நாரத கான சபாவில் ஞானாம்பிகா கேண்டீன் |
என்ன ஆயிற்று சென்னை சபாக்களுக்கு? மீனாம்பிகாவின் சாப்பாட்டுக் கச்சேரி நடக்கும் மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் சபாவில் கட்டண கச்சேரி நடக்கும் நேரங்களில், கச்சேரி கேட்க வருபவர்களுக்கு மட்டும்தான் கேண்டீன் செல்ல அனுமதி என்கிறார்கள். ஆக சனி, ஞாயிறு என்றால் மாலை 4 மணியிலிருந்து 8 மணி வரை இசை ரசிகர்களுக்கு மட்டும்தான் மீனாம்பிகா.
பிரம்ம ஞான சபாவிலும் இதே நிலைமைதான்.
சாப்பாட்டு கச்சேரி ரசிகர்கள் என்ன செய்வார்கள் என்று யோசிக்க மாட்டார்களா?
அடுத்த வருடமாவது இந்த கெடுபிடிகளை தளர்த்துவார்களா இந்த சபாக் காரர்கள்? அப்படி செய்தால் அவர்களுக்கு B.P., sugar, cholesterol இல்லாது, எல்லா உணவையும் ரசித்து சாப்பிடக் கூடிய வரம் அருள்வாள் அன்னபூரணி அன்னை.
நிற்க. இன்று ஞானாம்பிகாவின் கச்சேரி நாரத கான சபாவில் ஆரம்பம். ஞானாம்பிகா N. ஜெயராம ஐயரின் புதல்வர்கள் J. ரமேஷ், J. விட்டல் ஆகிய இருவரும் நடத்தும் ஞானாம்பிகா இது. தினம் ஒரு menu பட்டியல் போட்டு அசத்துகிறார்கள். உணவு பிரியர்களுக்கு வேட்டைதான். மதியத்திலிருந்தே வயிற்றை காயப் போட்டு, மாலை 4 மணிக்கு உள்ளே நுழைந்தால் வாசலிலேயே அபஸ்வரம் ...." கச்சேரி பாஸ் வைத்திருப்பவர்களுக்கு மட்டும்தான் கேண்டீன் செல்ல அனுமதி" என்று.
ஆனால் நாங்கள் உள்ளே சென்று விட்டோம்.
குங்குமம், சந்தனம், பன்னீர் சொம்பு என்று வாசலிலேயே அசத்துகிறார்கள்.
சுத்தம், வெரைட்டி, நல்ல சுவை, சுகமான கவனிப்பு இவற்றில் ஞானாம்பிகா Simply Superb.
முதலில் காசி அல்வா சாப்பிட்டோம். கல்யாண வீட்டு மாலை டிபன். கிண்ணத்தில் உள்ளே குதித்து நக்காததுதான் பாக்கி. அவ்வளவு சுவை.
அப்புறம்.....இடியாப்பம். கத்தரிக்காய் புளி மண்டி side dish. பொதுவாக இட்லி, இடியாப்பம் இரண்டும் side dish ஐ பொறுத்துதான் உள்ளே இறங்கும். இங்கே நிமிடத்தில் தட்டு காலி. நன்றி கத்தரிக்காய் புளி மண்டிக்கு.
கத்தரிக்காய் புளி மண்டி |
இடியாப்பம் கத்தரிக்காய் புளி மண்டி |
வாழைக்காய் பஜ்ஜி. வழக்கமான சுவை. குறிப்பிட்டு சொல்ல எதுவுமில்லை.
அவல் பொங்கல் |
அவல் பொங்கல். புதிதாய் தெரிந்தது. அச்சு அசலாய் வெண் பொங்கல் சுவை. அவலை வைத்து நன்றாக செய்திருந்தார்கள்.
கடைசியாக பில்டர் காபி. பொதுவாக நல்ல காபி குடித்து முடித்ததும் அடி நாக்கில் ஒரு கசப்பு தட்டும். வெறுக்கும் கசப்பல்ல. அது ரசிக்கும் கசப்பு. நாக்கை சுற்றிக் கொண்டே இருக்கும். அந்த taste ஐ மிக சரியாக கொண்டு வந்திருந்தார்கள்.
அடுத்ததாக கை அலம்பும் இடம். நான் பார்த்த வரை கை அலம்பும் இடம் இவ்வளவு சுத்தமாக இருப்பது இங்கு மட்டும்தான்.
ரியல் எஸ்டேட் காரர்கள் மாடல் வீடு கட்டி, அதை காட்டி marketing செய்வார்கள். அதுபோல கல்யாண கேட்டரிங் எப்படி செய்வார்கள் என்பதற்கு ஒரு மாடல் போல் சபா கேண்டீன் ஐ நடத்தி காட்டுகிறார்கள் ஞானம்பிகா காரர்கள்.
ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்றால்.....காசி அல்வா பிளாஸ்டிக் தட்டில் வைத்தார்கள். மற்ற டிபன் ஐடம்ஸ், வாழை இலையில் பரிமாறியது போல் காசி அல்வாவையும் வாழை இலையில் பரிமாறி இருக்கலாம்.
சென்ற வருடம்போல் இந்த வருடமும் ஞானாம்பிகா முதல் இடத்தை தக்க வைப்பது உறுதி.
ஆற்காடு மக்கன் பேடா, தவலை வடை - இப்படி இனிவரும் நாட்களில் ஏகப் பட்ட menu வகைகள் வைத்திருக்கிறார்கள்.
வாட்ச்மேன் கண்ணில் மண்ணை தூவி விட்டு எப்படி உள்ளே நுழைவது என்பதுதான் யோசிக்க வேண்டிய விஷயம்.
No comments:
Post a Comment