Sunday, 20 October 2013

அன்னாபிஷேகம்

சென்னை (தியாகராய நகர்)  C.I.T. நகர் சக்தி கணபதி ஆலயத்தில் கமடேஸ்வரருக்கு அன்னாபிஷேகம்                                                                                                             PHOTO: Srividya Raman

ஐப்பசி மாத பவுர்ணமி அன்று, சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறும். இந்த வருடம், 18/10/2013 அன்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. ஐப்பசியில் அஸ்வதி நட்சத்திரம் அன்றும் அன்னாபிஷேகம் செய்வார்கள். சிவலிங்கத்தின் மீது 'அன்னம்' (cooked rice) சார்த்தி வழிபடுவதே அன்னாபிஷேகம். எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதே அன்னாபிஷேகத்தின் அடிப்படை சாராம்சம். 

அன்னாபிஷேக ஐதீகம் 

நமக்கு எல்லாம் அளித்த இறைவனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து நன்றிக் கடன் செலுத்துகிறோம். அன்னாபிஷேகம் செய்வதன் மூலம் நாட்டில் பசி, பட்டினி நீங்கி, சுபிக்ஷம் பெருகும் என்பது ஐதீகம். அன்னாபிஷேகம் செய்வதால் தங்கள் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அன்னாபிஷேக பிரசாதம் உண்டால் அடுத்த பிறவி கிடையாது என்றொரு ஐதீகம் உண்டு. இந்த பிறவியில் பசிப் பிணி இல்லாதிருக்கவும், இம்மைக்கு அப்பால் பிறவிப் பிணி நீங்கவும் பக்தர்கள் செய்வது தான் அன்னாபிஷேகம். சிவபெருமானுக்கு செய்யப் படும் அபிஷேகங்களில் எளிமையானது  அன்னாபிஷேகம் தான். அன்னாபிஷேகத்தை தொடர்ந்து   நடைபெறும் அன்னதானம், அன்னாபிஷேகத்தின் குறிப்பிடத் தகுந்த அம்சம்.

ஐப்பசி பவுர்ணமி அன்று மாலையில் அன்னாபிஷேகம் நடைபெறும். பக்தர்களின் தரிசனத்திற்கு பின் சிவலிங்கத்திற்கு சார்த்திய அன்னம் நீர்நிலைகளில் கரைக்கப் படும். இதன்மூலம் நீரில் உள்ள ஜீவராசிகள் ரக்க்ஷிக்கப் படுகின்றன. பிறகு, சிவனுக்கு படைக்கப் பட்ட அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாகவும், அன்னதானமாகவும் வழங்கப் படுகிறது. பக்தர்கள் காணிக்கையாக் அளித்த அரிசி, வெல்லம், காய்கறிகள், பழங்கள் ஆகியவை அன்னாபிஷேக அலங்காரத்தில் பயன் படுத்தப் படுகின்றன. சிவலிங்கத்தை முழுமையாக மறைக்கும் வண்ணம் அன்னத்தால் அலங்காரம் செய்யப் படுகிறது. இந்த அலங்காரத்தின் மேல் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றால் சிவபெருமானின் முகம் காட்சி படுத்தப் படுகிறது. காண கண்ணிரண்டு போதவில்லை.

அன்னாபிஷேகம் நடைபெறும் சிவ ஆலயங்களில் குறிப்பிடத்தக்கவை தஞ்சை பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம் ப்ரஹதீஸ்வரர் ஆலயம், சிதம்பரம் நடராஜர் கோவில்.

நித்ய அன்னாபிஷேகம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் சந்திரமௌலீஸ்வருக்கு நித்ய (தினசரி) அன்னாபிஷேகம் செய்யப் படுகிறது.

தஞ்சை பெரிய கோவிலில் 500 கிலோ அரிசி, ஒரு டன் காய்கறிகள் கொண்டு அன்னாபிஷேகம் செய்யப் படுகிறது.

கங்கை கொண்ட சோழபுரம் ப்ரஹதீஸ்வரர் ஆலயத்தில், காஞ்சி மகாபெரியவாள் ஆக்ஞைபடி 1986லிருந்து வருடா வருடம் அன்னாபிஷேகம் நடந்து வருகிறது. " அன்னாபிஷேகம் செய்தால் நாட்டில் மழை பொழியும்"   என்பது மகா பெரியவாளின் அருள்வாக்கு.

காஷ்யப முனிவர் அருளிய 'பேரூர் புராணத்தில்' அன்னாபிஷேகம் செய்வதால் கிட்டும் அறிய பலன்கள் பற்றி குறிப்பிடப் பட்டிருக்கிறது.

முருக பெருமானுக்கு அன்னாபிஷேகம் 

ஐப்பசியில்  அன்னாபிஷேகம் அனைத்து சிவாலயங்களிலும் சிவலிங்கத்திற்கு செய்யப் பட்டாலும், பழனி முருகன் கோவிலில் ஆனி மாதத்தில் உச்சி காலத்தில், முருக பெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப் படுகிறது. திருவாவினங்குடி முத்து குமாரசுவாமி ஆலயத்தில் அதே ஆனி மாதத்தில் அன்னாபிஷேகம் செய்யப் படுகிறது. சென்னை மேற்கு மாம்பலம் ஸ்கந்தாஸ்ரமத்தில் ஐப்பசியில் அன்னாபிஷேகம் முருகக் கடவுளுக்கு செய்யப் படுகிறது.

அன்னபூர்ணேஸ்வரர்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகில் உள்ளது அன்னவாசல். புதுக்கோட்டை அன்னவாசல் வேறு. சேங்காலிபுரம் செல்லும் வழியில் உள்ளது திருவாரூர் அன்னவாசல். இந்த அன்னவாசலில் அன்னபூர்ணேஸ்வரி சமேத அன்னபூர்ணேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். அன்னவாசல் அன்னபூர்ணேஸ்வரர் கோயிலில் பல நூற்றாண்டுகளுக்கு முன் நித்ய (தினசரி) அன்னாபிஷேகம் நடை பெற்றிருக்கிறது. இதன்மூலம் மக்கள் பசி, பஞ்சம் இவற்றிலிருந்து காக்கப் பட்டனர். இந்த கோயில் இன்று நித்ய பூஜையே சிரமத்துடன் நடத்தும் நிலையில் உள்ளது.

ஆவுடையாருக்கு அன்ன நைவேத்யம்

சென்னை நந்தனம் அருகில்  C.I.T. நகரில் உள்ள சக்தி கணபதி ஆலயத்தில் நடைபெற்ற அன்னாபிஷேகத்தின் புகைப்படம்தான் மேலே நீங்கள் காண்பது. மாலையிலிருந்தே கூடியிருந்த பக்தர்களுக்கு சிவபெருமான் அன்னாபிஷேக கோலத்தில் அருள் பாலித்தார். ஆவுடையாரை சுற்றியிருந்த இடம் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு  இருந்தது கண் கொள்ளா காட்சி. இதன் பிறகு அன்ன தானம். பொதுவாக பிரசாதம் என்றால் எவ்வளவு அளவு என்பது நமக்கு தெரியும். ஆனால்  இந்த கோயிலில் போதும்.....போதும் என்கிற அளவு அனைவருக்கும் கொடுத்து, அனைவரையும் சிவ பெருமானின் அருளுக்கு பாத்திரமாக செய்தனர்.   அடுத்த நாளே இந்த பகுதி முழுதும் மழை பெய்தது  தெய்வ சங்கல்பம்.

அன்னாபிஷேகத்தின் முக்கியத்துவம் 

மனித வாழ்வில் உணவின் முக்கியத்துவத்தை நமது முன்னோர் நன்கு உணர்ந்துள்ளனர். அதன் வெளிப்பாடே அன்னாபிஷேகம் போன்ற தெய்வீக நிகழ்வுகள்.  யாரும் பசித்திருக்கக் கூடாது என்ற நல்ல எண்ணம், அன்னாபிஷேகத்தை தொடரும் அன்னதானமாக வெளிப் படுகிறது. "   உண்ணும் உணவில் மட்டும்தான் இது போதும் என்று மனித மனம் திருப்தியுறும். பொன், பொருள் என்று எத்துணை அளித்தாலும் இன்னும் கொஞ்சம் இருந்தால் நன்றாயிருக்கும் என்றே மனித மனம் எண்ணும் " . எனவேதான் அன்னாபிஷேகம், அன்னதானம் என்று வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். கோயில் என்பது மனித குல மேம்பாட்டிற்கான மைய புள்ளியாக அமைந்திருக்கிறது என்பதையே இத்தகைய வழிபாட்டு முறைகள் உணர்த்துகின்றன.

அன்னாபிஷேகமும் ஆர்கானிக் உணவும் 

அடுத்த வருட அன்னாபிஷேகத்தின் போது, ஆர்கானிக் உணவு ஆர்வலர்கள் , ஆர்கானிக் அரிசி, ஆர்கானிக் காய்கறிகள், ஆர்கானிக் பழங்களை கோயில்களுக்கு அளித்தால் நன்றாயிருக்கும் என்று எண்ணுகிறேன். ஏனென்றால் பண்டை காலத்தில் அன்னாபிஷேகம் ஆரம்பித்தபோது அனைத்து உணவு பொருள்களும் ஆர்கானிக் முறையில்தான் விளைவிக்கப் பட்டிருக்கும். மனித குல நன்மைக்கான ஆன்மீக நிகழ்வில் உரமில்லா உணவும், பூச்சிக் கொல்லியில்லா உணவும் பயன் படுத்த ஆர்கானிக் வணிக நிறுவனங்கள் உதவலாம்.

No comments:

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...