அப்போது தெரியாது பட்டாசு தயாரிப்பிற்கு பின்னால் இத்தனை உயிர் பலிகள் இருக்கின்றன என்று.
அப்போது தெரியாது தமிழ்நாட்டில் நடக்கும் தீ விபத்துகளில் 4 சதவீதம் பட்டாசு விபத்துகள் தான் என்று.
பட்டாசு விபத்தில் கண்ணிழந்த குழந்தைகள், கையிழந்த பெரியவர்கள், கருகிய முகங்கள், பறிபோன உயிர்கள் - இப்படி எதையுமே நேரில் பார்த்ததில்லை.
அப்போது தெரியாது, நம்மூர் சிவகாசியில் பட்டாசு தயாரிப்பது ஒரு நூற்றாண்டுக்குள் துவங்கியதுதான் என்று. என்னவோ நரகாசுரன் இறந்த அடுத்தநாளே சிவகாசியில் பட்டாசு தயாரிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்ற ரேஞ்சுக்குதான் எனது பொது அறிவு இருந்தது.
உலக அளவில் பட்டாசு தயாரிப்பின் தாயகம் சீனாதான். மூங்கில் மரம் முற்றி வெடிக்கும்போது ஏற்பட்ட சத்தம்தான் பட்டாசு கண்டுபிடிப்பிற்கான இன்ஸ்பிரேசன்.
1923ம் வருடம் முதன் முதலில் சிவகாசியில் பட்டாசு தொழில் துவங்கியது. வறண்ட பூமியும், அதனால் இருண்ட வாழ்க்கையும் பட்டாசு தொழிலை இருகரம் நீட்டி அரவணைத்தன. அச்சுத் தொழில், பட்டாசு தொழில், தீப்பெட்டி தயாரிப்பு-இவை மூன்றும் சிவகாசியின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமான தொழில்கள்.
குழந்தை தொழிலாளர், போதிய பயிற்சியில்லாத தொழிலாளர்கள், குறுகிய இடத்தில் அடைபட்டு பட்டாசு தயாரிக்கும் அவலம், அதனாலேயே ஏற்படும் விபத்துக்கள், சிறிய இடத்தில் நிறைய பேர் வேலை செய்வதால் விபத்தின் போது ஏற்படும் அதிக உயிரிழப்பு - மூன்று வேலை உணவுக்காக உயிரை கொடுக்கும் பரிதாப கதைகள் இவை.
கடந்த வருடம் ஏற்பட்ட, 40 பேரை பலி வாங்கிய சிவகாசி தீவிபத்திற்கு பிறகு சில மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். அடிக்கடி நடக்கும் பாதுகாப்பு பரிசோதனைகளும், விழிப்புணர்வு முகாம்களும் இந்த வருடம் விபத்து எண்ணிக்கையை குறைத்திருக்கிறதாம். இந்த வருடம் நான்கு விபத்துகளும், 14 உயிர்பலிகளும் மட்டுமே நிகழ்ந்திருக்கின்றனவாம்.
வருடத்தில் பதினோரு மாதங்கள் சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் உழைக்கிறார்கள். தீபாவளியை ஒட்டி 20 நாள் விடுமுறை. நவம்பர் 15 லிருந்து, 2014 தீபாவளி பட்டாசு தயாரிப்பு துவங்கி விடும். தீபாவளி விடுமுறையில் செல்லும் போதே அடுத்த வருட சம்பளத்தில் இருந்து advance வாங்கி விடுகிறார்கள். நெருப்போடு விளையாட வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு.
பட்டாசு தயாரிக்கும் இடத்தில்தான் இப்படி என்றால், பயன்படுத்துவோர் பலரும்கூட பலியாகிறார்கள். தீபாவளி சீசனில் தமிழ்நாடு தீயணைப்பு துறையும், அரசு மருத்துவ மனைகளின் தீக்காய சிகிச்சை பிரிவும் 24 மணி நேரமும் ஓயாது இயங்க வேண்டி உள்ளது. தீக்காய சிகிச்சை பெறுவோரில் 95 சதவீதம் குழந்தைகள் தான் என்கிறார்கள் மருத்துவர்கள்.
பட்டாசு விபத்துகளை தவிர்ப்பது எப்படி?
குறுகிய தெருக்களிலும், மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியிலும் வெடி வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பரந்த மைதானங்களில் வெடிப்பது பாதுகாப்பானது.
குடிசைகள், கூரை வேய்ந்த வீடுகள் அருகில் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
வெடிக்கும் இடத்தில் மீதமுள்ள வெடிகளை குவித்து வைப்பது ஆபத்தானது.
குழந்தைகள் தனியாக வெடிக்க அனுமதிக்காதீர்கள். பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம்.
இறுக்கமான உடை அணிந்து பட்டாசு வெடியுங்கள். தொள, தொள ஆடைகள் வேண்டாம்.
கையில் பட்டாசை வைத்து கொளுத்தி போடும் ஹீரோயிசம் வேண்டாமே.
பாட்டில், சிறு பெட்டிகள் போன்றவற்றில், வெடியை திணித்து வெடிக்கிறார்கள் சிலர். அதிக சத்தம் வருமாம். சத்தம் வருதோ இல்லையோ ஆபத்து இதில் நிச்சயம்.
அடுத்தவர் வீட்டை குறி வைத்து ராக்கெட் விட வேண்டாமே. தீபாவளி அன்று ரோட்டில் நடக்கவே முடியவில்லை. எங்கிருந்தோ ஒரு ராக்கெட் நம்மை குறிவைத்து சீறி வருகிறது. இல்லை என்றால் யாராவது ஒருவர் ஊசி வேடியையாவது நம் மேல் தூக்கி போடுகிறார். வேண்டும் என்று செய்வதில்லை. பண்டிகை பரபரப்பில் ஏற்படும் கவனக் குறைவு.
முக்கியமாக தீக்காயம் ஏற்பட்டால், காயம் பட்டவரை துணியால் போர்த்தக் கூடாது. காயம் பட்ட இடத்தில் குளிர்ந்த நீர் ஊற்றுங்கள். இது முதல் உதவிதான். உடனே மருத்துமனைக்கு அழைத்து செல்லுங்கள்.
அரசு மருத்துவமனைகள் அனைத்திலும் மருத்துவர்கள் 24 மணி நேரமும் தயாராக இருக்கிறார்கள். தீவிர தீக்காயத்திற்கு பெரிய மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறுவதே நல்லது. இந்த விஷயத்தில் அரசு மருத்துவ மனைகளின் சேவை சிறப்பாகவே இருக்கிறது.
கண்களில் ஏற்படும் தீக்காயம் தீபாவளி நேரத்து விபத்துகளில் குறிப்பிடத் தக்கது. சென்னையை பொறுத்தவரை எக்மோரில் உள்ள அரசு கண் மருத்துவ மனை அவசர கால கண் சிகிச்சைக்கு சிறந்த இடம்.(044 - 2855 5281).
தீபாவளி நேரத்தில் பட்டாசு விபத்துகளை விட அதிகமாக தெருக்களில் நிகழும் வாகன விபத்துக்களை குறிப்பிடுகிறார்கள், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள். கடந்த வருட தீபாவளி அன்று ஒருநாள் மட்டும், 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு , 807 வாகன விபத்து அழைப்புகள் வந்திருக்கின்றன. அதே நேரம், அதே நாளில், பட்டாசு விபத்து தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு வந்த அழைப்புகள் 56 தானாம். இந்த விபத்துக்களில் பெரும்பான்மை குடிபோதையில் நிகழ்ந்தவையாம்.
சென்னையை பொறுத்தவரை அவசர கால தொலைபேசி அழைப்புக்கான எண்களை அறிய இந்த இணைப்பு
உதவும். மற்ற மாவட்டங்களில் தீயணைப்பு துறை தொடர்புக்கு இந்த இணைப்பு உதவக் கூடும்.
தீ விபத்து ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் 101, 102.
உங்கள் வீட்டிற்கு அருகே உள்ள தீயணைப்பு நிலைய தொலைபேசி எண்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
தீயணைப்பு துறையினரும், 108 ஆம்புலன்சும், சென்னை நகர் முழுக்க பல இடங்களில் வாகனங்களை நிறுத்தி வைத்து, தயாராக இருக்கிறார்கள். அவசர உதவிக்கு அழைப்பதில் தாமதம் வேண்டாம்.
சென்னை அகர்வால் கண் மருத்துவமனை, பட்டாசு விபத்தினால் கண்களில் ஏற்படும் காயங்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பதாக அறிவித்திருக்கிறது.
தொடர்பு எண்கள்: 044 33008800, 044 28112811.
முகவரி: 19, கதீட்ரல் சாலை, சென்னை.