நகரத்துவாசிகளுக்கு தீபாவளி மிக முக்கியமான பண்டிகை. பொங்கல் பண்டிகை கிராமங்களில் களை கட்டும். நகரத்திலேயே பிறந்து வளர்ந்த என்னை போன்ற அதிர்ஷ்ட கட்டைகளுக்கு பொங்கலை விட தீபாவளிதான் பிடிக்கும். சாமி கும்பிட்டு, சர்க்கரை பொங்கலும், வெண் பொங்கலும் சாப்பிட்டால் முடிந்தது பொங்கல் பண்டிகை.
தீபாவளி அப்படி இல்லை. விடியற்காலையில் எழுந்து, எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து....இவையெல்லாம் காலை 5 மணிக்குள் முடிந்துவிடும். அப்புறம் அம்மா செய்து வைத்திருக்கும் பட்சணங்களை ஒரு பிடி பிடித்து....ஏழு மணிக்கு நண்பர்களை தேடி கிளம்பி விடுவோம். அவர்கள் வீட்டு பட்சணங்ங்களையும் ஒரு பிடி பிடிப்போம். தீபாவளியை ஓர் உணவு பண்டிகை என்றே சொல்லலாம்.
ஒரு மாதம் முன்னாலேயே தீபாவளியை வரவேற்க தயாராகிவிடுவோம். அரிசி, பருப்பு, வெல்லம் எல்லாம் வாங்கி சுத்தப் படுத்த துவங்கி விடுவார்கள். தீபாவளிக்கு பத்து நாள் இருக்கும்போதே அரிசி , பருப்பெல்லாம் மாவு மில்லுக்கு சென்று, மாவாகி திரும்பி இருக்கும். ஒரு வாரம் முன்னாலே வீட்டில் எண்ணெய் வாசம் சூழ்ந்திருக்கும்.
கெட்டி உருண்டை (அல்லது பொரிவிளங்கா உருண்டை), மைசூர் பாக், குஞ்சாலாடு (அட...லட்டுதாங்க), பாதுஷா, பயத்தமாவு உருண்டை, ஓமபொடி, மனங்கொம்பு (முள்ளு முறுக்கு என்றும் சொல்லலாம்), தேன்குழல், மிக்சர் - இவை எங்கள் வீட்டு தீபாவளி பலகாரங்கள். ஓம பொடியை பற்றி சொல்லியே ஆக வேண்டும். இன்றைக்கு கடைகளில் கிடைக்கும் ஓம பொடிகளில் பெயரில் மட்டுமே ஓமம் இருக்கும். மற்றபடி அவை கடலைமாவு பொடிகள்தான். நிறைய ஓமம் போட்டு, காரமாக, கர கரவென்று இருக்கும் ஓமபொடி. தொந்தரவு தராமல் ஜீரணமாகும்.
தீபாவளிக்கு கங்கா ஸ்நானம் செய்யும் வரை பட்சணங்கள் செய்து கொண்டிருப்பார் அம்மா. ஒரு வாரத்து எண்ணெய் புகை தாங்காமல், தீபாவளியன்று மதியம் அவருக்கு காய்ச்சல் வந்து விடும்.
தீபாவளி முடிந்து ஒரு மாதம் வரை வீட்டில் பட்சணங்கள் ஸ்டாக் இருக்கும். ஒருமாதம் வரை துளியும் கெடாது. தீரப் போகும் தருணத்தில் ஏக்கமாக இருக்கும். இனி அடுத்த தீபாவளிக்குதானே என்று மனம் நினைக்கும். கடைசி பட்சண டப்பா காலியாகி, ஆச்சு...என்று டப்பாவை தூக்கி போடுவேன். அடுத்தநாள் surprise ஆக ஒரு சிறிய டப்பாவை release செய்வார் அம்மா. அப்போது கிடைக்கும் ஆனந்தம் இருக்கிறதே! அப்பப்பா அதை சொல்ல முடியாது.
திருச்சி டவுன்ஹாலில் தீபாவளிக்கென்று temporary ஜவுளி கடைகள் போட்டிருப்பார்கள். சுற்று வட்டாரத்து மில்களில் இருந்து துணி வகைகள் வந்து குவிந்திருக்கும். தீபாவளிக்கு முதல் நாள் இரவு முழுக்க துணிகள் வாங்குவோம். நேரம் ஆக ஆக விலை குறையும். தீபாவளி அன்று மீதம் இருப்பதை அடிமாட்டு ரேட்டுக்கு தள்ளி விட்டு போவார்கள். இன்று திருச்சி சென்றால் கூட, தீபாவளி சீசன் கடைகளை நீங்கள் பார்க்கலாம்.
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், அடையார் ஆனந்த பவன்-இவையெல்லாம் வந்திராத காலம் அது. ஓட்டல்களில் கூட அல்வாவும், மைசூர் பாக்கும் தான் கிடைக்கும். அதுவும் சுட...சுட கிடைக்காது.
அதனால் தீபாவளி பட்சணத்திற்கு ஓர் ஈர்ப்பு இருந்தது.
வீட்டிற்கு வீடு பட்சணம் செய்யும் முறை மாறும். சுவையும் மாறும். பட்சணம் செய்வோரின் கைமணம் என்பார்கள். ஊருக்கு ஒரு சுவை இருந்தது. அது காவிரி தண்ணீரும், தாமிரபரணி நீரும், சிறுவாணி ஆறும் தந்த அற்புத சுவைகள். வருடத்திற்கு ஒருமுறைதான் அளவில்லா ஆனந்தம் என்பதால், சர்க்கரை நோயும் நம்மை தாக்காமல் இருந்தது.
தலை தீபாவளி மாப்பிள்ளைக்கு, மைசூர் பாக்கை உடைக்க சுத்தியல் தருவதில் தொடங்கி, கெட்டி உருண்டை விழுந்து கால் உடைந்தது, மனைவி செய்த அல்வாவை சாப்பிட்ட கணவன் வாய் திறக்க முடியாமல் ஒட்டிக் கொண்டது வரை ஜோக்குகள் தீபாவளி மலர்களில் களை கட்டும்.
திரும்பும் இடத்தில் எல்லாம் sweet stall, தினமும் வாங்கி குவிக்கும் புத்தாடைகள், corporate உணவகங்கள்.... இவை நம்மை நிறையவே மாற்றி விட்டன. தினந்தோறும் தீபாவளிதான் என்கிறபோது, தீபாவளி தினத்திற்கு என்று எதை மிச்சம் வைத்திருக்கிறோம்? எல்லாம் இருக்கிறது...ஆனால் எதுவுமே இல்லை.
No comments:
Post a Comment