|
மாவு உப்புமா , அரிசி மாவு உப்புமா அல்லது புளி உப்புமா |
மாவு உப்புமா - தேவையான பொருள்கள்
அரிசி மாவு - 150 கிராம்
புளி - சிறிய எலுமிச்சை அளவு.
உப்பு - தேவைக்கேற்ப
வர மிளகாய் - 10
கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பெருங்காயம் - தாளிக்க
நல்லெண்ணெய் - 7 ஸ்பூன்
புளியை ஒரு டம்ப்ளர் தண்ணீரில் ஊற வைத்து, நன்கு கரைக்கவும். புளி கோது, சக்கை நீக்கி, தெளிவான புளி கரைசலாக எடுத்து கொள்ளவும்.
இந்த புளி கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து, அரிசி மாவை பிசையவும். இறுகலாக, சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். மாவு பிசைய புளி கரைசல் போதவில்லை என்றால் சிறிது தண்ணீர் சேர்த்து பிசையலாம்.
ஒரு வாணலியில் 7 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பெருங்காயம் இவற்றை போடவும். கூடவே வர மிளகாயும் போட வேண்டும். வர மிளகாய்களை லேசாக சிவக்க வறுக்க வேண்டும். அதேபோல் பருப்புகள், பெருங்காயம் இவற்றையும் சிவக்க வறுக்க வேண்டும். கடுகு வெடிக்க வேண்டும்.
இப்போது பிசைந்து வைத்த மாவை வாணலியில் போட்டு, நன்கு கிளற வேண்டும். மாவோடு எண்ணெய் மற்றும் தாளித்த பொருள்கள் நன்கு கல பட வேண்டும்.
இப்போது கைவிடாது கிளற வேண்டும். கல்லுபோல் இருக்கும் மாவு உதிர் உதிராக பிரியும் வரை கரண்டியால் கிளற வேண்டும். பெரிய மாவு கட்டிகளாக இருந்தால் அவற்றை கரண்டியால் உடைத்து விடவும். மாவு மிக சிறு சிறு கட்டிகளாகவும், சில பகுதி மணல் போலவும் தூளாகும்.
இப்போது ஒரு மூடி போட்டு வேக வைக்கவும். அடுப்பை சிம்மில் வைக்கவும்.
15 நிமிடங்களாவது வேக வேண்டும். மாவு வெந்து பொன்னிறமாகும். இதுதான் பக்குவம்.
மாவு உப்புமா - சில வரலாற்று குறிப்புகள்
மாவு உப்புமா - சில வரலாற்று குறிப்புகள்
என் அம்மா செய்த டிபன் வகைகளில் எனக்கு மிக, மிக பிடித்தது அரிசி மாவு உப்புமா.
அரிசி மாவு உப்புமா ஹோட்டல்களில் கிடைக்காது. மிதமான புளிப்பு சுவையும், சற்றே தூக்கலான கார சுவையும் அரிசி மாவு உப்புமாவின் தனித்துவ ருசி.
பக்குவமாக செய்த அரிசி மாவு உப்புமா கடிக்க மிருதுவாக இருக்கும்.
பதம் மாறினால், ஒன்று ரப்பர் போல இருக்கும். அல்லது ஆற்று மணல் போல நற நற வென பல்லில் கடிபடும்.
மேலே சொன்னது போல, போல மாவை கிளரும் போது, பெரிய பெரிய கட்டிகளாக இல்லாமல் மிக சிறு கட்டிகளாக உடைத்து விட வேண்டும். எல்லா மாவும் மணல் போல உதிர்ந்து விடவும் கூடாது. அப்படி ஆனால் அதிகமாக வெந்து, மாவில் ஈரப் பதம் குறைந்து விடும். அப்போதுதான் பல்லில் நற நற வென கடிபடும்.
சரியான பக்குவத்தில் செய்தால் அரிசி மாவு உப்புமாவை போல சுவையான டிபன் வேறு ஒன்றில்லை.
இந்த பக்குவ குறிப்புகளை பார்த்து பயப் பட வேண்டாம். செய்து பழகி விட்டால், மிக எளிதாக செய்யக் கூடிய உடனடி டிபன் அரிசி மாவு உப்புமா.
உடனடியாக என்ன டிபன் செய்வது என்ற குழப்பத்திற்கு விடையாக தான் அரிசி மாவு உப்புமாவை கண்டுபிடித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அரிசி மாவும், புளியும் எப்போதும் எல்லார் வீட்டிலும் இருக்கக் கூடிய பண்டங்கள். புளி கரைத்து, மாவு பிசைந்து, தாளித்து, மாவை கொட்டி, வேக வைத்து - அரை மணி நேரம் கூட ஆகாது. தோசை, இட்லி போன்ற டிபன்கள் செய்ய, முதல் நாளே மாவு அரைத்து வைக்க வேண்டும்.
ரவா உப்புமா, நொய் உப்புமா போலவே அரிசி மாவு உப்புமாவும் ஓர் உடனடி உணவு.
பிராமிணர் வீடுகளில் செய்யப் படும் உணவு மாவு உப்புமா.
புளி சேர்த்து செய்வதால் சிலர் இதை புளி உப்புமா என்றும் சொல்கிறார்கள். சில வீடுகளில் இப்படி மாவு உப்புமாவை, புளி உப்புமா என்று அழைக்கும் பழக்கம் இருக்கிறது. இன்னும் சில வீடுகளில் அல்லது தமிழகத்தின் சில பகுதிகளில் புளி ஊற்றி செய்யும் நொய் உப்புமாவை புளி உப்புமா என்கிறார்கள்.
அந்த நாளைய உணவுகள் இப்படித் தான். பகுதிக்கு பகுதி அல்லது வீட்டுக்கு வீடு உணவு பழக்கம் மாறும். சில குடும்பங்களில் மட்டுமே சில உணவு வகைகளை பரம்பரை பரம்பரையாக செய்வார்கள். ஒரு பெண்ணின் பிறந்த வீட்டு உணவு பழக்கம் ஒன்றாக இருக்கும். புகுந்த வீட்டு உணவு பழக்கம் வேறாக இருக்கும். பெரும்பாலும் புகுந்த வீட்டு உணவு பழக்கத்தையே கடை பிடிப்பார்கள். ஒரு பெண்ணிடம் இருந்து மாட்டுப் பெண்ணுக்கு (மருமகள்), அவரிடமிருந்து அவரது மருமகளுக்கு என்று உணவின் பக்குவங்கள் கைமாறும்.
ஒரு பகுதியில் ஒரு பெயர் சொல்லி அழைக்கும் உணவுக்கு, இன்னொரு பகுதியில் வேறு ஒரு பெயர் சொல்லுவார்கள்.
என் மனைவி திருமதி. ஸ்ரீவித்யா ராமன் சொல்கிறார்.......................................
என் மனைவி திருமதி. ஸ்ரீவித்யா ராமன் சொல்கிறார்.......................................
பெண்கள் புகுந்த வீட்டு உணவு பழக்கத்தை கடை பிடிப்பார்கள் என்று சொல்வதில் நான் வேறுபடுகிறேன். கடைபிடிப்பார்கள் என்று சொலவதை விட கடைபிடிக்க கட்டாயப்படுத்தப் படுவார்கள் என்பதே உண்மை. எந்த உணவை எப்படி செய்து வைத்தாலும், என் அம்மா செய்வதை போல் வராது என்று சொல்பவன்தான் ஆண். இதனால்தான் பெரும்பாலும் பெண்கள் கணவன் வீட்டு உணவு முறைக்கு மாறி விடுகிறார்கள். (விட்டு கொடுத்தல் பெண்ணின் இயல்பு). ஆனாலும் மனைவிகளுக்கு அவரவர்தம் பிறந்த வீட்டு உணவின் மேல் இருக்கும் ஏக்கம் எத்தனை கணவர்களுக்கு புரியும்?
1 comment:
எனக்கு மிகவும் பிடித்த சிற்றுண்டியில் இதுவும் ஒன்று . ஆனால் பதம் மிகவும் முக்கியம் . இல்லாவிட்டால் சாப்பிடுவது மிகவும் கஷ்டம் . உப்புமா மிகவும் நன்றாக இருந்தது தேங்க்ஸ்
சுந்தர்
Post a Comment