் சிறப்பு உணவு உப்பு புளி தோசை. ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபாவில், மவுன்ட் பேட்டன் மணி ஐயர் கேண்டீனில் இந்த வருட சிறப்பு அறிமுகம் உப்பு புளி தோசை. சாப்பிட்டு பார்த்தேன். மிக நன்றாக இருந்தது. ஆறிய பிறகு கூட ருசி மாறாமல் இருப்பது இதன் சிறப்பு.


தேவையான பொருள்கள் 

பச்சை அரிசி  - 1 டம்ப்ளர் 
வெந்தயம் - 1 ஸ்பூன் 
தேங்காய்  - 1/2 மூடி (துருவியது)
புளி  - சிறிய  எலுமிச்சை அளவு.
தனியா  - 4 ஸ்பூன் 
சீரகம் - 1 ஸ்பூன் 
வர மிளகாய்  - 8 
உப்பு  - தேவைக்கு 

எப்படி செய்வது?

அரிசி, வெந்தயம் இரண்டையும்  நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். புளியை கரைத்து கொள்ளவும். புளி கரைக்க மிக குறைந்த தண்ணீர் விட்டு, கெட்டியாக கரைக்கவும். தேங்காய், வர மிளகாய், தனியா, சீரகம் - இவற்றை ஒன்றாக போட்டு அறைக்கவும். இந்த அரைத்த கலவையுடன், புளி கரைசல், ஊற வைத்த அரிசி, வெந்தயம் இவற்றையும் போட்டு நன்கு அறைக்கவும். உப்பு சேர்க்கவும்.

இந்த மாவு புளிக்க வேண்டியதில்லை. அறைத்த உடனே தோசை ஊற்றலாம். விரும்பினால் கால் தம்ப்ளர் உளுத்தம் பருப்பு சேர்த்து அறைக்கலாம். உடுப்பி பகுதியில் சிறிது வெல்லமும் சேர்த்து அறைப்பார்கள்.

Sunday, 22 December 2013

சென்னையில் திருவையாறு

சென்னையில் திருவையாறு உணவுத் திருவிழா

லக்ஷ்மன் ஸ்ருதி இசை குழுவினர் வழங்கும் சென்னையில் திருவையாறு இசை திருவிழா. டிசம்பர் 18, 2013ல் துவங்கிய Chennaiyil Thiruvaiyaru இசை விழா டிசம்பர் 25, 2013 வரை நடைபெறும். இசை விழாவோடு உணவுத் திருவிழாவும் நடத்துகிறார்கள். சென்றிருந்தேன்.

பொருட்காட்சி ஸ்டால் பாணியில் உணவு ஸ்டால்கள்.



சென்னையில் திருவையாறு

முருகன் இட்லி கடையின் மதுரை ஜிகர்தண்டா எல்லோரையும் கவர்ந்தது. மற்றபடி விவேகானந்தா காபியின் பில்டர் காபி  ஸ்டால், மைலாப்பூர் ஸ்ரீ சங்கரா கேட்டரர்ஸ் (044-2461 0442, 90940 82325, 99413 97422), மேற்கு மாம்பலம் சம்பத் கெளரி மேரேஜ் கேட்டரிங் சர்விஸ் (044-2470 0185, 93808 07294, 80564 35987) - இவர்களின் ஸ்டால்கள் இருந்தன.  சம்பத் கெளரி ஸ்டால் தான் பெரிய ஸ்டால். கல்யாண பந்தி போல இருந்தது. மதியம் சாப்பாடும் உண்டாம். டிபன் எதுவும் நன்றாக இல்லை.


முருகன் இட்லி கடையின் ஜில் ஜில் ஜிகர்தண்டா



என்னை கவர்ந்தது அந்தி கடை. ' அந்தி ' நேரம் என்றால் ' மாலை ' நேரம் என்று பொருள். அழகான தமிழ் பெயர். முன்பு மாலை நேரம் மட்டும்  சிறு உணவுகள் விற்கும் கடைகள் பல ஊர்களிலும் இருந்தன. அதை நினைவு படுத்தியது அந்தி கடை. வேளச்சேரியில் இயங்கி வருகிறது  அந்தி கடை (044-6461 1234, 98402 43591). இலை கொழுக்கட்டை (இனிப்பு), கார கொழுக்கட்டை ஆகியவை நன்றாக இருந்தன. முருங்கை கீரை அடை கூட வைத்திருந்தனர். நமது பாரம்பரிய உணவு  கொழுக்கட்டை.  வீடு தவிர மற்ற இடங்களில் அவ்வளவு ருசிக்காது. இனிப்பு கொழுக்கட்டை மாவை தடியாக தட்டி விடுவார்கள். அந்தி கடையில் சரியாக செய்திருந்தார்கள். அதைவிட முக்கியமாக வாழை இலையில் வேக வைத்திருந்தார்கள். கொஞ்சம் எண்ணெய் பிசு பிசுப்பு அதிகமாக இருந்தது. அதை சரி செய்தால் இன்னும் அருமையாக இருக்கும். 
அந்தி கடை 
இலை கொழுக்கட்டை (இலைக்கு உள்ளே இருக்கிறது)


இலை கொழுக்கட்டை


கார கொழுக்கட்டை



சேத்துப் பட்டு MSG Kitchen ஸ்டால் போட்டிருந்தார்கள். இட்லி கடப்பாவும் இருந்தது. இட்லி கடப்பா MSG Kitchen Speciality. எப்போது சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்.
MSG Kitchen

அடையார் Organic Depotன் Organicஉணவு பொருள்கள்  ஸ்டால் குறிப்பிட வேண்டிய ஒன்று. (044-6452 5500)



அடையார் Organic Depot

தேனி Yazh Institute of Carving Vegetables & Fruits ஸ்டால் நுழைந்தவுடன் இருக்கிறது. காய்கறிகளில் கலை உணர்வை காட்டியிருந்தார்கள். நிறைய கல்யாண கேட்டரர்கள் கூட விசாரித்து கொண்டிருந்தார்கள்.


காய்கறி கணேசர் 

பரங்கியில் இசை வெள்ளம் கேட்டேன் 
பரங்கியில் தியாகய்யர்

Saturday, 21 December 2013

நானறியா மார்கழி

மைலாப்பூரில் மார்கழி பஜனை 





மாதங்களில் மார்கழிக்கு தனி சிறப்புகள் பல உண்டு. "   மாதங்களில் நான் மார்கழி " என்று பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா அருளினார். மாணவர்களுக்கு கோடை விடுமுறை போல, குடும்ப சுமைகளில் சிக்கி தவிக்கும் சராசரி மனிதர்கள், குடும்ப கடமைகளை மறந்து ஆன்மீகத்தில் திளைக்கும் மாதம் மார்கழி. அதனால்தான் போலும் திருமணம் போன்ற நிகழ்வுகளை இந்த பீடுடை மாதத்தில் வைப்பதில்லை.



மார்கழி அதிகாலை பொழுதில் மைலாப்பூர் எப்படி இருக்கிறது பார்த்து வரலாம் என கிளம்பினேன்.



மாட வீதிகளில் சுற்றிய பொது இரண்டு பஜனை குழுக்கள் இசைத்த பகவான் நாமாவளி கேட்கும் பாக்கியம் கிடைத்தது.



மைலாப்பூரில் மார்கழி பஜனை 


நமது கலாச்சாரத்தில் மார்கழி அதிகாலை பஜனை முக்கியமானது. எல்லா ஊர்களிலும் பஜனை கோஷ்டியினரை காண முடியும். அனைத்து வீதிகளிலும் வலம் வரும் பஜனை கோஷ்டிக்கு வீட்டு வாசலில் நின்று வரவேற்புகொடுத்து காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் வாங்குவார்கள்.


மார்கழி பூ 



அது மட்டுமா? வீட்டு வாசலில் அழகிய பெரிய கோலங்கள்...கோலத்தின் நடுவில் சாணி உருண்டையில் பரங்கி பூ வைத்து அலங்காரம்....கார்த்திகை மாத கடைசியிலே மாதம் முழுதும் பரங்கி பூ போடலாமா என்று கேட்டு வருவார்கள். சொற்ப பண செலவில் மார்கழி முழுதும் பரங்கிபூ வீடுதேடி வந்து விடும்.


மார்கழி  கோலம் 


மார்கழி  கோலம் by யுவனிகா 
யார் வீட்டு கோலம் அழகு என்று ஒரு அறிவிக்கப் படாத போட்டியே நடக்கும்.

மார்கழி அதிகாலை, வீதிகளில் நடந்தாலே ரம்மியமாக இருக்கும்.

இடைவிடாத பஜனை கோஷ்டிகளின் வருகை....பல் கிட்டிப் போகும் குளிரில் பச்சை தண்ணீரில் குளித்து, பொழுது புலரும் முன் கோயிலுக்கு செல்வது ஆனந்தம். பெருமாள் கோவில் வெண் பொங்கல் பிரசாதத்தை நினைக்காமல் இருக்க முடியவில்லை. தூக்கலான மிளகு காரத்தில், நெய்யொழுகும் அந்த பிரசாதம்....வீட்டில் நம்மால் செய்ய முடியாத அற்புதம். குளிர் காலத்தில் மிளகு சேர்ப்பது நம்மை குளிர்கால நோய்களில் இருந்து காக்கும்.

இன்று பஜனை கோஷ்டியோடு நடந்தேன். மனதுக்கு இதமாக இருந்தது. 

கோலங்களும் பரங்கி பூவும் மிஸ்ஸிங்.

குறைந்தது ஐந்து பஜனை குழுக்கள் மைலாப்பூரில் பஜனை பாரம்பரியத்தை காத்து வருகின்றன. 

கோலங்கள் போட்டு, பரங்கிபூ அலங்காரத்திற்கும் யாராவது மெனக்கெட்டால் நல்லது. நல்லவை என்றும் தொடர வேண்டும்.

வேகமாய் சுழலும் கால சக்கரத்தை சில மணித்துளிகள் நிறுத்தி, முன்பு நானறிந்த...இன்று நானறியா மார்கழியை காட்டிய பஜனை குழுவிற்கு நன்றி.
மாட வீதிகளில் மார்கழி பஜனை 

அதிகாலை மார்கழி பஜனை




மார்கழி பஜனை 


மாட வீதி மார்கழி பஜனை 


 மார்கழி பஜனை  ரசனை 


மயிலாப்பூரில்  அதிகாலை குளிரில் மார்கழி பஜனை 


மார்கழி பஜனை  முடிந்ததும் பொங்கல் பிரசாதம் 

                      மிளகு சேர்த்த பொங்கல்  மார்கழி குளிருக்கு நல்லது 

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...